கொரோனா காலத்தில் முடங்கிப் போயிருக்கும் இவ்வேளையில், பலரும்
திரைப்படங்கள் பார்க்கின்றார்கள். புதிய படங்கள் என்று இல்லாமல் பழைய படங்கள் கூட தூசு தட்டப்படுகின்றன. நேற்று நண்பன் நேசனுடன் கதைக்கும்போது,
தான் `தேவரின் தெய்வம்’ படம் பார்த்தேன் என்றான். பள்ளி நண்பனாகிய அவன் அதிகம் பக்திப்
படங்கள் தான் பார்ப்பான். அவன் அதைச் சொன்னதும் தொபுக்கடீர் என்று சிரித்துவிட்டேன்.
அதன்பிறகு கதைத்து முடிக்கும் வரையும் சிரிப்புத்தான் கொடுப்பிற்குள் நின்றது.
“ஏனடா சிரிக்கிறாய்?”
“அந்தப் படத்தின் பெயர் `தேவரின் தெய்வம்’ இல்லையடா…. தெய்வம்”
என்றேன் நான்.
“போடா… உனக்கு எப்பவும் பகிடிதான். வேணுமெண்டா யூ ரியூப்பிலை
போட்டுப் பார். அது தேவரின் தெய்வம் தான்” என்றான் அவன்.
அவனுடனான அந்த உரையாடல் என் பள்ளிப்பருவம் நோக்கிச் சென்றது.
அப்போது யூனியன் கல்லூரியில் எட்டோ ஒன்பதோ படித்துக் கொண்டிருந்தேன். 1975 ஆம் ஆண்டு.
`திருவருள்’ படம் திஜேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. பலரும் அதைப் பார்த்துவிட்டு, வகுப்பினில்
வந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பார்க்கவேண்டும் போல ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருந்தார்கள்
அவர்கள். திடீரென ஒருநாள் நேசன், “நான் நேற்று `தேவரின் திருவருள்’ பார்த்தேன்” என்றான்.
“அது தேவரின் திருவருள் அல்ல. திருவருள். தேவர் என்பவர் அந்தப்
படத்தை எடுத்ததால் `தேவரின் திருவருள்’ என்று ரைட்டிலில் போடுகின்றார்கள்” என்றார்கள்
சக மாணவர்கள். அதை நேசன் நம்பத் தயாரில்லை.
“என் கண்ணால், அந்தப் பெரிய ஸ்கிரீனில் பார்த்தேன். அது தேவரின்
திருவருள் தான்” என்றான்.
கொஞ்ச நாட்களாக அந்தப் பகிடி பள்ளியில் பிரபலமாகி இருந்தது.
இப்போது 45 வருடங்கள்
கழித்து மீண்டும் அந்தப் பல்லவி.
அரைமணி நேரம் கழித்து ரெலிபோன் ஒலித்தது. நண்பன் தான்.
“யூ ரியூப்பிலை பார்த்தாயா?”
”பார்த்தேன். தேவரின் தெய்வம் என்ற ரைட்டிலுக்குக் கீழே,
சின்னனா பிறக்கற்றுக்குள்ளை `ஐஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்றும் போட்டிருந்ததே!
கவனித்தாயா நீ” என்றேன் நான்.
“நீ சொன்னாலும் நம்ப மாட்டாய். பார்த்தாலும் நம்பமாட்டாய்”
என்றான் அவன்.
No comments:
Post a Comment