Friday 5 January 2024

`கற்பாறைகள் கண்ணீர் சிந்துகின்றன’ சிறுகதைத்தொகுப்பு ஒரு பார்வை

    

`மண்டைதீவு கலைச்செல்விஎன அழைக்கப்படும் எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள், 1980 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த `அவள் துயில் கொள்கிறாள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.

யுத்த இடம்பெயர்வினால் இவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல கவிதைகளும், நாவலும் அழிந்துவிட்டன என இவர் தனது என்னுரையில் குறிப்பிடுகின்றார். சிலரது முயற்சியினால்---க.பரணீதரன், வ.ந.கிரிதரன், ஆதிலட்சுமி சிவகுமார்---இருப்பவற்றைத் தெரிந்தெடுத்து ஜீவநதி பதிப்பகமாக 2022 இல் வெளிவந்திருக்கின்றது `கற்பாறைகள் கண்ணிர் சிந்துகின்றனஎன்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் ஈழநாடு, எரிமலை, தினக்குரல், சுடர் இதழ், `கனவுக்கு வெளியேயான உலகுசிறுகதைத்தொகுப்பு என்பவற்றில் வெளிவந்த பதினொரு சிறுகதைகள் உள்ளடங்கியிருக்கின்றன.

ஒரு காலத்தின் பதிவுகளாக எண்பதுகளில் வெளிவந்த எட்டுச் சிறுகதைகளையும் பார்க்கையில், இவரது ஆரம்பகாலக் கதைகளின் முடிவுகள் பெரும்பாலும் சோகம் கொண்டனவாக இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவே யதார்த்தம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

`ஒரு கண்ணீர்ப்பூ’ – நிசா/மதன் காதல் சோடிகளின் கதை. அனாதையான நிசா சாதியினால் வேறுபட்டவள். மதனின் பெற்றவர்கள் அவர்களது காதலை விரும்பாத போதும், உறுதியாக நின்றுகொள்ளும் மதனை விட்டு விலகிவிடும் நிசாவின் கதை. மதன் போன்றவர்களின் துணிவை மழுங்கடிக்கும் நிசாவைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

`அவள் துயில் கொள்கிறாள்!கதையில், தன்னுடைய திருமணம் தள்ளிப் போவதால், தங்கைகளின் திருமணங்கள் தடைப்படுகின்றன என்ற நோக்கில் அக்கா தற்கொலை செய்து கொள்கின்றாள். தன்னுடைய நிலையை தங்கைகளுக்குப் புரிய வைத்து, தனது திருமணத்திலிருந்து ஒதுங்கும் மனப்பான்மையை அக்கா கொண்டிருந்தால் அந்த முடிவு வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். இன்னொரு புறமாக அக்கா தற்கொலை செய்த வீட்டில் பெண் எடுக்க, நம் சமூகத்தில் உள்ளவர்கள் சிலர் பயப்படுவார்கள் என்பதையும் அக்கா சிந்தித்துப் பார்க்கவில்லையே என்றும் தோன்றுகின்றது.

`கணவன் மனைவி உறவு தெய்வத்தால் நிச்சயப்படுத்தப்படுகின்றதுஎன்பதற்கமைவானது `கல்லானாலும்…என்ற சிறுகதை. கூடவே மனித உணர்வுகள் திடீர் திடீரென்று மாறிவிடுகின்றது என்பதாகவும் சொல்லலாம். இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போல, நானும் சிலரைப் பார்த்திருக்கின்றேன். என்னதான் கணவன் அடித்தாலும் உதைத்தாலும் மீண்டும் மீண்டும் கணவனோடு ஒட்டிக் கொள்ளும் பெண்கள் அவர்கள்.

தன்னைவிட அந்தஸ்தில் அறிவில் அழகில் சிறந்தவர் ஒருவரை மணம் செய்யவேண்டும் என்று ஏங்கித்தவிக்கும் ஒரு பெண் பற்றியது `கரை காணாத கப்பல்என்ற சிறுகதை. தனது மயக்கம் தெளிவு பெறும்போது எல்லாவற்றையுமே கோட்டை விட்டு விடுகின்றாள் அந்தப் பெண்.

மீனவக் குடும்பத்தை மையமாகக் கொண்டது `நீர்க்குமிழிகள்கதை. என்னதான் குடும்பத்தில் வறுமை தாண்டமாடினாலும், உடுப்புகள் கிழிந்து தொங்க பெண்பிள்ளைகள் ஆடை வாங்க பணமில்லாதிருந்தாலும், அடுக்கடுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளும் தாய்மார்கள் இன்னமும் எமது சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள் என்பதைச் சொல்கின்றது இந்தக் கதை. அத்தோடு இந்தக் கதையில் வரும் பெண்மணி ஒரு நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூரியக்கதிர் நடவடிக்கை, 1995 இல் இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட நடவடிக்கை. ஓடிப்போன மகனை நினைத்து, என்றாவது ஒருநாள் வருவான் எனக் காத்திருக்கும் தாய். ஊர் இடம்பெயர்ந்து போனபோதும், ஊரைவிட்டு விலகாமல் தன் மகனுக்காகக் காத்திருக்கும் அவள், இறுதியில் ஊர்மக்கள் திரும்பி வரும்போது எலும்புக்கூடாகக் காட்சியளிக்கின்றாள். செல்லம்மாவின் உண்மைக் கதையைச் சொல்கின்றது `ரணங்கள்’.

சிறுகதைகள் சமுதாயத்திற்கு நல்ல கருத்துகளை/முடிவுகளைச் சொல்ல வேண்டும். அத்தகைய போக்கிலிருந்து சில கதைகள் (அவள் துயில் கொள்கிறாள், ஒரு கண்ணீர்ப்பூ, யாருக்காக அழுவான்?) விலகிச் செல்வது போல் தெரிகின்றது. ஆனால் சிறுகதை ஆசிரியர் அதுவே யதார்த்தம் என்று சொல்லக்கூடும். ஆசிரியர் தனது பதினெட்டு வயதிலேயே  இத்தகைய படைப்புகளைத் தந்திருக்கின்றார் என்பது வியந்து நோக்கத்தக்கது.

பிற்பட்ட காலங்களில் இவர் எழுதிய, `ரணங்கள்’, `எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுஆகிய இரண்டு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பெண்களை மையம் கொள்ளும் பாத்திரங்கள், கிராமத்து மனிதர்கள், மனதைக் கவரும் இயற்கைச் சித்தரிப்பு, எவரும் புரிந்து கொள்ளும் எளிமையான நடை என இவரின் எழுத்துகள் வாசிப்பைத் தூண்டுகின்றன. இந்த நூலின் வரவுடன், அவர் தொடர்ந்தும் உயிர்ப்பாக எழுத வாழ்த்துகள். 

No comments:

Post a Comment