மனம் ஏதோ சிந்தனையில்
லயித்திருக்க, கார் தன்பாட்டில்
போய்க் கொண்டிருந்தது. வடக்கு மெல்பேர்ணில் வேலை முடிந்து வீடு திரும்பிக்
கொண்டிருந்தேன்.
இரவு இரண்டு மணி.
தெரு வெறிச்சோடிப் போய் இருந்தது. நன்றாகக் குடித்துவிட்டிருந்த ஒருவன் வீதியின்
நடுவே நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன்.
வேகத்தைக் குறைத்து ஓரமாகக் காரைச் செலுத்தும் போதுதான், எனக்குப் பின்னாலே ஒரு சிகப்புக்கார் வருவதைக் கண்டு
கொண்டேன்.
அந்த இடத்தில்,
'பலறாற்' வீதியில் பயணம் செய்யக்கூடிய அதி கூடிய வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டராகும். இந்த வேகத்தைத் தணித்து 50 இற்குக் கொண்டு வந்தால் அவனை சலிப்பூட்டச்
செய்யலாம். ஆனால் அவன் தொடர்ந்தும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். வீதியில்
மூன்று பாதைகள் இருந்தும், அவன்
இப்படி என்னைப் பின் தொடர்வது எனக்கு அவன் மீது சந்தேகத்தைக் கொடுத்தது.
'ஃபுற்ஸ்கிறேய்' வைத்தியசாலை
வந்தது. இந்த இடமெல்லாம் எனக்கு அத்துப்படி. அடிக்கடி வைத்தியசாலை போய் வந்த
அனுபவம். இந்த இடத்தில் காரை பானாப்படச் (ப) செலுத்தி மீண்டும் 'பலறாற்' வீதிக்கு எடுத்தால், அந்தக் கால தாமத்தில் அவன் என்னைவிட்டு முந்திப் போய்
விடுவான். காரை எந்தவித 'சிக்னலும்'
இல்லாமல் வெட்டித் திருப்பினேன்.
என்னுடைய வெட்டுதலில் அவன் சற்றுத் திணறிப் போனான். பின்னர் காரை வைத்தியசாலை
இருக்கும் பக்கம் மெதுவாகச் செலுத்தினேன். மீண்டும் 'பலறாற்' வீதியில்
எடுக்கும்பொழுதுதான் - அவனும் என்னைத் தொடர்ந்து மெதுவாக 'பானாப்பட' வருவதை அவதானித்தேன்.
பயம் பிடிக்கத்
தொடங்கியது. எண்பது ஓடக்கூடிய வீதியில் மணிக்கு நூறு என்ற வேகத்தில் ஓடத்
தொடங்கினேன். இனி என்ன செய்வான் பார்க்கலாம்? ஆனால் ஒவ்வொரு முறையும் பாழாய்ப்போன சிக்னலில் நிற்க
வேண்டியதாயிற்று. அப்படி நிற்கும்போது அவனும் பின்னாலே வந்து விடுகின்றான்.
அடுத்து வந்த
சிக்னலில், நாலாபக்கமும் வேறு
வாகனங்கள் இருக்கவில்லை. அப்படியே சிக்னலில் நிற்காமல் - 'ரெட்' லைற்றில்
- அதே வேகத்தில் எடுத்துக் கொண்டேன். அவனும் சிக்னலில் நிற்காமல் வேக வேகமாக வந்து
கொண்டிருந்தான். கார் - 'மெயிட்ஸ்ரோன்',
'பிறேபுறூக்', 'சண்சைன்', 'ஆடியர்' என்ற
இடங்களிலெல்லாம் அதே நூறு வேகத்தில் ஓடி, நான் இருக்கும் இடமான 'டியர்பார்க்'கை அடைந்தது. உள்ளேயிருக்கின்ற குறுக்குப்
பாதைகளிலெல்லாம் காரை வெட்டி வெட்டி எடுத்தேன். அவனைக் காணவில்லை.
வீடு வந்ததும் 'றிமோற் கொன்ரோலினால்' கராஜின் கதவைத் திறந்து உள் புகுந்தேன். மீண்டும்
கராஜின் கதவை மூடும்போது வீட்டு வாசலில் ஒரு கார் வந்து வேகமாக 'பிரேக்' போட்டு நின்றது. உடனே உள்ளே எரிந்து கொண்டிருந்த லைட்டை
அணைத்தேன். சற்று நேரம் ஓசைப்படாமல் உள்ளே நின்றேன். நெஞ்சு திக்குத் திக்கென்றது.
சற்று நேரத்தில் கராஜின் கதவை அவன் தட்டினான். நான் கராஜிற்குள்ளிருந்து
வீட்டிற்குள் போகும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன்.
உள்ளே மனைவியின்
காதிற்குள் விஷயத்தை மெதுவாகச் சொன்னேன். வீட்டு விளக்குகள் எல்லாவற்றையும் பளீரென
எரிய விட்டோம். ஏறக்குறைய கத்துவதற்கு ரெடி. அவன் வீட்டின் முன் கதவைத் தட்டி
"நான் பொலிஸ்" என்றான். 'எப்படி
அவனை நாம் நம்புவது?' இதுவரையும்
ஒரு கள்ளனைப் போல என்னைப் பின்னாலே துரத்தியவனை எப்படி நான் பொலிஸ் என நம்புவது?
"எவனாக இருந்தாலும் காலையில்
வா!" என்றேன் நான்.
சொல்லிவிட்டு ஜன்னல்
திரைச்சீலையை மெல்ல விலக்கி அவன் போய் விட்டானா எனப் பார்த்தேன். ஏதோ ஒரு சிறு
பேப்பரில் பேனாவால் கிறுக்கி எழுதி எமது தபால் பெட்டிக்குள் போட்டுவிட்டுப்
புறப்பட்டுச் சென்றான் அவன். மேலும் கொஞ்ச நேரம் தாமதித்துவிட்டு தபால்
பெட்டிக்குள் போட்டிருந்த துண்டை எடுத்து வந்தேன்.
கூடிய வேகத்தில்
ஓடியது, 'சிக்னலில்' நிற்காமல் 'ரெட்' லைற்றில்
எடுத்தது போன்ற பல்வேறு காரணங்களிற்காக தண்டம் அறவிடப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித் தரும் அந்தத் தொழிலில் கள்ளனும் அவனே
பொலிசும் அவனே!
No comments:
Post a Comment