Monday, 2 February 2015

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 15 - சுதந்திரப் பாதை

ஆரியரத்தின தொலை பேசியை எடுத்து மனைவி நிர்மாலிக்கு விசயத்தைக் கூறினார். சித்தப்பா சிவநேசன் குடும்பத்தின் அஸ்தி ஆயிலடிக்குக் கொண்டு சென்ற சமயம் முல்லையுடனும் பாவலனுடனும் நெருக்கமாய்ப் பழகியவர். அவர்கள் மீது அலாதி பிரியம் காட்டியவர். விடயத்தை அறிந்ததும் பதைபதைத்துப் போனார்.

ஆரியரத்தின இருவரையும் அழைத்துக்கொண்டு அலுவலக பின் கதவால் தனது வாகனத்தில் வீடு சென்றார்.
வீட்டை அடைந்ததும் ஆரியரத்தினவின் மனைவி முல்லையையும் பாவலனையும் கட்டி அணைத்து, முத்தமிட்டு அழைத்துச் சென்றார். 'பயப்படாதையுங்கள். மாத்தையா தன்னாலான உதவியைச் செய்வார். உங்கள் அப்பா அம்மா வெளியே வரும் மட்டும் நான் உங்களைக் கவனிப்பேன். என்னோடு தங்குங்கள். கலங்காதையுங்கள்."

முல்லையும் பாவலனும் வருவார்கள் என்று சடகோபன் மாமா நண்பகல் வரை எதிர்பார்த்தார். வரவில்லை. எழுந்து ஹோட்டலுக்குப் போய்விட்டார்.
ஒரு மணி நேரம் கழித்து அவருக்கு போன் வந்திருப்பதாக சேவகன் அழைத்தான். ஓடிப்போனார். 'மாமா நீங்கள் ஆயிலடிக்குத் திரும்புங்கள். நாங்கள் பின்னர் வருகிறோம். உங்கள் உதவி தேவையானால் கடிதம் எழுதுகிறேன்." முல்லை.
ஆரியரத்தின என்ன சொன்னவர்?"
ஒன்றும் சொல்லவில்லை. அவர் தன்னால் ஆன மட்டும் முயற்சிப்பார்.அதுமட்டும் எனக்குப் புரிகிறது."

அன்று மாலை ஆரியரத்தின அண்ணன் நாணயக்காராவை அவரதுவீட்டில் சந்தித்தார். விடயங்களை விபரமாக விளக்கினார்.
 ‘அண்ணை, மூன்று மாத முடிவில் மற்ற ஆறு பேரையும் விடுவித்துள்ளீர்கள். அதுபோல இருவரையும் விடுவியுங்கள்."
அவர்களுக்கு ஒவ்வொரு பிள்ளை பயங்கரவாத அமைப்புகளில். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்."
பிள்ளைகள் ஒளித்து ஓடுவதற்கு பெற்றார் என்ன செய்ய முடியும்? சிறிய தகப்பன் சிவநேசன் குடும்பம் எரிந்து மாண்ட ஆத்திரத்தில் ஓடியிருக்கிறார்கள். கலவரத்தை அடுத்து ஓடியவேளை மூத்த பையனுக்கு பதினைந்து வயது. பெற்றார் எவராவது கொலைக்களத்துக்குப் பிள்ளைகளை அனுப்புவார்களா? 1983 கலகம் தமிழ் இளைஞரைப் பைத்தியமாக்கி இருக்குது. பழிக்கு பழி வாங்கத் துடிக்கிறார்கள். அதற்கு பெற்றாரை அடைத்து வைத்துத் துன்புறுத்துவது நியாயமா?"
தம்பி நீ ஒரு பக்கத்தைப் பார்க்கிறாய். மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொன்றிருக்கிறார்கள்."
'யாரோ கொன்றிருக்கிறார்கள். அதற்கு அப்பாவிகளை ஏன் அடைத்து வைத்துத் துன்புறுத்த வேண்டும்?"
இது பயங்கரவாதம். வேறு நாடுகளில் பாரிய சேதம் உண்டாக்கியுள்ளது. ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உடைந்து சிதறியுள்ளன. இந்தியாவும் தப்பவில்லை. இலங்கையில் இப்பதான் முளைத்திருக்குது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தம்பி, அப்பாவிகளையும் கொடுமைப் படுத்தினால்தான் இளைஞர்கள் அடங்குவார்கள்."
அண்ணை, நாங்கள் புத்த மதத்தவர்கள். கருணை காட்டாவிட்டாலும் நியாயம் செய்ய வேணும். இருவருக்கும் கொலைகளில் பங்கு உள்ளது என்று நம்புகிறீர்களா? அல்லது தெரியும் என்று நம்புகிறீர்களா? அந்த பெரியவர் ஐந்து நாட்களாக வயலில் விதைப்பு. வீட்டுக்கே வரவில்லை."
எல்லாம் விசாரித்து அறிந்துள்ளோம். அவரில் சுமத்த குற்றம் இல்லை. இது பயங்கரவாதம் சம்பந்தமானது. சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு பயங்கரத்தை தமிழர் மத்தியில் விதைக்க வேண்டியிருக்கிறது. பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால்தான் ஒழிக்க முடியும். வேறு வழியில்லை. என்னுடைய சூழ்நிலை அது.புரிந்துகொள்."
அப்படியானால் அது பாவம் அண்ணை. பரம்பரை பரம்பரையாக வருத்தும். எங்களுக்குத் தெளிவான பாரம்பரியமிருக்கு அண்ணை. நச்சுப் பாம்பு தேடி வீடு வந்தாலும் அடிக்க மாட்டோம். பாவம் பழிக்கு அஞ்சி. பாவத்துக்கு அஞ்சி பொரிப்பதற்காக கோழிமுட்டைகூட வீட்டுள் வைத்து நாம் உடைப்பதில்லை."
ஆரியரத்தினவின் வாதம் அண்ணன் நாணயக்காரவின் உள்ளத்தில் சுர்ரென்று ஏறியது. மனதில் கிலேசத்தை தூவியது.
தம்பி, நீ அரசசேவகன். பெரிய பதவி. நான் உன் அண்ணன்.பெரிய பதவி. நான் அவர்களை வெளியே விட்டால், நாம் இருவரும் சேர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கதை பரப்புவார்கள். கதிரையால் இறக்கி தாம் ஏறிக் குந்த வீணீர் வடிக்கிறார்கள். பத்திரிகைள் கிழிக்கும். சிங்கள சமூகம் கூச்சல் போடும். எங்கள் பதவிகளுக்கும் ஆபத்து."
நன்றாகப் புரிகிறது அண்ணை. சட்ட வரம்பை மீறி விடுதலை செய்யும்படி கட்டாயப் படுத்த வில்லை. சட்ட வரம்புக்குள் நின்று உதவுங்கள். குற்றவாளிகள் அல்ல என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள். சட்டமும் அதையே பேசுகிறது."
அதைப்பற்றி நான் சிந்திக்கிறேன். நீ இப்போ புறப்படு. மந்திரியாரின் மூன்று மாத கால எல்லை முடிய இன்னும் இரண்டு மாதம் பதினாறு நாட்கள். அதுவரை என்னால் எதுவும் செய்யமுடியாது. அதன்பின்னர் யோசிப்போம்."
ஆரியரத்தினகவலைவழியஅண்ணனைப்பார்த்தார்.
எழும்பு தம்பி. பயங்கர வாதத்தைத் தலைதூக்க விட்டால் சிங்கள சமூகத்தை பூண்டோடு அழித்துப் போடும். சோழ மன்னர், கலிங்க மாகன் செய்த கொடுமை அட்டூழியம் தெரியுமெல்லே? தமிழரின் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டச் செய்கிற சின்ன சங்கதி தான் அவர்கள் சிறை."

இரண்டாவதுமூன்றுமாதம் அடுத்த தினம் முடிகிறது.

ஆரியரத்தினவின் வரவேற்பறை.
முல்லையும் பாவலனும் நிர்மாலியின் இருபக்கமும் சோபாவில் இருக்கிறார்கள்.

ஆரியரத்தின வீட்டுள் வரும்பொழுதே கையை உயர்த்தி அசைத்தபடி வந்தார்.
'நாளைக்கு விடுதலை ஆகிறார்கள்" என்று கூறியபடி முல்லையையும் பாவலனையும் அணைத்துக் கொண்டார்.
'தாங் யூ அங்கிள்." முல்லை.
'காலையில் லீவு போட்டு விட்டு பிள்ளைகளை அழைத்துச்சென்று பெற்றார்களை வரவேற்று இங்கு அழைத்துவாருங்கள்." நிர்மாலி கணவனுக்கு கூறினார்.
'நான் போவது சந்தேகத்தை ஏற்படுத்தும் நிர்மாலி. அண்ணையின் சலுகை பெற்று விடுதலை பெற்றுள்ளார்கள் என்று எண்ண இடம் கொடுக்கும். இங்கு அழைத்து வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும். அண்ணருக்குச் சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு என்றுமே விடுதலை கிடைக்காத அபாயம் உண்டாக்கும்."
சட்டத்துக்கு அமைவாக விடுவிக்கப்படுவார்கள் என்று சொன்னீர்கள்."
சந்தேகப் பிராணிகளுக்குப் பயப்படவேண்டும். சங்கூதிச் சங்கடத்தில் மாட்டிவிடுவார்கள். எல்லா ஒழுங்கும் செய்துள்ளேன். காலையில் ஒருவர் வருவார். இவர்களை அழைத்துச் செல்வார்."

காலை எட்டரை மணிக்கு ஒருவர் காரில் ஆரியரத்தினவின் வீட்டு வாசலில் நின்றார்.
முல்லையும் பாவலனும் காரில் ஏறினர்.

நாலாம் மாடி கட்டிடத்தின் பொதுமக்கள் தங்கும் அறை. நிலத்தளத்தில் அமைந்திருந்தது. முல்லையும், பாவலனும் வாயிலைப் பார்த்தபடி ஏங்கிப் போயிருந்தனர்.
ஒன்பது மணிக்கு விடுதலை. பத்து மணி. வரவில்லை.பதினொரு மணி. வரவில்லை.

ஒரு மணி. பொடிசிங்கோ அப்பாவையும், அம்மாவையும் லிப்றுக்கு அழைத்துச் சென்றான்.
அம்மா அப்பாவைக் கண்டதும் கலங்கிப் போனார். அடிக்கடி அவரைப் பார்த்தார். 'ஏனப்பா, அடிச்சு தொல்லைப் படுத்தினவங்களே?"
இல்லை அப்பா."
'கிழவன் மாதிரி ஆயிட்டீங்கள்."
முல்லையையும் பாவலனையும் நினைத்து உடைந்துபோனன்."
எத்தனை சொந்தக்காரர். பார்ப்பினம்தானே. தம்பி சடகோபன் உயிரைக் கொடுத்துப் பார்ப்பான்."
'தலைமயிர் நரைக்கத் தொடங்விட்டது. பாதியாய் மெலிஞ்சு போனீர்கள். அடிச்சவன்களே? உண்மையைச் சொல்லுங்கோ. வயிறு பற்றி எரியுது."
'நான் உள்ளதைச் சொன்னன். வயலிலே ஐந்து நாள் தொடர்ந்து விதைப்பு என்று. அதை பூரணமாக நம்பி அதட்டக்கூட வில்லை."
இருவரையும் பொடிசிங்கோ லிப்றுள் ஏற்றினான். அது இறங்கிக் கொண்டிருந்தது.

'அது சரியெணை. உன்டை முகம் என்ன கறுத்துப் போச்சுது. கண்களைச் சுற்றி கரும்புள்ளி. கடுமையான கவலையோ?தலையும் நரைக்கத் தொடங்கிவிட்டது. ஏதன் வித்தியாசமாய் தொல்லைப் படுத்தினவன்களே?"
இல்லை அப்பா. உதிலை எங்களை அழைத்து வாறகிழவன்---பொடிசிங்கோ---தங்கமான மனுசன். எனக்கு நெடுக ஆறுதல் சொல்கிற மனுசன். நோநா. விடுவாங்க விடுவாங்க. கவலைப் படாதையுங்க என்று அடிக்கடி ஆறுதல் சொல்லுறவர்."

அம்மா பொய் சொன்னது பெண்குலத்தின் மானத்தைப் பாதுகாக்க. பெண் ஆனவள் தலை கொள்ளாப் பெருஞ் சுமைகளை மௌனமாகச் சுமக்கிறாள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் மௌனச் சுமைகளைச் சுமப்போர், சுமக்க முடியாமல் மரணித்தோர் எண்ணிக்கை கடவுளுக்கே வெளிச்சம்.
அப்பா பொய் சொன்னது தன் வாழ்நாள் துணை கவலை தாங்காமல் சிதறிப் போவார் என்று.
இருவரும் லிப்ரால் இறங்கி நடைபாதை வழியே பொடிசிங்கோவின் பின்னே நடந்து கொண்டிருந்தனர்.
பொதுவறையில் இருவரையும் விட்டுவிட்டுப் போகும் பொழுது பொடிசிங்கோ அப்பாவுக்குச் சொன்னான்: 'அண்ணை, உங்க பொஞ்சாதி பொஹம லக்சணாய். நீங்க கொடுத்து வைத்த வங்க."

திருவாளர் பொடிசிங்கோவின் பொன்மொழி கழுதைக்குக் கனைக்கத் தெரியுமே தவிர கானம் இசைக்கத் தெரியாது என்பதை உறுதிப்படுத்தியது.

ஒருமணிபத்து நிமிடம். கதவு திறந்தது.

உள்ளே சென்ற அப்பாவும் அம்மாவும் முல்லையும் பாவலனும் அங்கிருப்பதைக் கண்டு திகைத்துப் போயினர். ஆனந்தக்கண்ணீர் கொட்டுப்பட்டது.
முல்லை அம்மாவைக் கட்டி அணைத்தாள். பாவலன் அப்பாவைக் கட்டி அணைத்தான். ஐந்து நிமிடங்கள் வாய் மொழி இல்லை. ஆனந்தக்கண்ணீர் காட்டாறாகப் புரண்டது.
'எப்படி இங்கு வந்தீர்கள்?"
'அப்பா, எல்லாம் ஊர் போன பின்னர் கதைக்கலாம். புறப்படுவோம். வெளியில் எமக்காக கார் நிற்கிறது." முல்லை.
தங்கச்சி முல்லை புத்திக்காரி. ஊர் போகுமட்டும் ஆரியரத்தினவின் நாமமே எடுக்கவில்லை.

காருக்கு போகும் வேளை முல்லை திரும்பத் திரும்ப அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்களின் கோலம் அவளை வதைத்தது. பாவிகள். சித்திரவதை செய்திருக்கிறான்கள். உள்ளம் முணுமுணுத்தது.
முல்லையையும் பாவலனையும் ஏற்றி வந்தகார், நால்வரையும் ஏற்றிச் சென்று கோட்டை புகையிரத நிலையத்தில் இறக்கிவிட்டுப் போய் விட்டது.
நிர்மாலி அங்கு இவர்கள் வரவை எதிர் பார்த்து நின்றார். ஒன்றரை மணிக்கு புறப்படும் யாழ்தேவி புறப்பட ஆயத்தம். இரண்டாம் வகுப்பு நாலு ரிக்கற் புளியங்குளத்துக்கு வாங்கியிருந்தார். உணவுப் பார்சல் வேறு. அவற்றை அவர்களிடம் கொடுத்துவிட்டு, 'உங்கள் துன்பம் கண்டு நாங்கள் மிகமிக வருந்துகிறோம். எனது கணவர் தனது அநுதாபத்தைத் தெரிவிக்கச் சொன்னார். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ தான் கடவுளை வேண்டுவதாகக் கூறும்படி சொன்னார். அவர் உங்களை சந்திக்கவோ வழியனுப்பவோ வரமுடியாமைக்குரிய காரணத்தை முல்லை சொல்வார். உங்கள் பிரயாணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்," என்று சொல்லி விட்டு நிர்மாலி தாமதிக்காமல் போய்விட்டார்.
வேகமாகச் சென்று புகையிரத்தில் ஏறினர். புகையிரதம் புறப்படஆயத்தம் என்று விசிலடித்தது.
புகையிரதம் ஓடத் தொடங்கிவிட்டது. அப்பா முல்லையிடம் இரகசியமாக 'பிள்ளை. ஆரியரத்தின?" 'ஓம். பின்னர் பேசுவோம்." அவர்கள் சம்பாசi ன வெளியே கேட்கவில்லை.

விடுதலையாகி அப்பா அம்மா ஆயிலடியை அடைந்த நான்காவதுதினம். பகல் பத்து மணி.
நெடுங்கேணித் தபால் பீயோன் சடகோபன் மாமாவைத் தேடி எங்கள்வீடு போயிருந்தான்.
'சடகோபன்அண்ணை,உங்களுக்கு அவசர பதிவுத் தபால்."
சடகோபன் கையெழுத்திட்டுப் பெற்றார். கவரைப்பார்த்தார். டேவிட் கமரன் சட்டத்தரணிகள் நிறுவனத்திலிருந்து.
வரவேற்பறை சோபாவில் அமர்ந்து உரத்து வாசித்தார்.
அப்பா, அம்மா, முல்லை மற்றும் பலர் செவிமடுத்தனர்.

திரு. ஆர். சடகோபனுக்கு,
ஐயா,

தாங்கள் கொண்டு வருவதாகச் சொன்ன செக்தாள் இன்னும் கிடைக்கவில்லை. தயவு செய்து உடன் கொண்டு வரவும் அல்லது மெயிலில்அனுப்பவும்.
திரு. ராசா ராம், திருமதி ராசதேவி இருவரையும் விடுவிப்பதற்கு வேண்டிய சட்ட ஒழுங்குகள் யாவும் செய்துள்ளோம். இன்று காலையில் நாம் அதிகாரியைப் பார்த்துப் பேசி னோம்.ஒருமாதத்துள் விடுதலை பெற்றுத் தருவோம். நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

இதுவரையான எமது சேவை சார்பில் வருமதிகள் பின்வருமாறு:
கலந்து ஆலோசனை- இரு தடவைகள்                                   21,500.00
தகவல் திரட்ட நாலாம் மாடி
சென்றது மூன்று தடவைகள்                                                             45,000.00
கடித செலவு                                                                                                    90.00
மொத்தம்                                                                                                            66,590.00

தயவு செய்து வருமதியை பத்து வேலை நாட்களுள் அனுப்பி வைக்கவும் அல்லது நேரில் ஒப்படைக்கவும்.
டேவிட்
நிர்வாக இயக்குநர்,
டேவிட் கமரன் சட்டத்தரணிகள் நிறுவனம்.

'பதில் எழுத வேண்டாம். அடுத்த தபாலில் என்ன புதினம் எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறியபடி அப்பா குளிக்க கிணற்றடிக்குச் சென்றார்.
அம்மா தற்செயலாக அங்கு சென்றார். திடீரென 'ஐயோ! ஐயோ! அறுவான்கள் பத்தி எரிவான்கள்!" என்று கத்தினார். முல்லை, பாவலன், சடகோபன் மாமா, மற்றவர்கள், வீதியில் சென்ற சிலர் கிணற்றடிக்கு ஓடினர்.
கிணற்றுள் எவரோ விழுந்து விட்டார் என்று எண்ணினர்.
என்ன? என்ன?"
இவற்றை முதுகைப் பாருங்கள். பாழ்படுவான்கள் என்ன
கொடுமை பண்ணியிருக்கிறான்கள் என்று."
அப்பாவின் முதுகில் முப்பது வரையிலான சிகரட் கொள்ளியால் சுட்ட அடையாளங்கள். முதுகில் குறுக்காக மூன்று பட்டை கழன்ற அடையாளங்கள். பித்தளைக்கம்பி வயரால் அடித்தது. கணுக்காலில் நைலோன் கயிறு சுருக்குப் போட்டுத் தலை கீழாகத் தூக்கிய அடையாளம்.


அப்பா அமைதியாய்ப் பேசினார். 'சுதந்திரம் சுக்குமல்ல மிளகுமல்ல. கடையில் வாங்கிவர. நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். இந்த அடையாளங்கள் ராச நாச்சியார் வாரிசுகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய சின்னப் பங்களிப்பு. கவலைப் படவில்லை. பெருமைப் படுகிறேன். வரலாற்றில் எனது பங்கு பதிவாகாது. ஆனால் எனது தியாகம் மலரும் ஈழத்தில் மணக்கும்."

*** தொடரும் ...***

No comments:

Post a Comment