Monday, 1 January 2024

தூங்கும் பனி நீர் - சிறுகதை

“சிந்து…… மேக்கப் போடுற அன்ரி வந்திடுவா. சீக்கிரம் ரெடியாகு” அம்மா குசினிக்குள் நின்று கூக்குரலிட்டார். குசினிக்குள் அம்மாவின் சிநேகிதிகளின் ஆரவாரம் கேட்கின்றது.

ஹோலிற்குள் அண்ணா பிரதீபனும், நண்பர்களும் இறுதிக்கட்ட சோடனைகளில் மூழ்கிப் போயிருந்தார்கள். நேற்று இரவு தொடங்கிய இந்த ஆரவாரம் இன்னமும் முடியவில்லை.

அப்பா திருமணமண்டபத்தில் நிறைய வேலைகள் இருப்பதாகச் சொல்லிச் சென்றுவிட்டார்.

நேற்றுக்கூட அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது. பொதுவாக காசு விஷயத்தில் தான் இருவருக்குமிடையே சண்டை வரும். அப்புறம் சீக்கிரமாகவே சிநேகிதம் கொண்டுவிடுவார்கள். அம்மாவும் அப்பாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். அதனாலோ என்னவோ அவர்கள் சண்டை சீக்கிரத்தில் சுமுகமாகிவிடும். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்திருந்தாலும், நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை.

“இந்த வீட்டுக்கு மருமக்களாக, சைனாவோ வியட்நாமோ ஏன் சிங்களமோ வரக்கூடாது.” அண்ணாவுக்கும் சேர்ந்ததுதான் அந்த அன்புக்கட்டளை.

”அம்மா… ஒஸ்ரேலியாவிலை தமிழ் ஆட்களே குறைவு. இதுக்குள்ளை போய் எங்கை தேடிப் பிடிக்கிறது தமிழை?” என்றான் அண்ணா.

“உங்களை ஆர் தேடிப் பிடிக்கச் சொன்னது. நாங்கள் தான் பேசி உங்களுக்குச் செய்து வைப்பம்.” அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கோரஸ் வைப்பார்கள்.

நேற்றும் அப்பா வேலைக்குப் போயிருந்தார். அப்பா புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, “இண்டைக்கும் வேலைக்குப் போகவேண்டுமா?” என்று அம்மா சண்டையை ஆரம்பித்தார். “எனக்கு மூண்டுநாட்கள்தான் லீவு தந்திருக்கின்றார்கள். இஞ்சை நித்திரை கொள்ளேக்கையும் காலை ஆட்டாவிட்டால் வேலை காலிதான்” என்றார் அப்பா. அப்பா செக்கியூரிட்டிக் கார்ட். அம்மா வயது முதிர்ந்தவர்கள் காப்பகத்தில் வேலை செய்கின்றார்.

வீட்டில் நான் உட்பட, அப்பா அம்மா அண்ணா என்று எல்லோருமே வேலை செய்கின்றோம். இருந்தும் கையில் காசு தங்குவதில்லை. வீட்டு  மோற்கேஜ், கரண்ட்பில், காஸ்பில் அந்தபில் இந்தபில் எண்டு மாசம் முடிய எல்லாமே முடிந்து போகும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இலங்கையில் பெற்றோர்கள் இருப்பதால், அவர்களுக்கும் காசு அனுப்ப வேண்டும். அண்ணா வேலை செய்துகொண்டு மேற்படிப்புப் படிப்பதால், அவன் உழைப்பு அவனுக்கே பத்தாது.  எல்லோரின் உழைப்பின் கூட்டு முயற்சியினால் தான் இந்தத் திருமணமே நடைபெறுகின்றது.

அம்மா தான் சத்தமிட்டுக் கூப்பிட்டது, எனக்குக் கேட்டிருக்காது என்ற நினைப்பில், என் அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தார்.

“என்ன பிள்ளை? இன்னும் ரெடியாகேல்லையே! ஜோதி ரீச்சரல்லே வரப்போறா….”

“ஜோதி ரீச்சரா? அவா ஏன் இஞ்சை வரவேணும்?”

“அவா தானே உனக்கு மேக்கப் போடப்போறா!”

நான் திடுக்கிட்டுப் போனேன்.

மேக்கப் போடுற அன்ரி வரப்போகின்றா என்று சொன்னாவேயொழிய, யார் என்று இதுவரை அம்மா சொன்னதில்லை. அம்மாவின் பள்ளி நண்பி என்றோ – அதற்கும் மேலாக என்னுடைய பாடசாலை ரீச்சர் என்றோ அம்மா சொல்லவில்லை. முன்னரே தெரிந்திருந்தால் கட்டாயம் மறுத்திருப்பேன்.

”அம்மா… எப்பிடியம்மா? இது எப்பிடி?”

“எது எப்பிடி?”

“அவா என்னுடைய ஸ்கூல் ரீச்சர். ரீச்சருக்கு ஒரு மரியாதை குடுக்க வேண்டாம். எனக்கு பெரிய அவமானமா இருக்கு!”

“இதிலை அவமானப்படுறதுக்கு என்ன இருக்கு. பெருமைப்படு. உனக்குப் பள்ளிக்கூடத்திலை படிப்பிச்சதோடை, உன்ரை கலியாணத்திலும் கலந்து கொள்ளுறா எண்டதை நினைச்சுப் பெருமைப்படு.”

“எனக்கு இதிலை துளிகூட விருப்பம் இல்லையம்மா…”

”ஜோதியும் நானும் ஒண்டாப் படிச்சனாங்கள். சின்னனிலையிருந்தே ஃபிரன்ஸ். எப்பிடியும் கலியாணத்துக்கு அவவும் வரப்போகின்றா. தன்னைவிட்டிட்டு வேறை ஆரையேனும் மேக்கப்புக்குப் பிடிச்சா, அவ என்ன நினைப்பா.”

நானும் அம்மாவும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும்போது கதவு பெல் சத்தம் கேட்டது.

”ஜோதி ரீச்சர் வந்திட்டா போல கிடக்கு. எங்களுக்காக ஒண்டரை மணித்தியாலம் கார் ஓடி வந்திருக்கின்றா. உன்னை மண்டாடிக் கேக்கிறன். கலியாணவீட்டிலை குழப்பம் செய்யாதை.” வாசல் கதவை நோக்கி அம்மா விரைந்து போனார். பாதிக்கதவு திறக்கும்போதே ரீச்சரின் ஆரவாரம் கேட்டது. நான் கதவை மெதுவாக நீக்கி, உள்ளிருந்து எட்டிப் பார்த்தேன்.

ரீச்சருடன் அவரைப்போலவே மூக்கும் முழியுமாக ஒரு சிறுபெண்ணும் நின்றிருந்தாள்.

“இது என்ன வாசலிலை மூங்கில் மரமெல்லாம் வச்சிருக்கிறியள்?” முகமெல்லாம் சிரிப்புடன் உள்ளே வந்தார் ஜோதி ரீச்சர். இலங்கையில் பள்ளியில் பார்த்தமாதிரி, இத்தனை வருடங்கள் கழித்தும் அதே அழகில் ஜொலித்தார் அவர். வாசலில் நின்றபடியே, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு பாடத் தொடங்கிவிட்டார்.

`மூங்கில் இலை மேலே

தூங்கும் பனி நீரே’

அவர் ஆரம்பிக்க, அம்மா தொடர்ந்தார்.

`தூங்கும் பனி நீரை

வாங்கும் கதிரோனே!’

இருவரும் கட்டிப்பிடித்து சுழன்றடித்தார்கள்.

`எனக்கொரு சிறகில்லையே

ஏங்கும் இளமைக்குத் துணையில்லையே

குளிருக்கு நெருப்பில்லையே

பெண்ணின் குணத்துக்கு மனம் இல்லையே’ வீட்டின் சுவர்புறம் திரும்பி மிகுதியை தானே பாடினார் ரீச்சர். கண்ணைக் கசக்கிக் கொண்டார்.

“சரி…. சரி... அதை விடு. இப்ப சந்தோஷமா இரு” அம்மா அவரைத் தேற்றினார்.

“மகளைத் தெரியுந்தானே! ஏழாம்வகுப்புப் படிக்கிறாள். உன்னுடைய வீட்டுக் கலியாணம் எண்டபடியாலை கூட்டி வந்தேன்.”

“வாம்மா… வந்து இந்தச் செற்றியிலை இரு” அந்தச் சிறுமியை ஆதரவாகத் தடவி உள்ளே கூட்டிவந்தார் அம்மா.

”அது சரி…. எங்கே உன் கதிரவன்?” ரீச்சர் அம்மாவிடம் கேட்டார்.

“வெளியே போய்விட்டார். சீக்கிரம் வந்துவிடுவார்.”

“என்னுடைய ஒரு ஸ்ருடண்டிற்கு மேக்கப் போடுறது, எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்குத் தெரியுமாடீ” ரீச்சர் சொல்லுவது கேட்கின்றது.

“ஏன் இப்படி ஜோதி ரீச்சர் மாறிப் போனார்? அவருக்கு அவுஸ்திரேலியாவிலை ஏன் ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை?” அங்கலாய்த்தேன் நான்.

நான் ஆறாம்வகுப்பு வரையும் இலங்கையில் படித்தேன். அதன் பின்னர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். இலங்கையில் எனக்கு ஜோதி ரீச்சர் சயன்ஸ் படிப்பித்தார். வகுப்பு ரீச்சரும் அவர்தான். அப்போது அவருக்கு முப்பது வயதுதான் இருக்கும். தூரத்தில் கண்டவுடனேயே மாணவர்கள் பயத்தில் ஒடுங்குவார்கள். அவ்வளவு மரியாதை. நன்றாகப் படிப்பிப்பார். ஆனால் பொல்லாதவர். மெல்லிய தேகம். மூக்குக்கண்ணாடி அணிந்து, சீலை உடுத்தி வரும்போது நடிகை ஷோபா போல இருப்பார். குரலும் அவரைப் போலத்தான். படிப்பிக்கும்போது மாணவர்கள் அவரையே பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.

ரீச்சரும் அவுஸ்திரேலியாவில் தான் இருக்கின்றார் என்பதை ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் அறிந்துகொண்டேன். ஒருநாள் மாலை, அம்மா வேலை முடித்து வந்தவுடன் அப்பாவுடன் எதோ இரகசியம் பேசினார். பின்னர் அவசர அவசரமாக இருவரும் காரில் கிழம்பினார்கள்.

“பிரதீபன்… சிந்து… நாங்கள் ஜோதி ரீச்சர் வீட்டை போட்டு வருகின்றோம். வருவதற்கு சற்று நேரமாகும். இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு உறங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் திறப்பு வைத்திருக்கின்றோம். திறந்துகொண்டு வருவம்” என்றார் அம்மா.

“ஐய்… ஜோதி ரீச்சர் வீடுதானே! நாங்களும் வருகின்றோம்” நானும் அண்ணாவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம்.

“உங்களை நாங்கள் இன்னொருநாள் கூட்டிக்கொண்டு போகின்றோம். இப்போ ஒரு அவசர அலுவலாகப் போகின்றோம்” என்றார் அப்பா. எங்களுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. 

அன்று முழுவதும் எனக்கு உறக்கம் வரவில்லை. ரீச்சர் வீட்டுக்கு ஏன் எங்களைக் கூட்டிப் போகவில்லை என்ற கேள்வி மனதை அரித்தபடி இருந்தது. அம்மா அப்பா வரும்போது இரவு இரண்டைத் தாண்டியிருந்தது. கதவைத் திறந்து உள்ளே வரும்போதும் எதோ கசமுசா கசமுசா என்று கதைத்தபடிதான் வந்தார்கள். அவர்களின் படுக்கை அறை பக்கத்தில் இருந்ததால், அவர்கள் கதைப்பது விட்டு விட்டுக் கேட்டது.

“பேசிச் செய்யிற சில கலியாணங்களிலை உதுதான் வாற பிரச்சினை. ஆரெண்டு தெரியாமை திடீரெண்டு கழுத்தை நீட்டெண்டா என்ன செய்யுறது?”

“என்ன இருந்தாலும் ஒரு ஆண் இப்பிடிச் செய்வானா? தறுதலை. தறுதலை. போதை தலைக்கேறிவிட்டால், பெண்ணை எதுவும் செய்யலாமா?”

“அடிக்கிறதும்…. சிகரெட்டால் சுடுகிறதும்… மயிரையும் புடுங்குவானா?”

“ஒரு பெண்குழந்தைக்கும் அப்பனாகிவிட்டான். எப்பிடி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.”

மாறி மாறி அப்பாவும் அம்மாவும் கதைத்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் எப்பொழுது தூங்கினார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன `இன்னொருநாள் கூட்டிப் போகின்றோம்’ நடக்கவே இல்லை. ஜோதி ரீச்சரை நான் இப்போதுதான் முதன்முதலாக அவுஸ்திரேலியாவில் பார்க்கின்றேன்.

“எந்த நிலையிலும் நீங்கள் உங்களை ஒருநாளும் விட்டுக் கொடுக்காதீர்கள்” என்று அடிக்கடி சொல்லும் ரீச்சர் இன்று தன்னுடைய தொழிலையே விட்டுவிட்டார். ”ஜோதி சரியான கெட்டிக்காரி. எங்களுடன் படித்தவர்களில் அவர் மட்டும்தான் பல்கலைக்கழகத்திற்கே தெரிவானார்”  அம்மா அவரைப்பற்றி புளுகித்தள்ளுவார். எனக்கு ஜோதி ரீச்சரை நினைக்க தாளமுடியாத கவலையாக இருந்தது.

ரீச்சர் அறைக்குள் நுழைந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். “நீ என்னுடைய மகளைப் போல…” நான் சிலிர்த்துப் போனேன். ரீச்சர் அடித்து அழுத காலம் போய், இன்று ரீச்சர் அணைத்த போது அழுகை வந்தது. அடக்கிக் கொண்டேன்.

அவர் எனக்கான அலங்காரத்தை ஆரம்பித்தார். என்னை தேவதையாக மாற்றினார். ஆடைகளை மாற்றி அழகுபடுத்தும் போது நான் வெட்கத்தில் கூனிக்குறுகிப் போனேன். எனக்கான சீலையை அணிவிக்கும்போதும், மார்புகளைத் தீண்டும் போதும் கூச்சமாக இருந்தது. அதை அவதானித்த ரீச்சர், எனது சிந்தனையைத் திசைதிருப்ப உரையாடத் தொடங்கினார்.

“நான் வெளிநாடு வருவன் எண்டு ஒருநாளும் நினைச்சுப் பாக்கேல்லை. அதாலை ஆங்கிலம் படிப்பதில் அக்கறை காட்டவில்லை. அதுக்கு இன்னுமொரு காரணம் எங்கடை தமிழ் வாத்தியார். அவர் எப்போதும் சொல்லுவார் – ஜப்பான், ரஷ்யா, சீனா போல நாமும் எமது மொழியில் படிக்கும் காலம் இனி வந்துவிடும். பல்கலைக்கழகங்களில் கூட தமிழில் எல்லாப் புத்தகங்களும் எழுதப்பட்டுவிடும் - அவர் தினமும் இதையே எங்கள் காதிற்குள் இறைத்தார். அவரை நான் பின்னாளில் கண்டதில்லை. சந்தித்திருந்தால் அவரின் காதைக் கடித்துத் துப்பியிருப்பேன். உண்மையில் நாங்கள் எத்தனை மொழிகளைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு நல்லது.”

ரீச்சர் சொல்வதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

”நீங்கள் எல்லாம் இளம் வயதிலேயே புலம்பெயர்ந்து வந்துவிட்டீர்கள். அதாலை எல்லாத்தையும் ஈசியா அடப் பண்ணிட்டியள். எனக்கு இங்கேயும் ஆசிரியத்தொழில் புரிய விருப்பம் தான்.” கவலையுடன் சொன்னார் ரீச்சர்.

“ஏன் ரீச்சர்….. உங்கள் ஹஸ்பண்ட் வேலைக்குப் போவதில்லையா?”

எனது கேள்விக்கு பதில் தராத ரீச்சர், “அகதி வாழ்வின் அவலங்களில் இதுவும் ஒன்று” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, முன்னர் எம்முடன் படித்த மாணவர்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். தொடர்ந்து, “நான் இந்தத் தொழிலைச் செய்வதற்கு யாருடைய வற்புறுத்தலும் காரணம் இல்லை. உழைத்துச் சாப்பிட வேண்டும். என் குழந்தைக்கு நல்ல கல்வி வேண்டும். அவ்வளவும் தான்” என்றார். அவர் குனிந்து நிமிர்ந்து அலங்கரிக்கும் போதெல்லால், அவர் கழுத்திலிருந்த தாலி ஊஞ்சலாடியது. கணவர் இருந்திருந்தால் இன்று வந்திருப்பார். அப்பிடியென்றால், பிரிந்து வாழ்கின்றார்களா?

“ஒருக்கால் கண்ணாடியிலை பாருங்கோ எப்பிடி இருக்கிறியள் எண்டு. எல்லாம் சரியெண்டா ஃபைனல் ரச் அப் செய்யலாம்” என் கையைப் பிடித்து நிலைக்கண்ணாடியருகே கூட்டிச் சென்றார்.

என்னையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு அழகு தேவதை போல என்னை மாற்றியிருந்தார். கண்ணாடிக்குள் ரீச்சரும் அழகாகத் தென்பட்டார்.

“ரீச்சர் ஒண்டு சொல்லலாமா?”

“பரவாயில்லை… சொல்லும்.”

“நீங்களும் அழகாக இருக்கிறியள், நடிகை ஷோபா மாதிரி.”

ரீச்சர் வெட்கத்தில் தலை குனிந்தார்.

“சிந்து…. இந்தத் தொழிலிலையும் போட்டி இருக்கு. கஸ்டமர்சை சற்றிஸ்பை செய்யாவிட்டால் நாங்கள் அவர்களை இழந்துவிடுவோம்” சொல்லியபடியே என்னை உற்று நோக்கினார்.

“சிந்து…. நீர் நல்ல வடிவா இருக்கின்றீர். அப்பா அம்மாவோடை வளருகிற பிள்ளை எப்பவும் நல்ல வளர்ப்புடன் தான் இருக்கும்.”

“தாங்ஸ் ரீச்சர்.”

”மகளே! வரப்போகின்ற உன் கணவனை போதைக்கு அடிமையாகாமல் பாத்துக் கொள்.”

அன்றொருநாள், பெற்றோர் அவசரமாகக் கிழம்பி ஜோதி ரீச்சரின் வீட்டுக்குச் சென்றநாள், மனத் திரையில் விரிந்தது. அன்று இரவு என் பெற்றோர் கதைத்த இரகசியத்தின் சூட்சுமம் புரிந்தது. என்னைத் தன் மகள் போல என்று சொன்ன அந்தத் தாய்மையைப் புரிந்து கொண்டேன்.

“காதலிச்சு, அப்பா அம்மா சம்மதத்தோடை எங்கட கலியாணம் நடக்குது ரீச்சர்.”

”அப்பிடியா? லக்கி கேர்ள். அம்மாவைப் போல. உன் வாழ்வு சிறக்க என் வாழ்த்துகள். உன் திருமண நாளன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்கின்றேன் கேள். உனது ஜோதி ரீச்சர், விரைவில் அவுஸ்திரேலியாவில் ரீச்சராகப் போகின்றார்.”

உள்ளே ஆரவாரம் கேட்டு அம்மா வந்து எட்டிப் பார்க்கின்றார்.

“ரீச்சரும்  ஸ்டுடண்டும் எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு சந்திச்சிருக்கினம். அதுதான் ஆனந்தக் கண்ணீர் விடுகினம்.” வெளியே போய் அங்கிருந்தவர்களுக்கு சொல்லிச் சிரித்தார் அம்மா.

 

No comments:

Post a Comment