
பொ.கருணாகரமூர்த்தி
அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது, புதிய ‘செல் ‘ மாற்றவேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்றுவிடுமுறை.
இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிகாவுக்கு மடத்தலை [பேபி றஸ்க்] தேனீரில் நனைத்து ஊட்டுகையில் ‘வசீகரன் நேரத்துக்குப் போய் மீனைவாங்கி வந்தானாயின் இனிக் காலைப்பலகராமென்று எதையும் தேடி வினைக்கெடாமல் உள்ள விறகில் சமையலையே முடித்துவிடலாம் ‘ என்று எண்ணினாள். அவளின் மனதைப் புரிந்துவிட்டவன்போல தான் சீராக்கிக்கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத்தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு “வர்ஷி பையை எடும் நான்போய் மீன் வாங்கியாறன்” என்றுவிட்டு பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக்கொண்டு முகம் கழுவ கிணற்றடிக்கு ஓடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சூரியக்கதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமால் அவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்து இருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டின் திறப்பு அவர்களிடமே பத்திரமாக இருக்க வீடும் சுற்றுமதிலும் காணாமல் போயிருந்தன.
‘எம்மினமே ‘ வீட்டையும் , கூரையையும், மதிலையும் கல்லுக்கல்லாய் பெயர்த்துக் கொண்டுபோயிருந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப்போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான்.
இங்கே தீராதபோரும் இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச்சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

