அம்மாவின் மடியில் தலைவைத்து – உடலைச் சீமெந்து தரையில் கிடத்தி – கால்மேல் கால் போட்டுப் பெரிய மனிசத் தனத்துடன், மது தனது ஆண்டு இரண்டு தமிழ்ப் புத்தகத்தை அவளுக்கு உரத்துப் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
சாப்பாடு ஆனதும், இப்படி ஒரு சொகுசும், படிப்பும் அவனுக்குத் தேவைப்படுவது அம்மாவுக்குத் தெரியும்.
அவள், அவனது தலையை வருடியபடி அவனது படிப்பில் ஆழ்ந்திருந்தாள். அப்பொழுது, வெளியே அழுத்தமான அந்தக் குரல் கேட்டது.
'மாமா...!'
மிக மெதுவாகக் கூறியவன், எழுந்து – உறைந்துபோய் உட்கார்ந்தும் கொண்டான்.
புத்தகம் மடங்கித் தூரத்தில் கிடந்தது. அம்மா வெளியே வந்து மாமாவுடன் கதைத்தாள்.