Thursday, 29 April 2021

சடப்பொருள் என்றுதான் நினைப்போ? - எனக்குப் பிடித்த சிறுகதை

 



கோகிலா மகேந்திரன்


மாலை ஐந்து மணியாகியும் வெயில் கனல்வீசிற்று: பங்குனிக் காய்ச்சல் சுள்ளென்று உடலில் சுட்டது.

பத்துநாள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்த நாய்க் கூட்டத்தின் முன்னால்சாப்பாட்டுப் பார்சலை எறிந்தது போல – அந்த 'மினிபஸ்' ஸைக் கண்டதும் சனங்கள்பாய்ந்து ஏறிய காட்சிக்குப் பொருத்தமான உதாரணமாய் அவளுக்கு அதுவேதோன்றியது.

எந்த நேரத்தில் எது நடக்குமோ? எப்போது போக்குவரத்து எல்லாம் திடீரெனஸ்தம்பித்துப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் மக்கள் பாய்ந்தார்கள்: அவர்களிலும்பிழையில்லைத்தான்!

ஆனாலும் அவள் நாயாகவில்லை!

அவளுக்குத் தெரியும், கிரிசாம்பாள் மாதிரிக் கடைசிவரையில் நின்றாலும்'மினிபஸ்ஸின் மினிப் பெடியன்' விட்டுவிட்டுப் போகமாட்டான். பாய்ந்தோடிப்போய்கும்பலுக்குள் சேர்ந்து நசுக்குப்படாமல் இறுதியாகத் தனித்து நின்ற அவளை, 'மினிப்பெடியன்' இராஜ உபசாரம் செய்து வரவேற்றான்.

'அக்கா, இடமிருக்கு வாங்கோ..... உதிலை அடுத்த சந்தியிலை கனபேர் இறங்குவீனம்,இருக்கிறதுக்கு சீற் கிடைக்கும் வாங்கோ...'

Monday, 26 April 2021

பாலம் – எனக்குப் பிடித்த கதை

 








தாமரைச்செல்வி

உயரமான மரங்களும் அடர்ந்த பற்றைகளுமாய் இருந்த அந்தப் பிரதேசத்தை, பிரதான வீதி ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது.

 நிலத்திலிருந்து மிகவும் உயரத்தில் பிரதான வீதியின் ஒரு சிறு வளைவில் அந்தப் பெரிய பாலம் அமைந்திருந்தது.

 இரண்டு லொறிகள் தாராளமாக ஒன்றை ஒன்று விலத்திச் செல்லும் அளவுக்கு நல்ல அகலமான பாலம்.

இரண்டு பக்கங்களும் நீளமான சீமெந்துக் கட்டுடன் இடையே கனமான இரும்புக் கம்பிகளை இணைத்துக் கிட்டத்தட்ட இருபதடி நீளத்துக்குக் கட்டப்பட்ட பாலம்.

அந்தப் பாலத்தின் ஒரு பக்கச் சீமெந்துக் கட்டில் அவன் அமர்ந்திருக்கிறான். இரவு நேரத்து அமைதியைக் கிழித்துக் கொண்டு சில்வண்டுகளின் கிர்என்ற சத்தம்.

Friday, 23 April 2021

ஒருநாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள் – எனக்குப் பிடித்த சிறுகதை

 

சுதாராஜ்

அட, எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறதே என நினைத்துக்கொண்டு கவலையடைந்தாள் புனிதம். வயது அதிகரிப்பது ஒன்றும் புதினமான சங்கதியில்லை என்பது தெரிந்திருந்தாலும் இப்பொழுதெல்லாம் வயதின் நினைவும், அதையொட்டிய கவலைகளும் தோன்றுவதற்குக் காரணம் அவன்தானோ? அவனைக் காண நேர்ந்தபிறகுதானே இந்தப் புதுமையான மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கும்.. தன் மன நினைவுகளுக்கும் கவலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும் புரியவில்லை. அவனைக் காணாமலே விட்டிருக்கலாம். வாழ்க்கையில்வெவ்வேறு விதங்களில் கவலைகளின் தோற்றங்களை அலாதியான துணிவுடனே சுமந்து வந்தவள் புனிதம். இதென்ன புதுவிதமான கவலை…. இந்த முப்பத்திரண்டு வயதை நினைத்து!

இந்த வயதில் எத்தனை பெண்கள் ஊரிலே குடும்பமும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள். கணவன்… குழந்தைகள்…. பொறுப்பு…. சுகம்! மண்ணாங்கட்டி.. குடும்பத்திலும் பிள்ளை குட்டிகளிலும் அப்படி என்ன சுகம்தான் கொட்டிக்கிடக்கிறது? சீச்சி!…. அந்தப் பழம் புளிக்கும்!

Tuesday, 20 April 2021

அரசனின் வருகை – எனக்குப் பிடித்த சிறுகதை

 

உமா வரதராஜன் 

மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக்கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. 

ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரியவிருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின்அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.
 

Monday, 12 April 2021

வாசிப்பு

 

வாசிப்பு

வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன.

சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே முடியாமல் இருக்கும்.

சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால் மீளவும் வாசிக்கப்படும்.

இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். வாசித்து முடித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்து ஜோசித்தால் மனதில் ஒன்றும் இருக்காது. அதன்பின்னர் மறுபடியும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.

இவையெல்லாவற்றையும் தாண்டி, விறுவிறுப்பாக எம்மை எங்கோ அழைத்துச் சென்று, வாசித்து முடித்தபின்னரும் மனதில் சலனத்தை ஏற்படுத்தி நீங்காத தடயமாக மனதில் வீற்றிருக்கும் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வேண்டும், இன்னமும் அதன் தேவை இருக்கின்றது என்ற நினைப்பில் பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றும்.

சில புத்தகங்களை எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்தபோது – புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியிருந்த ஒரேயொரு பொன் வாய்க்கியத்திற்காக அந்தப் புத்தகத்தைத் திறக்காமல் இருந்தேன். அந்த வாய்க்கியம் அவருக்கே அச்சொட்டாகப் பொருந்தியிருந்ததுதான் அதற்குக் காரணம். தான் ஏதோ பெரிய கனவான் போலவும், மற்றவர்களை அவதூறு செய்வது போலவும் அந்த வாய்க்கிய அமைப்பு இருந்தது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர், அதிலிருந்து புதிதாக பலவற்றை அறிந்துகொள்ள முடியுமென்றால் அதுவே சிறப்பு.


Monday, 5 April 2021

கோபுர தரிசனம்

நன்றி : வெற்றிமணி (சித்திரை 2021)