Friday, 6 February 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-13)

மூன்று சகோதரிகள்(Three Sisters)

மூன்று சகோதரிகள் என்ற குன்று அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் நீல மலைகள்(Blue Mountains) என்ற பகுதியில் காணப்படுகின்றது. இது கட்டும்பா என்ற நகரத்திற்கு அண்மையாக உள்ளது.

Jamison Valley ஐச் சூழ்ந்துள்ள மலைச்சிகரங்கள் காலங்காலமாக நடந்து வரும் காற்று, மழை, நீர்ப்பெருக்கு என்பவற்றால் அரிக்கப்பட்டு(erosion) இந்தக் குன்றுகள் வந்ததாகச் சொல்லுவார்கள். இந்தக் குன்றுகள் மூன்றும் முறையே 922, 918, 906 மீட்டர் உயரம் கொண்டவை. கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் இவை உள்ளன.

இவை பற்றிய பழைய கதை ஒன்றும் இருக்கின்றது. மீக்னி(Meehni), விம்லா(Wimlah), குனிடூ(Gunnedoo) என்ற மூன்று அழகான பெண்கள் கட்டும்பா பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமது அயல்கிராமத்திலுள்ள நேப்பியன் (Nepean) பழங்குடி இனத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள் மீது காதல் வயப்பட்டிருந்தார்கள். அவர்களின் பழங்குடிச் சட்டப்படி வெவ்வேறு இனங்களுக்கிடையே திருமணம் செய்து கொள்ள முடியாது. அதனால் அந்த மூன்று ஆண்களும் சட்டத்தை மதிக்காமல் அந்தப்பெண்களைக் கவர்ந்துவர திட்டம் போட்டார்கள்.
 

இதனால் இரு இனங்களிடையேயும் சண்டை ஆரம்பமானது. அவர்களிடமிருந்து அந்தப்பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு மந்திரவாதி அவர்களைக் கல்லாகச் சபித்து விட்டார். அந்தச் சண்டையில் மந்திரவாதி கொல்லப்பட, வேறொருவராலும் அந்தப்பெண்கள் உயிர்ப்பிக்க முடியாதபடியால் அப்படியே கல்லாக உறைந்து விட்டார்கள் என்பதே அந்த ஐதீகக்கதை.



No comments:

Post a Comment