ஈழத்தின் நயினா தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருபவருமான வாசு முருகவேல் எழுதிய நாவல் `மூத்த அகதி’. `எழுத்து’ பிரசுரமாக வந்திருக்கும் இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் (2021) இரண்டாவது பரிசு பெற்றது.
இந்தக்கதை சொல்லப்படும்
முறைமை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு சற்றே வித்தியாசமானது. தமிழ்ச் சினிமாவில் பல படங்கள்
கதாநாயகன் அல்லது நாயகியைச் சுற்றி வருபவை. சில படங்களில் பல நாயகன்கள், நாயகிகள் இருப்பார்கள்.
பாலைவனச்சோலை, வானமே எல்லை, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள். இந்த நாவலும் பலரைப் பின்னிப்
பிணைந்து, சம்பவக் கோர்வைகள் சேர்ந்து ஒரு முழுநாவலாகப் பரிணமித்திருக்கின்றது. நாவலை
வாசித்த போது சினிமா ஏன் குறுக்கே வந்து விழுந்தது என்றால், சினிமாவைப் போலவே கடைசியில்
சிவசிதம்பரம் என்றொரு பாத்திரம் வருகின்றது. இடையே ஒருதடவை வந்திருந்தாலும், கதையுடன்
பெரிதும் ஒட்டாமல் வந்து கொலையுடன் முடிவடைகின்றது. அப்பொழுது நாவலில் ஒருபோதுமே பெய்திராத
அடைமழை ஒன்று பொழிந்து தள்ளுகின்றது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஒரு அரசியல் கட்சிக்கூட்டத்தோடு ஆரம்பிக்கும் நாவல் இன்னொரு அரசியல் கூட்டத்தோடு முடிகின்றது. இன்னொரு விதமாகச் சொன்னால் ஒரு கலியாணவீட்டுடன் ஆரம்பித்து ஒரு இயற்கை மரணம், ஒரு கொலையுடன் முடிவடைகின்றது.