Sunday, 24 May 2020

மீன்கள் - எனக்குப் பிடித்த சிறுகதை


 
தெளிவத்தை ஜோசப் 

தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். 

மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்துகொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.
 

வெலவெலத்துப் போய் குனி
ந்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத் தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான். 
எழுந்த பிறகு மறுபடியும் குனிற்து தனது போர்வையை எடுப்பதன் மூலம் இக்கட்டான அந்த இடத்தில் இன்னொரு வினாடி இருக்க நேரிடுமே என்ற உழைவில், கம்பளியை எடுத்துக்கொண்டே எழுந்தவன், அதை இழுத்துத் தோளில் எறிந்தவாறு வெளியே நடந்து இஸ்தோப்பின் இருட்டில் அமர்ந்துகொண்டான். 

தூண்தூணாய் நிற்கும் மரங்களிடையே தூரத்தில் தெரியும் மலைச்சரிவுகள் கருப்பு வண்ணத்தால் தீட்டி மாட்டிய ஓவியங்கள் போல் தெரிகிறது.
 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங் கும்மென்று கிடந்த கறுப்பையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவன் இருட்டிய உலகின் அத்தனை அந்தகாரத்தையும்விட தன் மனதின் அந்தகாரம் அதிகமானதாக தனக்கே தெரிவதை உணர்ந்து அதன் கனம் தாளாது தனிமையாக அமர்ந்திருக்கும் அந்த நேரத்திலும் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.
 

ஆனால் மனதின் இருட்கனத்தால் தானாகவே கவிழ்ந்துவிடும் தலையை எந்த அணையைக் கொண்டு நிமிர்த்தி வைப்பது?
 

'கசமுச'வென்று உள்ளே ஏதோ பேச்சு கேட்கிறது.
 

உயர்ந்த தோளிடை தொங்கும் தலையை ஒரு சிறிதும் உயர்த்தாது மிகவும் சிரமத்துடன் பக்கவாட்டில் திரும்பி ஓரக்கண்ணால் உள்ளே பார்க்கிறான்.
 

ஒருக்களித்திருக்கும் கதவினூடாக உள்ளே இருக்கும் வெளிச்சம் கோடாக நீளுவதிலிருந்து உள்ளே இன்னும் நிலைமை சீரடைந்து அமைதியாகவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் உள்ளேயிருந்து யாராவது ஒருவர் தன் முன்னால் எந்த வினாடியும் வந்து நிற்கலாம் என்ற பயத்தில் அப்போதைக்குத் தப்பிக்கொண்டாலே போதும் என்ற அவசரத்தில் இஸ்தோப்பிலிருந்து இறங்கி இருளில் நடந்தான்.
 

லயத்துக்கோடியில் கிடந்த நாய் அரவம் கேட்டு குரைக்க வாயெடுத்து அவனை இன்னாரென்று கண்டு கொண்டு குரைப்பை ஏப்பமாகவோ ஊளையாகவோ மாற்றிச் சமாளித்து கொட்டாவியுடன் முன் காலை நீட்டி சோம்பல் முறித்து விட்டு வாலைஆட்டியபடி மீண்டும் சுருட்டிக்கொண்டது.
 

எங்கோ உச்சியிலிருந்து ஓடிவந்து இரண்டு பாறைகளுக் கிடையில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சி எழுப்பும் 'சோ' எனும் பேரிரைச்சலை தவிர்த்து முழுத்தோட்டமுமே இருட்டைப் போர்த்திக் கொண்டு குறட்டை விட்டது.
 

இரவு பதினொரு மணி பயங்கரத் தனிமையில் இந்த நாற்பத்தெட்டு வயதிலும் உருவத்தில் குனிவோ நடையில் தளர்ச்சியோ இல்லாமல் எங்கே போகின்றோம் என்ற கட்டுப்பாடற்ற ஏதேட்சையுடன் நடந்து கொண்டிருந்தவன் முகத்தில் பாய்ந்து கண்ணை மயங்கச் செய்த 'டோர்ச்' லைட்டின் ஒளியால் நின்றான்.
 

என்ன பெரியப்பா 'இந்த ராவுலே...' உரப்பட்டிக் காவல் செய்பவன்தான் லைட்டும் கையுமாய் நின்றான்.
 

'தூக்கம் வரல்லேடாப்பா.... ஒரே புளுக்கமாக் கெடந்திச்சு. அதுதான் இப்பிடிக் காத்தாட...'
 

புளுக்கம் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாக 'இப்படி இந்த உரப்பட்டி விறாந்தையில் படுத்துக்கிறேன். காத்தோட்டமாக இருக்கும்' என்கிறான்.
 

தூக்கம் தாங்காமல் கண் மயங்கும் வேளைகளில் ஒரு வாய் தேநீர் சுடவைத்து ஊற்றிக் கொள்வதற்கும் குளிர் தாங்காமல் பல்லடிபடும் வேளையில் நெருப்புப்போட்டுக் குளிர் காய்வதற்குமாக விறாந்தை மூலையில் காவல்காரர்கள் போட்டு வைத்திருக்கும் கரி பிடித்த மூன்று கற்களில் ஒன்றை இழுத்து விரிக்கும் போர்வையில் ஒரு முனையை அதன்மேல் போட்டு கரியை மறைத்து அந்த உயரத்தில் தலையை வைத்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.
 

தேயிலைத் தளிர்களில் மிதந்து வரும் காற்று திறந்த வெளியில் கிடக்கும் உடலைத்தழுவி ஓடுகையில் எத்தனையோ சுகமாகவும் லேசாகவும் தான் இருக்கிறது.என்றாலும் உள்ளம் பாரமாகவும் சூடாகவும் இருக்கையில் எப்படி நித்திரை வரும்.
 

சினிமாப்பாட்டொன்றை சீட்டியில் ஒலித்தபடி லைற்றை வீசிக்கொண்டபடி உரக்காம்பிராவின் மறு முனைக்கு நடந்தான் காவல்காரன்.
 

வீட்டில் நிகழ்ந்து விட்ட அசம்பாவிதத்திற்கு முழுமுதற்காரணமும் தான்தானென்றாலும் தன்பக்கம் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதற்காக நடந்து விட்டதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கிறான்.
 

கசப்பானதுதான்! ஆனால் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளவும்வேண்டியிருக்கிறது.
 

எத்தனை அசிங்கமானது எல்லாம் நடந்து விடுகிறது....!
 

இரவு பத்துமணிக்குப் பிறகு நாட்டிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கதவைத்திறந்து மூடிவிட்டு இருளுடன் இருளாக கதவடியில் ஒரு வினாடி நின்று கண்களை பழக்கப்படுத்திக் கொண்டான்.
 

கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளுமாக சுருட்டிக் கொண்ட உருவங்கள் இருட்டில் லேசாக தெரியத் தொடங்கின.
 

நாட்டிலிருந்து வந்திருக்கும் மயக்கத்ததுடன் இருட்டில் காலை உயர்த்தி முதலில் கிடந்த உருவத்தை தாண்டியபடி 'அதோ அதுதான் அவ' என்று மனதிற்குள் முனகிக்கொண்டான்.
 

அவனுடைய கணிப்புத் தவறிவிட்டது. 'அது மகள்… இந்தப் புள்ளை எப்பிடி சேச்சே...' என்று எச்சிலை விழுங்கிக் கொண்டவன் அருவருப்பான அந்த எண்ணங்களை வெட்டித் துண்டாக்கிக் கொண்டான்.
 

அந்த ஆறு காம்பிரா லயத்தின் மூன்றாவது காம்பிராவுக்குள் அவன் பிரவேசம் செய்து ஏறத்தாழ இருபது வருடம் இருக்கும். அப்போது அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளுமாக ஐந்து பேர்களுக்கு அந்த ஒரு காம்பிரா போதுமானதாக இருந்தது.
 
நான்கு சுவர் உள்ள அந்த சதுரத்துக்குள் அடுப்பைப் போட்டு 'இது குசினி' என்று ஒருபகுதியை ஒதுக்கிவிட்டு மிஞ்சியிருக்கும் முக்கால் அறைக்குள் மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவைகள் கண்டும் காணாமலும் சம்சாரம் பண்ணி இன்னும் மூன்றைப் பெற்றுக்கொண்டது வரை எல்லாம் அந்த ஒரே காம்பிராதான்.
 

அவனும் எத்தனையோ தடவை ஆபீசுக்குப்போய் துரையிடம் காலில் விழாக்குறையாகக் கெஞ்சியும் சண்டைபோட்டும் பார்த்து விட்டான் தனக்கு இன்னொரு காம்பிரா வேண்டுமென்று.
 

பகல் வேளைகளில் வீடு இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினையே கிடையாது.எல்லாத் தொல்லைகளும் இரவில்தான். அத்தனையையும் படுக்க வைத்தாகவேண்டுமே! கைகால் முளைத்து விட்ட பிள்ளைகள் என்றாலும், இடநெருக்கடிஎன்று வெளியே எங்கயாவது போய் சுருட்டிக் கொள்ளும். முளைக்கும் மீசையை நாசுக்காக நீவிவிட்டபடி படுக்கையும் தானுமாக நடந்துவிடுகிறானே மூத்த பையன். 'நண்பனுடன் படுத்துக் கொள்ளுகிறேன்.' ஏன்று அதே போல் இந்தச் சின்னஞ் சிறுசுகள் எங்கே போகும்?
 

வீடு வளரவில்லை என்பதற்காக பிள்ளைகளும் வளராமல் இருந்து விடுவார்களா? அதுவும் பெண் பிள்ளைகள்!
 

'பெண் வளர்ச்சி பேய் வளர்ச்சி என்பார்கள்' பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்துவிடுவார்கள்.
 

இவன் வீட்டிலும் இரண்டு வளர்ந்துபோய் இருக்கின்றதே. அது எங்கே போய் படுத்துக் கொள்ளும்.
 

மூத்த பையனைத் தவிர மற்றது அத்தனையும் அந்த முக்கால் அறைக்குள் 'ஒண்ணடி மண்ணடியாக' உருள வேண்டியதுதான். இந்த லயப்பிரச்சனை பெரும் தலை வேதனையாக உருமாறிக்கொண்டு வருகிறது என்று கண்டவுடன் துரை நைசாக நழுவிக்கொண்டார்.
 

யார் யார் எந்தெந்த லயத்தில் இருக்கிறார்கள்? ஒரு காம்பிராவில் எத்தனை பேர்?பேண் எத்தனை ஆண் எத்தனை? என்பது போன்ற விபரங்களை காட்டும் 'லயத்துச்செக்ரோலை' தூக்கிப் பெரிய கங்காணியிடம் கொடுத்துவிட்டார்.
 

தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராகத்தான் இருந்தாகவேண்டும் கங்காணி என்பவர். தொழிலாளரின் நலனில்தான் இருக்கிறது அவருடைய நல்வாழ்வு.
 

துரையிடம் இல்லாத ஒரு பயம், துரையிடம் காட்டாத ஒரு மதிப்பு, துரைக்குக்காட்டாத ஒரு ஒத்துழைப்பு பெரிய கங்காணியாகப்பட்டவருக்கு உண்டு என்பது துரையின் நம்பிக்கை. ஆகவே நெருக்கடி மிக்கதான இந்த வீட்டுப் பிரச்சனையை அவரிடம் நீட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்ட துரை சாமர்த்தியசாலிதான். தனக்கு லயம் போதாது என்பவர்கள் துரையிடம் போவார்கள். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். கங்காணி அவர்களை விசாரித்து பெயர்களை எழுதிக்கொண்டு லயம் ஏதாவது காலியானால் இல்லாட்டிபுது லயம் கட்டினால் உனக்குச் சொல்கிறேன் 'போ' என்பார்.
 

'என் வீட்டில் ரெண்டு கொமரோட இன்னும் ஆறுபேர் இருக்கோமுங்க' என்று கூறிக்கொண்டு நின்ற இவனையும் பெரிய கங்காணிகிட்டே போ' என்றார் துரை.
 

'அவங்ககிட்ட ஏன் நான் போவனும், துரை நீங்க இருக்கீங்க தகப்பன் மாதிரி, நீங்கபார்த்து காம்புரா ஒழுங்கு செய்யுங்க' என்று ஆபீசில் சத்தம் போட்டாலும் படிஇறங்கியதும் நேராகப் பெரிய கங்காணியிடம் போகவும் தவறவில்லை.
 

'போ பார்ப்போம்' என்று கூறி வைத்தார் பெரிய கங்காணி. வரப்பிரசாதம் போல் அவனுக்கு காவல் வேலை கிடைத்தது.
 
ஆதன் பிறகு உரப்பட்டி, புது மலை, ஆயுதக் காம்பிரா என்று எங்காவது இராப்பொழுதை போக்கி விடுவான். வீட்டுப்பிரச்சனை அவ்வளவாகத் தோன்றவில்லை.
 

தான் ஒதுங்கிக் கொள்வதால் மட்டும் தீர்ந்துவிடும் தொந்தரவு இல்லையே குடும்பத்தொந்தரவு! அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
 

மனைவியின் நச்சரிப்புத் தாளாத போதெல்லாம் துரையிடம் போவான். துரை 'கங்காணியிடம் போ' என்பார். கடபுடா என்று கத்திவிட்டு திரும்பி வருவான்.
 

அவன் படியேறும் போதே துரை மனதிற்குள் சிரித்துக் கொள்வார். 'சலாங்கையா' என்று ஜன்னலிடம் வரும்போதே 'கங்காணிகிட்டே போ' என்று கூறிவிடுவார். ஒருதடவை அவன் வேறு எதற்காகவோ வந்து நின்று 'சலாங்க' என்றபோது 'கங்காணிகிட்டே போ' என்று துரை கூற 'நான் லயத்துக்கு வரலிங்க' என்று அவன்தலையைச் சொறிய துரை கிளார்க் அவன் மூவருமே சிரித்து விட்டனர். தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல்.
 

அவன் ஆபீசுக்கு வந்தால் லயம் கேட்கத்தான் வருவான் என்பதும் லயம் கேட்டால் 'கங்காணிகிட்டே போ' என்றுதான் துரை கூறுவார் என்பதும், அந்தளவுக்கு துரைக்கும் அவனுக்கும் தெளிவான ஒன்றாகிவிட்டது.
 

அவனுக்கு கிடைத்திருந்த காவல் வேலையும் நின்று விட்டது. மறுபடியும் அவன் நேரடியாகப் பிரச்சினைக்குள் அகப்பட்டுக் கொண்டான், அதன் விளைவு,
 

அடுத்தநாள் அந்தி நேரத்தில் பெரிய கங்காணி வீட்டுக்குப் போனான்.
 



'ஏன் தொரை கிட்ட போவலியா?' பெரிய கங்காணி குத்தலாகக் கேட்டார்.
 


'அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க?' அவன் குழைந்தான்.

'இல்லை ஐயா நேரே ஆபீசுக்குப் போய் துரைகிட்டத்தானே கம்பிளேன் பண்ணுவீக… அதுதான் கேட்டேன்.' அவனுக்கு விளங்கிவிட்டது ஐயா அவனை அடையாளம் பண்ணித்தான் வைத்திருக்கிறார் என்பது. புதிதாகக் கட்டிய பத்துக் காம்புராவில் தனக்கு ஒரு காம்புரா கிடைக்காமல் போனதற்கும் அவ்வப்போதும் காலியாகும் பழைய காம்புராக்களும் தன்னை ஒதுக்கி விட்டதற்கும் இந்த அடையாளம் தான் காரணமோ...!

சாமிக்கு ரெண்டுன்னா பூசாரிக்கு நாலு தேங்காய் ஒடைக்கணும் போலிருக்கே! என்று புழுங்கியபடி ஐயாதான் ஒதவி செய்யணும் என்று காலில் விழாத குறையாகக் கூறிவிட்டு நடந்தான்.

'என்னா இந்த நேரத்தில் கங்காணி வீட்டுப் பக்கம்....'

'அதையேன் கேட்கிறே நானும் தான் நாளாய்ப் பொழுதாய் நாய் கணக்கா அலைஞ்சு பார்க்கிறேன் ஒரு காம்புராவிற்கு. மனுசன் அசையுறாப்பிலே காணாமே. பார்ப்போமிங்கிறாரு நாமும் பார்த்துக்கிட்டிருக்க வேண்டியது தான்.'

'லயம் ஏதும் காலியானால் இன்னொருத்தனுக்குப் போயிறுது..... அதைத்தானே சொல்லவாரே...'

'பின்னே என்னாங்கிறேன்...'

'லேய் சும்மா கத்தாதறேலே... வெறுங் கையி மொழம் போடுமா... ஒரு காம்புராவிலே ஏழைட்டை அடைச்சுக்கிட்டு கஸ்டப்படுகிறதை விட கங்காணிக்கு ஒரு போத்தல் சாராயத்தை வாங்கிக் கொடுத்திட்டா என்னா கெட்டுப்புடுது... என்ன கொறைஞ்சுப்புடுது.’

ஒரு போத்தல் சாராயத்தை வாங்கித் தொலைத்து விடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது என்பது அவனுக்குத் தெரியும். ஏன் கொடுக்க வேண்டும் என்ற வீம்பில்தான் இத்தனைநாளும் இருந்தான்.

ஆனால் இப்போது...!

'எந்த எளவைக் கொடுத்தாவது ஒரு காம்பிரா கேட்டாகணும்.’
னம் முனகிக்கொள்கிறது.

'அந்தக் கொய்யாமரத்தடியிலே அப்பவே ஒரு குடிசை போட்டேன்....'

மனதை அவன் அடக்கப் பார்த்தாலும் நடந்து விட்ட கசப்பான நிகழ்ச்சிக்கான காரணகாரியங்களை சுற்றியே அது ஓடுகிறது.

லயம் கேட்டு ஏமாந்த ஆரம்ப நாட்களிலேயே தனது வீட்டுக்கு முன்னால் உள்ளதோட்டத்தில் நிற்கும் கொய்யாமரத்தடியில் ஒரு சிறு குடிசை போடத் தொடங்கினான். மூலைக்கொன்றாக நான்கு மரங்களை ஊன்றி நாணல் வரிச்சுகளைப் பிடித்து வரிச்சு மறைய மண்ணைக் குழைத்து ஒரு பக்கம் அறைந்தும் ஆயிற்று. வேலிக்கு வெளியே லயத்தை ஒட்டி நிற்கும் ஈரப்பலா மர நிழலில் நின்றபடி முளைத்தெழும் குடிசையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரியகங்காணி தலையை ஆட்டிக்கொண்டார்.

என்னடாலே அது குடிசை... வீடு கட்றீகளோ இன்னைக்கு நீ கட்டிக்காட்டு… நாளைக்கு ஒருத்தன் நாளான்னைக்கு ஒருத்தன்னு அத்னைபேரும் குடுசை போட தொவங்கிறுவானுக. ஓனக்குத்தான் வீட்டுக்கு முன்னுக்கு தோட்டம் இருக்கு. தோட்டத்திலே போட்டுக்கிறே. தோட்டம் இல்லாதவன் என்னா செய்வான். ராவோடராவா பத்து தேயிலையை புடுங்கிப்புட்டு அதிலை போட்டுக்குவான் வொளங்குதா.... அதனாலே இந்தக் குடிசை விவகாரமே வேண்டாம். ஆபீசுகீபீசுன்னு...தொரையருதி போறதுக்குங் காட்டியும் மருவாதியாய் சொல்கிறேன். இப்பவே போய் உடைச்சு போட்டுரு. இல்லை....'

தன் அழைப்புக்கிணங்க வந்து தனக்கு முன்னால் குன்றிப்போய் நிற்பவனை ஏசிப்பயம் காட்டி அனுப்பியதுடன். அடுத்த நாள் அந்தப் பக்கமாக நடந்து குடிசை உடைந்திருக்கிறதா இல்லையா என்பதையும் செக் பண்ணிக்கொண்டார். கொய்யாமரத்தடியில் குடிசைக்குப் பதில் குட்டிச் சுவர் மட்டுமே நின்றது.

இத்தனை மன உழைச்சல்களிலேயும் எந்த எளவைக் கொடுத்தாவது என்ற எண்ணத்துடன் எப்படியோ தூங்கிப்போனான்.

ஆம்... தூக்கம் என்பது மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்!

தேயிலைக் குச்சியால் பல்லைத் தேய்த்துத் துப்பிவிட்டு ஜில்லென்று ஓடும் ஆற்று நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு பெரட்டுக்களத்தை அடைந்தான்.

மற்ற நாட்களில் என்றால் கை வாளியில் சுடுதண்ணீர் காத்துக் கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் இன்று?

விரித்துப் படுத்திருந்த துப்பட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுப்பெண்கள் துண்டு வாங்க வரும்;போது எங்கே தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சற்று மறைவாக நின்று கொண்டிருந்தான்.

'எப்ப காம்பிரா விட்டுப்போறே...?'

'வீடெல்லாம் சரி... இன்னொரு நாலு நாள்லே..' பின் வரிசையில் பேச்சுக் குரலால் திரும்பிப் பார்த்தவனுக்கு விஷயம் பிடிபட்டுக்கொண்டது.

தோட்டத்திற்கே பழைய ஆளான பண்டா லயத்தைக் காலி செய்துவிட்டு நாட்டில் சொந்தமாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடிபெயருகிறான்.

இவனுக்கு செய்தி இனித்தது.

'காலியாகும் இந்தக் காம்பிராவை எப்படியாவது அமுக்கிக்கிறணும்.... எந்த இளவைக் கொடுத்தாவது...' என்ற எண்ணத்துடன் அன்றே பெரியவரைக் கண்டு தனக்குள்ள கஷ்டங்களைக் கூறி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ஐயாவுக்கு சந்தோசம் செய்வதுபற்றியும் இலேசாக இழையோட்டிவிட்டு 'சரி பயப்படாதே...' என்ற பெரியவரின் உத்தரவாதத்துடன் வெளியேறியவன், ஒரு வெள்ளையை வாங்கிக் கொண்டு வந்து தயாராய் வைத்துக்கொண்டான். வீடு காலியானதும் சென்று ஐயாவைக் கண்டுகொள்ள.

காலியாகப் போகும் காம்பிராவுக்கு முழுமூச்சாக இவனும் அடிபோடுகிறான் என்பது 'எப்ப காம்பிரா விட்டுப்போறே' என்று பண்டாவைக் கேட்டுக் கொண்டேயிருந்த இன்னொருவனுக்கு சுருக்கென்றது. முந்திக்கொண்டான்.

ஒரு வெள்ளையை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு இவன் இருக்க இரண்டைவாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து ஐயாவைப் பார்த்தும் விட்டான் அவன்.

எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!

இரண்டு வெள்ளையைக் கண்டதும் ஐயா அசந்தே விட்டார். 'காம்பிரா உனக்குத்தான்டா' என்று கையடித்துக் கொடுத்தவர் 'அவனுக்கும் தரேன்னோமே' என்று ஒரு விநாடி குழம்பி உடனே சுதாகரித்துக்கொண்டு 'பண்டா லயம் விட்டுப்போற அண்ணிக்கு கட்டாயம் வா' என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.

பண்டா குடிபெயரும் தினம்! சந்தோசத்தை ஒரு பேப்பரில் சுற்றி கமக்கட்டில் இடுக்கிக்கொண்டு ஐயா வீட்டுள் நுழைந்தவன் அங்கு வேறுமொருவன் இருப்பதைக்கண்டு சற்றுத் தயங்கினான்.

யாரு...? அட நீயா...? வா வா. என்னா கையிலே பார்சல்....?

'ஒண்ணுமில்லைங்க என்று மழுப்பியவனை விடாமல் இழுத்துப் பிடித்தார் கங்காணி.

பண்டா காலியாக்கிறான்லே காம்புரா அதை இவனுக்குத்தான் குடுக்கப் போறேன்...என்று மற்றவரிடம் கூறியவர், இவன் பக்கம் திரும்பி 'என்னப்பா என்னமோ வைச்சிருக்காப்போலே இருக்கு. கேட்டா ஒண்ணுமில்லேங்கிறா. கொண்டாயேன் பார்ப்போம்....' ஏன்று அதை இழுத்துப் பிரிக்கிறார்.

வெள்ளைப் போத்தல் வெளியெ வருகிறது!

ஐயாவின் முகம் ஏன் இப்படிக் கோரமாக மாறவேண்டும். குழம்பிப்போய் நிற்பவனைக் கோபமாகப் பார்த்து ஐயா கத்துகிறார்.

'லயம் வாங்குறத்துக்கு லஞ்சம் கொண்டாந்தியோ... இந்தாப்பா நீ சாக்கி....' என்று போத்தலை உயரத் தூக்கி மற்றவனிடம் காட்டிவிட்டு 'இந்தாடா நீயே கொண்டு போ. ஒனக்கு லயம் கெடயாது.. ஒண்ணும் கெடயாது ஓடிப்போ... படவா... அதோட நாளைக்கு காலையிலே ஆபீசுக்கு வந்துடு. நீயும்தாம்பா... நல்ல வேளை நீ இருந்தே.'பெரிய கங்காணி மூச்சுவிடாது கத்தினார்.



வேலவெலத்துப் போனவன் நடுங்கும் கால்களுடன் வெளியே நடந்தான்

No comments:

Post a Comment