Tuesday, 20 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 1

முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மனேஜராகலாம்; திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று பேரப்பிள்ளைகளையும் கண்டடையலாம்; ஒரு அழகான வீடு கட்டி, முன்னே வாகனங்களை நிறுத்தி வைக்கலாம். இப்படி மூச்சு முட்டிக் களைத்து விழும்வரை ஒருவரால் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் இந்தக் காலப்பகுதியில் எத்தனையே மனிதர்களால் தமது சொந்த ஊரை ஒருதரமேனும் பார்க்க முடிந்ததில்லை.

இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டு அமலனுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிட்டியது. இந்துசமுத்திரத்தின் முத்து அவனை வரவேற்றது. அங்கே அந்த முத்தின் வடபகுதியில் அமலனுக்கு ஒரு வீடு முன்னொரு காலத்தில் இருந்தது.

அவனும் மனைவி தாரிணியும், மகள் செளம்யாவும் அதைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அமலனுக்கும் தாரிணிக்கும் ஊரைப் பார்ப்பது சொர்க்கம். ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த செளம்மியாவிற்கு வெறுங்காணியைப் பார்ப்பதில் என்ன சந்தோசம் இருக்கப் போகின்றது? இருக்கின்றது. சிறுவயது முதல் உணவு ஊட்டுவதுபோல், தாம் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி தம் மூதாதையர் பற்றி, சிறுகச்சிறுக சொல்லியே அவளை வளர்த்திருந்தார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த வரண்ட பூமியுடன், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களையும் சுற்றிக் காட்டினால் அவள் மகிழ்ச்சி கொள்வாள் அல்லவா?அமலன் இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்த போது, அன்றிருந்த நிலைமையை எண்ணிப் பார்த்தான். குலை நடுங்கிய காலங்கள் அவை. பல்கலைக்கழகத்தில் படித்த கல்வியின் அடிப்படையில், அவன் புலம்பெயர்ந்து போயிருக்கலாம். அப்பொழுது `ஸ்கில் மைகிரேஷனில்’ பலரும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். பாழாய்ப்போன `அந்த ஒரு சம்பவம்’ நடந்திருக்காவிட்டால், அமலனும் அப்படித்தான் ஏதோ ஒரு நாட்டுக்குப் போயிருப்பான். கடைசியில் நடந்தது என்னவோ `அகதி’ நாடகம்’ தான்.

மெல்பேர்ணிலிருந்து கொழும்பு சென்று ஹோட்டலில் ஒருநாள் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் புறப்பட்டுக் கொள்வதெனத் திட்டம் போட்டிருந்தார்கள்.

அவர்களின் பயணம் மேற்கிலிருந்து புறப்பட்டு, மத்திய மாகாணமான மலையகம், பின்னர் வடமத்திய மாகாணம், இறுதியாக வடக்கு மாகாணம் என விரிந்திருந்தது.

மொத்தம் ஒன்பது நாட்களில், ஒரு சூறாவளியைப் போல சென்று முடிப்பதென திட்டம் போட்டிருந்தார்கள்.

செளம்யா இணையவழியில் இந்தப் பிரயாணத்திற்கான முழு ஏற்பாடுகளையும், ஹோட்டல்களில் தங்குவதற்கான பதிவுகளையும் செய்திருந்தாள். பிரயாண முகவரின் பதிவின்படி வாகன ஓட்டியின் பெயர் ரஞ்சன் எனவும், அவர் தனக்குரிய தங்குமிட வசதிகளையும் உணவையும் பார்த்துக் கொள்வார் என்றும் இருந்தது. ரஞ்சன் ஒரு தமிழராக இருக்கக்கூடும் என அமலனும் மனைவியும் ஊகித்தார்கள்.

காலை எட்டு மணியளவில் ரஞ்சன் வந்துவிட்டான். நேர்த்தியான ஆடைகளில் வாட்டசாட்டமான தோற்றம் கொண்டிருந்தான் அவன். தோற்றம் முப்பது வயதிற்குள்தான் இருக்கும் என்று சொல்லியது. இவர்களின் பொதிகளை பூற்லிட்டிற்குள் வைப்பதற்கு கூடமாட உதவி செய்தான். பூற்லிட்டிற்குள் ரஞ்சனின் பொதி ஒன்று ஏற்கனவே குந்தி இருந்தது.

அமலன் சாரதிக்குப் பக்கத்திலும், மனைவியும் மகளும் பின்புறமாகவும் ஏறிக்கொண்டார்கள்.

“நீங்கள் தமிழா?” அமலன் பேச்சை ஆங்கிலத்தில் ஆரம்பித்தான்.

அவன் புன்முறுவல் செய்துவிட்டு, “இல்லை. ரஞ்சன்… ரஞ்சன் விஜயரட்னே” என்றான்.

“தமிழ் தெரியுமா?”

“கொஞ்சம்… கொஞ்சம்… ஆனா ஆங்கிலம் கதைப்பேன்.”

“எனக்கும் சிங்களம் அப்பிடித்தான். கொஞ்சம் கொஞ்சம்… மனைவிக்கும் மகளுக்கும் அதுவும் தெரியாது.”

“ரஞ்சன் என்ற பெயரில் தமிழர்களும் இருக்கின்றார்கள்.”

“தெரியும்.”

`கூடுதலா தமிழ்ப்பெயர்களில் இருந்து கடைசி எழுத்தை நீக்கிவிட்டால், சிங்களப்பெயர்கள் வந்துவிடும். விக்கிரமசிங்க, நவரத்தின, குலசேகர, குணசிங்க, மகிந்த… ‘ சொல்ல நினைத்தான் அமலன். ஆனால் சொல்லவில்லை. மறுதலையாக அந்தப் பெயர்களுக்கு ஒரு எழுத்தைச் சேர்த்தால் தமிழ்ப்பெயர்கள் வந்துவிடும் என்றும் சொல்லலாம். நீக்குவதா? சேர்ப்பதா? நிம்மதியாக வாழ்ந்துவிட்டாலே போதும்.

வாகனம் மெதுவாக ஓட்டம் பிடிக்கத் தொடங்கியது.

கொழும்பு நகரம் - நகரத்துக்கு உரித்தான கட்டடங்கள், சன நெரிசல், வாகனச் சத்தங்கள், மழைக்கு அடங்கிப்போகும் புகை மண்டலங்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி, சுவடுகளை விழுங்கித் துப்பி விரைந்தோடுகின்றது வாகனம்.

பனிப்புகாரினுள் பதுங்கிக் கிடந்த - சாலையோரத்துப் பெட்டிக்கடைகளும், பழங்காலத்துக் கட்டடங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்து நகருகின்றன. பெட்டிக்கடைகளில் கலர் கலராக இளநீர்க்குலைகள், வாழைப்பழங்கள், கொய்யாப்பழங்கள். இடையிடையே அரையும் குறையுமான ஆடைகளில் சில மனிதர்கள்.

இந்தக் காட்சிகள் எல்லாம் தாரிணிக்கும் செளமியாவுக்கும் புதுமை. தாரிணி இலங்கையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், வடக்கிற்கு அப்பாலுள்ள காட்சிகளை தரிசிப்பது இதுவே முதல் தடவை.

இரண்டு பக்கங்களும் சமதரையாகத் தோற்றம் கொண்ட பூமி, ஏற்றத்தாழ்வுகள் எதிலுமுண்டு என்பதுமாப்போல், ஒருபுறம் மேடாகவும், மறுபுறம் பள்ளமாகவும் உருக்கொள்கின்றன. வனப்பு கூட செழிப்பாகி ஏறுமுகம் கொள்கின்றது.

ரஞ்சன் கேட்கின்ற கேள்விகளுக்கு மாத்திரம் பதில் சொல்லுவான். மற்றும்படி சாந்தமே உருவானவன். கொஞ்சம் கதை பேச்சுக் குறைவு.

`யாரும் கேட்டாலொழிய வாய் திறந்து எதுவும் பேசக்கூடாது’ என்று முதலாழி சொல்லிவிட்டிருப்பாரோ?

“ரஞ்சன் உங்களுக்கு இப்பென்ன வயசு?”

“முப்பது…”

“எங்கட மகள் செம்யாவிற்கு இருபத்தெட்டு…” பின்னால் இருந்த தாரிணி சொன்னாள். செளம்யா அம்மாவின் கையைப் பிடித்து அமர்த்திக் கிள்ளினாள்.

காரிற்குள் எந்தவிதமான பாட்டுக்களும் ஒலிக்கவில்லை. இடையிடையே யாருடனோ ரெலிபோனில் கதைத்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.

“தம்பிக்கு பாட்டு விருப்பமில்லையோ?” பொதுவாக கார் ஓடுபவர்கள் பாட்டை ஒலிக்கவிடுவார்கள் என்ற யோசனையில் கேட்டான் அமலன்.

“நீங்கள் வெளியே பார்த்துக்கொண்டு வரும் காட்சிகளை அது குழப்பிவிடும். உங்கள் கவனத்தைப் பாட்டு திசை திருப்பிவிடும். உங்களுக்கு விருப்பம் என்றால் போடுகின்றேன்.”

“இல்லைத் தம்பி வேண்டாம். செளம்யா உனக்கேதேன் பாட்டு வேணுமா?”

அவள் `இல்லை’ என்று தலையாட்டினாள்.

`தம்பி கலியாணம் செய்திட்டீரோ?’ கேட்டறியலாம் என நினைத்தான் அமலன். ஆனால் எல்லாவற்றிலும் முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்கின்றானே என அவன் நினைக்கக்கூடும் என்று விட்டுவிட்டான்.

“தம்பியின்ரை சொந்த ஊர்?” மனசு விட்டால்தானே! கேட்டான் அமலன்.

“நுகேகொட…”

“எட… நான் கடைசியா வேலை செய்த இடத்திற்குக் கிட்ட.”

ரஞ்சன் திரும்பி அமலனை உற்றுப் பார்த்தான்.

“நாவல திறந்த பல்கலைக்கழகத்திலை தொண்ணூறு தொண்ணூற்றி ஒண்டு மட்டிலை வேலை செய்தனான். அப்ப நீர் பிறந்திருக்கமாட்டீர்!”

“அப்பிடியா!” அதிசயித்தான் ரஞ்சன்.

அமலன் திரும்பி மனைவியையும் மகளையும் பார்த்துவிட்டு, “நுகேகொடைக்குக் கொஞ்சம் தள்ளி, லக்மினி, இகாரா எண்டு இரண்டு பிள்ளைகள் அப்ப அடிக்கடி படிக்க வருவினம். லக்மினி எனக்குப் பிடிச்ச மாணவி. அவையின்ரை ஊரின்ரை பெயரை இப்ப நான் மறந்திட்டன் தம்பி…” என்று ரஞ்சனின் காதிற்குள் சொன்னான். ரஞ்சன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவனின் உள்மனம் ஏதோ ஒன்றை ஆழ அசை போட்டது.

கடைசி உரையாடலின் பின்னர் காரிற்குள் அமைதி நிலைகொண்டது.

கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. என்றாலும் மனிதமனத்திற்கு ஈடு குடுக்க முடியுமா என்ன… அமலனின் சிந்தனைகள் பின் நோக்கி நகர்ந்து தொண்ணூறாம் ஆண்டுகளில் சஞ்சரிக்கின்றது.

*

அப்பொழுது அமலன், நாவல என்ற இடத்தில் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கொம்பியூட்டர் பிரிவில் செயல்முறைப் பயிற்றாசிரியராக வேலை செய்து கொண்டிருந்தான். கணினி ஆய்வுகூடத்தில், பாடசாலைப் படிப்பை முடித்தவர்கள் தொடக்கம் வேலை செய்பவர்கள் வரையில், வயது பேதமின்றிப் படித்து வந்தார்கள். அதனால் ஆய்வுகூடம் பல்கலைக்கழக நேரத்திற்குப் புறம்பாக, காலை ஏழரை மணியில் இருந்து மாலை ஐந்தரை வரை திறந்திருக்கும்.

கொம்பியூட்டரின் அடிப்படைக்கல்விதான் அப்போது அங்கே சொல்லிக் குடுக்கப்பட்டது. மாணவர்களின் வரவைப் பதிய வைப்பது, அவர்களுக்குத் தெரியாததைச் சொல்லிக் குடுப்பது என பாடவிதானம் மட்டுப்படுத்தப் பட்டிருந்தது.

பல்லின மக்களும் வந்துபோகும் இடத்தில், அமலனுக்குப் பிடித்த பெண்ணாக லக்மினி இருந்தாள். பள்ளிப் படிப்பில், தரம் பன்னிரண்டை முடித்தவுடன் எதிர்காலக் கல்வியின் ஒரு அஸ்திவாரமாக கணினி அறிவை வளர்த்துக் கொள்ள அவள் அங்கே வந்திருந்தாள். அவளைவிட சற்று வயசான தோற்றத்தில் இன்னுமொரு பெண்ணும் அவளுடன் கூட வந்து போனாள்.

லக்மினி வரும் நாட்களில் அமலன் குதூகலமாக இருப்பான். அனேகமாக வாரத்தில் இரண்டு நாட்கள் அவள் வருவாள். ஆரம்பத்தில் அவளைப் பார்த்தபோது, அவள் தமிழோ சிங்களமோ என்ற மயக்கம் அமலனுக்கு இருந்தது. இள வயதில் சிங்களப் பெண்ணுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் வேறுபாட்டைக் காண முடிவதில்லை.

லக்மினி வரும் நேரமாகப் பார்த்து, அமலன் மேசையில் போய் அமர்ந்து விடுவான். ஏதோ பிஷி போல தன்னைக் காட்டிக் கொள்வான். வெளியே கலகலப்பாக வரும் அவர்கள் கொம்பியூட்டர் றூமிற்குள் வந்ததும் அமைதியாகி விடுவார்கள். உள்ளே வந்ததும் இருவரும் தமது அறிமுக அட்டைகளை நீட்டுவார்கள். இருவரது உடலில் இருந்தும் ஒரேவிதமான நறுமணம் வீசும். அமலன் முதலில் லக்மினியின் அறிமுக அட்டையை விட்டுவிட்டு, மற்றவளிடம் வாங்கிக் கொள்வான். அவளின் பெயரைப் பதிந்து கொள்வான். ஆனால் அவள், லக்மினி வரும்வரைக்கும் பிசின் பூசி ஒட்டினமாதிரி லக்மினியின் பக்கத்திலேயே நிற்பாள். அமலன் லக்மினியின் அறிமுக அட்டையை வாங்கி அதில் இருக்கும் அவளின் படத்தைப் பார்ப்பான். பின் லக்மினியை உற்று உற்றுப் பார்ப்பான். அவர்கள் இருவருக்கும் அமலனின் செய்கை சிரிப்பாகவிருக்கும். உதட்டுக்குள் சிரித்துக் கொள்வார்கள். இருவரினதும் வதிவிடங்கள் சிங்களக்கிராமமான நுகேகொட என்றிருந்தது. பின் இருவரும் அங்கிருந்தபடியே கொம்பியூட்டர் அறையை நோட்டம் விடுவார்கள். எங்கே இரண்டு கொம்பியூட்டர்கள் அருகருகாக ஆளில்லாமல் இருக்கின்றதோ அங்கே போய் இருந்து கொள்வார்கள்.

லக்மினி படிப்பதற்கான எல்லாவிதமான ஆயத்தங்களுடனும் கரிசனையுடனும் வருவாள். வரும் நாட்களில் அழகழகான ஆடைகளுடன், கொஞ்சம் ஸ்ரைலுமாக இருப்பாள். தலை அலங்காரம்தான் அவளின் தலைக்கு கொஞ்சம் பெரிசாக பாரமாக இருப்பது போல் தோன்றும். `டயானா’ வெட்டு போல், அதற்கு இன்னும் கொஞ்சம் பூசி மெழுகி சோடனைகள் செய்திருப்பாள். கொஞ்சம் வசதியான குடும்பத்துப் பெண் போலவே தோற்றம் காட்டினாள். அவளின் களங்கமற்ற புன்னகையும் நாணமும் கிளிப்பேச்சும் வசீகரிப்பவை. மற்றவள் அங்கு ஏன் வருகின்றாள் என்பது அமலனுக்கு இன்னமும் புரியவில்லை. கூடத் துணைக்கு வருகின்றாளோ என்ற சந்தேகம் அமலன் மனதில் எழும். லக்மினியுடன் பார்க்கையில் அவளது நண்பியின் கணினி அறிவு சுத்த சூனியம். கவர்ச்சியான ஆடைகளுடன், மார்புகள் தள்ள, ஆண்களின் மனதைக் கிளறும் `பம்பளிமாஸ்’ வனப்புக் கொண்டவள் அவள்.

மேசையில் இருந்தபடியே லக்மினியின் அறிமுக அட்டையை எடுத்து விடுத்துவிடுத்துப் பார்ப்பான் அமலன். படத்தில் கொஞ்சம் பெரிய தோற்றமாக இருக்கும் அவள், நிஜத்தில் மெல்லீசாக இருப்பதைக் கண்டு பிடித்தான். அங்கிருந்தபடியே எல்லா மாணவர்களையும் சுற்றிப் பார்த்து நோட்டமிடுவான் அமலன்.

லக்மினி அங்கிருந்தபடியே அமலனுக்குக் கண் எறிகின்றாள். ஏதோ புரியவில்லை என்பதை அமலன் தெரிந்து கொண்டான். கொஞ்ச நாட்களாக லக்மினியுடன் வரும் பெண்ணுடன், தன் சக நண்பன் மணி மினைக்கெடுகின்றான். இப்போதுகூட மணி அந்தப் பெண்ணுக்கு ஏதேதோ சொல்லிக்குடுத்து, தொட்டுத்தொட்டுக் கதைத்து சிரித்தபடி இருக்கின்றான். அவளின் உடல் அசைவுகளில் குப்புற விழுந்துகொண்டான் மணி. லக்மினி, மணியிடம் தனது சந்தேகத்தைக் கேட்காமல், தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது அமலனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

கணினி சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, லக்மினி ஆவலுடன் தன் குறும்பு நிறைந்த கண்களால் அமலனை நோக்குவாள். அமலனும் அவளுக்குப் புரியும் வகையில் மிகவும் இலகுவாகச் சொல்லிக் குடுப்பான். ஒரு காலத்தில் மிகவும் கெட்டித்தனமாக வரக்கூடிய பெண் என்பதை அவளது அறிவுபூர்வமான பதில்கள் சொல்லின.

ஒருநாள் அமலன் மேசையில் வந்து அமரும்போது, மணியும் பக்கத்தில் வந்து இருந்து கொண்டான். லக்மினியும் தோழியும் வந்து, தங்களைப் பதிவு செய்துவிட்டுக் கொம்பியூட்டர்களில் போய் அமர்ந்துகொண்டதும், மணி பேச்சைத் தொடங்கினான்.

“மச்சான்… இகாரா படு சுப்பரடா”

அமலனுக்கு ஒன்றும் புரியவில்லை. மணியின் முகத்தைப் பார்த்தான்.

“இகாரா எண்டு சொல்லுறது ஆர்… உன்ரை கேர்ள் ஃபிரண்டின்ரை ஃபிரண்ட் தான்.”

“உது எத்தினை நாளா நடக்குது மணி?”

“நேற்று அரைநாள் லீவு போட்டிட்டு எங்கை போனனான் தெரியுமோ? இகாராவின்ரை வீடு வரைக்கும், பஸ்சிலை அவளோடை பக்கத்திலை இருந்து போனனான்.”

“பிறகு?”

“நுகேகொட வரைக்கும் அவளோடை போட்டு, அவள் பஸ்சிலையிருந்து இறங்கி தன்ரை வீட்டை போக, நான் அங்கையிருந்து பஸ் ஏறி என்ரை வீட்டை போனனான்.”

“நீ இஞ்சை படிப்பிக்கிற ஒரு மாஸ்ரர் எண்டதை மறந்து போனாய் போல! உது இக்கணம் எங்கை போய் முடியப் போகுதோ? அது சரி… நீ அவளோடை இருக்கேக்கை லக்மினி எங்கை இருந்தவள்?”

“அவளை முன்னுக்குப் போய் இருக்கச் சொல்லிக் கலைச்சுப்போட்டு, நானும் இகாராவும் பின் சீற்றிலை இருந்தனாங்கள். மச்சான் நான் இண்டைக்கும் அரை நேரத்தோடை வேலைக்கு முழுக்கு. நீயும் ஒரு அரை நாள் லீவைப் போடன்…”

“நீ என்ன சொல்லுறாய்?”

“இரண்டு பேரும் லீவைப் போட்டிட்டு, ஜாலியா இருப்பம் எண்டு சொல்லுறன். நான் இகாராவோடை, நீ லக்மினியோடை. அவள் பாவமல்லே…”

“மச்சான் இந்த நேரத்திலை இந்த நாட்டிலை என்ன நடந்து கொண்டு இருக்குது எண்டதை யோசிச்சுப் பாத்தியா? பிடிபட்டியோ சங்கறுத்துப் போடுவான்கள். பெம்பிள பாவம் உன்னைச் சும்மா விடாது. நான் உதுக்கெல்லாம் வரமாட்டன்.”

அன்றிலிருந்து மணியின் நாடகம் அவ்வப்போது தொடர்ந்தது. அமலனை தினமும் அரித்துக் கொண்டு இருந்தான். அருக்கூட்டினான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? மணி அமலனுக்கு அடிமேல் அடி வைத்தான். அம்மி தகர்ந்தது. மனசு நெகிழ்ந்தது.

இரண்டு நாட்கள் கழித்து, இகாராவும் லக்மினியும் முன்னே செல்ல மணியும் அமலனும் கோழிக்கள்ளர்கள் போல பதுங்கிப் பதுங்கி பின்னாலே சென்றார்கள். திரும்பிப் பார்த்த லக்மினியின் கண்கள் அகல விரிந்தன. நான்கு பேரும் நுகேகொட பஸ்சினுள் ஏறிக்கொண்டார்கள். மணியும் இகாராவும் பின்புறமாகச் சென்று ஒரு மூலையில் அமர்ந்துகொண்டார்கள். அமலன் லக்மினியின் தோளில் தட்டிவிட்டு மற்ற மூலையில் போய் மசுந்தினான். லக்மினி பஸ்சின் நடுவில் கம்பியைப் பிடித்தவாறே நின்றிருந்தாள். “இவள் ஒரு பால்குடி” சொன்னவாறே இகாரா போய் லக்மினியை இழுத்துவந்து அமலனிடம் தள்ளிவிட்டாள்.

அருகே நெருக்கிக்கொண்டு, ஆளை ஆள் உரசியபடி இருக்கும் போதுதான் லக்மினியை அமலனால் வடிவாகப் பார்க்க முடிந்தது. அவனை விட நாலைந்து அங்குலங்கள் உயரத்தில் பதிவாக இருந்தாள் அவள். மெல்லிய தேகம் என்றாலும் அவயவங்களின் அழகுக்குக் குறைவில்லை. நீள்வட்ட முகம். அன்பைத் தாராளமாக அள்ளித்தரும் அகன்ற கண்கள். மெல்லிய உதடுகள். வலது பக்கத்து உதடுகளின் முடிவில் தேன் குடிப்பதற்கு ஏதுவாக ஒரு சிறு மச்சம். கூரிய மூக்கு. பளிங்கு போன்ற கன்னங்கள், ஒரு மாசு மறு கிடையாது. கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியில் காதுகள் மென்சிகப்பாகத் தோன்ற, சோணைகளில் ஜிமிக்கிகள் நடனமாடுகின்றன. அவள் அழகில் தனது மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடந்தான் அமலன்.

“ஒய ஹொந்த லஸ்‌ஷனய்…”

அவள் சிரித்தாள்.

“லக்மினி என்றால் என்ன அர்த்தம்?”

“இலங்கையின் முத்து…” அவள் குரலில் பதட்டம் தெரிந்தது.

“இலங்கை, இந்து சமுத்திரத்தின் முத்து. நீ இலங்கையின் முத்து…” அவன் குரலில் பரவசம்.

அவள் வெட்கத்தில் குழைந்தாள். இரண்டு கைகளையும் வயிற்றின் முன்பாகம் இடுப்புக்குக் குறுக்காக மடித்துக் கட்டியிருந்தாள். அமலனின் மனம் மடை திறந்த வெள்ளம் போல் பாய, லக்மினியின் கையை மெதுவாகப் பற்றினான். அக்கணத்தில் அவள் உடல் குலுங்கி ஒரு தடவை நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. லக்மினி அவனைத் திருப்பிப் பார்த்துவிட்டு முகத்தை வேறு திசை நோக்கி வைத்திருந்தாள். பொய்க் கோபத்தில் அவளின் முக அழகு மிளிர்ந்தது. சலனமற்ற அவள் மனம் எதையோ நினைத்து சஞ்சலம் கொள்கிறது.

அமலன் மணியைக் கடைக்கண்ணால் பார்த்தான். அவனும் இகாராவும் ஜாலியாக இருப்பதாகப் பட்டது. இகாரா கண்களை மூடி, மணியின் சுகத்தில் மோனநிலை கொண்டிருந்தாள்.

லக்மினியை மெதுவாக அணைத்தவன், அவளைப் பக்கப்பாட்டிற்குத் திருப்பினான். திரும்ப மறுத்த அவளைக் கொஞ்சம் பலாத்காரமாக இழுத்து அணைத்து, அவள் கன்னங்களில் முத்தமிட்டான். அவள் கண்கள் கலங்கி, இமைகளில் நீர் கசிந்திருந்ததைக் கண்டதும், திடீரென அவள் மீதான பிடியைத் தளர்த்தினான்.

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒன்றாக வந்தாலும், சினேகிதர்களாக இருந்தாலும் இயல்புகள் வேறு வேறுதான் என்பதை உணர்ந்தான் அமலன்.

பஸ்சை விட்டு இறங்கியதும், லக்மினி அமலனைத் பார்க்காமலே விறுவிறெண்டு போய்விட்டாள். இகாரா தான் இருவருக்கும் கை காட்டிவிட்டுச் சென்றாள்.

அதற்கடுத்த கிழமை இருவரும் படிக்க வரவில்லை. இனிமேல் வரமாட்டார்கள் என அமலனும் மணியும் நினைத்தார்கள். ஆனால் மறுவாரத்திலிருந்து அவர்கள் மீண்டும் வரத் தொடங்கினார்கள். ஒன்றாக வந்தவர்கள் இருக்கைகளில் தள்ளித்தள்ளி அமர்ந்தார்கள். எதையும் முகத்தில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரும் படித்துவிட்டுப் போனார்கள்.

படிப்பு முன்புபோலத் தொடர்ந்தது. மணியினதும் இகாராவினது நாடகமும் இரகசியமாகத் தொடர்ந்தது. அமலன் ஒரு நாளில் தனது விளையாட்டை முடித்துக் கொண்டான்.

நாட்களாக லக்மினியின் முகத்தில் மீண்டும் புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகையில்கூட ஒரு ஏக்கம் இருந்ததாகவே அமலனுக்குத் தெரிந்தது. நிறையக் கேள்விகள் கேட்பாள். அமலனும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். குரங்கு மனம் இன்னுமொருநாள் அவளின் கைகளைப் மெதுவாகப் பற்றிய போது. அவள் கைவிரல்கள் படபடத்து மேசையில் தாளம் போட்டன. அமலனின் மனம் குற்றவுணர்வினால் நிலைகொள்ளாமல் சுழல்கின்றது. `காதலை மெதுவாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்து கொண்டான் அமலன்.

நாட்கள் நகர்ந்தன.

யூன் 21, ஒரு வெள்ளிக்கிழமை காலை தான் JOC (Joint Operations Command ) குண்டுவெடிப்பு நடந்தது. இராணுவத்தினரின் இணைந்த தொழிற்பாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் நடந்த கார்க் குண்டு வெடிப்பில் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அன்று வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பிப் கொண்டிருந்தபோது அமலன் இராணுவத்தினரிடம் பிடிபட்டான்.

புத்த விகாரையைக் கடந்து, பாதையில் அரண் அமைத்து வாகனங்களை மறித்து சோதனையிட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர், அமலனைத் தடுத்து நிறுத்தினார்கள். வேலை செய்வதற்கான அடையாள அட்டையைக் காட்டியபோது, அதைப் பறித்துத் தூக்கி வீசிவிட்டு, கன்னத்தில் அறைந்து வாகனத்தில் ஏற்றினார்கள். உள்ளே அவனைப் போல பலரும் குந்தி இருந்தார்கள். இவை எல்லாவற்றையும் நிஷ்டை கலைந்து நியாயம் கேட்க முடியாமல் சாந்தசொரூபியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் புத்தர்.

அதன்பிறகு தீவிரவாத விசாரணைப் பிரிவான நான்காம் மாடியில் சில நாட்கள் அமலன் இருந்தான். சித்திரவதைகளையும் விசாரணைகளையும் அனுபவித்தான். `இனி ஒன்றுமே நடக்காத காரியம்’ என்று அமலனுக்குப் புரிந்துவிட்டது. சும்மா தானும் தன்பாடும் என்று திரிந்தவனை உள்ளே தள்ளி சித்திரவதைகள் செய்து பட்டமும் சூட்டினார்கள். பின்னர் குண்டுவெடிப்பிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை என விசாரணைகளில் தெரிய வந்ததும், விடுதலை செய்தார்கள். ஆனால் தினமும் பொலிஸ் ஸ்ரேஷனிற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் எனவும், தேவை ஏற்படின் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தொடர்ந்து பொலிஸ் ஸ்ரேஷன் சென்று வந்த அமலன், `தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென’ ஒருநாள் நாட்டை விட்டு விடுதலையாகி ஓடித் தப்பினான்.

உள்ளே நிறைந்து கிடக்கும் லக்மினியின் நினைவுகளை அசை போட்டுப் பார்க்கின்றான் அமலன். ஒரு சம்பவம் வாழ்க்கையை எப்படி அடி தலை மாற்றிப் போட்டுவிட்டது. பள்ளியில் ஒன்று, பல்கலைக்கழகத்தில் ஒன்று, வேலையில் ஒன்று – இன்று நிஜமாகிப் போய்விட்ட இன்னொன்று. வாழ்க்கையில் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இறுதியாக ஒன்று அமைவதற்கு முன்னர் எத்தனை பேர்கள் இடையில் வந்து போவார்கள்? இறுதியாக ஒன்று கிடைத்த பின்னரும் இன்னும் அலைபவர்கள் எத்தனை பேர்? அமலனின் மனம் வெட்கித் தலை குனிகின்றது.

அமலன் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலங்களில், அவனுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையை, அவனது பெற்றார்கள் தேடித் திரிந்தார்கள். பிறகு நடந்தது என்ன? அமலனின் பெற்றோர்களால் என்றுமே அவனது மனைவி தாரிணியை பார்க்க முடிந்ததில்லை. அதே போல பெற்றவர்களின் இறப்பிற்குக்கூட அமலனால் போக முடியவில்லை.

புதிதாக ஒரு துணை வந்து, அதுவும் அவனுக்கு மிக நெருக்கமாக ஒட்டியபோது, லக்மினி பற்றிய நினைவுகள் மெல்ல மனதின் ஓரத்திற்கு சென்றுகொண்டன.

தாரிணியின் அன்பிலும் உபசரிப்பிலும், இன்று மெழுகாய் உருகிவிட்டான் அமலன்.

*

தொடரும்...

No comments:

Post a Comment