
எஸ்.ராஜகோபாலன்
ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் ‘கசகச” வென நின்ற ஜனச் சிதறல்லை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலிலிருந்து அவதியோடு இறங்கிய கும்பலின் பின்னால், ஓரிரு பொறுமைசாலிகளோடு இவனும் ஒருவனாக இறங்கினான்.
வாசலில் சிரத்தையில்லாமல் நின்றுகொண்டிருந்த காக்கிச் சட்டைக்காரனின் கையில், வலியச் சென்று தன் டிக்கட்டைத் திணித்துவிட்டு வெறுங்கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினோடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான்.
அது ஒரு சின்ன ஸ்டேசன். எதிரும் புதிருமாக ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஓடும் ‘டீசல்’களுக்காக நீண்டுகிடந்த தண்டவாளங்களுக்கிடையே அந்த ஸ்டேசன் இறுகப் பொருத்தப்பட்டதுபோல் கிடந்தது. இதன் முன்புற வாசலோடு சங்கமிக்கிற ஸ்டேசன் றோட்டால் வந்து அதன் அந்தலையிலுள்ள ஒரு மரப் பாலத்தில் ஏறி இந்தப்பக்கம் இறங்கிவிட்டால் ஸ்டேசனுக்குள் நுழைந்துவிடலாம். இது டிக்கட் எடுத்து பிரயாணம் செய்பவர்களுக்குரிய வழி. மற்றவகையான பேர்வழிகளின் வசதியை முன்னிட்டு ஸ்டேசனின் எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் இருந்தன.
ஸ்டேசனென்றால், எப்பொழுதும் சளசளவென்று கொட்டிக்கொண்டிருக்கும் அல்லது ஒருபோதுமே கொட்டாத தண்ணீர்க் குழாய், நாற்றமெடுக்கும் கக்கூஸ்கள், குதிரை றேஸ் பத்திரிகைகளிலேயே முழு நேர அக்கறை கொண்ட உத்தியோகத்தர்கள், வாங்குகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு என்னும் பொதுவான லட்சணங்களுக்கு முரணாகாமல் இருந்தது அது. ஸ்டேசனுக்கு மேற்கே அமைதியான கடற்பரப்பு. கரையோரமெங்கும் தாழைப் புதர்கள் - உள்ளே கொலை விழுந்தாலும் வெளியிலிருந்து தெரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அல்லது வெளியே பார்த்துப் பயப்படமுடியாத அளவுக்கு - மண்டிபோய்க் கிடந்தன. தண்டவாளத்தின் ஓரமாக நிலத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கவென்று இங்கிலீசுக்காரன் காலத்தில் போட்ட கருங்கற் பாறைகள் மண்ணிலே அரைகுறையாட்ப் புதையுண்டு கிடந்தன.