Thursday, 26 October 2017

கார் காலம் - நாவல்

கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.


இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.



இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.

உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.



கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்

(குரு அரவிந்தன்)

கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’

Sunday, 1 October 2017

அனுபவம் புதுமை – சிறுகதை


செம்பியன் செல்வன் சிறுகதைப்போட்டி 2016 (ஆறுதல் பரிசு, ஞானம் சஞ்சிகை)

புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.

துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases -  சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.

Wednesday, 27 September 2017

பிறந்த நாள் எப்போது? - கதை


அவள் பெயர் லோறா. வியட்நாமியப்பெண். பல வருடங்களாக ரூபனுடன் வேலை செய்கின்றாள். ரூபனை தனது ஆத்ம நண்பன் என்று சொல்லிக் கொள்வாள். அடிக்கடி இலங்கைத் தமிழர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வாள். அங்கு வேலை செய்பவர்களில் அவளின் பிறந்த நாள் எப்போது என்பது எவருக்கும் தெரியாது.


“ஆத்ம நண்பனுக்கும் சொல்லப்படாதா?” ரூபன் கேட்பான்.


“அடுத்த வருடம் சொல்கின்றேன்” சிரித்து மழுப்புவாள்.


பிறந்தநாளைச் சொன்னால் தமது வயதை மட்டுக் கட்டிவிடுவார்கள் என அனேகம் பேர், அதுவும் பெண்கள் பயப்பிடுவதுண்டு.


எல்லாவிதமான கொண்டாட்டங்களிலும், அடுத்தவர்களது பிறந்தநாள் விழாக்களிலும் அவள் கலந்து கொள்கின்றாள். அதில் ஒன்றும் குறைவில்லை.


ரூபன் அந்த வேலையிடத்தை விட்டு விலகும் காலம் வந்தது. அன்றுமுதல் அவளிடம் உனது பிறந்தநாளைச் சொன்னால் ஒவ்வொரு வருடமும் வாழ்த்து அனுப்பி வைப்பேன் என்பான்.
அதற்கு அவள், “நாளைக்குச் சொல்கின்றேனே!” என்பாள். ஆனால் சொல்வதில்லை.


கடைசி நாள் – ரூபன் பிரியும்போது லோறாவைப் பார்த்தான்:

“எனக்கு ஏது பிறந்தநாள். நான் போரின் குழந்தை. நான் என் அப்பாவைக்கூட ஒருநாளும் பார்த்ததில்லை” சொல்லும்போது அவள் கண்கள் பனித்தன.

போர் யாரைத்தான் விட்டு வைத்தது? ரூபன் தனது மக்களை நினைத்துக் கொண்டான். அவனது கண்களிலும் அந்தக் கலக்கம்.



Wednesday, 20 September 2017

அவர் எனது மாமா! – சிறுகதை

 


திருமணம் முடிந்து, வீட்டிற்கு வந்துவிட்ட மணமக்கள் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். மீனா ரகுபதியின் ஒரே மகள். அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்திருந்தது.

மீனாவும் முரளியும் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீனா மொபைல் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆக்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். முரளி ஆந்தைக்கண் முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினான்.

சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீனா டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுபதியும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு காப்பிலி காருக்குள் இருந்து இறங்கி மீனாவின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.

“என்ன தம்பி... என்ன நடந்தது?” மாப்பிள்ளை முரளியைப் பார்த்துக் கேட்டார் ரகுபதி.

“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதை, தொடாதை, குத்துவன் எண்டாள் மீனா. பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்” திகைப்பில் இருந்து நீங்காதவனாக முரளி நின்றான்.

ரகுபதி நெஞ்சைப் பொத்தியபடி நிலத்திலே சரிந்தார். ஹார்ட் அற்றாக். அம்புலன்ஸ் வந்தது. வைத்தியசாலைக்கு விரைந்தார்கள்.

வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து ரகுபதி இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்றார்கள் வைத்தியர்கள். அவருடன் கூடமாட உதவிக்கு நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.

முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.