Telstra, Optus என்று சொல்லிக்கொண்டு தினமும் எமது வீட்டு போனிற்கும், மொபைல்போனிற்கும் வரும் அழைப்புகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அவர்களின் தொல்லைகள் தாங்க முடிவதில்லை.
NBN தொடர்பு வந்ததன் பிற்பாடு எதையும் நம்பிச் செய்ய முடிவதில்லை.
வங்கிக்கணக்கென்றால் என்ன... மின்னஞ்சல் செய்வது என்றால் என்ன... நட்ட நடுவில் குறுக்கறுத்துவிடும்.
முறைப்பாடு செய்தால் எமது அரைநாளை விழுங்கிவிடுவார்கள். பெயர் விபரம் என்று எல்லாம்
கேட்டு முடிய, கடைசியில் அவர்கள் செய்யும் வேலை இதுதான். சுவரில் இருக்கின்ற, NBN
BOX இற்கான இணைப்பை ஒரு தடவை துண்டித்து மீண்டும் இணைப்பதாகும். திரும்பத் திரும்ப
முறையிட்டால் இன்னொன்றையும் செய்யச் சொல்வார்கள். மின்னிணைப்பை (power) ஒருதடவை துண்டித்து
மீண்டும் இணைக்கச் சொல்வார்கள். அத்துடன் முதல் சொன்னவாறு NBN BOX இற்கான இணைப்பை ஒரு
தடவை துண்டித்து மீண்டும் இணைத்துவிட்டு, NBN BOX இலிருந்து modem இற்கான இணைப்பையும்
ஒருதடவை துண்டித்து மீண்டும் இணைப்பதாகும். இவை எல்லாவற்றையும் விட, எமது முறைப்பாட்டிற்கான
தீர்வு ஒன்றையுமே சரிவரச் செய்யாமல், கடைசியில் ஒரு கேள்வி கேட்பார்களே அதுதான் அன்றைய
உரையாடலின் முத்தாய்ப்பு. ”வேறென்ன உதவி வேண்டும்?”
இப்போதெல்லாம் இதற்காகப் போய் முறையிடுவதில்லை. நானாகவே செய்யப்
பழகிக் கொண்டேன்.
சமீபத்தில் ஒரு புது விளையாட்டு துவங்கியிருக்கு. யாருக்காவது
தொலைபேசி எடுத்தால் சில நிமிடங்களில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். பின்னர் மீளத்
தொடர்பு ஏற்படுத்தினால் கதைக்கக்கூடியதாக இருக்கும். ஏதோ உலகத்தின் மிக முக்கிய பெரும்புள்ளி
ஒருவரின் உரையாடலை ஒட்டுக் கேட்பது போன்றிருக்கும் அது.
நேற்று ஒரு பெண்மணி எனது மொபைல்போனிற்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது நான் படுக்கையில் இருந்தேன்.
“நான் Telstraவில் இருந்து கதைக்கின்றேன். நீங்கள் சமீபத்தில்
ஒரு முறைப்பாடு செய்திருந்தீர்கள்...” என்றவாறு பேச்சை ஆரம்பித்தார்.
நாங்கள் சொல்லும் எந்தவொரு முறைப்பாட்டையும் செவிமடுத்துத்
தீர்த்து வைக்காமல், இப்படிக் கழுத்தறுக்கும் நபர்களின் அழைப்புகள் வந்தால் நான் குஜாலாகிவிடுவது
வழக்கம். அவர் பொய்யான இலக்கத்தில் இருந்து ரெலிபோன் செய்கின்றார் என்பதை நான் அறிந்து
கொண்டேன். அவருடன் நான் உரையாடலைத் தொடர்ந்தேன். “நீங்கள் எத்தனை computer வைத்திருக்கின்றீர்கள்?
வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? Computer தவிர வேறு என்னவெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்?”
அவர் என்னிடம் இப்படியெல்லாம் கேள்விகளைத் தொடுத்தார்.
“உங்களுக்கு speed test செய்யும் முறை தெரியுமா?” என்று கேட்டார்.
நான் “தெரியாதே!” என்றேன்.
”உங்கள் computer ஐ ஸ்ராற் செய்யுங்கள். கூகிளைத் திறவுங்கள்”
என்றார்.
நான் படுக்கையில் இருந்தபடியே அவருடன் நடிக்கத் தொடங்கினேன்.
“ஒகே... கூகிளைத் திறந்துவிட்டேன். சொல்லுங்கள்” என்றேன்.
“நான் சொல்வதை கூகிளில் ரைப் செய்யுங்கள்”
“ஓகே..”
”s p e e d ...” என்று ஒவ்வொரு எழுத்தாக எழுத்துக்கூட்டிச்
சொல்லிவிட்டு, “இப்ப computer இல் என்ன தெரிகின்றது?” என்று கேட்டார்.
“உம்முடைய முகம் தெரிகின்றது” என்று நான் சொன்னேன்.
மறுமுனையிலிருந்து இணைப்புத் துண்டிக்கப்பட்டது.