Monday, 25 July 2022
Monday, 18 July 2022
அவள் ஒரு பூங்கொத்து
தேவகி கருணாகரனின் சிறுகதைகளை முன்பு வாசித்திருந்தாலும், `அவள் ஒரு பூங்கொத்து’ என்ற தொகுப்பாக வந்தபோது மீண்டும் ஒரு தடவை வாசித்தேன். இங்கே இவர் பெண்களைப் பூவுக்கு ஒப்பிடாமல், பூங்கொத்திற்கு உயர்த்தி வைக்கின்றார். கதைகள் முழுவதும் பெண்மையைப் போற்றுகின்றார். அதற்காக இவர் ஆண்களைக் குறைத்து மதிப்பிடுகின்றார் என்று அர்த்தமல்ல. `என்றும் என்னவள்’ கதையைப் படித்துப் பார்த்தால் அதுவும் புரிந்துவிடும். தன்னிடம் விவாகரத்து எடுத்த மனைவிக்காக, இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்து திரும்பவும் ஒன்றுசேரும் ஒரு ஆணின் கதை `என்றும் என்னவள்’. இந்தக் கதையில் சோமசுந்தரம் என்ற பாத்திரத்தை எட்டாத உயரத்தில் வைத்து அழகு பார்க்கின்றார் கதாசிரியர்.
Friday, 8 July 2022
கொரோனா தான் காரணம்
வைத்தியசாலை ஒரே கலவரமாக இருந்தது. கொரோனா நோயாளிகள் முட்டி வழிந்து கொண்டிருந்தார்கள்.
வழமையாக, `அங்கே பிடிக்குது… இங்கே பிடிக்குது’ என்று சொல்லிக்கொண்டு வருபவர்களும், சில்லறை வியாதிகளுக்கெல்லாம் சத்திரசிகிச்சை செய்யுங்கள் என்றும் வரும் நோயாளிகள் இப்போது வருவதில்லை. இருகோடுகள் தத்துவத்தில் கொரோனா பெரிய கோடாகிவிட்டது.
Friday, 1 July 2022
ஆசிரியர், மிருதங்கக் கலைஞர் வை. வேனிலான் உடன் நேர்காணல்
மின்னஞ்சல் வழி : கே.எஸ்.சுதாகர்
1. வணக்கம். உங்களை சிறுவயது முதல் சக வகுப்புத் தோழனாக நான் அறிவேன். சிறுவயதில் மிருதங்கம் என்ற இசைக்கருவி மீது மாத்திரம் தங்களுக்கு ஆர்வம் வர ஏதாவது விசேட காரணங்கள் இருந்ததா?
தெல்லிப்பழையில் எமது வீட்டின் அருகிலுள்ள காசிவிநாயகர் ஆலய குரு கணேசலிங்கக்குருக்கள் ஐயாவின் தலைமையில் பாலர் ஞானோதயசபை சைவசமய அறநெறி மற்றும் இசைவகுப்புகள் சிறப்புற நடைபெற்ற காலத்தில் சமய மற்றும் இசையிலும் ஈடுபாடு ஏற்பட்டது. எனது தந்தையாரின் விருப்பத்தினால் 11 வயதில் (தரம் 7) திரு.க.ப.சின்னராசா ஆசிரியரை குருவாகக் கொண்டு மிருதங்க இசையை கற்க ஆரம்பித்தேன். எமது வகுப்புத் தோழன் கந்தையா ஆனந்தநடேசன், வா.அகிலகுருக்கள் (துர்க்கையம்மன் கோவில்) ஆகிய இருவரும் மிருதங்க வகுப்புத் தோழர்களாகவும் அமைந்தனர்
2. பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட பின்னர், ஆசிரியத் தொழில் புரிகின்றீர்கள். உங்கள் தந்தையார் வைரவப்பிள்ளை அவர்களும் ஆசிரியர் என ஞாபகம். ஆசிரியத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்? எங்கெல்லாம் கல்வி கற்பித்தீர்கள்? தாங்கள் கல்வி கற்பிக்கும் பாடங்கள் பற்றிச் சுருக்கமாக அறியத் தருவீர்களா?
என்னை ஆசிரியராக்க வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.அவர் கணிதம், தமிழ் என்பனவற்றை கவர்ச்சிகரமாகக் கற்பிப்பவர். அவரது வகுப்புகளில் விஞ்ஞானம் கற்பிக்க என்னையும் அறிமுகப்படுத்தினார். விஞ்ஞானமாணி (BSc.) பட்டம் பெற்று யா/ வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தொண்டராசிரியராக திருமதி.க.சச்சிதானந்தம் (SLEAS) அவர்கள் நியமித்தார். மேலும், அவரே பாடசாலை நிர்வாக விடயங்களை கற்பித்த குருவாகவும் அமைந்தார். பின், உயர்தர வகுப்புகளுக்கு விலங்கியல் பாட ஆசிரியராக, அரசினால் முதல் நியமனம் கிடைக்கப்பெற்று அக்கரைப்பற்று ஆயிசா பெண்கள் கல்லூரியில் பணியாற்றினேன். பட்ட பின் கல்வியியல் டிப்புளோமா (P.G.Dip –in – Education) பெற்று பின், கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியில் 18 வருடங்களும் அதன் பின் இஸிபத்தன கல்லூரியில் சிங்கள மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூல உயிரியல் மற்றும் விஞ்ஞான ஆசிரியராக 10 வருடங்கள் பணியாற்றி தற்போது பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் பணியாற்றுகிறேன். மேல்மாகாணத்தில் பணியாற்றிய விஞ்ஞான ஆசிரியர்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற ஆசிரியர் பயிற்சிகளில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் போதனாசிரியராக பயிற்சியளித்தேன். 1985 ஆம் ஆண்டிலிருந்து தேசிய வானொலி ரூபவாகினி தொலைக்காட்சியின் கல்விச்சேவைகளில் உயர்தர வகுப்புகளுக்கு விலங்கியல் உயிரியல் மற்றும் சாதாரணதர விஞ்ஞான பாட வளவாளராகவும் பணியாற்றுகிறேன்.