“மொட்டைமாடி - வீட்டுக்கு இரண்டுபக்கமும் வேணும். கீதா வீட்டிலை இருக்கிற மாதிரி.
சசியின்ரை வீடு பாத்தனீங்கள் தானே! வீட்டுமுகப்பு அப்பிடி
வேணும்.
நீங்கள் போன வருஷம் கன்பராவுக்கு ஒரு வீட்டை கூட்டிக்கொண்டு
போனனீங்களல்லோ? அவைன்ரை வீட்டுக் கிச்சின் கபினெற்றுகளைப் பாத்தனியள்தானே. எவ்வளவு
பெரிய விசாலமான தட்டுகள்.
வீட்டு ரைல்ஸ் பெரிசா இருந்தாத்தான் நல்லது. வாணி வீட்டு ரைல்ஸ் மாதிரி…” மூச்சுவிடாமல், கிசுகிசு கிசுகிசு என்று ரிஸ்யூ கசங்கினமாதி கணவனுக்கு மாத்திரம் கேட்கும் வண்ணம் பொழிந்து தள்ளினாள் மஞ்சு.
அவளுக்குப் பக்கத்தில் கல்லுளிமங்கன் போல, தன் கற்பைப் பறிகுடுத்த
மனோ நிலையில் வெறித்துப் போயிருந்தான் சாந்திகுமார். வாழ்நாளில் ஏதோ ஒரு பெரிய தப்பொன்றைச்
செய்துவிட்டவன் போல ஒழிந்திருக்கும் சுபாவம் அவனுடையது. அதிகம் கதைக்க மாட்டான். ஆனால்
கதைத்தால் எதிரே இருப்பவனின் மனம் சுருங்கிப் போகும் வண்ணம் தான் கதைப்பான்.
“பிள்ளை மஞ்சு…. மேலுக்கிருந்து குப்பையை எறிஞ்சா, நேரை போய்
ஊத்தைபின்னுக்கை விழுறமாதிரி இருக்க வேணும். சசி வீட்டிலை கண்டனான்.” மஞ்சுவுக்குப்
பின்புறமிருந்த அவளது அம்மா, மகளுக்கு ஈடான குரலில் கிசுகிசுத்தார். அம்மாவின் குரல்
20 டெசிபல் என்றால், மகளின் குரலளவு 15 டெசிபல். கதைக்கும்போது- கதையின் ரகசியத்தன்மைக்கு
ஏற்றவாறு - போட்டி போட்டுக்கொண்டு தம் டெசிபல் அளவுகளைக் குறைத்துக் கொண்டே இருவரும்
வருவார்கள். சாந்திகுமாருக்கு மாமியாரின் வாய் அசைந்தது மாத்திரம் தான் தெரியும். ஒன்றும்
கேட்கவில்லை. அவரையே பார்த்தபடி இருந்தான். மாமியார் முழுசிப் பாத்தார் என்றால் சாந்திகுமாருக்கு
மூத்திரம் போய்விடும். மகளுக்கு சிறுவயதிலிருந்தே அது பழகிப் போய்விட்டது.
”ஏன் உங்களுக்கெண்டு ஏதாவது சுய விருப்பங்கள் இல்லையோ?” சாந்திகுமார்
மஞ்சுவை மாத்திரம் பார்த்துக் கேட்டான். மாமியார் “உகூம்” என்று முகம் சுழித்தார்.
“ஏன் இல்லை. டபிள் கிச்சின் வேணும். ஒண்டு வடிவுக்கு. மற்றது
சமைக்கிறதுக்கு. எல்லாச் சுவாமிப்படங்களும் வைக்கிற மாதிரி சுவாமிப்பட அறை வேணும்……”
சொல்லிக்கொண்டே போனாள் மஞ்சு.
“எந்தவொரு நல்ல பில்டரும் நீங்கள் கேட்கிறமாதிரியெல்லாம்
வீடு கட்டித்தரமாட்டான்” சாந்திகுமார் சொல்லி வாய் மூடவில்லை,
“அப்ப மற்ற எல்லாரும் என்னெண்டு கட்டினவையாம்?” என்றாள் மஞ்சு.
“சரி… இண்டைக்கு லக்சனை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போகேக்கை
இரண்டொரு பில்டரச் சந்திச்சுக்கொண்டு வாறன்” என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்
சாந்திகுமார்.
சாந்திகுமார் – மஞ்சு தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். லக்சன்
பதினொராம் வகுப்புப் படிக்கின்றான். அடுத்த வருடம் 12ஆம் தரம் – வாழ்க்கையை நிர்ணயம்
செய்யப்போகும் VCE பரீட்சை எடுக்க வேண்டும். அந்தப் பரீட்சையில் தோற்றவேண்டிய இரண்டுபாடங்களை
இந்த வருடத்தில் முன்னதாகவே எடுக்கப்போகின்றான். அதற்குரிய விசேட தகுதியைப் பெற்றிருக்கின்றான்
லக்சன். சைக்கோலஜி, மற்ஸ் மெதட் என்ற இரண்டு பாடங்களுக்காக ரியூசனுக்குப் போய் வருகின்றான்.
பாடசாலையில் படிப்பதை விட ஒவ்வொரு பாடங்களுக்கும் தலா இவ்விரண்டு ரியூசன் வகுப்புக்கள்.
இதைவிட பத்தாம் வகுப்பில் இருந்தே மூன்று இடங்களுக்கு ஆங்கிலம் படிக்கப் போகின்றான்.
மகள் சுருதி ஏழாம் வகுப்பு. அவளுக்குத் தெரியாத கலைகள் இல்லை.
நடனம், சங்கீதம், நீச்சல், பலே டான்ஸ், நாடகப் பயிற்சி என்று வார இறுதிகளில் ஆயகலைகளுக்குள்
அவள் சுழன்றடிப்பாள். படிப்பிலும் கெட்டிக்காரி. ஆனால் மூச்சுப் பிடிச்சு உச்சம் பெற,
இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழ் பாடம் பாடசாலைகளில் படிப்பிப்பதில்லை. ஆனாலும் தமிழ்ப்பாடத்தைக்
கற்றுத் தேறி VCE பரீட்சைக்குத் தோற்றலாம். இதற்கென சில அமைப்புகள் வார இறுதிநாட்களில்
தமிழ் வகுப்புகளை நடத்துகின்றார்கள். லக்சனும் சுருதியும் தமிழ் படிக்கின்றார்கள்.
ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கென்றா சொன்னேன்.
பெற்றோர்களுக்கென்று திருத்திக் கொள்ளுங்கள். கேட்டால், `தமிழ்ப்பாடம் அதிகளவு புள்ளிகளை
ஈட்டித்தராது என்பது கடந்தகால கசப்பான உண்மை’ என்று ஏக காலத்தில் சாந்திகுமாரும் மஞ்சுவும்
சொல்வார்கள்.
“எந்த பில்டரைப் பிடிக்கிறியளோ அதைப்பற்றி எனக்குக் கவலை
இல்லை. இப்ப மார்ச் மாசம் நடக்குது. எண்ணி ஒரு வருஷத்திலை வீடு கட்டித் தந்திட வேணும்.
பிறகு பிள்ளையளின்ரை படிப்புத் துடங்கிவிடும்” என்று கண்டிஷன் போட்டாள் மஞ்சு.
”என்ன நீர் கதைக்கிறீர்? நீரோ பிள்ளையளோ வீடு கட்டப் போறதில்லை.
அது தன்ரை பாட்டிலை எழும்பும். இடைக்கிடை போய் வீட்டைப் பாத்தாச் சரி..”
“உங்களுக்கொண்டும் விளங்காது. பிள்ளையளுக்கு எக்ஷாம் எண்டால்
எனக்கும் எக்ஷாம் மாதிரித்தான்” என்று மஞ்சு சொல்ல, தாயார் வந்து முழுசிப் பார்த்து,
உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.
•
வீடும், பிள்ளைகளின் படிப்பும் சாமாந்தரமாக உயர்ந்து கொண்டிருந்தது.
எந்தவொரு கொம்பனியும் அவர்கள் கேட்டபடி வீடு கட்டிக்கொடுக்க இணங்கவில்லை. கடைசியில்
வீடு கட்டிக் குடுக்கும் தமிழர் ஒருவரை அணுகி தமது திட்டத்தைச் சொன்னார்கள். அவரும்
தலையைச் சொறிஞ்சு மூக்கைச் சொறிஞ்சுவிட்டு, கடைசியில் ஒரு படிவத்தை அவர்களிடம் குடுத்து
அதிலே கையெழுத்துப் போடும்படி கேட்டார்.
“என்ன நீங்கள்…..? பயமுறுத்துறியள்?” என்றாள் மஞ்சு.
“இது சும்மா ஒரு படிவம் தான். ஒண்டுக்கும் பயப்பிடத் தேவையில்லை.
சில கட்டிட விதிகளை மீறித்தான், நீங்கள் கேட்ட வீட்டைக் கட்டித்தரலாம். காசும் சிலவேளை
நான் சொன்னதை விடக் கூடும் குறையும்.”
“கூடும் குறையுமா? அல்லது கூடுமா?”
அவர் சிரித்தார்.
“காசைப் பற்றி நீங்கள் ஒண்டும் ஜோசிக்க வேண்டாம். நாங்கள்
கட்டிற வீடு மாதிரி ஒருத்தரும் கட்டப்படாது. அதைப் பற்றி ஜோசிக்கவே கூடாது.”
இவர்களால் வீடு கட்டுபவருக்கு ஒரே தொல்லையாக இருந்தது. அகால
வேளைகளில் எல்லாம் அவரின் வீட்டுக்கதவைத் தட்டி, மொபைல்போனைத் திறந்து படங்கள் காட்டுவார்கள்.
`இந்தமாதிரி முன் கதவுக்கு கிளாஸ் போட்டுத் தரவேணும். கதவுக்
கைபிடிகள் இப்பிடி இருக்க வேணும். மேலே ஏறிப்போற படிக்கட்டுகள் வழியே, பூ வாஸ் வைக்கிறமாதிரி
செய்து தரவேணும். அதுக்குப் பக்கமாக கண்ணாடிகளும் லைற்றுகளும் இருக்க வேணும். 5 பூ
வாஸ்கள்- அது என்ரை பிறந்த திகதி. 7 லைற்றுகள் – அது அவரின்ரை பிறந்த திகதி’ மஞ்சு
தன் மொபைல்போனைத் திறந்து படங்கள் காட்டினாள்.
“இதையெல்லாம் நீங்கள் எங்கை படம் பிடிச்சியள்?” வீடு கட்டுபவர்
வியந்தார்.
“நான் போற வீடுகளிலைதான். சிலபேரிட்டைக் கேட்டிட்டு படம்
எடுக்கிறனான். அவை உடன்படாட்டி, போனை சைலென்றிலை விட்டிட்டு, வீடியோவைப் போட்டுவிடுவன்.
அது பக்காவா எடுத்துத் தந்திடும்” என்றாள் மஞ்சு. சாந்திகுமாருக்கு இதுகளில் ஆர்வம்
இல்லை. அவனது ஆர்வம் எல்லாம் `றென்ரல் புறப்பட்டி’ அதிகம் வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.
ஒருநாள் லக்சனை ரியூசனால் கூட்டிக் கொண்டு வரும்போது, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்
வீட்டைப் பார்வையிடச் சென்றார்கள்.
”அம்மா….. ஒரு கணக்கை டேவிட் மாஸ்டர் ஒரு விதமாச் சொல்லித்
தாறார். பத்மினிச் சீச்சர் இன்னொருமாதிரிச் சொல்லித் தாறார். பள்ளிக்கூடத்திலை இன்னொரு
மாதிரி சொல்லித் தருகினம். இதிலை எந்தவிதமா செய்யுறது எண்டு நான் குழம்பிப் போயிருக்கிறன்”
என்றான் லக்சன்.
“நாங்கள் வீடு கட்டிறதிலை குழம்பிப் போயிருக்கிறம். நீ என்னண்டா
படிப்பிலை குழம்பிப் போயிட்டாய். அடுத்தமுறை போகேக்கை டேவிட் மாஸ்டரிட்டையும் பத்மினி
ரீச்சரிட்டையும் இதைப் பற்றிக் கதைக்க வேணும்.” என்றாள் மஞ்சு.
அவர்களின் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டிற்கு முன்னால்
வந்ததும் மஞ்சு ஆச்சரியப்பட்டாள். அவளின் உற்ற நண்பி கிருஷ்ணவேணி, கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்
வீட்டை விடுப்புப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
”எடி மஞ்சு….. உன்ரை வீடு படு சுப்பரா இருக்கடி” கிருஷ்ணவேணி
மஞ்சுவிற்கு ஐஸ் வைத்தாள். அதன் அர்த்தம் உள்ளே கூட்டிக்கொண்டு போய் வீட்டைக் காட்டு
என்பதாகும்.
சாந்திகுமாரும் லக்சனும் காருக்குள் இருக்க, மஞ்சுவும் கிருஷ்ணவேணியும்
கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீட்டிற்குள் சென்றார்கள்.
”எடி மஞ்சு… இந்த டிசைனுகள் எல்லாத்தையும் எப்பிடிக் கண்டுபிடிச்சனி?”
”உனக்குச் சொன்னா என்ன….. நான் ஒரு வீட்டுக்குப் போகேக்கை,
அங்கை ஏதாவது எனக்குப் பிடிச்சிருந்தா அவைக்குத் தெரியாம என்ரை போனிலை படம் பிடிச்சிடுவன்.
பிறகு அதைப் போல, அல்லது அதையும் விட வடிவா வாங்கிப் போடுவன். சவுக்காரப்பெட்டியெண்டால்
என்ன, குசினிப் பாத்திரங்கள் எண்டா என்ன, பூக்கண்டுகள் எண்டா என்ன எல்லாத்துக்கும்
இது பொருந்தும்.”
“அப்ப… அவை உங்கடை வீட்டுக்கு வரேக்கை உதுகளைப் பார்த்துக்
கேட்கமாட்டினமோ?”
“நான் அவை கேட்க முதலே முந்தி விடுவன். நீங்கள் தான் எங்கடை
பொருட்களைப் பாத்திட்டு, அதே மாதிரி வாங்கியிருக்கிறியள் எண்டு தோசையைத் திருப்பிப்
போடுவன். அப்ப அவை அவுட்டாப் போயிடுவினம்.”
“அப்ப நீர் ஏதாவது சுயமா சிந்திச்சு செய்திருக்கிறீரா?” கிருஷ்ணவேணியின்
அடி மஞ்சுவைத் திகைப்படைய வைத்தது. கருநாக்கு உவளுக்கு, பொறாமை பிடிச்சவள் என நினைத்துக் கொண்டாள் மஞ்சு.
“ஏன் செய்யேல்லை? என்ரை கலியாணம், நான் தானே மாப்பிள்ளை பாத்துக்
கட்டினனான்!” முழுக்கதையையும் சொல்ல வெளிக்கிட்ட மஞ்சுவுக்கு மின்னல் போல ஏதோவொன்று
இடைவெட்டியது. `கிருஷ்ணவேனிக்குச் சொன்னால் உலகத்துக்குச் சொன்னமாதிரி’ மஞ்சு நினைத்துக்
கொண்டாள். கதையை முழுங்கிக் கொண்டாள்.
கிருஷ்ணவேணிக்கு மஞ்சுவின் கலியாணம் எப்படி நடந்தது என்று
தெரியும்.
“எடியே மஞ்சு…. உந்த
இன்ரநெற்றிலை சற் பண்ணி கலியாணம் செய்யுறவையைப் பற்றி, நீ என்ன நினைக்கிறாய்?
ஏன் எண்டால், என்னை மூண்டு பேர் பெம்பிள பாத்தவை. எத்தனையோ
பேசிச் செய்யுற கலியாணமே குழம்பிப் போகேக்கை, ஆளை ஆள் நேரிலை பாக்காம, அவையைப் பற்றி
ஒண்டும் தெரியாம எப்பிடி இன்ரநெற் கலியாணங்கள் நடக்குது?”
“எனக்கென்ன தெரியும்? ஏன் உதைப்பற்றிக் கேட்கிறாய்?” கோபமாக
மஞ்சு பொரிந்தாள்.
“ஆரோ சொல்லிச்சினம்…. உம்முடைய கலியாணம் இன்ரநெற் கலியாணம்
எண்டு. உம்முடைய அம்மாதான் அந்தப்போட்டோவைக் காட்டு, இந்தப்போட்டோவைக் காட்டு எண்டு
எடுத்து எடுத்துத் தந்தவாமே!”
”உனக்கென்ன விசரே!” கதையையும் நிறுத்தி, வீடு காட்டுதலையும்
நிறுத்தி, “வெளியே போவம்” என்றாள் மஞ்சு.
`உவளுக்கு இனிச் சொல்லிக்கொண்டிரன். நான் ஒன்பது பேரோடை சற்பண்ணினதையும்,
சிலபேரோடை வீடியோச் சற் செய்ததையும். இப்ப நினைக்கவே வெட்கமா இருக்கு. சிலதுகளைத் திறந்து
திறந்து காட்டித்தானே ஆளைப் பிடிச்சனான்’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் மஞ்சு
“காருக்கை ஹஸ்பனும் பிள்ளையும் இருக்கினம். நான் போட்டுவாறன்
கிருஷ்ணவேணி” சொல்லிவிட்டுப் பறந்தோடினாள் மஞ்சு.
•
அழகானதொரு வீடு கட்டப்பட்டு, குடி புகுந்து கொண்டார்கள்.
வீடு குடிபுகுர்தல் நடத்த வந்த ஐயர் வாசலில் நின்று, கண்ணாடி இழைகளால் வார்க்கப்பட்ட
இரட்டைக்கதவுகளைப் பார்த்தார், பின் நிமிர்ந்து சூரியனின் திசை நோக்கினார்.
“என்ன ஐயா… இந்தப்பெரிய வீட்டைக் கட்டியிருக்கிறம். நீங்கள்
வீட்டைப் பாக்காம சூரியனைச் சூரியனைப் பாக்கிறியள்?” என்றாள் மஞ்சு.
“கிழக்குத்திசை எது எண்டு தேடுறன் பிள்ளை” பதில் தந்தார்
ஐயர். பின்னர் விறுவிறென்று சுவாமி அறைக்குள் புகுந்தார். மந்திர உச்சாடனங்கள் முழங்கி,
சாந்தி செய்த ஐயர், ‘நீற்றுப்பூசணிக்காய்’ ஒன்றை முன் வாசலில் கட்டவேண்டும் என்று அடம்
பிடித்தார். முடியாது போகவே, பின்புறம் கட்டி திருநீற்றுப் பூச்சைக் குழைத்து முன்புறம்,
கதவு நிலைகள் என அப்பி அழகு பார்த்தார்.
வீடு குடிபுகுர்தல் நிகழ்விற்கு வந்த நண்பர்களின் குஞ்சுகுருமான்கள்,
ஓடி ஆடி வீட்டிற்குள் விளையாடினார்கள். சாப்பிட்டுவிட்டு கைகளை சுவர்களில் துடைத்தார்கள்.
பரிசுப்பொருட்களாகக் குடுத்த பேனை பென்சில் கலர்சோக்குகளால் வீட்டுச் சுவர்களில் படமும்
வரைந்தார்கள்.
அன்று இரவு மஞ்சுவும் சாந்திகுமாரும் நித்திரை கொள்ளவில்லை.
“சனியனுகள்…. சனியனுகள்…” என்று திட்டியபடி இருந்தார்கள். சிறிசுகள் செய்த விளையாட்டினால்
வீட்டைத் துடைத்துத் துடைத்து களைத்துப் போனார்கள். அதன் பிற்பாடு,
பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அல்லது ஏதாவது பார்ட்டிகள்
வந்தால் பூங்காவில் தான் அவற்றைக் கொண்டாடினார்கள்.
லக்சன் அந்த வீட்டில் இருந்து படித்துப் பரீட்சை எழுதினான்.
இரவு முழுவதும் அவனது அறை வெளிச்சம் போட்டது. பரீட்சைக்கு முதல் நாள், “அப்பா… வீட்டுக்கை
ஏதோ டக் டொக் எண்டு சத்தம் கேட்குது” என்று சொன்னான்.
“புது வீடு தானே! காலநிலை வேறுபாட்டுக்கு சுவருகள் விரிஞ்சு
சுருங்கும். அதுதான் அந்தச் சத்தம்” என்று விளக்கம் தந்தான் சாந்திகுமார்.
பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மஞ்சுவும் தாயாரும், அடுத்தநாள்
எல்லாரும் போனபின்னர் வீட்டை ஆராய்ந்தார்கள்.
Air conditioning வைக்கப்பட்டிருந்த இடத்திற்குக் கீழாக ஒரு
பெரிய வெடிப்பு ஆவென்று வாய் பிளந்திருந்தது. உடனே சாந்திக்குமாருக்கு ரெலிபோன் செய்து
விஷயத்தைச் சொன்னாள் மஞ்சு.
அன்று மாலை வீட்டினுள் மந்திராலோசனைக் கூட்டம் நடந்தது. பில்டர்
அவசரமாக அழைக்கப்பட்டார். அவர் கையெழுத்து வாங்கிய படிவத்துடன் வீட்டிற்கு வந்து, அக்கு
வேறு ஆணி வேறாக அலசினார். பில்டர் ஊசியாக நுழைய மஞ்சுவும் சாந்திகுமாரும் நூலாகப் பின்
தொடர்ந்தார்கள். அவர்கள் கண்டதோ ஒரு வெடிப்பு, பில்டர் அவதானித்ததோ பல விரிசல்கள்.
”இதற்காகத் தான் சொன்னேன். வழமையான டிசைன் வரைபடத்தில் மாற்றங்கள்
செய்யக்கூடாது என்று. அதற்காகத்தான் இந்தப் படிவத்திலும் உங்களின் கையெழுத்தை நான்
பெற்றுக் கொண்டேன்” படிவத்தைக் காட்டி தப்புவதற்காக முயன்றார் பில்டர்.
“இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருப்போம். மேலும் ஏதாவது
பிரச்சினைகள் வருகின்றதா எனப் பார்ப்போம்” என விடைபெற்றுக் கொண்டார் பில்டர்.
தொடர்ந்து வந்த நாட்களில் வீடு, பேய் வீடு போல் ஆகியது. ஒரு
மர்மத் திரைப்படம் எடுப்பவர்களுக்கு உகந்ததொரு வீடு போல் ஆகிவிட்டது. இடையிடையே சிலர்
வந்து, வீட்டினில் ஓட்டை துளைத்து தமது பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். அந்த ஓட்டைகள்
எலிகளுக்கு விளையாட்டிடமாகினதே தவிர, விமோசனம் ஏற்படவில்லை. சில இடங்களில் மின்சார
இணைப்பையும் துண்டித்துவிட்டார்கள்.
“இனியும் இந்த வீட்டிற்குள் இருந்தால், ஒருநாள் வீடு உடைந்து
எல்லாரும் செத்துப் போவீர்கள்” எனப் பயங்காட்டினார்கள் அயலவர்கள். அவர்களுக்கு அந்த
வீடு உடைந்து, எங்கே தங்கள் வீட்டை நாசமாக்கிப் போடுமோ என்ற கவலை.
பில்டரின் தரப்பில் இருந்து எத்தனையோ பேர்கள் வந்தார்கள்,
போனார்கள். “வீடு உடைந்து விழாது” என்ற உத்தரவாதம் தந்தார்களேயொழிய, விட்டைத் திருத்திக்
கட்டித்தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.
இடையில் லக்சனின் VCE றிசல்ற் வந்தது. நினைத்தபடி அவன்
99.6 புள்ளிகள் பெறவில்லை. 92.3 புள்ளிகளே பெற்றுக் கொண்டான்.
“95 புள்ளிகள் மட்டும் ஒரு சாதாரணபிள்ளையால் எடுத்துவிடலாம்.
அதுக்கு மேலைதான் கஸ்ரம். ஒவ்வொரு புள்ளி நகரவே சீவன் போகும்” என்று கிருஷ்ணவேணி மஞ்சுவிற்குச்
வேப்பிலை அடித்தாள்.
“அம்மா… நான் கன பேரிட்டை ரியூசன் போனதுதான் பிரச்சினை. எக்ஷாம்
ஹோலிலை குழம்பிப் போனன்” என்றான் லக்சன்.
”ஒண்டிலும் பிரச்சினை இல்லை. இந்த வீடு கட்டத் தொடங்கினதுதான்
பிரச்சினை. சனத்தின்ரை நாவூறு. ஒருக்கால் எங்கடை ஐயரைக் கூப்பிட்டு இதைப்பற்றிக் கதைக்க
வேணும்” என்றார் மஞ்சுவின் அம்மா.
“அதுவும் நல்ல யோசனை தான்” என வழிமொழிந்தாள் மஞ்சு.
“என்ன ந்டந்தாலும் இந்த மனிசன் ஒண்டுக்குமே அசையுதே இல்லை.
றென்ரல் புறப்பட்டி வாங்கிறதும், பங்குச்சந்தையுமா அலையுது” எனச் சாந்திக்குமாரைத்
திட்டித்தீர்த்தாள் மஞ்சு.
அவளின் `இன்ரநெற் கலியாணம், கட்டிய வீடு, பிள்ளைகளின் படிப்பு’
எல்லாமே பிச்சைக்காரன் வாந்தியாக குமட்டிக்கொண்டு வந்தது மஞ்சுவுக்கு.
ஒருநாள் ஐயர் காரில் வந்திறங்கினார். அவருக்கு வாஸ்து மனையடி
சாஸ்திரமும் தெரியும்.
”வீடு வாஸ்து மனையடி சாஸ்திரத்தின்படி கட்டப்படவில்லை. வீட்டின்
பிரதான வாசல் ஈசானிய திசையில் இருந்தால் நல்லது” என்றார் அவர்.
“ஐயா…. நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே!” என்றார்கள்
ஏககாலத்தில் எல்லாரும்.
“வீட்டின் வாசல் வடகிழக்கு திசையில் இருந்தால் நல்லது. உங்கள்
வீடு குடிபுகுர்தல் நிகழ்விற்கு வந்தபோதே இதை நான் அவதானித்திருந்தேன்.”
”அப்படியென்றால்… வீட்டு வாசல் பக்கத்து வீட்டுக்காரன்ரை
வேலியைப் பார்த்துக் கொண்டல்லா இருக்கும்” என்றாள் மஞ்சு.
”என்ன செய்வது? எல்லாம் இப்பிடியே இருக்கட்டும். இன்னொரு
வாசல் ஒன்றைப் புதித்தாகத் திறந்துவிடுங்கள். பிரதானவாசலை அப்படியே பூட்டிவிட்டு, அந்த
வாசலால் புழங்கிப் பாருங்கள்” என்று ஆலோசனை கூறினார் ஐயர்.
மறுவாரம் அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் பிரதான வாசல் பூட்டப்பட்டது.
அயலவனின் வேலியை நோக்கியபடி ஒரு சிறுவாசல் திறக்கப்பட்டது.
நன்றி : நடு (இதழ் 34, புரட்டாதி, 2020)
No comments:
Post a Comment