Sunday 14 January 2024

நேர்முகம்


 நேர்முகம் – சிறுகதை

வருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான். அவன் ஏற்கனவே மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் பயோசயன்ஸ் படித்திருந்தான். நேர்முகத்தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு நேரத்திற்குப் போகவேண்டும் என்பதற்காக முதல்நாள் இரவே வந்து, பல்கலைக்கழகத்திற்கு அருகேயிருந்த சிட்னி பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தான்.

அதிகாலை ஏழுமணிக்கே நகரம் பன்றி கிழறிய கறையான் புற்றாகிவிட்டது. ஒரே சன நெரிசல். வருண் ஹோட்டலில் இருந்து கீழ் இறங்கி ஒரு கோப்பி அருந்தினான். போய்ச் சேரவேண்டிய இடம் பனிப்புகாரினுள் ஒளிந்திருந்தது. குளிர்காற்று உடலை ஊடுருவ கூகிள்மப் பாதை காட்டியது.

மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத்திற்கு வந்திருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த ஹோலிற்குள் இருந்தார்கள். பல்லினமக்கள் வாழும் நாட்டில், பலவித நிறங்களில் மாணவர்கள் இருந்தார்கள். அங்கே நின்ற இளம்பெண்ணொருத்தி - அவர்களின் உடைமைகள் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டிருந்தாள். சாதாரண மணிக்கூடு தவிர்ந்த இலத்திரனியல் சாதனங்கள் எவற்றையும் உள்ளே கொண்டுசெல்ல அனுமதியில்லை. நேர்முகத்தேர்வு முடியும்வரை ஒரு மாணவர் இன்னொரு மாணவருடன் தொடர்பாட முடியாது. ஒவ்வொருவரினது சட்டையின் இடது மேற்பகுதியிலும் அவர்கள் பெயர் எழுதிய ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவர்கள் இளநிலைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்றிருந்தபோதிலும், நேர்முகத்தேர்வுக்கும் தோற்றவேண்டி இருந்தது. அவர்களில் - பெற்றோரின் தொல்லை தாங்காமலோ, மருத்துவத்தை வியாபாரமாக்கும் தந்திரத்திலோ, அல்லது மருத்துவத்திற்கு அர்ப்பணிப்பு செய்யும் மனநிலையில்லாதவர்களோ வந்திருக்கக்கூடும்.. அவர்களையெல்லாம் வடிகட்டிப் பிரித்தெடுப்பதே இந்த நேர்முகத்தின் நோக்கம்.

ஐந்து சிறு குழுக்களாக அவர்கள் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்தார்கள். வருண் முதலாவது தொகுதி மாணவர்களில் இடம்பெற்றிருந்தான். அவன் இளமையில் இருந்தே அர்ப்பணிக்கும் இயல்புகள் கொண்டவன். அதுவும் மனசு ஒன்றி, ஒரு ஈடுபாட்டுடன் எதையும் செய்துவிடுவான்.

முதலாவது தொகுதி மாணவர்களுக்கான நேர்முகம் ஆரம்பிப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. நுழைவாயிலில் இருந்து, நேர்முகம் நடைபெறும் கட்டடத்திற்கு செல்வதற்கு மூன்று நிமிடங்கள் போதுமானது. அறிவிப்பு கிடைத்ததும், அவர்கள் அடைத்துவைக்கப்பட்ட பட்டிமாடுகள் திறந்துவிட்டாற்போல் பாய்ந்து வெளியேறினார்கள்.

இடையே நடைமாந்தர்கள் சாலையைக் கடக்கும் வழியொன்றிருந்தது. இவர்களுக்கு எதிராக, வெள்ளையினத்துப் பெண்கள் இருவர் அப்பொழுது பாதையைக் கடந்துகொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி துவிச்சக்கரவண்டியை உருட்டியவாறும், அவர் அருகில் இன்னொரு முதிர்ந்தபெண்மணி மின்சாரத்தில் இயங்கும் வீல்செயரிலும் வந்து கொண்டிருந்தார்கள். வீல்செயரில் இருந்த பெண்மணி நவநாகரீகத் தோற்றம் கொண்டவராக இருந்ததால் எல்லாரது பார்வையும் அவர்மேல் குவிந்தன. அவரது ஓலைத்தொப்பியின் நடுவிலிருந்து ஒரு குஞ்சம் வானவில்போல் வெளிக்கிழம்பி, அவரின் காதுவரை தொங்கிக் கொண்டிருந்தது. கையிலே அழகான ஓலைவிசிறி வைத்திருந்தார். மிகவும் கலகலப்பாக வந்துகொண்டிருந்த அவரின் வீல்செயரை ஏதோ தடக்கிவிடவே `ஓ... மை கோட்… ஓ...’ என்று சத்தமிட்டபடி நடைபாதையில் சரிந்தார் அவர். வீல்செயர் அவர் தலைமேல் வட்டமிட, `ஹெல்ப் மி... ஹெல்ப் மி’ என்று உளறினார். எல்லாரும் அந்த இடத்தைவிட்டு விலகி ஓடிவிட, துவிச்சக்கரவண்டியில் வந்த பெண்மணி செய்வதறியாது திகைத்தார். வருணும் இன்னும் இரண்டு பெண்களும் அவரருகே ஓடிச் சென்றார்கள். அப்போதுதான் வருண் உதவிக்கு வந்த அந்தப் பெண்களைப் பார்த்தான். காலையில் ஹோட்டல் எலிவேற்றரில் சந்தித்ததாக நினைவு. மஞ்சள் நிறத்தோல் கொண்டவளின் பெயர் மெலிஷா என்றும், வருணின் நிறத்தில் இருந்தவளின் பெயர் ப்ரிம்ரோஸ் என்றும் அவர்களது சட்டையின் இடது மேற்பகுதியில் எழுதப்பட்ட ஸ்ரிக்கர்கள் தெரிவித்தன.

“இவர் எனக்குத் தெரிந்தவர்தான். உங்களால் உதவ முடியுமா?” அந்தப் பெண்மணி கேட்டார்.

“நிட்சயமாக” ஏககாலத்தில் மூன்றுபேரும் சொன்னார்கள்.

முதிய பெண்மணியின் வாய் ஒருபுறம் இழுத்திருந்தது. கைகள் நடுக்கம் கண்டிருந்தன. பக்கவாத நோயாளி போன்றிருந்த அவருடன் உரையாடி, மீண்டும் அவரை வீல்செயரில் இருந்தி மறுபக்கம் வரை போவதற்கு வருணுடன் அந்த இரண்டு பெண்களும் உதவி செய்தார்கள். நல்லகாலம் அவருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

”மெலிஷா… ப்ரிம்ரோஸ்… வருண்... உங்கள் மூவருக்கும் நன்றி” என்றார் சைக்கிளில் வந்த பெண்மணி.

வருண் நேரத்தைப் பார்த்தான். நேர்முகம் ஆரம்பிப்பதற்கான நேரம் கடந்துவிட்டிருந்தது. மூன்றுபேரும் பாய்ச்சலில் கதைத்துக் கொண்டே ஓடினார்கள்.

“நீங்கள் சிட்னி பார்க் ஹோட்டலில் தான் இரவு நின்றீர்களா?” மெலிஷா கேள்வியைத் தொடுத்தாள்.

“ஆம்... நான் உங்கள் இருவரையும் காலையில் எலிவேற்றரில் பார்த்திருக்கின்றேன்.”

“நாங்கள் இன்ரவியூவிற்குத் தாமதித்து விட்டோம்” எனச் சொல்லிக்கொண்டே வருண் இருவரையும் திரும்பிப் பார்த்தான். பின்னாலே வந்துகொண்டிருந்த அவர்கள் இருவரையும் காணவில்லை. அவர்கள் இருவரும் குதிரைப்பாய்ச்சலில் நேர்முகம் நடக்குமிடத்தில் நின்றார்கள். அங்கே இவர்களுடன் புறப்பட்டவர்கள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். நேர்முகம்  பத்துநிமிடங்கள் தாமதமாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

“நல்ல காலம்” என இவர்கள் மூவரும் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டார்கள்.

நேர்முகத்தில் மொத்தம் ஐந்து ஸ்ரேஷன்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு அறையில் இருப்பவரும் தனித்தனி புள்ளிகளிடுவார்கள். சராசரி கணக்கில் எடுக்கப்படும். ஒவ்வொரு நேர்முகத்திற்குமான நேரம் ஏழு நிமிடங்கள். முதல் நான்கு ஸ்ரேஷன்களிலும் வைத்தியத்துறை உள்பட, பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள். ஐந்தாவதுது ஸ்ரேஷன் - சிம்ம சொப்பனம். அங்கே ஒருவர் - நோயாளியாகவோ, மனநோய் பீடித்தவராகவோ, வைத்தியராகவோ, ஞாபகமறதிக்காரராகவோ – இப்படி ஏதாவதொரு வேடத்தில் காட்சி தருவார். அவருடைய நடிப்புடன் மல்லுக்கட்டி புள்ளிகள் பெறுவது மிகக் கடினம்.

நான்கு ஸ்ரேஷன்களையும் வெற்றிகரமாக முடித்த வருண், ஐந்தாவது ஸ்ரேஷனைத் தேடிக் காணாது திகைத்து நின்றான். அங்கே ஒரு பெண்மணி  கால்மேல் கால் போட்டு ஆட்டியபடியே உட்கார்ந்திருந்தார்.

“மடம்... ஐந்தாவது ஸ்ரேஷன் எங்கே?”

“பல்கைக்கழகத்தின் நுழைவாயில்தான் ஐந்தாவது ஸ்ரேஷன்.”

“தாங்ஸ் மடம்.”

வருணுக்கு வியப்பாகவிருந்தது. எங்கிருந்து புறப்பட்டார்களோ அதுவே ஐந்தாவது ஸ்ரேசனாகக் காட்சி தந்தது. மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்தான் வருண். புகார் மறைந்து, வானம் தெளிந்திருந்தது. ஐந்தாவது ஸ்ரேஷனில் - வீல்செயரில் சந்தித்த அந்த ஓலைத்தொப்பி முதியவர், இவர்களின் உடைமைகளை திருப்பிக் குடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக சைக்கிளில் வந்த பெண்மணி நின்று கொண்டிருந்தார்.  

“உங்களுக்கான ஐந்தாவது ஸ்ரேஷன் நேர்முகம், ஏற்கனவே பெடஸ்ரியன் குறொசிங்கில் நடந்து முடிந்துவிட்டது” சிரித்தபடியே தொப்பியின் குஞ்சம் ஆட முதியபெண்மணி சொன்னார்.

வருண் அவரை உற்றுப் பார்த்தான். நேரிய வாய் ; கைகள் நடுக்கம் கொண்டிருக்கவில்லை. அவனுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. அந்த அதிசயம், பின்னாலே வரப்போகும் எல்லா மாணவர்களுக்காகவும் காத்திருக்கின்றது என நினைத்தபடி தனது உடைமைகளை வாங்கிக்கொண்டு சிட்னி பார்க் ஹோட்டல் நோக்கி நடந்தான்.

இரவு மீண்டும் அவன் மெல்பேர்ண் திரும்பவேண்டும். புறப்படுவதற்கு முன்பாக உணவருந்தச் சென்றபோது, அங்கே மீண்டும் அந்தப்பெண்களைச் சந்தித்துக் கொண்டான். காலையில் சந்தித்த நெருக்கம் அவர்களை மீண்டும் கதைப்பதற்குத் தூண்டியது.

“காலையில் கதைப்பதற்கு நேரம் இருக்கவில்லை. நான் வருண், இலங்கைத்தமிழ், மெல்பேர்ணில் இருந்து வந்தனான்..” வருண் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ப்ரிம்ரோஸ் மெலிஷாவிற்குப் பின்னாலே போய் ஒதுங்கினாள்.

“நான் மெலிஷா...கொரியாவைச் சேர்ந்தவள். இவள் ப்ரிம்ரோஸ்கூட தமிழ் தான். என்ன... கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவள்...”

“காலையில் இருந்து பார்க்கின்றேன். ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து வரவில்லையே!”

வருணை நிமிர்ந்து பார்த்தாள் ப்ரிம்ரோஸ். தான் பார்த்துவிட்டதை வருண் கண்டுவிட்டான் என அறிந்ததும் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

“நீங்கள் தமிழ் கதைப்பீங்களா?” குருவிச்சொண்டைத் திறந்தாள் ப்ரிம்ரோஸ்.

“அப்பாடா... குரல் வந்துவிட்டது... நான் தமிழேதான்...”

“நாங்கள் இரண்டுபேரும் பிறிஸ்பேர்ணில் இருந்து வந்திருக்கின்றோம். ஸ்கூல் ஃபிறன்ஸ்...” என்றாள் ப்ரிம்ரோஸ்.

“நீங்கள் இரண்டுபேரும் இஞ்சை பிறந்திருந்தாலும் நல்லா தமிழ் கதைக்கிறியள்” அவர்கள் இருவரும் தமிழில் சரளமாக உரையாடுவதைக் கண்டு வியந்தாள் மெலிஷா.

“ஏன் நீயும் கொரியன் பாஷை நல்லாக் கதைப்பாய் தானே!”

“கதைப்பேன் தான். ஆனால் கதைக்கத்தான் ஆள் இல்லை. நீங்கள் கதைச்சுக்கொண்டு நில்லுங்கோ. நான் ஒருக்கா றூமுக்குப் போட்டு ஓடி வாறன்.” அவர்கள் இருவருக்கும் கதைத்துப்பழக ஒரு வாய்ப்பைக் கொடுக்கவேண்டுமென விரும்பினாள் மெலிஷா.

மெலிஷா சென்றதும் வருணுக்குக் கொஞ்சம் துணிவு வந்தது. ப்ரிம்ரோஷை வட்டமடித்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவள் அழகை ரசித்தான். புல்லின் நிறத்தில் வெல்வெற் மினுமினுப்பில் ஒரு முழுநீள அங்கி, அவள் உடம்புடன் ஒட்டியபடி வழிந்தோடியது. மரூண்நிற உதட்டுச்சாயம் அவளுக்கு நிரந்தரப் புன்முறுவல் ஒன்றைக் குடுத்திருந்தது. தீட்டிய புருவங்கள், குடை விரித்துக் கீழ் இறங்கிய கூந்தல் என வனப்புடன் தோன்றினாள் ப்ரிம்ரோஸ்.

“என்ன அதற்குள்ளேயே கண் போட்டுவிட்டீர்களா?” ப்ரிம்ரோஸ் மெல்லிய கீச்சுக்குரலில் கேட்டாள். வருணுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“அது என்ன ப்ரிம்ரோஸ்? றோஸ் கேள்விப்பட்டிருக்கின்றேன்...”

“முள்செவ்வந்தி.... கவனமாக இருங்கள். குத்திப் போடுவேன்... ”

வருணுக்கு அவன் அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

`வருண்... உன்ரை அக்கா படிக்கிறேன் படிக்கிறேன் எண்டு இப்ப முப்பது வயதும் தாண்டிப் போச்சுது. அக்கா மாதிரி நீயும் இருந்திடாதை வருண்.... யூனியிலையே உனக்கு ஏத்தமாதிரி ஒண்டைத் தேடிப்பிடி...’

“கண்டு பிடித்துவிட்டேன்.... கண்டு பிடித்துவிட்டேன்....” உளறினான் வருண்.

“என்ன சொல்கின்றீர்கள்?”

“இல்லை... முள்செவ்வந்தி எது என்று கண்டுபிடித்துவிட்டேன். அதுசரி... உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? ஏன் நீங்கள் மெடிஷின் படிக்க வந்தியள்?” தொடர்ந்து கேள்விமேல் கேள்விகளை ப்ரிம்ரோஸ் மீது அடுக்கினான் வருண்.

“என்ன...! என்னை இன்ரவியூ செய்கின்றீர்களா?”

”இன்ரவியூ? நோ.. நோ... அப்படியெண்டு ஒண்டுமில்லை. எனக்கு இந்தக் கம்பஸ் பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் புடிச்சிருக்கா எண்டு கேக்கிறன்?”

“எனக்கும் தான் பிடிச்சிருக்கு. கம்பஷைவிட...” சொல்லி முடிப்பதற்குள் மெலிஷா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் லிப்டில் இருந்து இறங்கியதும், மறைவாக நின்று இவர்களைப் பார்த்து ரசித்துவிட்டு வந்தாள்.

“இன்னும் நான்கு வருடங்கள் கதைக்க வேண்டும். மிச்சம் வைச்சிருங்கோ” சொல்லிக்கொண்டே அருகில் வந்தாள் மெலிஷா.

“அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கின்றீர்கள்?” வருண் மெலிஷாவைப் பார்த்துக் கேட்டான்.

“எப்படியும் நாங்கள் மூன்றுபேரும் திரும்பவும் சந்திப்போம் எண்டுதான் என்னுடைய மனம் சொல்கின்றது. அதுக்குக் காரணம் பெடஸ்ரியன் குறொசிங் – எங்கட ஐந்தாவது ஸ்ரேஷன். கட்டாயம் எங்கள் மூவருக்கும், இருபதுக்கு இருபது புள்ளிகள் அதில் கிடைக்கும். நம்பிக்கை வையுங்கள் வருண். நம்பிக்கைதானே வாழ்க்கை.” என்றாள் மெலிஷா.

மூவரும் தத்தமது அலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டார்கள். செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

பிரிவதற்கு முன்னர், “வருண்... உங்களுக்கு `ப்ரிம்ரோஸ் ஃபெயரி ரேல்’ கதை தெரியுமா?” என்று கேட்டாள் மெலிஷா. “இல்லையே!” என்றான் வருண்.

“அடுத்தமுறை சந்திக்கும்போது படித்துக்கொண்டு வாருங்கள். உங்களுக்காக ப்ரிம்ரோஸ் தேவதை கேக் செய்து கொண்டு...” மெலிஷா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ப்ரிம்ரோஸ் அவளது வாயைப் பொத்தினாள்.

°

 

No comments:

Post a Comment