Thursday, 4 February 2021

அந்தச் சிலர் - கங்காருப் பாய்ச்சல்கள் (33)

 சிலவேளைகளில், சிலர் சொல்லும் தகவல்கள் உண்மையாகவே அமைந்துவிடுவதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது, எனது அண்ணருக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு கலியாணம் முற்றாகிவிட்டது. ஒருநாள் திடீரென எங்கள் வீட்டிற்கு ஒரு பெண் வந்தார். வயதில் என் அம்மாவை ஒத்திருந்தார்.

”உங்களுக்கென்ன விசரே! அந்தப்பிள்ளைக்கு ஏதோ வருத்தம் இருக்கு. சின்னனிலை ஏதோ வருத்தம் வந்து, அம்மாக்காரி பாவட்டம் இலையை அவிச்சு அவிச்சுக் குடுத்ததை நான் கண்ணாலை கண்டனான். என்னவோ நான் சொல்லிறதைச் சொல்லிப்போட்டன். நீங்கள் இனித் தீர்மானியுங்கோ” சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அம்மா அப்பாவிடம் இதுபற்றி முறையிட்டார். அப்பாவுக்கு இதில் சந்தேகம். சந்தேகத்தைவிட, அவருக்கு அவர் பிறந்த ஊரில் பெண் எடுக்கப் பிரியம். திருமணம் நடந்தது. கடைசியில் அந்தப் பெண்மணி சொன்னது உண்மையாயிற்று.

இதேபோல, அவுஸ்திரேலியாவிற்கு நான் வந்து சேர்ந்தபோது, “அவருடன் சேராதே, இவருடன் சேராதே” என சிலர் என் காதிற்குள் ஓதினார்கள். அது எப்படி ஒருவருடன் சேர்ந்து பழகாமல், அவர் நல்லவரோ கெட்டவரோ என்று கண்டுபிடிக்க முடியும்? மனதிற்கு சமாதானம் செய்துகொண்டு அவர்களுடன் பழகத் தொடங்கினேன். சிலரை ஆரம்பத்தில் இருந்தே கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. விலகிவிட்டேன். சிலரைப் பத்துப்பன்னிரண்டு வருடங்களின் பின்னர் தான் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னும் சிலர் தங்களை இந்தப் பேமானி இன்னமும் கண்டுகொள்ளவில்லையே என்று நினைப்பதும் புரிகின்றது.

அந்தச் `சிலர்’ உண்மையிலேயே எம்மீது கரிசனை கொண்டுதான் சொல்லியிருக்கின்றார்கள் என்றபோது உண்மையிலேயே நான் வெட்கித் தலை குனிகின்றேன்.

 

No comments:

Post a Comment