விளங்குதோ பிள்ளை?
தார்ப்பாய்க் கூடார
வாசலில் நின்றேன். கமக் கட்டுள் தாங்குதடிகள்.
பாலை மரத்தின் கீழ்
நீல ஜீப். பிள்ளைகள் கதை கேட்கிற நேரத்தில் காவல் பண்ணத்
தொடங்கியிருக்கிறான். பிள்ளைகளுக்குப் புலிப்பாடம் நடத்துகிறேன் என்று சந்தேகிக்கிறான் போலும்.
'அன்ரி, வாசலில் நீல ஜீப்காரன். உங்களை நோட்டம் பார்க்கிற ஆமிக்காரன்." தங்கன் வாசலை நோக்கி
நடந்து வந்தபடி கூறினான். ஏனைய பிள்ளைகளும் அவன் பின்னே வந்து கொண்டிருந்தனர்.
'உங்களுக்கே சிங்கள
அரசின் சின்னத்தனம் புரிகிறது. கவனம். ஏன் அங்கே போகிறீர்கள்
என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?"
'நேற்றைக்குக்
குளக்கட்டிலே வைத்து டானியல் என்னைக் கேட்டவன். அங்கே
கிரமமாய்ப் போய் என்ன பண்ணுறீங்க?" என்று. கோமதி.
'என்ன பதில் சொன்னாய்
கோமதி?"
'சைவ சமயக் கதைகள்
கேட்கிறோம், உதவி செய்கிறோம் என்றேன். அதற்கு அவன் 'ஒரு கதை சொல்" என்றான். நான் திருநாவுக்கரசு நாயனார் கல்லோடு மிதந்தகதைசொன்னேன்."
விடுதலைப் போராட்டம்
வயதுக்கு மிஞ்சிய சிந்தனையை சின்னஞ்சிறிசுகளில் வளர்த்திருக்குது. மனம் பேசியது.
‘பிள்ளைகளே, இன்று என்னுடைய கதை. கொஞ்சம் வித்தியாசமானது. அண்ணன்மார் எல்லோரும் இயக்கத்திற்கு ஓளித்து ஓடியது போன்ற சுமுகமானது அல்ல. பயப்படாமல் அவதானியுங்கள். இன்னொரு விடயம். இன்றைய வகுப்பு நான்கு கதைகள் வரை நீளப் போகின்றது."
பிள்ளைகள் எழுந்து
நின்று கைதட்டி வரவேற்றார்கள்.
●
1984 மாசி மாதம்.
அண்ணன்மார்---வீரக்கோன், சங்கிலி,
யோகன்---இயக்கத்துக்குப் போய் பல
மாதங்களுக்கு மேல்.
வெள்ளிக்கிழமை. யாழ்.
வேம்படி மகளிர் உயர்நிலைப்
பாடசாலையிலிருந்து ஆயிலடி
வந்திருந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை.
மீண்டும் வேம்படிக்குச் செல்ல அப்பா என்னை புளியங்குள
புகையிரத நிலையத்தில் சேர்க்க வொக்ஸ்வாகனைச் செலுத்திக்கொண்டிருந்தார்.
புளியங்குள-நெடுங்கேணிக்
காட்டுவீதி. தலையைத் திருப்பிக்
கேட்டார்.
'சொன்னதெல்லாம்
ஞாபகமிருக்கோ பிள்ளை?"
'ஓமப்பா."
'அப்பாவைஅழவைச்சிடாதை."
'ஓமப்பா.”
ஒன்றரை மணி ‘குட்ஸ்’ புகையிரத வண்டி கொழும்பிலிருந்து வந்து சேர்ந்தது.
கரிப்புகை தள்ளும் கருமுண்ட என்ஜினை அடுத்து முப்பது வரையான ‘குட்ஸ்’ பெட்டிகள். அவற்றின் அந்தத்தில் ஒரு பிரயாணிகள் பெட்டி, காட்
பெட்டிக்கு முன்னே. அதனுள் ஏறினேன். ‘சண்டிங்’ இல்லை. சுணங்காது
புறப்படும். மாலை ஆறுமணிக்கெல்லாம் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்திடும்.
புகையிரதத்தால் இறங்கி, வெளியே
வந்து நேரே பார்த்தால் வேம்படிப் பாடசாலை வாசல் தெரியும்.
பிரயாணிகள் பெட்டி.
பச்சைச் சலாகை ஆசனங்கள்.
அழுக்குப் படிந்தவை. பலகையாலான
சாளரங்கள். பிரயாணிகள் அருமை. இருக்கைகள் எல்லாம் பெரும் பாலும் காலி.
இருக்கையை கைக்குட்டையை வீசி சுத்தம் செய்தேன். சாளரவோர
ஆசனத்தில் அமர்ந்தேன்.
அப்பா வெளியே ‘பிளாட் பாரத்தில்.’
சாளர ஓரத்தில் நின்று என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தார். முகம் அழுதுகொண்டிருந்தது.
‘பிள்ளை போயிடாதை.
மூன்று அண்ணனிலே ஒருத்தர்கூட மிச்சம் இல்லை. நீயும் இயக்கத்துக்குப் போனால் நான்
சுக்குநூறாய் உடைந்து உருக்குலைந்து போவன். விளங்குதே பிள்ளை சிவகாமி?"
'அப்பா, வீட்டிலே எத்தனைதரம் சொன்னனான். போகமாட்டேன்.
போகமாட்டேன் என்று. அப்பா நீங்க ராச நாச்சியார் வம்ச வழிவந்தவரெல்லே? போர்க்களங்கள்
பல கண்ட வீர வழித்தோன்றல். கோழைகள் மாதிரி ஒடிந்து மடிந்து போயிருக்கிறீர்கள்.
அப்பா, உங்கள் தலையில் அடித்துச்
சத்தியம் பண்ணட்டே?"
அப்பாதயையைநீட்டினார்.
எனது கல்லாய்ப் போன
மனம் இரங்கியது. உறுதிகள்
உடைந்து தளர்வது போலவிருந்தது.
தலையில் கைவைத்தேன்.
கண்கள் பனித்தன. 'அப்பா நான் போகவில்லை." அதற்குள்ளும் சின்னப் பொடி.
அப்பாவின் முகத்தைப்
பார்த்தேன் ஆயிரம் அம்புலிகள் பால்நிலவு பொழிந்தது போலவிருந்தது. எனது வார்த்தைகளை
அலசிப் பார்க்கக்கூட தோன்றவில்லை. மகிழ்ச்சியில்
மெய்மறந்து போயிருந்தார். பரந்த வானில் சிறகடித்துப் பறந்தார்.
புகையிரதம்
விசிலடித்தது. அப்பா ஏக்கத்துடன் என் வதனத்தைப் பார்த்தார்.
‘புக்கு புக்கு’
என்று புகை தள்ளிக் கொண்டு விக்கி
விக்கிப் புறப்பட்டது. புகையிரதம் கைகாட்டிக் கம்பத்தைத்
தாண்டிக் கொண்டிருந்தது. சாளரம் வழியாகத் தலையை நீட்டிப்
பார்த்தேன். அதே இடத்தில் கை அசைத்தபடி சிலையாக நின்றார்.
தோற்றம் மங்கி மங்கி சிறுத்து சிறுத்து மறைந்தது.
வளர்ந்து உயர்ந்த புகையிரத என்ஜின் குழாய் தள்ளும் கரித் தூசி
முகத்தில் விழுந்தது. பலகைச் சாளரத்தை எட்டி இழுத்து அடைத்தேன்.
அடுத்த புகையிரத
நிலையம் கனகராயன்குளம். புகையிரதம் நின்றது. வகுப்புத் தோழி திவ்யா புகையிரதத்தில்
ஏறினாள். கொஞ்சம் கறுப்பு. கொஞ்சம் கட்டை. பிறை வண்ண
நெற்றி. வசீகரமான முகத்தின் கிளி மூக்கு மேலும் அழகு சேர்த்தது.
அவளுடைய அப்பா
தில்லையர். நெல் விளைச்சல் தொடர்ந்து கண்பார்த்து செல்வச் செழிப்பாய் வாழ்கிறார்.
பூர்வீகம் புங்குடுதீவு. கனகராயன்குளத்தில் குடியேறியவர்.
சின்ன வீடும் கட்டிப் போட்டார். உடம்பு இப்பவும்
வலிச்சல்தான். ஆடம்பரம் இல்லாத உடை. நாலுமுழ வெள்ளை வேட்டி. வெள்ளை
பனியன்.தோளில் கசங்கிய துவாய்த் துண்டு.
மகளோடுவீட்டில்
பேசியது போதாதென்று ஜன்னல் ஓரத்தில் நின்று தயங்கித் தயங்கிப்
பேசினார். 'பிள்ளை திவ்யா. வேறு
பெண்பிள்ளை எனக்கு மருந்துக்கும் இல்லை. எங்களை அந்தரிக்க விட்டுப் போட்டுப் போயிடாதை பிள்ளை. அம்மா எத்தனையோ நேத்திக்கடன் வைத்துப் பெத்தவ. ‘என்டை தவக் கொழுந்தை ஏமாற்றிக் கொண்டு போயிடுவான்கள்
’ என்று சதா கண்ணீரும்
கம்பலையுமாய் இருக்கிறா. விளங்குதோ பிள்ளை?"
'ஏன் அப்பா வீணாக
சஞ்சலப்படுறீங்கள். சாப்பாட்டுக்கு வழியில்லாததுகள், மொக்குகள் இயக்கத்துக்குப் போகுதுகள். நான் ஏன் போகவேண்டும்? போக மாட்டன் அப்பா. நீங்கள் கவலைப்படாமல் போங்கோ.
அம்மாவுக்கு சொல்லுங்கோ, சும்மா
அழுது குழற வேண்டாம் என்று. ஒழுங்காய்ச் சாப்பிட்டு
தம்பி தங்கச்சிகளை கவனமாய்ப் பார்க்கச் சொல்லுங்கோ."
'வெள்ளிக்கிழமை
கொழும்பு மெயில் புகையிரதத்தைப் பார்த்துக்கொண்டு
நிற்பன். என்ன பிள்ளை திவ்யா? என்னம்மா நான் சொன்னது வடிவாய் விளங்கின தெல்லே?" தில்லையர் தோளில் தொங்கிய துவாய்த் தலைப்பைப் பிடித்து கண்ணீரைத் துடைத்தார்.
'ஓம் அப்பா.
வெள்ளிக்கிழமை கட்டாயம் கொழும்பு மெயில் ‘ரெயினில்’வருவன். காத்து நில்லுங்கள்."
கிளிநொச்சி புகையிரத
நிலையம். புகையிரதம் நின்றது. புறப்பட ஆயத்தம்.
பதினைந்து வயது. போனி ரெயில். கறுப்பு. நெடிய பெண். யன்னல் ஓரம் ஓடி வந்தாள். 'நீங்கள்தானே சிவகாமி." 'ஓம்." அவள் என்னிடம் ஒருதுண்டு தந்தாள். புகையிரதம்
புறப்பட்டுவிட்டது.வாசித்தேன்.
'அவசரம். இருவரும்
நேரே கொக்குவில் முகாமுக்குச் செல்லுங்கள். மாதவி"
'ஏன் சிவகாமி எங்களை
கொக்குவில் நிலையத்துக்கு
வரட்டாம்?"
'றோவிடம் பயிற்சி பெற
இந்தியா போக என்று தோன்றுகிறது. திவ்யா சுதந்திரப் பறவைகள் தலைவி மாதவி அக்காவை உனக்குத் தெரியுமே?" "ஒருமுறைசந்தித்தனான்."
திவ்யாவும் நானும்
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இறங்கவில்லை. வேம்படி
விடுதிக்குப் போகவில்லை. அடுத்தது கொக்குவில் புகையிரத
நிலையம். அங்கு சென்று இறங்கினோம். முன்பின் தெரியாத இளம்
மங்கை எம்மை அழைத்துச் சென்றார்.
●
தொடர்ந்து வந்த
வெள்ளிக்கிழமை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் மெயில்
புகையிரதம். டீசல் என்ஜின். ஆழகான சுத்தமான மெத்தை
ஆசனங்கள்.கண்ணாடியன்னல்கள்.
நானும் திவ்யாவும்
வீடு நோக்கிப் பிரயாணம் செய்தோம். சந்தேகம் வரக்கூடாது
என்பதற்காக பாடசாலைச் சீருடையில், வெள்ளை
கவுண், மறூன் ரை, வீடு திரும்பினோம்.
கனகராயன்குளத்தில்
புகையிரதம் நின்றது. இரவு ஒன்பது மணி. திவ்யா
புகையிரதத்தால் இறங்கினாள். தில்லையர் சிரேட்டபுத்திரியைக் கண்டார். வதனத்தில் மகிழ்ச்சி
ஆனந்தம் பொங்கிப் பெருகி வழிந்தது. வாலிபனைப் போலத் துள்ளிப்
பாய்ந்து ஓடிவந்து வரவேற்றார். ஓர்இருண்டயுகம் கடந்து போன
பேரானந்தம்.
திவ்யா, புகையிரதம் புறப்படுமட்டும் இரகசியமாக வெளியே ‘பிளாட் பாரத்தில்’ நின்றுஜன்னல்வழியாக என்னோடு பேசினாள்.
'சிவகாமி, நாளைக்குச் சரியாக காலை ஒன்பது மணிக்கு வருவன். மாதவி அக்காவை பத்திரமாகக் கூட்டி வருவன்.
அடுத்த வளவில்தான் மறைவாக வைத்திருக்கினம். நீ
பயப்படுகிறமாதிரி காட்டிக்கொள்ளாதை. கவனம். கவனம்.
பயப்படாதை." திவ்யா
பேசினாள்.
'ஓம். நான் ராச
நாச்சியார் வம்ச வாரிசு. துணிவாய் செயல்படுவேன். உன்னுடைய
அப்பாவை எப்டிச் சமாளிக்கப் போறாய்?"
'சிவகாமி, அதெல்லாம் பெரிய விசயம் இல்லை. அவர் கசிப்பு குடிச்சுப் போட்டுப் படுத்தால் பத்து மணியாகும் எழும்ப.
அதற்கிடையில் வாகனம் வந்திடும்."
'கவனம். அக்கம்
பக்கம் பார்த்து வாகனத்தில் ஏற்று."
புகையிரதம்
விசலடித்து விட்டுப் புறப்பட்டது. கனேடியன் டீசல் என்ஜின். பெட்டி
நிறைந்த பிரயாணிகள்.
நேரம் இரவு ஒன்பதரை
மணி. புகையிரதம் புளியங்குளத்தில் நின்றது. அழைத்துச் செல்ல அப்பா வந்திருந்தார். உற்சாகமாக வரவேற்றார். வயலில் நெல் விதைப்பு நடக்கிறது. அந்தக் களை முகத்தில் தெரிய வில்லை. புயல் காற்றுள்
சிக்கிய கப்பல் கரை சேர்ந்த மகிழ்ச்சி.
வாகனம் நெடுங்கேணி
வீதியில் ஓடிக்கொண் டிருந்தது. திடீரென வாகனத்தை
நிறுத்தினார். ‘பிறேக்கின்’
பயங்கர ‘கீஈஈ’ ஓசை.
சாலையில் ஏறக் கால் பதித்த விடலைப்பருவ கொம்பு அரும்பிய யானையை அச்சுறுத்தியது. துதிக்கையை உயர்த்தி, முன்னங்கால்களை மடித்து உயர்த்தி பின்னங்
கால்களில் நின்று பிளிறியது. நெஞ்சு பதறியது. காடு அதிர்ந்தது.
எதிரே சற்று அப்பால் யானைகள். சின்னது பெரியது. பல தரத்தில். இருபது
முப்பது வரையில். வீதியைக் குறுக்கறுத்து வடபகுதிக்
காட்டுள் அவசரப்படாமல் அலட்டிக் கொள்ளாமல் ஆடி அசைந்து பிரவேசித்தன. இன்னொரு குட்டி யானை அங்கும் இங்கும் ஓடி முன்னங்கால்களையும் தும்பிக்கையையும் உயர்த்திப்
பிளிறியது. விடலையைப் பார்த்துப் பயிற்சி எடுத்தது.
வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நான் நடுங்கினேன். பயத்தில் அப்பாவைப் பார்த்தேன். கண்களில் பயம் ஆட்சிபண்ணியது.
முதல் பிளிறிய விடலை
யானை வாகனத்தைப் புரட்ட ஓடிவந்தது. அப்பா வெளிச்சத்தை அணைத்தார்.
பின்னர் வெளிச்சத்தைப் போட்டு மின்சாரக் ‘ஹோனை’ பெருஞ் சத்தத்தில்
இயக்கினார். யானையைத் துரத்த விசேட
‘ஹோன்.’ இயன்றளவு வேகமாக வாகனத்தை
பின்னோக்கிச் செலுத்தினார். அந்த யானைக்குத் தாய் யானை ஏதோ
கட்டளை போட்டிருக்க வேணும்.அமைதியடைந்துவீதியை விட்டு இறங்கியது.
வீடு போய்ச்
சேர்ந்தும் பயம் நீங்கவில்லை.
அடுத்த நாளை
நினைக்கப் பயம் கௌவியது. நெல்விதைப்பு. அப்பா நிற்க மாட்டார். அம்மா நிற்பார்.
கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக்கொண்டு காவல் பண்ணுவார். புலி
இயக்கபெண்கள் பிரிவு அணித் தலைவி மாதவி அக்கா எம்மோடு தங்கப் போகிறார். கொழும்பிலே இருந்து வந்த விசேட பொலிஸ் கோஷ்டி அவவைத் தேடுது என்று தெரிந்தால் அம்மா பத்திர காளியாக மாறிவிடுவா. கடவுளே!
●
சனிக்கிழமை காலை.
போட்டிக்கோவில்
நிற்பதும் வீட்டுக்குள் போவதுமாய் அவதிப்பட்டேன்.
'என்ன பிள்ளை.
போட்டிக்கோவுக்குப் போறதும் வாறதுமாய் நிற்கிறாய் ஆரன்
யாழ்ப்பாணத்திலிருந்து வருகினமோ?" அம்மா விசாரித்தார்.
எனக்குத்
தூக்கிவாரிப் போட்டது. தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளை
எவ்வளவுக்கு அளந்து வைத்திருக்கிறார்கள். என் மனம் பேசியது.
'இல்லை அம்மா. சும்மா
பார்த்தனான்."
'எல்லாம் கொஞ்ச
நேரத்திலே தெரியவரும்."
என் மனம் மீண்டும்
பேசியது: நீஒருமடைச்சி. சிநேகிதிகள் வருகிறார்கள். ஒரு கிழமை தங்கப் போகிறார்கள்
என்று சொல்லியிருக்கலாம்.
சமையல் அறைக்குள்
சென்றேன். 'அம்மா" என்றேன்.
'என்ன பிள்ளை?"
'என்னுடைய
சிநேகிதிகள் இரண்டு பேர் வருகினம்."
'அதை ஏன் முதல்
ஒளித்தனி? ஏதன் வில்லங்கமான ஆட்களே?"
'இல்லை அம்மா
இல்லை."
‘உன்னுடையகுரல்
சொல்லுது ஏதோ இருக்குது என்று."
'அம்மாவுக்கு நான்
பொய் சொல்வனோ?"
'சரி சொல்லு."
'இரண்டுமூன்றுநாள்
தங்குவினம்."
'அப்ப
நீவேம்படிக்குப் போகவில்லையோ?"
சாம்பல் வண்ண ஏ40 கார் ஒன்று வளவு ‘கேற்றடியில்’ நின்றது. கனகராயன்குளம் பக்கமிருந்து வந்தது. கவுன் அணிந்த இருவரை இறக்கிவிட்டு நயினாமடு
பக்கமாய்ப் போனது.
நான் ஓடிப்போய்
இருவரையும் அழைத்து வந்தேன். அம்மா போட்டிக்கோவில் நின்று
அவதானித்தார்.
*** தொடரும்... ***
No comments:
Post a Comment