சிட்னியின்
புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த
கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம்
அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே
கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த
அவரை - திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும்
எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?
அவரைப்
பார்ப்பதற்காக சிவத்துடன்
ஒரு தடவை இங்கே வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான் முதல் தடவை. கதவைத்
தட்டிவிட்டு, சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால் கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன்.
ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் தலையைக்
குப்புறக் கவிழ்ந்த வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு அப்படியே இருந்தது.
“அம்மா...” மெதுவாகக் கூப்பிட்டேன். நான்
எப்போதும் அவரை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப்
பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?” என்றார்.
“நான் வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை
உங்களை ஒருக்கா பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.”
அவரின்
முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில்
அமர்ந்தேன்.
“அம்மா
எப்படி இருக்கிறியள்?”
“ஏன்
எனக்கு என்ன குறை? எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!”