எஸ்.பொ அவர்களை நான் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு நேரில் சந்தித்தேன். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக்
கலைச்சங்கம் வருடா வருடம் நடத்தும் ’எழுத்தாளர்
விழாவிற்காக சிட்னியில் இருந்து மெல்பேர்ண்
வருகை தந்திருந்தார். அப்பொழுது எஸ்.பொவிற்கு வயது 75. அவருடன் மூத்த தலைமுறைப் படைப்பாளிகளான கலைவளன் சிசு.நாகேந்திரன், காவலூர்
இராசதுரை ஆகியோரும் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். இவர்களின் கலை, இலக்கியச் சேவையைப் பாராட்டி விருதும்
வழங்கப்பட்டது.
அப்பொழுது அவர் முருகபூபதி அவர்களின்
இல்லத்தில் தங்கியிருந்தார்.
அவர்கள் இருவரும் பின்னர் 2011 இல்
இலங்கையில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடு தொடர்பாக முரண்பட்டுக் கொண்டார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் இவர்கள் இருவருமே நாகரீகமற்ற முறையில் வார்த்தைப்
பிரயோகம் செய்திருந்தார்கள். ஈழத்தமிழர்களுக்கு
பேரிழப்பை ஏற்படுத்திச் சென்ற 2009 முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் சுவடுகள் காயும் முன்னே அவசர அவசரமாக நடத்தப்பட்டது அந்த
மாநாடு. இப்போது பார்க்கும்போதும் எஸ்.பொவின் கருத்துகளே வலுப்பெற்றிருப்பதைக்
காணலாம். அதைப் போன்றதொரு மாநாடு பின்னர் இன்னமும் எங்கும் நட்த்தப்படவில்லை. அதற்குரிய அறிகுறிகளும் இல்லை. எப்படி இருப்பினும் அந்த மாநாடு
அரசுக்கு ஆதரவாக நட்த்தப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். புலி எதிர்ப்பாளர்கள்
என்று சொல்லிக் கொண்ட பலர் அப்போது அரச ஆதரவாளர்களாகி நின்றார்கள்.
எஸ்.பொவின் எழுத்துக்கள் சிறுகதை, நாவல்,
கட்டுரை, வாழ்க்கை வரலாறு, திறனாய்வு, நாடகம், மொழிபெயர்ப்பு என நீண்ட வரலாறாய்
விரிந்து கிடக்கின்றன.
அவரைச் சந்திக்கும் தருணங்கள் யாவும்
பெறுமதி வாய்ந்தவை. அந்தச்
சந்திப்பில், நான் ஒரு சிறுகதைத்தொகுதி வெளியிட இருப்பதாக முருகபூபதி அவரிடம்
சொன்ன்னார். ‘மித்ர’ மூலம் வெளியிடலாம் என்று அவர்
எனக்கு ஊக்கம் தந்தார். அன்றைய உரையாடலில் செம்மைப்படுத்துதல் முதன்மையான இடத்தை
வகித்தது. அப்பொழுதுதான் முதன்
முதலில் இந்த ’எடிட்டிங்’ பற்றி நான் தெரிந்து கொண்டேன். ’மித்ர’ பதிப்பக வெளியீடுகள் பலவற்றிற்கு அவர் Publication Editor ஆக
இருந்துள்ளார். அவரைச் செம்மைப் படுத்துவதில் வல்லவர் என்று பலரும் சொல்லக்
கேள்விப்பட்டிருக்கின்றேன்.
“தம்பி... நான் ஒரு
சென்ரன்ஷிலை அங்கை இங்கை எண்டு இருக்கிறதை முன்னுக்குப் பின்னுக்குத் தூக்கிப் போடுவன்.
வசனம் அழகாக வந்துவிடும். உம்முடைய எழுத்திலை இருந்தே சொற்களை எடுத்துக் கையாளுவன்” என்றார் எஸ்.பொ.
எனது முதல்
சிறுகதைத்தொகுப்பு ‘எங்கே போகிறோம்’ 2007ஆம் ஆண்டு குமரன் பதிப்பாக வெளிவந்தது. ஆனால் எனது
இரண்டாவது சிறுகதைதொகுப்பு ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சமீபத்தில்
‘அக்கினிக்குஞ்சு’ வெளியீடாக ‘மித்ர’ பதிப்பகத்தால்
வந்துள்ளது. அது வந்த நேரத்தில் எஸ்.பொ சற்றே சுகவீனமுற்றார். எஸ்.பொ அவர்கள்
முன்னீடும், வெங்கட் சாமிநாதன் அவர்கள் அணிந்துரையும் எழுதுவதாக இருந்தது. ஆனால்
எஸ்.பொவினால் ஒன்றும் எழுதமுடியாமல் போய்விட்டது. கடைசியில் வெ.சா வின்
அணிந்துரையுடன் மட்டுமே அது வெளிவந்தது. “அது ஒன்றே போதும்” என்றார் எஸ்.பொ.
அவரை இலக்கியக்
கலகக்காரன், இலக்கியச் சண்டியர் என்றெல்லாம் சொல்லுவார்கள். “கலகம் என்பது
நிட்சயமாக தர்மத்தை நிலைநாட்டுமாயின் அந்த கலகக்காரனாய் நான் இருப்பதில்
பெருமைப்படுகின்றேன். உண்மைகள் கலகத்தில்தான் மலர்கின்றன” என்று 2005ஆம்
ஆண்டு அவுஸ்திரேலியா SBS (Special Broadcasting Service) வானொலிக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இப்படிச் சொல்கின்றார்.
2013ஆம் ஆண்டு
சிட்னியில் நடந்த எழுத்தாளர்விழாவின் போது எஸ்.பொ வாழ்த்துரை வழங்கினார். அவர்
மேடையில் ஏறும்போதே, “இது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கமா? அல்லது
அவுஸ்திரேலியா தமிழ் கலை இலக்கியச் சங்கமா?” என்றொரு கேள்வியை எழுப்பினார். இதில் எது
சரியானது என்ற கேள்வி இன்னமும் என் மனதில் எழுகின்றது.
நான் முதலில் படித்த
எஸ்.பொவின் புத்தகம் ‘சடங்கு’. என் பதின்ம வயதில் இந்தியாவில் ’ராணிமுத்து’ வெளியீடாக வந்த புத்தகமே என் வாசிப்பிற்குக் கிடைத்தது. அதில் சில பகுதிகளை
அப்போது திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். அப்போது அந்தப் புத்தகத்தை
ஒளித்து வைத்தே வாசித்தேன். அக்காவிடம் குட்டு
வாங்கியது இன்றும் வலிக்கின்றது. நிறையப்பேர்கள் தமது பதின்ம வயதில் அந்தப்
புத்தகத்தை ஒளித்துவைத்து வாசித்திருக்கின்றார்கள் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
அந்த வயதில்---மாணவப் பருவத்தில்--- அப்பிடியொரு புத்தகம் இருக்கின்ற விசயம் எட்டியிருப்பதே அதன் வெற்றிக்குக்
காரணமாகும். அந்த
நாவலில் சாமத்தியச் சடங்கு, மற்றது
செந்தில்நாதன் என்ற தனிமனிதனின் வாழ்வில் அடிக்கடி நடைபெறும் சம்பவம் என இருவேறு
சடங்குகளை இணைத்துச் செல்கின்றார் எஸ்.பொ. இதைப் படிப்பவர்கள், நாவல் முப்பது வருட
போர்க்கால வாழ்க்கைக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
ஏறக்குறைய 1,60,000 பிரதிகள் இந்த நாவலில் விற்கப்பட்டதாகச் சொல்கின்றார்கள்.
’மித்ர’ பதிப்பகத்தின் முதல் வெளியீடு – ‘வீ’ என்ற சிறுகதைத்தொகுதி. இது 1992 இல் வெளிவந்தது.
முதல் நாவல் ‘தீ’. இவரது
படைப்புகளில் ‘வீ’ யும் ‘தீ’யும் என்னை மிகவும் கவர்ந்தவை. ’வீ’ சிறுகதைத்தொகுதியில் உள்ள பதின்மூன்று கதைகளில் தலைப்புக் கதையான ‘வீ’ தவிர்ந்த ஏனைய கதைகளின் தலைப்புகள் ஈரெழுத்துக் கொண்டவை. இந்தத் தொகுப்பில்
2 பக்கங்களிலும் சிறுகதை உண்டு (சுவை), 32 பக்கங்களிலும் ஒரு கதை உண்டு (தேர்).
கதைகளுக்கு பக்க வரையறை இல்லை என்பதையே இது காட்டுகின்றது. மேலும் அதில் வரும்
ஒவ்வொரு சிறுகதையும் வித்தியாசமான களம், நடை, உத்தி கொண்டு வெவ்வேறு கோணங்களில்
எழுதப்பட்டிருக்கும். 1965 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த ‘வீ’ எனற சிறுகதைத்தொகுதிக்கு சாகித்தியமண்டலப் பரிசு கொடுக்கப் பட்டிருக்க
வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக - நடுவர்களின் தீர்ப்புக்கு மாறாக, இதில் வரும்
பெளத்த மதக் கோட்பாடுகளைக் கொண்ட ‘வீடு’ என்ற சிறுகதையைச் சுட்டிக்காட்டி, உண்மைக்குப் புறம்பாக
அதைத் திரிபுபடுத்தி சிங்கள உறுப்பினர்களுக்குச் சொல்லி பரிசு பெறுவதிலிருந்து தவிர்த்திருந்தார்கள்
முற்போக்கு அணியினர்.
’தீ’ யைப் போலவே ‘மாயினி’யும் சலசப்பை
ஏற்படுத்திய நாவல். அதில் ஸ்ரீமாவோவிற்கும் மகன் அனுராவிற்கும் இடையே நடைபெறும்
உரையாடலில்,
“நீ என் மகன். ஆனால்
பண்டாரநாயக்காவின் மகன் தானா என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாது” என்று எழுதியிருப்பார். எஸ்.பொவின் குசும்பிற்கு அளவே கிடையாது.
’அம்பலம்’ என்றொரு இணைய மின்னிதழ் சுஜாதாவினாலும் அவரது நண்பர்களாலும்
முன்னர் நடத்தப்பட்டது. சுஜாதாவின் மறைவையொட்டி அது பின்னர் நின்றுவிட்டது. அதில்
‘சுழி’ என்றொரு சிறுகதை எஸ்.பொ எழுதியிருந்தார். படைப்பிற்கு
முன்னதாக வாசகர்களுக்கு ஒரு கடிதம் வரைகின்றார் எஸ்.பொ. அந்தக் கடிதத்தில்,
ஆசிரியர்களின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு குறுநாவல் ஒன்றினை
எழுதவேண்டும் என்கின்ற ஆசையினையும், பின்னர் அதனை எழுத முடியாமல் போனபோது – அதனை
குறுநாவலுக்கான ஒரு முகப்பு வசனமாக எழுதி வைத்ததையும் குறிப்பிடுகின்றார். அவர் எழுதி வைத்த அந்த முகப்பு வசனத்தை ‘சுழி’ என்ற சிறுகதை எனப்
போட்டு வைத்துள்ளார் சுஜாதா. ஒரு நாவல் எழுதுவதற்கான சுருக்கக் குறிப்புகள் இங்கு
சிறுகதையாகின்றது. அந்தச் சிறுகதை இப்படி ஆரம்பிக்கின்றது.
|’அப்பனே முருகா’ என்று கொட்டாவி
கலந்த இறை சேவிப்பிலே துயில் எழுந்து, சூடாக ஒரு ‘பிளேன் டீ’யை வயிற்றிலே
ஊற்றிக் கொண்டாற்றான் காலையில் கழிவுக் குருத்தியங்கள் செவ்வனே நடைபெறும் என்ற
பழக்கதோஷத்திலே பிறந்த தேவை ஒன்று பிடர்பிடித்து உந்த, அரவம் எழுப்பாத பூனையாக
அடுக்களைக்குள் நுழைந்து, அடுப்பை மூட்டித் தேநீருக்கான உலையை வைத்து,---இப்படியே
பல காற்புள்ளிகளால் தொடரும் அந்தக் கதை இப்படி முடிகின்றது---, மாதத்தின்
இருபதாவது நாளன்று ஊதியத்தைப் பெற்று, ‘பிரியாவிடைக் கொன்றிபூஷன்’ ‘ஆசிரியர் சங்க சந்தாப்பணம்’ ‘ கோயில் திருப்பணி நன்கொடை’ என்று சம்பளத்தில்
ஏற்பட்ட வெட்டுக் கொத்துகள் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்து, சதக் கணக்குடன்
தமது சம்பளத்தைத் தமது திருவாட்டியிடம் ஒப்படைத்து, அமோக வாழ்வு அனுபவிப்பதான
கற்பித்ததில் பொன்னுத்துரை அவர்கள், புளியந்தீவின் சிங்களவாடிப் பகுதியிலே
ஆசிரியப் பிரமுகராக வாழ்ந்து வருகின்றார்.|
பின்னர் அப்படியே
முடியும் வரையில் அதே நடையில் பயணிக்கின்றது. கதையின் ஓட்ட்த்தை அதன் நடை எங்குமே
குழப்பவில்லை. அந்தப் படைப்பு பின்னர் நாவலாக வந்ததாகத் தெரியவில்லை.
அவர் படைப்பை ஆளும்
சொற்களில் பல அவருக்கே உரித்தானவை. அவற்றை ஏனைய எழுத்தாளர்கள் அதிகம் பாவிப்பதாகத்
தெரியவில்லை. எஸ்.பொவின் வார்த்தைப்
பிரயோகங்களில் பல கடினமானவை, விளங்கிக் கொள்ள முடியாதவை, தற்போதைய பாவனையில்
இல்லாதவை.
எஸ்.பொ தன் இறுதிக்காலங்களில் பல
ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு
மொழிபெயர்த்துள்ளார். தொழில் நிமித்தம் நைஜீரியாவில் எட்டு வருடங்கள்
இருந்தபோது பெற்றுக் கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் அவருக்கு இந்த மொழிபெயர்ப்பைச்
செய்வதற்கு கைகொடுத்து உதவின.
இவரது
மொழிப்பெயர்ப்பு நாவல்கள் –
'ஹால' (2011, செம்பென் ஒஸ்மா - Sembene Ousmane என்ற செனகல் நாட்டு எழுத்தாளர்), 'தேம்பி அழாதே பாப்பா' 'Weep Not Child'
(நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு
எழுத்தாளர்), 'மக்களின் மனிதன்'
(2011, ஆபிரிக்க எழுத்தாளரான சீனு
ஆச்சுபே -Chinua Achebe), 'மிரமார்'
(2011, ஆபிரிக்க எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ்
- NaguibFouz), 'மானக்கேடு'
(2011, ஆபிரிக்க எழுத்தாளர்
ஜே.எம்.கேற்சி - J.M.Coetzee), 'நித்திரையில்
நடக்கும் நாடு' (2011, ஆபிரிக்க
எழுத்தாளர் மையா கெளரோ - Mia Couto), 'வண்ணாத்திப்பூச்சி எரிகிறது' (2011, ஆப்பிரிக்க எழுத்தாளர் ஜொன்னி வீரா - Yvonne
Veera), 'கறுப்புக் குழந்தை'
(2009, ஆப்பிரிக்க எழுத்தாளர் கமரா லேய்
- Camara Laye).
எஸ்.பொ இலக்கியத்தில் மட்டுமல்ல,
கல்வித்துறையிலும் தமிழ் பாடத்திட்டக் குழுவில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
எழுபதுகளின் மத்தியில் ஆறாம் ஏழாம் வகுப்புப் படித்தவர்கள் – ’வழிகோலிகள் பாலம் கட்டுகின்றார்கள்’,
’இருநூறு மீற்றர்’, ‘பறவைக்குஞ்சின் முதற்பறப்பு’ போன்ற படைப்புகளை மறந்திருக்கமாட்டார்கள்.
என்னவோ தெரியவில்லை,
ஒரு சில எழுத்தாளர்கள் இறப்பதற்கு முன்னர் என்றுமில்லாதவாறு என்னுடன் தொடர்பில்
இருந்துள்ளார்கள். முன்னர் மு.நித்தியகீர்த்தி. இப்பொழுது எஸ்.பொ.
எஸ்.பொ
வைத்தியசாலைக்குப் போவதற்கு முன்னர், முதல் மூன்று மாதங்களும் என்னுடைய சிறுகதைத்தொகுதி ‘சென்றிடுவீர்
எட்டுத்திக்கும்’ தொடர்பாக உரையாடியுள்ளார். இடையிடையே கிளினிக்கும் போய்
வந்தார். நவம்பர் 27 ஆம் திகதி நான் முகப்புத்தகத்தைப் பார்த்தபோது, அவர் அதற்கு
முதல்நாளே எட்டுத்திக்கும் சென்றுவிட்ட செய்தியினை அறிந்தேன்.
No comments:
Post a Comment