ஆகா என்ன பொருத்தம்! – ஐந்து நிமிடத் திரைப்பிரதி
நான்கு பாத்திரங்கள்
: தந்தை
(கிருஷ்ணா)
தாய் (சாந்தி)
மகன் (பிரசாந்)
பிரசாந்தின் காதலி (அபிநயா)
காட்சி
1
வீடும் வெளிப்புறமும்
காலை
(பிரசாந்திற்கு
27 வயதாகின்றது. கட்டிளங்காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை.
தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். நகரத்தில் ஆர்க்கிட்டெக்காக
வேலை பார்க்கின்றான்.)
கிருஷ்ணா:
மகன் எங்கையோ வெளிக்கிடுறான்போல கிடக்கு.
வெளியிலை மோட்டச்சைக்கிளைத் துடைச்சுக் கொண்டு நிக்கிறான். இனிச் சனிக்கிழமை வெளிக்கிட்டான்
எண்டா வர பின்னேரமாகும்.
சாந்தி:
போய் விசயத்தைச் சொல்லுங்கோ. காதும்
காதும் வச்சது மாதிரி இருக்கட்டும். சத்தம் போட்டுக் கதையாதையுங்கோ.
கிருஷ்ணா : அவனிட்டைக்
கேக்கிறதுக்கு முதல், உம்முடைய சினேகிதி மகாலச்சுமியோடை ஒருக்காக் கதையும்.
சாந்தி: மகாலச்சுமி
ஒரு ஆளைத் தூது விட்டு என்னட்டைக் கேட்டதுக்குப் பிறகுதானே நான் இந்த விசயத்தையே தொடங்கிறன்.
கிருஷ்ணா: அட்றா சக்கை எண்டானாம்… அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.
சாந்தி: அச்சாப் பிள்ளை மாதிரி பிரசாந்திட்டைப் போய் விசயத்தைக்
கக்கி விடுங்கோ…
கிருஷ்ணா : அவன் நீ சொன்னாத்தான் கேப்பான். நான் வள் சுள்
எண்டு கதைக்கிற பேர்வழி. நீயெண்டா பக்குவமாக் கதைப்பாய்.
சாந்தி : உங்களோடை நிண்டு மாரடிச்சா காரியத்துக்கு ஆகாது.
(சாந்தி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகின்றாள். மகன் பிரசாந்திடம்
கேட்பதா விடுவதா என்று தயங்குகின்றாள்.)
சாந்தி: பிரசாந்… உன்னோடை ஒண்டு கதைக்க வேணும். உனக்கும்
வயது வந்துட்டுது. இந்த ஆவணியோடை இருபத்தேழு முடியுது. கலியாணம் செய்து கொள்ளுற எண்ணம்
ஒண்டும் இல்லையா?
பிரசாந் : ஏன் அம்மா அவசரப்படுகிறியள்? (உதட்டிற்குள் சிரிக்கின்றான்
பிரசாந். அம்மா அவனையே பார்த்தபடி நின்றார்)
பிரசாந் : ஏன் ஆரேனும் பெட்டையைப் பாத்து வைச்சிருக்கிறியளோ?
சாந்தி : உனக்கு என்ரை பிறண்ட் மகாலச்சுமியைத் தெரியுந்தானே!
அவவுக்கு இரண்டு பெம்பிளப்பிள்ளையள். மூத்தவள் அபிநயா Jaffna யூனியிலை
கொமேர்ஸ் டிகிரி செய்யிறாள். இந்த வருஷம் ஃபைனல் முடிக்கிறாள். அவளுக்கு இப்ப மாப்பிள்ளை
தேடினம். அவளை உனக்குப் பேசலாம் எண்டு நானும்
அப்பாவும் யோசிக்கிறம்.
உனக்கு அப்நயாவைத் தெரியும் தானே!
பிரசாந் : அம்மா… முதலிலை மரி பண்ணிற பிள்ளையை எனக்குப் பிடிக்க
வேணும். என்னை அவவுக்குப் பிடிக்க வேணும். நாங்கள் இரண்டு பேரும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.
(அப்பா கிருஷ்ணா வாசலில் வந்து நின்று இவர்கள் இருவரும் பேசுவதைக்
கேட்டுக்கொண்டு நிற்கின்றார்)
சாந்தி : நீ சின்னனிலை அவளோடை விளையாடியிருக்கின்றாய். பானை
சட்டியளுக்கை சோறு கறி சமைச்சிருக்கிறாய். ஊஞ்சல் ஆடியிருக்கிறாய். உனக்கு அவளைத் தெரியும்.
உனக்கு அவளைப் பிடிக்கும்.
பிரசாந் : அது சின்னனிலதானே அம்மா. இப்ப எப்பிடி இருக்கிறாளோ?
நான் அபிநயாவைக் கண்டே இப்ப ஏழெட்டு வருஷங்கள் இருக்கும். நான் கலியாணம் செய்யப்போற
பெம்பிளையோடை கொஞ்சநாள் பழகிப் பாக்கவேணும் அம்மா.
கிருஷ்ணா : (கெக்கட்டம் விட்டுச் சிரிக்கின்றார்) உனக்கு
வரிச்சுமட்டை அடிதான் அவை தருவினம்.
பிரசாந் : அப்பா… நானே எனக்குரிய பெண்ணைத் தெரிவு செய்யுறன்.
என்னால முடியாட்டா உங்களிட்டைச் சொல்லிறன். இன்னுமொரு இரண்டு மூண்டு வருஷங்கள் எனக்குத்
தாருங்கோ.
கிருஷ்ணா : நல்ல படிச்ச பிள்ளையள், வடிவான பிள்ளையள் எல்லாம்
போயிடுவினம். பிறகு ஆறுதலா எண்டா உனக்கு வத்தல் சொச்சல் தான் வரும்.
(கிருஷ்ணாவும் சாந்தியும் ஒருவரையொருவர் பார்க்கின்றார்கள்.
பிரசாந் மோட்டச்சைக்கிளைத் தள்ளிக் கொண்டு புறப்படுகின்றான்)
காட்சி மாற்றம் 2
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் / நகரம்
மதியம்
பிரசாந் : (தனக்குள் கதைத்தல்) அம்மா ஏதோ அபிநயா… Jaffna
university எண்டு சொல்லுறா… நான் வேலை செய்யிற இடத்துக்குக் கிட்டத்தான்
யூனியும் இருக்கு. ஒரு நடை எட்டி ஆளைப் போய்ப் பாத்தா நல்லா இருக்கும்.
(மதியம் போல் யூனியை நோக்கி தனது வேலை செய்யுமிடத்திலிருந்து
நடக்கின்றான். கொமேர்ஸ் படிக்கும் சில ஆண்களிடம் அபிநயா பற்றி விசாரிக்கின்றான். அவர்கள்
தூரத்தில் நின்றபடி அபிநயாவைக் காண்பிக்கின்றார்கள். பிரசாந் தினசரிப் பேப்பர் ஒன்றில்
ஓட்டை போட்டு அதற்குள்ளால் அபிநயாவைப் பார்க்கின்றான்.)
பிரசாந்: (திரும்பவும் தனக்குள் கதைக்கின்றான்) சும்மா சொல்லக்கூடாது.
அம்மா சொன்னமாதிரி, அபிநயா மூக்கும் முழியுமாக செக்கச் செவேல் எண்டுதான் இருக்கிறாள்.
(கிட்டப் போய்) என்னைத் தெரியுதா எண்டு பாருங்கோ…
அபிநயா: தெரியுமே! (பிரசாந்தை நிமிர்ந்து பார்த்தபடி வெட்கத்துடன் சொல்கின்றாள்)
பிரசாந் : என்னைப் பிடிச்சிருக்கா?
அபிநயா : என்ன? எல்லாரும் ஒரேயடியாகக் கிழம்பிவிட்டியள் போல
கிடக்கு.
பிரசாந் : ஏன்.. ஏன் அப்படிக் கேட்கின்றீர்?
அபிநயா : போனகிழமை தான் அம்மாவும் கேட்டவா. உங்களைத் திருமணம்
செய்ய விருப்பமா எண்டு..
(இரண்டு பேரும் சிரிக்கின்றார்கள்.)
பிரசாந் : முதலிலை நாங்க இரண்டு பேரும் பழகுவம். இரண்டு பேருக்கும்
பிடிச்சுப் போச்செண்டா பிறகு அம்மா அப்பாட்டைப் போட்டுடைப்பம்.
அபிநயா : அதுதான் எனக்கும் சரியெண்டு படுகுது. படிப்பும்
முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கு.
பிரசாந் : அப்ப நாளைக்கு எங்கை சந்திப்பம்?
அபிநயா : எண்டாலும் நீங்கள் படு அவசரம் தான்.
(இருவரும் பழகத் தொடங்கினார்கள். ஒருவருக்கும் தெரியாமல்
காதும் காதும் வைச்ச மாதிரி மோட்டச்சைக்கிளில் சுற்றுகின்றார்கள். கடற்கரை, பார்க்,
கோயில் என்று காதல் செய்தார்கள். பிரசாந் ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டான். அபிநயா
தலைக்கு ஒரு மொட்டாக்குப் போட்டுக் கொண்டாள். பிரசாந் அபிநயாவுக்கு மோட்டச்சைக்கிள்
ஓடுவதன் நுணுக்கங்களைச் சொல்லிக் குடுத்தான். இருவரும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
தங்களையும் புரிந்து கொண்டார்கள். பிரசாந்திற்கு நினைத்ததை விட அபிநயாவை ரொம்பவும்
பிடித்துப் போனது. அவளும் கொமேர்ஸ் படித்து பிரசாந்தையும் படித்துக் கொண்டாள்.)
காட்சி மாற்றம் 3
கடற்கரை
மாலை
அபிநயா : நாங்கள் இரண்டு பேரும் பழகத் தொடங்கி இப்ப ஒரு வருஷமாப்
போச்சு. இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சும் போச்சு. வீட்டிலையும் கலியாணம்
பேசத் தொடங்கிட்டினம். இனி என்ன வீட்டிலை சொல்ல வேண்டியதுதான்.
பிரசாந் : உங்கடை குடும்பத்தாரும், எங்கடை குடும்பத்தாரும்
தொடக்கி வைச்சினம். இப்ப நாங்கள் இரண்டு பேருமாச் சேந்து முடிச்சு வைக்கப் போறம்.
அபிநயா : இண்டைக்கு இரவு சாப்பாட்டு மேசையிலை நான் என்ரை
அம்மா அப்பாட்டைச் சொல்லப் போறன். அதே மாதிரி நீங்களும் சொல்லுங்கோ. ஒரு ஒன்பது மணி
மட்டிலை நீங்கள் எனக்கு ரெலிபோன் செய்யுறியள்.
பிரசாந் : ஏன் என்ரை அச்சாக்குஞ்சு நீர் ரெலிபோன் எடுக்க
மாட்டீரோ?
காட்சி மாற்றம் 4
பிரசாந் வீடு
இரவு
(கிருஷ்ணா பேப்பர் படித்தபடி சாய்வனைக் கட்டிலில் இருக்கின்றார்.
சாந்தி குசினிக்குள் வேலையாக இருக்கின்றாள். அம்மாவைச் சுற்றி குழையக் குழைய வருகின்றான்
பிரசாந்.)
சாந்தி : என்னடா குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திச் சுத்தி
வாறாய்…
பிரசாந் : அம்மா…. முந்தி ஒருநாள் அபிநயா எண்ட பிள்ளையைப்
பற்றிக் கேட்டனீங்களல்லவோ? அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுதோ?
(கிருஷ்ணா பேப்பருக்கு மேலால் குசினியை எட்டிப் பார்க்கின்றார்.)
சாந்தி : எடப் போடா நீ… அவள் உனக்குச் சரிவராதடா மகனே! உங்கட
இரண்டு பேரின்ரையும் சாதகங்களைப் பொருத்தம் பாத்தனாங்கள். துண்டறப் பொருத்தம் இல்லை
எண்டு சாத்திரி சொல்லிப் போட்டார்.
பிரசாந் : எப்ப பாத்தனியள்?
சாந்தி : ஒரு வருசத்து முன்னை. உன்னைக் கேட்ட பிறகு பாத்தனாங்கள்.
(கிருஷ்ணா உதட்டுக்குள் சிரிக்கின்றார். பிரசாந் தலையைத்
தொங்கப் போட்டுக்கொண்டு தனது அறைக்குள் செல்கின்றான்.)
பிரசாந் : கண்டறியாத சாத்திரமும் மண்ணாங்கட்டியும்..
(கிருஷ்ணா சாந்தியிடம் கையால் சாடை மாடையாக என்னவென்று கேட்கின்றார்)
காட்சி மாற்றம் 5
பிரசாந்தின் அறை
இரவு
(பிரசாந்தின் மொபைல் போன் அடிக்கின்றது.)
அபிநயா: நீங்கள் அடிப்பியள் அடிப்பியள் எண்டு பாத்துக் கொண்டு
இருந்தன். எல்லாமே புஸ் வாணமாப் போச்சு. இப்ப என்ன செய்யிறது?
பிரசாந் : விடியக் காலமை ஐஞ்சு மணிக்கு வீரபத்திரர் கோயிலடிக்கு
வாரும்.
அபிநயா : என்ன சொல்லுறியள்?
பிரசாந் : சுரைக்காய்க்கு உப்பில்லை எண்டு சொல்லுறன். எங்கடை
அம்மா அப்பாவை இனி உந்தச் சாத்திரத்தை ஒருக்காலும் விடமாட்டினம். நாங்கள் ஓடிப்போறதுதான்
இதுக்கு ஒரே வழி.