Monday, 12 January 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-10)

அவுஸ்திரேலியப் பழங்குடிகள் (Indigenous Australians)

அவுஸ்திரேலியப்பழங்குடிகள் (Aborigines) ஏறக்குறைய 42,000 ஆண்டுகளாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆரம்பத்தில் தென்கிழக்கு ஆசியத்தீவுகளில் இருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. 500 வகையான பழங்குடிகள் தமக்கேயுரித்தான சொந்தமொழிகளுடன் வாழ்ந்தார்கள்.

ஏறக்குறைய 3.5 இலட்சம் வரையில் இருந்த அம்மக்கள் தொகை கப்டன் ஜேம்ஸ் குக்கின் (1770) வருகைக்குப் பின்னர் குறையலாயிற்று. பிரித்தானியா இந்தநாட்டையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. 1788 இல் பிரித்தானியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள் போன்ற கைதிகளை இங்கே குடியேற்றினர். அவர்களைக் கண்காணிப்பதற்கென போர்வீரர்களையும் அனுப்பி வைத்தார்கள். நதிக்கரையோரமாக வாழ்ந்துவந்த பழங்குடியினரை இவர்கள் தமது துப்பாக்கிமுனையில் வெளியேற்றினார்கள்.   கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். போதாக்குறைக்கு அவர்களுடன் கூடவந்த தொற்றுநோய்கள் (அம்மை, சின்னம்மை) மற்றும் மீள்குடியேற்றம், பண்பாட்டுச்சீரமைப்பு போன்றவற்றாலும் நிறையப்பேர் இறந்தனர். மதுப்பழக்கத்தையும் அவர்கள்தான் பழங்குடி மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

1869 முதல் 1969 வரை, இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கை என்று கூறிக்கொண்டு பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் ஐந்துவயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள். இந்தக்கட்டாயப் பிரித்தெடுப்பை 'திருடப்பட்ட தலைமுறைகள்' (Stolen Generations) என்று சொல்வார்கள். இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பான அப்போதைய அரசும் திருச்சபையினரும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான எந்தவிதமான பதிவுகளையும் எழுதி வைக்கவில்லை. இவர்கள் கிறிஸ்தவாஅலயங்களிலும் சமூகநல அமைப்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலரை வெள்ளையின மக்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று மாற்றப்பட்ட போதும் இவர்கள் கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டது. 1967 இல் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு அவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 5 இலட்சம் மக்கள் இருக்கின்றார்கள். இது மொத்த சனத்தொகையின் (21.3 மில்லியன்கள்) 2.5% ஆகும்.

2008 பெப்ரவரி 13 இல் கெவின் ரட் தலைமையிலான நாடாளுமன்றம், இந்தப்பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

என்னதான் இருந்த போதிலும் அவர்களுக்கு இன்னமும் பூரண விடிவு வரவில்லை. சமீபத்தில் குவீன்ஸ்லாந்திற்குப் (Queensland) போனபோது நிகழ்ந்த ஒரு சிறு சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது. தோன்லான்ஸில் (Thornlands) இருக்கும் நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.





அங்கிருந்த நாட்களில் ஒருநாள், அவர்களுக்கு அண்மையாக இருக்கும் குச்சிமுடிலு (Coochiemudlo Island) எனும் சிறியதீவிற்கு Stradbroke Ferry இல் சென்றோம். அழகான கடற்கரை. BBQ போடுவதற்கு இரண்டு இடங்கள் இருந்தன. BBQ போடுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றிருந்தோம். எரிபொருள் (gas) இலவசம். இரண்டு இடங்களிலும் பின்புறமாகவுள்ள இருந்த இடத்தைத் தெரிவுசெய்து BBQ மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் ஒரு அபொறியின்ஸ் குடும்பத்தினர் அங்கு வந்து சேர்ந்தார்கள். முதன்முதலாக அப்பொழுதுதான் அபொறியின்ஸ் இனத்தவரை மிகச்சமீபமாகப் பார்க்கின்றோம். 

சிட்னியில் ஓப்ரா ஹவுஸிற்கு (Opera House) முன்னால், தலைவிரி கோலம் - உடம்பெங்கும் பட்டைப் பூச்சு - ஆளைவிட நீண்டதொரு குழல் சகிதம் நின்றுகொண்டிருக்கும் கன்னங்கரிய ஒருவனைத்தான் இதுவரை கண்டிருக்கின்றேன். இவர்கள் சற்றே வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். 'திருடப்பட்ட தலைமுறை'யைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். Half castes Aborigines என்று அழைக்கப்படுபவர்கள். படித்தவர்கள் போலக் காணப்பட்டார்கள்.

வந்தவர்கள் எங்களை ஒருதடவை பார்த்தார்கள். பின்னர் எமக்கடுத்திருந்த BBQ மேசையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். நாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டோம். அப்பொழுது ஒரு கூட்டம் இளைஞர் யுவதிகள் தமது பொதிகளையும் இழுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள். வெள்ளை இனத்தவர்களான அவர்கள் ஆரவாரமாகச் சத்தமிட்டபடி பழங்குடிமக்களை நோக்கி வந்தார்கள். இவர்கள் மேசைமீது பரப்பி வைத்தவற்றையெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டார்கள். கண் மூடி விழிப்பதற்குள் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டார்கள். 230 ஆண்டுகளுக்கும் மேலான ஒடுக்குமுறைகளிற்குப் பழக்கப்பட்ட அவர்கள் எதிர்த்து வாழ்வதற்கு இன்னமும் நாளாகும்.



No comments:

Post a Comment