
பவானி ஆழ்வாப்பிள்ளை
'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் - ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?



