Monday, 16 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

தம்பி அண்ணர் யோகன் - அதிகாரம் 17
புனர்வாழ்வு நிறைவேறி ஆயிலடிக்கு வர முன்னரே எனது ஜெய்பூர் கால் சேதமாய்ப் போனது. புதிய ஜெய்பூர் கால் பொருத்த யாழ்ப்பாணம் செல்ல இராணுவ அனுமதி வேண்டும்.

களுபண்டா பரிசளித்த பொன்னிற காஸ்மீர் பட்டுச் சேலை. தலைமுடியை லூசாகவிட்டு மல்லிகை மாலை. நெற்றியில் சந்தனப்பொட்டு ஆறு ஆண்டுகளின் பின்னர் செய்த முதல் சிறு அலங்காரம்.
இரு கமக்கட்டுள்ளும் கோல்கள். வளவின் கேற்றைத் திறந்தேன்.

வெள்ளைச் சீருடையில் பாடசாலை சென்று கொண்டிருந்த கோமதி பாய்ந்து வந்தாள். முதுகில் கருநீல புத்தகப்பை. வதனம் வழியும் புன்னகை. ஆவலோடு  என்னை நோக்கினாள்.
'எங்கே அன்ரி புதுக் கோலத்தில்?"
இராணுவ முகாமுக்கு. அனுமதி வாங்க. ஜெய்பூர் கால் பொருத்த யாழ்ப்பாணம் போக வேண்டும்."
'அன்ரி, பொன் வண்ணச் சேலையில், விண்ணின் தேவகன்னியாய் வீதி வலம் வரப் போறீர்கள்." சொல்லிவிட்டு கெக்கட்டம் போட்டுச் சிரித்தபடி பாடசாலைக்குள் நீண்ட கால்களை எட்ட வைத்துத் துள்ளிப் பாய்ந்து புகுந்தாள். வலது கை வேகமாக ஆடியது. துண்டாய்ப்போன கை, அவலட்சணத்தை எண்ணி மௌனம் அநுட்டித்தது.
மனம் தீர்ப்பு வழங்கியது. சிங்களவன் லட்சண நோநா என்றுசொல்வதில் தப்பில்லை.
அழகாயிருந்து எனக்கு என்ன நன்மை? சன்மானம்?அதுவே வாழ்வின் முதல் பகைவன். ஜென்மப் பகைவன். நித்திய பகைவன்.

நையினாமடு இராணுவ முகாம் வாயில். குறுக்கே தடைக்கம்பு. அருகே காவல் நிலையம். துப்பாக்கிகளுடன் இருவர். என்னை நன்றாகவே தெரிந்தவர்கள். தினமும் சோத்துக் கோப்பையுடன் வாசலில் நின்றவள். கையெழுத்து வைக்க எழுபத்திரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை முகாம் உள்ளே செல்பவள்.
சற்றே எட்ட ஒருவன். ஆடை அலங்காரத்தை மேலும் கீழும் பார்த்தான். வழமையிலும் வித்தியாசமான உடை. சந்தேகத்தைக் கொடுத்தது போலும். தொலை பேசியில் பேசினான்.
பத்து நிமிடமாகி விட்டது.

இராணுவ உடையில் பெண் வந்தாள். ஒல்லியாய் அழகானவள். தொப்பித் தலையை நிமிர்த்தி முகத்தை உற்றுப் பார்த்தாள். மின்னும் சேலையை நோக்கினாள். சோதனை அறைக்கு அழைத்தாள். அவளின் பயம் முகத்தில் தாண்டவமாடியது. அண்ணையின் கரும் புலிகள் வானுலகம் பிரயாணித்து விட்டன. மூன்று ஆண்டுகளுக்கு மேல். நடுக்கம் பயம் தொடர்கிறது. வரலாறு நீளத்துக்குத் தொடரும்.

நான் பேசினேன். 'ஜெய்பூர் கால் பொருத்த யாழ்ப்பாணம் போக வேண்டும். கேணல் ரணவீர மாத்தையாவிடம் அனுமதி பெற வந்திருக்கிறேன்."
அப்படியா?"
அவள் முகத்தில் விரைந்த மாற்றம் தெரிந்தது. கையில் வைத்திருந்த கருவியைக் கொண்டு உடைகளில் தட்டினாள். மார்பகப் பகுதியை மட்டும் தட்டிப் பார்க்க வில்லை. அது எனக்கு தெளிவான செய்தி சொன்னது. மகிழ்ச்சி தந்தது.
மேஜர் சிவகாமி நோநா போகலாம்."

'மேஜர் நோநா வணக்கம். எப்படிச் சுகம்." எதிரே மேசைக்கு மறுபுறம் இருந்த கேணல் ரணவீர கேட்டான்.
'நல்ல சுகம். மாத்தையா."
அலங்காரத்தில் அமிழ்ந்தான்.
சிரிப்பும், உல்லாச வார்த்தைகளும் சினம் மூட்டின. காட்டிக் கொள்ளவில்லை.
என்ன உதவி இங்கே வந்திருக்கிறாள்."
ஜெய்பூர் கால் பொருத்த வேணும். யாழ்ப்பாணம் போக அநுமதி வேணும்."
'நோநாவுக்கு ரணவீர இல்லை சொல்ல மாட்டான்."
அதற்குரிய பத்திரம் தேவை."
எத்தனை நாள் தேவை?"
ஐந்து நாட்கள்."
எங்கே தங்கப் போறாள்?"
கோப்பாயில்."
"யார் கோப்பாயில் இருக்கிறான்?"
சிதப்பா அங்குதான் கல்யாணம் பண்ணி னவர்."
;சித்தப்பா அங்குதான்ஜீவியம் செய்கிறானா?"
இல்லை."
இறந்து போனார்."
எப்டி இறந்தான்?"
'காரோடு தீக்கொழுத்தி கொன்றிட்டாங்கள்."
'நீதி மன்றம் என்னதண்டனைகொடுத் தது?"
சமூகம்மாலைமரியாதை செய்தது."

உடம்பை நிமிர்த்தி நிமிர்ந்திருந்து, கண் இமைகளை அகட்டி  'என்ன பேசுறான் சிவகாமி?" என்று வினாவினான்.
கறுப்பு யூலை இனக் கலகவேளைதீகொளுத்தி."
'அது காடை சிங்களவன் செய்யுறது. நல்ல சிங்கவன் செய்யுறதில்லை."

ஏதோ கேட்கவேண்டும் போலவிருந்தது.அண்ணைசொல்லுறவர் 'இலக்கை அடைய வேண்டும் என்றால். வழியிலே நிற்கக்கூடாது என்று." முள்ளிவாய்க்காலுக்குப் போக அனுமதி கேட்கலாமா என்று யோசித்தேன். நெஞ்சு படக் படக் என்றது. கேட்கவில்லை.

செக். லெப்ரினன்ற் பெரேராவைக் கூப்பிட்டு அநுமதிப் பத்திரம் வழங்கும் படி கூறினான்.

மேஜர் சிவகாமி நோநா. நாங்கள் சிங்கள ஜாதி மிச்சம் நல்லவங்க. பஞ்சசீலத்தில் நம்பிக்கை உள்ளவங்க. நோநாவுக்கு என்ன உதவி தேவை. பயப்படாம வாங்க."
'போஹம ஸ்துதி மாத்தையா" என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.
'சிவகாமி நோநா சாரியிலேபோஹமலக்சணாய்."

சித்தப்பா குடும்பத்தை உயிரோடு எரித்தவர்கள் பஞ்சசீலம் பற்றிப் பேசுகிறார்கள், போதிக்கிறார்கள். இது எனக்கு ஒரு பஞ்சதந்திரக் கதையை ஞாபகமூட்டுகிறது.

"அந்தக் கதையைச் சொல்லுங்கள் அன்ரி." தங்கன் வலக்கையை உயர்த்தி வினாவினான்.
சரி சொல்கிறேன்.

'ஆற்றங் கரை. ஆலமரத்தின் கீழ்க் குந்தியிருந்தது புலி. வேட்டையாடவே முடியாத நகம் விழுந்த கிழட்டுப் புலி.
வழிப் போக்கன் பிராமணனைப் பார்த்து, 'நான் பஞ்சமாபாதகங்களை எல்லாம் துறந்து, மரக்கறி போசனம் உண்டு, ஆண்டவன் தியானத் திலிருந்து தருமஞ் செய்கிறேன். நீ ஆற்றில் நீராடிவிட்டு வா. நான் இந்த பொற்காப்புகளைத் தருகிறேன்" என்றது.
மகிழ்ச்சியில் பிராமணன் தலையை ஆட்டினான். ஆற்றில் இறங்கிக் குளித்துவிட்டு வந்து, புலி முன் நின்று, பொற் காப்பைப் பெற இரு கைகளையும் நீட்டினான். பல நாட்கள் பட்டினியில் தவித்த புலி பிராமணனைப் பிடித்துச் சாப்பிட்டு ஏப்பம் விட்டது." அது போன்றதே சிங்களவன் பஞ்சீலபோதனை.
அடுத்த வகுப்பில்மீதிக் கதை.

ஜெய்பூர் கால் பொருத்தி நான்கு தினங்கள் ஆகிவிட்டன.
மாலைஐந்து மணி.
நான் கூடாரத்துள் இருந்து கால்களைப் பொருத்திவிட்டு பிள்ளைகள் ஏன் இன்னும் வரவில்லை என்று யோசித்தேன். ஒரு செக்கன்கூட முடியவில்லை. எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக ஓட்டத்தில் வந்தனர்.

'வணக்கம் அன்ரி." ஒவ்வொருவரும் கூடாரத்துள் கால் வைக்கும் பொழுது கூறினர்.

'அன்ரி உங்கள் செயற்கைக் கால், தமிழ் பண்பாட்டை ஞாபகமூட்டும் சேலை. தலை அலங்காரம் நல்ல அழகாய் கவர்ச்சியாய் அமைந் திருக்குது." சிந்துசா. பேசும் பொழுது அவளின் தலை ஆட்டத்துக்கு ஏற்ப கண்கள் அசைந்து பேசின.

'அன்ரி, யார் உந்த செயற்கைக் கால் கண்டு பிடித்தது? யாழ்ப்பாணத்திலா?" கோமதி.
'இல்லை. கி.மு. 3000 ஆண்டுகளில் பாரதத்தில் இராணி ஒருவர் போர்க்களத்தில் காலை இழந்த பின்னர், இரும்பாலான பொய்க் கால் பாவித்தமை பற்றிய செய்தி றிக் வேத சுலோகத்தில் உண்டு.
அதைப் பற்றிப் பேசத் தொடங்கினால் எங்கள் தொடர் கதை இழுபடும்.அதனைஒருதனி வகுப் பில் சொல்கிறேன்."

இன்று தம்பி அண்ணர் யோகன் பற்றிய கதை. அவர் புளட் இயக்கத்தில் சேர்ந்து இந்தியாவில் புதுக்கோட்டை முகாமில் பயிற்சி எடுத்தார். இந்திய சமாதானப் படை ஈழம் வந்ததை அடுத்து, புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியிருந்த புளட் அமைப்புச் சுறுசுறுப்பாக இயங்கியது. அவ்வேளை வெளிநாடு ஒன்றில் அமைப்பு வேலையில் ஈடுபட் டிருந்த அண்ணர் யோகன் இலங்கை திரும்பினார்.
அதனை அடுத்து அவர் மட்டக்களப்பு புளட் பிரிவுக்குப் பொறுப்பாய்க் கருமமாற்றினார். இந்திய சமாதானப் படை ஆதரவுடன் இயங்கிய புளட், விடுதலைப் புலிகளை கொன்று ஒழிக்கும் செயல்களில் இறங்கியது.

மட்டக்களப்பில் புளட் மூன்று விடுதலைப் புலித் தலைவர்களைக் கொன்று அட்டகாசம் புரிந்தது. தொடர்ந்து ஆரயம்பதி, செங்கலடி பகுதிகளில் பயங்கர சண்டை. இருபகுதிகளுக்கு மிடையில் வெடித்தது. அண்ணர் யோகன் தலைமையில் புளட் போராளிகள் வீடுகளுள் புகுந்து தேடியும், பற்றைகளுள் பதுங்கியோரைத் தேடியும் பயங்கரமாய்ப் போர்புரிந்தனர். கிராமங்கள் குலைநடுங்கின. வெடி ஓசைகள் அங்கும் இங்கும் அதிர்ந்தன. போக்குவரத்து நின்று போனது. மனிதர்கள் வீடுகளுள் மறைந்து கொண்டனர்.
புளட்டின் அட்டகாசம் வெகுவிரைவில் புசு புசுத்துப் போனது. புலிகளின் கை ஓங்கியது. புளட் உறுப்பினர்களை துரத்திப் பிடித்து சுட்டு சந்திகளிலும், சந்தைகளிலும் வீசினர். செத்த சில புளட் தலைவர்கள் பெருஞ் சந்திகளில் தலைகீழாகத் தொங்கினர். பயந்து வெருண்ட உயிர் பிழைத்த புளட் உறுப்பினர்கள் பதுங்கி ஓடிச் சென்று இந்திய துருப்புகளின் முகாம்களிலும், காவல் நிலையங்களிலும் பாதுகாப்புத் தேடினர்.
புளட்-புலிகள் போரில் தம்பி அண்ணர் கொலை செய்யப்பட்டு, தலையில்லாத அவர் முண்டம் செங்கலடிச் சந்தியில் தொங்குவதாக செய்திகள் எனக்கு எட்டின.
அக் கொடூரச் செய்தி என் குருதியை உலுப்பியது. அவரது உடலைப் பார்க்கும் ஆவல் எழுந்து நின்று சதுர் ஆடியது. சகோதரபாசம் தலைவிரித்துக் கூச்சலிட்டது. பொறுக்க முடிய வில்லை. எனது வாகனத்தை எடுத்துகொண்டு சனசஞ்சாரமற்ற காட்டுப் பிரதேசத்துக்குப் பறந்து போனேன். வாய்விட்டுக் காடதிரக் கத்தினேன். ஒருமணி நேரம். யாராவது பார்த்திருந்தால் பதவியைப்பறித்து பங்கரில் போட்டிருப்பார்கள்.

தம்பி அண்ணர் யோகன் மட்டக்களப்புப் பொறுப்பாளராக விருந்த சமயம், அங்கு சென்று நான் பார்த்திருக்கலாம். விரும்பவில்லை. புலிகள் அமைப்பில் அதற்கெல்லாம் சிறிதும் இடமில்லை. ஏனைய இயக்க அங்கத்தவர்களுடன்---சகோதரமாயினும்---தொடர்பு கொள்வது துரோகமாக கருதப்பட்டது.

புலிகளின் உளவுப் பிரிவு இரண்டாம் நிலைத் தலைவர் பாண்டியன் ஒரு தினம் வினாவினார். 'சிவகாமி, உங்கள் தம்பி அண்ணர் யோகன் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியுமா?"
'அவர் மரணித்துவிட்டார்."
இல்லை."
இல்லையா?"
ஆம். பாலஸ்தீனத்தில். அப்படி என்றால் புலிகளின் எதிரி அவன். மண்டையில் போட வேணும்."
அது பெரிதாக உறைக்கவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. பாலஸ்தீனத்தில் பயிற்சி பெறுகிறார் என்ற செய்தி மட்டும் இதயத்தில் பதிவாகியது.
விரைவில் அவர் பற்றிய, புலிகளுக்குத் திகில் தரும் பயங்கரச் செய்திகள் கசிந்தன. அங்கு பி.எல்.ஓ. அமைப்பினரிடம் இராணுவபயிற்சியை முடித்துக்கொண்டு புளட் இயக்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் ஆதரவு திரட்டுவதாக.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை முன் எடுக்க ஸ்ரீலங்காவுக்கு அப்பால், இந்து சமுத்திரத்தில் ஒரு தளத்தை பெறவேண்டும் என்று யோகன் கருதினார். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான ஆயுதங்கள் எந்திரங்களை பத்திரப் படுத்தவும், கடத்தல் மூலம் பணம் திரட்டவும், சுதந்திரமான தளம் அமைக்க விரும்பினார். மேலும் புளட் அமைப்பின் தலைமையகத்தை அங்கு வைத்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுக்க விரும்பினார். விடுதலை புலிகள் மாற்று இயக்கங்களை ஒழிக்கக் கங்கணம்கட்டி நின்றமையும் இந்த எண்ணத்தை அண்ணர் மனதில் உருவாக்கியிருக்கலாம்.
குறிப்பாக மாலைதீவுக்குரிய ஒரு சிறு தீவை தன் கைக்குள் எடுப்பதே அண்ணர் யோகனின் நோக்கமாக விருந்தது. அதற்குச் சர்வதேச உதவியும், பணமும் தேவை. அந்த நோக்கத்தை நிறை வேற்றும்பணியைஅண்ணர் யோகன் மேற்கொண்டிருந்தார்.
அதன் பொருட்டு சர்வதேச மட்டத்தில் புளட் அமைப்புக்கு தொடர்புகளை ஏற்படுத்துவதில் ஈடுபட்டார். முயற்சி பெரும் பயன் அளித்தது. பாலஸ்தீன மக்கள் விடுதலை அமைப்பு, ரியூனிசிய கம்யூனிஸ் கட்சி, அல்ஜீரிய சமூக அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சி, பாலஸ்தீன ஐக்கியத்துக்கான துருக்கி இயக்கம், ஆபிரிக்க தேசியகாங்கிரஸ், மொறிசியஸ் இராணுவ இயக்கம், கியூபா கொம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றோடு நட்புறவுகளை ஏற்படுத்துவதில் வெற்றிகண்டார்.
அண்ணை யோகனின் இந்து சமுத்திரத்தில் நிரந்த சுதந்திரமான சிறு தீவைப் பெறும் முயற்சிக்குப் பாலஸ்தீனமக்கள் விடுதலை அமைப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. இல்லை பத்து மில்லியன் வழங்கியது என்ற செய்தியும் உண்டு.

அன்றைய சூழலில் மாலைதீவின் அரசியல் கொந்தளிப்பு, அங்கு ஒரு சிறு தீவைக் கைப்பற்ற வாய்ப்பளிப்பதைக் கண்டார். மாலைதீவு அதிபதி கையூமுக்கு எதிராக 1980, 1983 களில் சிறிய அளவில் சதிப் புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை புசுபுசுத்துப் போயின.

1988 இல் அண்ணர் யோகன் ஆவலோடு எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டியது. கையூமை ஆட்சியிலிருந்து கவிழ்க்க வேண்டும் என்று, இலங்கையில் பெருந்தோட்டங்களை உடையவரான, மாலைதீவுப் பிரசையான அப்துல்லா லுதுபி விரும்பினார். வணிகர். பெரும் செல்வந்தரும்கூட. அவரை அண்ணர் யோகன் அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்தார். சதிப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றினால், மாலைதீவில் ஒரு தீவு கொடுக்கச் சம்மதித்தார்.

மாலைதீவு வடக்குத் தெற்காக அமைந்த இருபத்தாறு தீவுகளைக் கொண்ட முஸ்லிம் நாடு. மூன்றே கால் இலட்சம் மக்களைக் கொண்ட மாலைதீவில், சில தீவுகளில் மனித சஞ்சாரமே இல்லை. கடற்பறவை, கடல் ஆமை வளம் நிறைந்தவை. அப்படியான மனித சஞ்சாரமற்ற கலன்தூ என்னும் சிறு தீவையே அண்ணர் யோகன் தெரிவு செய்தார். அப்துல்லா லுதுபிபணஉதவியும் செய்தார்.

அண்ணர் யோகன் அப்துல்லா லுதுபியோடு செய்து கொண்ட உடன்பாட்டை அடுத்து, மாலைதீவில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளை துப்பறிவோர் மூலம் அறிந்து கொண்டார். ஆரம்பத்தில் ஒருமுறை அங்கு சென்று இரண்டு கிழமைகள் ஹோட்டலில் தங்கியும் நின்றார். அதே வேளை சிறிய படைப் பிரிவினரை மாலை தீவுக்கு அனுப்பி தயார் நிலையில் வைத்துக்கொண்டார்.
மாலைதீவு சர்வாதிகாரியான கையூமுக்கு எதிராக சதிப்புரட்சி ஆரம்பமாகியது. இரண்டு பாரிய மீன்பிடிப் படகுகளில் 350 புளட் போராளிகளுடன் 1988; நவம்பர் 3ந் திகதி மாலைதீவை அடைந்தார்.
றொக்கட், கிறினேட் பாவித்து மாலைதீவு ராணுவத்தை விரைவில் முறியடித்தார். சுணக்கமில்லாமல் பிரதான கட்டிடங்கள், விமான நிலையம், துறைமுகம், தொலைக் காட்சி நிலையங்களைத் தமதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
பின்னர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தைத் தாக்கினர். வீடுமாறி வீடாக அபயம் தேடி ஓடினார். யோகனால் பிடிக்க முடியவில்லை.
அதிர்ச்சி அடைந்த மாலைதீவுஅரசு உதவி கோரி அமெரிக்கா, இந்தியா, பெரிய பிரித்தானியாவுக்கு அவசர செய்திகள் அனுப்பியது. அபாய உதவிக் கோரிக்கைக்கு இந்தியாதான் முதலில் பதில் அளித்தது.
பிரதமர் ராஜீவ் காந்தி உடனடியாக 1,600 ஆகாய விமானப் படைவீரர்களை அனுப்பினார். நாகதாளி போராட்டம் என நாமகரணம் செய்யப்பட்ட பரசூட் படை. இடையில் தங்காமல் 1240 மைல்கள் பறந்து மலே சர்வதேச விமான தளத்தில் தரை இறங்கியது. உதவி கோரிப் பன்னிரண்டு மணித்தியாலங்களுள் படைபோய்ச் சேர்ந்தது.

இந்திய விமானப் படை தாமதமின்றி ஆகாய விமானத்தளத்தைக் கைப்பற்றி முன்னேறி அதிபதி கையூமை மீட்டெடுத்தது.
விமானப் படையினர் நாலாபக்கமும் முன்னேறினர். புளட்தரப்பில் இருவர் மாண்டனர். பலருக்குத் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள்.
இந்திய உதவி வந்ததை அறிந்ததும் யோகன் பின் வாங்க முடிவு செய்தார். துறைமுகத்துக்குத் திரும்பினார்கள். உடனடியாக கப்பல் ஏற முடியவில்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் ஏலவே வந்த கப்பல்கள் திரும்பிப் போய்விட்டன. மாலைதீவுக் கப்பலான எம்.வி. புறோகிறஸ் லைட்டைக் கைப்பற்றி நள்ளிரவு புறப்பட்டார்கள். இன்னொரு பிரிவினர் றப்பர் டிங்கியைக் கைப்பற்றித் தப்பிப் பிரயாணித்தனர். அவர்கள் சிறிது தூரத்துள் இந்திய படையினரிடம் சிக்கிக் கொண்டார்கள்.

புளட் உறுப்பினர்கள் கப்பலில் திரும்பும் பொழுது சிறு எண்ணிக்கையினரைப் பணயக் கைதிகளாய்ப் பிடித்து வைத்திருந்தனர். அவர்களுள் அமைச்சர் அகமட் முஸ்தப்பாவும் அவரது  மனைவியும் அடங்கும். இந்திய படைகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் கப்பலைச் செலுத்தினர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற் பிராந்தியத்தை அடுத்த நாள் காலை அடைந்தனர்.
இந்திய கடற்படைக் கப்பல் இந்திய துறைமுகம் ஒன்றுக்கு செலுத்தும்படி எச்சரித்தது. யோகன் இலங்கையில் புளட் தலைமைய கத்துடன் தொடர்பு கொண்டார். 'பயணக் கைதி ஒருவரைக் கொன்று சடலத்தைக் கடலில் வீசவும்," என்ற பதில் கிடைத்தது. அவ்வாறே செய்தனர்.
இந்திய படையினர் பெரிய துப்பாக்கிகள் கொண்டு தாக்கத் தொடங்கினர்.
புளட் அமைப்பினர் வெள்ளைக் கொடியை உயர்த்தினார்கள். யாவரும் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கைப்பற்றிய புளட் உறுப்பினர்களை அடுத்தஆண்டுமாலைதீவு அரசிடம் இந்தியா ஒப்படைத்தது. நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. இந்திய தலையீட்டினால் அதிபதி கையூம் ஆயுள் தண்டனையாக மாற்றினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பட்டியலில் அண்ணர் யோகனின் பெயர் காணப்படவில்லை. இயக்கத்தில் செல்வராகவன் என்ற பெயரிலேயே செயற்பட்டார். அப்பெயரும் அந்த பட்டியலில் இல்லை.
இந்தியா கைப்பற்றியவர்கள் பெயரை வெளியிட்டது. அதிலும் செல்வராகவன் என்ற பெயர் இல்லை.அவரதுமறைவுபற்றிய எந்தத் தகவலையும் புளட் இயக்கத்திடம் பெற முடியவில்லை. மாலைதீவு தோல்வியின் பின்னர் அண்ணர் யோகன் புளட்டின் இந்திய முகாம் ஒன்றில் காணப்பட்டார் என்பதற்கு சாட்சியம் உண்டு. மறைவு கடைசிவரை மர்மமாகவே உள்ளது.

கதை கூறும் வகுப்பு முடிந்து பிள்ளைகள் போய்க்கொண்டிருந்தனர். கேற் ஓரம் நின்ற சுசீலா அக்கா தலையைத் தொங்கப் போட்டபடி மெதுவாக உள்ளே நடந்து வந்தார்.
என்ன சுசீலா அக்கா இன்றைக்கு பொழுதுபடுகிற வேளை. முகம் பயந்து கறுத்து வாடியிருக்குது. அந்த ஆமிக்காரன் குலசேகர தொல்லை தாறானோ?”
ஓம் சிவகாமி. அவன் குலசேகராவும் கூட்டாளிகளும் மகள் ராணியை வம்பு பண்ணப் பாத்திருக்கிறான்கள். கடவுள் காப்பாற்றினது. நல்லவேளை தப்பி ஓடிவந்திட்டாள்.
சில ஆமிக்காரன்கள் கல்யாணம் பண்ண தமிழ் குமர்களைத் தேடி அலையுறான்கள். சில ஆமிக்காரன்கள் வல்லறுவுக்கு அழகான இளம் குமர்களைத் துரத்துறான்கள். குலசேகர அப்படி ஆள் என்று பண்டா சொன்னவர். கவனம் என்றவர். உந்த நச்சு மிருகங்களின் வலையில் சிக்கினால் போதும். கைதடி காவல்நிலையத்தில் சுண்டிக்குளிப் பெண்கள் பாடசாலை பதினெட்டு வயது மாணவி கிரிசாந்திக்கு செய்த மாதிரி-ஆறு நச்சுப் புடையன்கள் வம்பு பண்ணிப்போட்டு சாட்சி சொல்லாமல் சுட்டுப் புதைச்சவங்கள்---1996;. பொஸ்னியாவில் இராணுவ வல்லுறவுக்கு ஆளான பெண்கள் உயிருடன் இருந்து சாட்சியம் அளிக்கிறார்கள். இங்கே வல்லுறவுக்கு ஆளானவர்களை இராணுவம் உயிர்வாழ விடுவதில்லை. மனிதவுரிமை நிறுவனங்கள் கிண்டிக்கிளறி ஆர்ப்பாட்டம் செய்யும் என்ற பயம்.
திருகோணமலை குமரபுரத்தில் இராணுவம் பதிளேழு வயது தர்மலெட்சுமியை, இழுத்துப் போய் அருகில் குமரபுரத்தில் பால்நிலையத்தில் வைத்து கெடுத்துப் போட்டு சுட்டுக்கொன்றவன்கள். தர்மலெட்சுமி அயலவரின் மகன் அந்தோனி யோசப்பை கிளிவெட்டியில் ரியூசன் முடிந்து பைசிக்கிலில் ஏற்றி வந்தவள். அவள் ஏற்றி வந்த சிறுபையனையும், சாட்சியம் கூறுவதைத் தவிர்க்க, சுட்டுக்கொனறனர்.

புங்குடுதீவில் பதினைந்து வயது இளையதம்பி தர்சினியை மிருகத்தனமாகக் கெடுத்துப்போட்டு, கல்லோடு கட்டி நேவி முகாம் அருகே உள்ள பாழுங் கிணற்றுள் போட்டவன்கள்---2005.
1982ஆம் ஆண்டு பிறந்த இசைப்பிரியா எனப்படும் சோபா  வேம்படி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையில் படித்தவர். இடம் பெயர்ந்து வன்னியில் வாழும் வேளை புலிகள் அமைப்பில் சேர்ந்தவர். நடனத்தில் பாண்டித்தியம் பெற்ற இவர் ஊடகவியலாளராகவும், புலிகளின் வானொலிப் பேச்சாளராகவும் புகழ் பெற்றவர். இறுதிக் கட்டத்தில் இடம் மாறும் வைத்தியசாலையில் தொண்டராகப் பணியாற்றிய இசைப்பிரியா, போர் முடிவில் இராணுவத்திடம் சரணாகதி அடைந்தவர்---2009. பிரித்தானிய வானொலியான சனல்4, 'நோ ஃபயர் ஷோன் ' என்ற குறும் படத்தில், இசைப்பிரியா கைகள் கட்டப்பட்ட நிலையில் பச்சை மேனியோடு இராணுவத்தினர் கொடுமைப்படுத்துவதை உலகிற்கு சாட்சியமாக வைத்து, போர் முடிவில் சரணாகதியான அவர் இராணுவ கொடுமைகளுக்கு ஆளாகி பின்னர் கொல்லப்பட்டார் என்பதைப் பகிரங்கப்படுத்தியது.

சிங்கள ராணுவம் மட்டுமல்ல, சிங்களப் பொலிசாரும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. முப்பத்தைந்து வயது நான்கு பிள்ளைகளின் தாய் கோணேஸ்வரி முருகேசபிள்ளை மட்டக்களப்பு, அம்பாரையில் ஐந்து சிங்களப் பொலிசாரினால் நாசமாக்கப்பட்டார். அது போதாது என்று அந்த கொடிய அரக்கர்கள், அந்த மாதின் மர்மதானத்தில் கைக்குண்டை வைத்து வெடிக்கச் செய்தனர்---மே 17, 1997. இவர்கள் தாங்கள் வங்கத்து விலங்கின் வாரிசுகள் என்பதை வரலாற்றில்மிண்டும் பதிவுசெய்கின்றனர்.

இங்கு சொல்கின்ற அவலச் செய்திகளும் இன்னும் பல்வேறு அக்கிரமச் செயல்களும் யுஅநௌவல ஐவெநசயெவழையெட போன்ற மனித உரிமை நிறுவனங்களால் விலாவாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன
ஆமியின் கொடுமை இசைப்பிரியாவுடன் முடிந்துபோன கதையாய் இல்லை.
வன்னியில் குமர்கள், விதவைகள் பூனையைப் பார்க்கும் சுண்டெலிமாதிரி அஞ்சி நடுங்கி வாழ்கின்றனர். கவனம் சுசீலா அக்கா. உந்த ஆமிக்கு நல்ல பாடம் புகட்ட அண்ணை இல்லை. உவன்களுக்கு கிளைமோர் சுமந்து வெடித்து பாடம் புகட்டாவிட்டால்திருந்தமாட்டான்கள்.
அதுதான் சிவகாமி உன்னட்டை ஆலோசனை கேட்க வந்தனான்.
அக்கா, இப்ப ராணி எங்கே?"
சுகந்தி வீட்டிலே விட்டுப் போட்டு வந்தனான். விசாரணை என்று சொல்லி சாமத்திலே வருவான்கள். எங்கள் வீட்டில் இல்லாவிட்டால் அயலட்டையில் அதட்டி அதட்டடித் தேடுவான்கள். இரவில் ஜீப் அசுகை தெரிந்தால், பின்னுக்குக் காடு. ஓடி ஒளித்திடலாம். நான் இரவைக்கு வீட்டுக்கு போகவில்லை. உன்னோடுதான் தங்கப் போகிறன், மாட்டுக் கொட்டிலில்.
சுசீலா அக்கா, நச்சுப் புடையன்கள் கண் வைச்சிட்டாங்கள் இனி வீட்டிலே வைத்திருக்கிறது பயம். யாழ்ப்பாணத்தில் பெண்கள் போடிங் பாடசாலையில் சேர்த்துவிடு அக்கா.
அதுக்கு என்னட்டைஏதுவழி?”


நான் அந்த பொறுப்பை ஏற்கிறன். நாளைக்கு மணிஅண்ணையைiயும் கூட்டிக்கொண்டு, யாழ்ப்பாணம் போங்க.ஹின்டு லேடீஸ் கொலிஜில் சேர்க்கலாம். நல்ல கட்டுப்பாடு. நல்ல படிப்பு. நல்ல பாதுகாப்பு.

~~~ தொடரும்... ~~~

1 comment:

  1. விபரிப்பு அழகாய் கதை அல்ல நிஜம் எனலாம்!

    ReplyDelete