கோழித்தூக்கம்
போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக்
காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும்
சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி
முக்கிய ஒரு சடப்பொருள் - கட்டில்.
"என்ன நடந்தது
சுந்தர்? என்ன நடந்தது?"
விழுந்து கிடந்தபடியே ராமநாதன்
கத்தினான்.
"ஏதோ 'றோ மில்லு'க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!" இன்னமும்
பயந்தபடியே முணுமுணுத்தான் சுந்தர்.
றோ மில்லைச் (Raw
Mill) சுற்றி புகை கிழம்பிக்
கொண்டிருந்தது. இரண்டு பேரும் புகைமூட்டத்தினுள் சிக்கினார்கள். ஒவ்வொன்றாகத்
தூரத்தே எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் மெல்ல அணைந்து தொழிற்சாலை இருளாகியது. 'சைரன்' மூன்று முறை கூவியது.
"நான் ஒருக்காப்
போய் இஞ்சினியருக்கும் போமனுக்கும் சொல்லிப் போட்டு வாறன்" சுந்தர் படிகளினின்றும்
கீழே இறங்கினான்.
விழுந்து கிடந்த
ராமநாதன் - எழுந்து என் மீது படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு
மீண்டும் குந்தினான்.
சற்று நேரத்தில்
இஞ்சினியரும் போமனும் வேறும் சிலரும்
கதைத்துக் கிழித்தபடியே துடுக்குத் துடுக்கு என்று படிகளில் ஏறி வந்தார்கள்.
உள்ளே றோ மில் வெடித்திருக்க, வெளிப்புறத்தைச்
சுற்றி ரோச் லைற்றை அடித்துத் துருவித் துருவித் தடவினார்கள். ராமநாதனும்
சுந்தரும் கை கட்டிய படியே அவர்களின் பின்னால் சுற்றினார்கள். இஞ்சினியர் ஏதோ
இங்கிலிஷில் வெளுத்துக் கட்ட போர்மன் 'ஆ... ஆ...' என்றார்.
"பெயரிங் (Bearing)
போயிட்டுது போல கிடக்கு!"
இஞ்சினியர் சொல்ல, "மனேஜருக்கு
சொல்லிட்டியளோ?" என்றார்
போர்மன்.
"ஆருக்குத்
தெரியும். என்ன வெடிச்சதெண்டு. ஒரு ஊகம்தான். பெயரிங் பெயில்யர் ஆகியிருக்கலாம்
எண்டு சொன்னனான். அது சரி இப்ப மணி என்ன ஆகுது?"
"விடியப்புறம்
நாலு மணியாப் போச்சு."
"விடிய ஆறு மணி
மட்டிலை மனேஜர் வாறதெண்டு சொன்னவர். அதுக்கிடையிலை ஸ்ரோரிலை இருக்கிற நாலு
பெயரிங்கையும் எடுத்துக் கொண்டு வந்து மேலுக்கு வைக்க வேணும். ஒவ்வொண்டும் பிணம்
கனம் இருக்குமெண்டுதான்" இஞ்சினியர் சொல்லி முடிப்பதற்குள்,
"தம்பியவை
ஸ்ரோரிலை போய், ஸ்ரோர் கீப்பர்
மணியத்திட்ட நான் சொன்னதெண்டு சொல்லி றோ மில்லின்ர நாலு பெயரிங்கையும் எடுத்துக்
கொண்டு வாங்கோ. சரியான பாரமா இருக்கும். எங்கையும் போட்டுக் கீட்டு உடைச்சுப்
போடாதயுங்கோ. மற்றது சுந்தரும் ராமநாதனும் 'அவுட்' பண்ணி
வீட்டை போயிடாதையுங்கோ. ஆக்கள் தேவை வரும்" என்று அதிகார தோரணையில் போர்மன்
சொன்னார்.
அதுவரையும்
பேசாமடந்தையாக நின்றவர்கள், இஞ்சினியரும்
போர்மனும் கீழிறங்கிப் போனவுடன் வளவளவென்று கதைக்கத் தொடங்கினார்கள்.
"என்னடாப்பா?
நல்ல 'பெட்' ஒண்டு
வைச்சிருக்கிறியள்" வந்தவர்களில் ஒண்றிரண்டு பேர் என் மீது துள்ளி
இருந்தார்கள். நான் பாரம் தாங்க மாட்டாமல் கிரீச்சிட்டேன். "என்ன பிறாண்ட்
இது. நியூ மொடல் போல கிடக்கு. ஒரு பத்தாயிரம் பெறுமோ?" என்று நையாண்டி செய்தார்கள். எனக்கும் இந்த அரைக்கும்
இயந்திரமான 'றோ மில்லு'க்கும் ஆறு வருஷப் பழக்கம். தொழிற்சாலை கட்டி
முடிந்த நாள் முதலாக இங்குதான் என்னுடைய இருப்பு. இந்த நாலு மாடிக் கட்டிடத்தின்
உச்சியில் ஒரு கம்பீரமான ராஜா போல வீற்றிருப்பதே ஒரு விசித்திரமான அனுபவந்தான்.
இந்த செக்ஷனில் வேலை செய்பவர்களின் சாப்பாட்டிடம், விளையாட்டிடம், படுக்கை எல்லாம் நான்தான். அவர்களின் மகிழ்ச்சி, துக்கம், இரகசியம் எல்லாவற்றிலும் நானும் சமபங்கு கொண்டிருக்கின்றேன்.
கீழே காலைத் தேநீர்
எடுக்கப் போயிருந்த ராமநாதன் பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி மேலே படியேறி வருகின்றான்.
"யூக்கிலிட்டே
யூக்கிலிட்டே வா வா
பாறாங்கல்லை ஏத்திக் கொண்டு வா வா"
அவன் முன்பு 'கிறஷரிலை' வேலை செய்தவன். 'குவாறி'யில்
இருந்து 'யூக்கிலிட்' ஏற்றி வரும் கல்லுகளை கிறஷரிற்குள் போடுவது
அவன் வேலை. தனது பழைய நினைவுகளை சினிமாப் பாட்டுப் பாணிக்கு மாத்திப் பாடுவான்.
அபூர்வமாக எப்போதாவது இப்படி இயந்திரங்கள் உடைபடுவதால் நீண்ட நேரம் 'ஓவர் ரைமுடன்' ஓய்வு கிடைக்கும் என்பதில் அவனுக்குக் குஷி. தேநீரை என்
மீது கொட்டிச் சிந்தி துள்ளிக் குதித்துப் பாடினார்கள். அவன் தேநீருடன் சுடச்சுட
இன்னுமொரு சுவையான செய்தியையும் எடுத்து வந்திருந்தான்.
"ஸ்ரோர் றூமில்
நாலு பெயரிங்கையும் காணேல்லையாம்!"
அந்த மகிழ்ச்சிகரமான
செய்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மனேஜர் தனது வண்டியையும் தொந்தியையும் தூக்கிக் கொண்டு ஒரு யானை அசைவது போல
அசைந்து, புஸ் புஸ் என்று இரைந்து
நாலாவது ஃளோரினுள் காலடி எடுத்து
வைத்தார்.
"யூக்கிலிட்டே
யூக்கிலிட்டே வா வா
பாறாங்கல்லை ஏத்திக் கொண்டு வா வா
வரும்போது கவனமாக வா வா
யூக்கிலிட்டே யூக்கிலிட்டே வா வா"
'வரும்போது கவனமாக வா
வா' என்று அவர்கள் பாடிக்
கொண்டிருக்கும் போது - வாசலில் கிடந்த கதிரையுடன் இடறுப்பட்டு பட்டு விழுந்தார்
மனேஜர். தொழிலாளர்களின் 'பைலா'
அவருக்குக் கோபத்தையூட்டியது.
"இதென்ன ஒரே
டஸ்ற்றாக் கிடக்கு. உங்கட கண்ணுக்கு இதொண்டும் தெரியேல்லையோ? கெதியிலை கிளீன் பண்ணுங்கோ' சொல்லிக் கொண்டே றோ மில்லுக்குக் கிட்டப்
போனார். ராமநாதனையும் சுந்தரையும் தவிர மிச்ச எல்லாரும் மடமடவென்று நழுவிக் கீழே
ஓடினார்கள். 'லடர்' ஒன்றை றோ மில்லிற்கு அருகாக அணைத்து அதன் மீது
ஏறி றோ மில்லின் உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே கையை நுழைத்து ஏதோ ஒன்றைத் தட்டி
விட்டார். அது சத்தம் போட்டுக் கொண்டு உள்ளே விழுந்து மேலும் புழுதியைக் கிழப்பிற்று.
சற்று நேரத்தில்
ஸ்ரோர் கீப்பர் மணியம் பதகளித்தபடியே வந்தார். மனேஜர் தாறுமாறாக அவரைப் பேசினார்.
கைகளைக் மார்புக்குக் குறுக்கே கட்டி அழுவாரைப் போல நின்றார் மணியம்.
"ஒரு நாளையின்ர ஃபக்டரி புறடக்ஷன் என்னெண்டு உமக்குத்
தெரியுந்தானே! நாலு வருஷமா என்னெண்டுகாணும் கணக்கெடுப்பு நடத்தினனீர்?"
"சேர் குறை
நினையாதையுங்கோ. எனக்கு முன்னுக்கிருந்த ஸ்ரோர் கீப்பரும் பெயரிங்கிற்கு நேரை
ஸ்ரொக் சரியெண்டு ரிக் பண்ணியிருந்தார். நானும் அதைப் பாத்திட்டு இவ்வளவு நாளும்
செய்து போட்டன் சேர்."
"அவர் செய்ததைப்
பாத்து நீரும் செய்யிறதுக்கு உமக்கு ஒரு சம்பளம் தரவேணுமோ? ஒரு பெயரிங் கிட்டத்தட்ட நாப்பதாயிரம் மட்டிலை வரும்.
ஜேர்மன் புறடக்ற்.
நாளைக்கு ஜெனரல்
மனேஜர் கொழும்பிலையிருந்து 'ஃளைற்'றிலை வாறார். அவருக்கு உம்முடைய நாடகத்தை
நடிச்சுக் காட்டிப் போட்டு, வீட்டிலை
போய் இருந்து றிலக்ஸ் பண்ணும்."
"ஐயோ அப்பிடிச்
செய்து போடாதையுங்கோ சேர். நான் பிள்ளை குட்டிக்காரன் சேர். எங்களுக்கெண்டு ஒரு
பிரச்சினை வரேக்கை நீங்கள்தான் சேர் 'பெயரிங்'காகாக இருந்து
எங்களைத் தாங்கிப் பிடிக்க வேணும்"
ஸ்ரோர் கீப்பர்
அங்குமிங்கும் பார்த்தார். சடாரென மனேஜரின் காலில் விழுந்தார்.
"சரீ சரி. நான்
வெண்டு தாறன். நீர் போய் ஒருக்கா •போர்மன்
குணரத்தினத்தை ஒருக்கா வரச் சொல்லும்" என்றார் மனேஜர். மனேஜர் 'வெண்டு தாறன்' என்றால் மறைமுகமாக அவரின் வேலை காலி என்பது
அர்த்தமாகும்.
மனேஜரைப் போன்று இரண்டு
பங்கு பருமனுடைய ஃபோர்மன்
குணரத்தினம் விசுக்கென்று வந்தார். தன்னை மனேஜர் கூப்பிடுவது என்றால் ஏதோ பெரிய
சங்கதியாகத்தான் இருக்கும் என்ற நோக்கில் - வரும்போது அலவாங்கு ஒன்றையும் கூடவே
எடுத்து வந்தார். இரண்டு பேரும் லடரில் ஏறி, அலவாங்கை ஜன்னலிற்குள்ளால் தள்ளி 'றோ மில்'லை உசிப்பினார்கள். லடரும் விழுந்து மனேஜரும் ஃபோர்மனும் ஆளாளுக்கு மேல் விழுந்து ஐயோ'
என்றார்கள். சுந்தரும் ராமனாதனும்
சிரிப்பை அடக்கத்தான் நினைத்தார்கள். அது அடங்கினால்தானே!
இரண்டு பேருக்கும்
பேச்சு விழுந்தது.
"உதென்னடா உதிலை
கிடக்கிறது?"
"கட்டில்
சேர்!"
"எத்தினை நாளா
உந்தக் கோதாரி உதிலை கிடக்கு?"
"ஃபக்டரி
துடங்கின நாளிலையிருந்து கிடக்குது சேர்."
"நாளைக்கு
ஜெனரல் மனேஜர் வாறார். எல்லாருக்கும் இனி எத்தினை நாளைக்குச் சம்பளம் இல்லையோ
தெரியாது. ஸ்ரோர் கீப்பருக்கும் வேலை காலி. உந்த லட்சணத்திலை இதிலை ஒரு கட்டில்
முழுவியளமாக் கிடந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார். உதிலை என்ன படுத்து
எழும்புறியோ எண்டுதான் கேப்பார். கெதியிலை உந்த நாசங்கட்டைத் தூக்கி எறிஞ்சு போட
வேணும் தெரிஞ்சுதோ?"
"ஓம். ஓம் சேர்.
உடனை எறியிறம் சேர்"
தூக்கி எறியச்
சொன்னதும் என் நெஞ்சு திக்கென்றது. இவ்வளவு காலமும் என்னை எத்தினையோ
தேவைகளுக்காகப் பாவித்தார்கள். மனேஜர் சொன்னதும் ஒரு மறுப்பும் தெரிவிக்காமல்
என்னைத் தூக்கி எறிய உடன்பட்டுவிட்டார்களே! என்ன மனிதர்கள் இவர்கள்?
மனேஜரும் ஃபோர்மனும் நொண்டிக் கொண்டே கீழே இறங்கினார்கள்.
சுந்தர் என்னுடைய
தலையைக் கழற்றி சுவருடன் சாத்தினான்.
" 'கெட் போர்ட்'
நல்லா இருக்கு. நான் வீட்டை கொண்டு போகப்
போறன்."
'மற்றெஷை'க் குற இழுவையாக இழுத்து சுவருடன் சாத்திக்
கீழே தள்ளினார்கள். 'உய்ங்'
என்றபடியே கீழே போய் விழுந்தேன்.
"எடேய்
ஆற்றையேன் தலையிலை விழுந்து செத்துக் கித்துப் போகப் போறான்களடா. கவனமாப்
போடுங்கோ" மூன்றாவது 'ஃபுளோர்'
தாண்டிய நிலையில் மேலே இவர்களைப்
பார்த்துக் கத்தினார் மனேஜர்.
"ராமனாதன்,
ப்ளைவூட் பலகையும் நல்லா இருக்கு.
இதுவும் என்னத்துக்கேன் உதவும்."
"சுந்தர்,
இதென்ன கட்டிலின்ரை நாலு காலுக்கும்
பதிலா நாலு பெட்டியள் கிடக்கு. சரியான பாரமாக் கிடக்கு. நீயும் வந்து பிடி."
எனது கால்களில் ஒன்றை
மேல்மூச்சுக் கீழ்மூச்சுத் தள்ள, சுவரின்
மேல் தூக்கி நிறுத்தினார்கள். பின் அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரே தள்ளு. நான்
அதல பாதாளத்திற்குள் போய் விழுந்து சிதறுண்டு கணீரென்று ஓசை எழுப்பினேன். என்
பாகங்கள் வெடித்து நாலாபக்கமும் சிதறின. இரண்டாவது 'ஃபுளோரில்' நின்ற மனேஜரும் போர்மனும் எட்டி கீழே என்னைப் பார்த்தார்கள். ஒரு
நிமிஷந்தான். கத்திக் கொண்டே மனேஜர் வெறி பிடித்தவர் போல மேலே ஓடி வந்தார்.
"நிப்பாட்டுங்கோடா.
எறியாதையுங்கோ" கத்திக் கொண்டு மனேஜர் வரும்போது எனது அடுத்த கால் சுவர் மீது
அந்தரத்தில் ஊசலாடியது.. மனேஜர் கத்திய சத்தத்தில் பயந்துபோய் அதையும் கீழே தள்ளி
விட்டார்கள்.
பயத்தினால்
அசைந்தோடும் யானைபோல வந்த மனேஜர், குனிந்து
அந்தப் பெட்டியில் எழுதிக் கிடந்ததை வாசித்தார். அதன்பிறகு வந்த சிரிப்பை அவரால்
அடக்க முடியவில்லை.
"இதுதானடாப்பா
அந்த பெயரிங். நல்ல காலம். இரண்டு பெயரிங் எண்டாலும் கிடைச்சுது."
மல்லிகை (தை 2009)
மல்லிகை (தை 2009)
No comments:
Post a Comment