Saturday, 14 February 2015

இமைப்பொழுதும் என் நெஞ்சில் - சிறுகதை


நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாப்படம் ஓடியது. வேலையிலிருந்து அரை நாள் லீவு எடுத்து, 'யாழ்' தியேட்டர் போயிருந்தேன். படம் மூடுபனி. தியேட்டருக்குள் புகுந்ததும் கண்களில் விஞ்ஞானமாற்றம் - ஒரே இருளாக இருந்தது. 'ரோச் லைட்' உதவியுடன் எனக்கு இடம் தேடித்தர ஒருவன் முயன்றான். திடீரென்று என் முதுகில் ஒரு கை பதிந்தது.

"அட செந்தில்! ஆளே மாறிப் போய்விட்டாய். எப்பிடி இருக்கிறாய்?"
"பரவாயில்லை. நீ எப்படி?"
"சுமாராகப் போகுது."

அவனுக்குப் பக்கத்தில் ஓர் இடம் காலியாகவிருந்தது. அதற்கடுத்ததாக மூக்கும் முழியுமாக செந்திலைப் போல, அவனைவிட அழகான ஏழு அல்லது எட்டு வயதுப் பையன்.

"உன் மகனா?"
"ஓம். மனைவி ரொயிலற் போய்விட்டாள். வந்து விடுவாள். நீ திருமணம் செய்து விட்டியா?"
"இன்னமும் இல்லை. இதிலை நிண்டு கன நேரம் கதைக்கேலாது. இன்ரேவலுக்கு சந்திப்போமே!"

நழுவிக் கொண்டேன். படம் தொடங்கியது.

படிக்கும்போது செந்தில் ஒரு பெண்ணை விரும்பினான். அவளுக்கு விருப்பமில்லை. பாடசாலையில் நடந்த ஒரு சம்பவத்தினால் மாணவர்கள் பிளவுபட்டார்கள். பாடசாலை குழம்பியது. ஊர் இரண்டு பட்டது. என் வாழ்விலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இது நடந்து இரண்டு வருடங்களுக்குள் செந்தில் இன்னொருத்தியை மணந்துவிட்டான். நேரத்துக்கு நேரம் மனதை மாற்றி, பெண்ணை மாற்றி வாழ இவனைப் போன்றவர்களால் எப்படி முடிகிறது?

 

                                  
 நான் பன்னிரண்டாம் வகுப்பறைக்குள் நுழைகின்றேன்.

அவள் மெல்லச் சிரித்தாள். சிரிப்பதைக் காட்டிலும் புன்னகை சிந்தும் போது மிகவும் அழகு. ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் நெஞ்சினுள் ஒரு பயம் வந்து விட்டுப் போகும். நானும் அபர்ணாவும் முரளியும் சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து வருகின்றோம். போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். இது எமக்கு இரண்டாவது பள்ளிக்கூடம். ஆறாம் வகுப்பு வரைக்கும் ஊரிலுள்ள சின்னப் பள்ளிக்கூடம் தான்.

"யசோ! லபோரட்டரியிலை கொப்பியள் திருத்தி வைச்சிருக்கிறன். போய் எடுத்து வாரும்" மிடுக்கான குரலில் சோதிலிங்கம் மிஸ் சொன்னா. வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் யசோவைத்தான் அழகு என்று சொல்கின்றார்கள். எனக்கென்னவோ அபர்ணாவைத்தான் பிடிக்கும்.

யசோ வெள்ளை, மிடுக்கான தோற்றம். எதற்குமே பயப்படமாட்டாள். சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டைக்குப் போவாள். அழகான ராட்சசி.

அபர்ணாவுக்கு நல்ல முகவெட்டு. பொது நிறம். குடும்பப்பாங்கான தோற்றம். நால்வகைக் குணங்களுமுடையவள். இதற்கும் மேல் சந்திரவதனா என்றொரு ஜந்து வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறது. அவளைப் பார்ப்போரும் இல்லை, தேடுவோரும் இல்லை.

எங்கள் வகுப்பில் பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் பெண்கள் இருந்தது பெரும்பாலும் எல்லோருக்கும் கவலையையே தந்தது. கட்டாந்தரையில் புல் மேய்வது போல இருக்கும். ஏன் தான் இந்தப் பெண்களுக்கு கணிதம் என்றால் பிடிக்காதோ?

கொப்பிகள் வந்ததும் 'சமா' தொடங்கி விடும். பத்து நிமிடங்களுக்கு ரீச்சரின் தனி ஆவர்த்தனம்தான். நாங்கள் பெரிய வகுப்புப் படிப்பதால் எங்களில் ஒருவருக்கும் அடி விழுவதில்லை. பேச்சு மட்டும்தான். சிறு வயதுப் பருவங்களில் ஆண்களும் பெண்களுமாக வகுப்பில் இருப்போம். விஷயம் தெரியாத, விருப்பமில்லாத வேளைகளில் இப்படி இருக்க விட்டுவிடுவார்கள். வேண்டும் போது விடமாட்டார்கள். நாலாம் வகுப்பின் போது நானும் அபர்ணாவும் பக்கத்துக்குப் பக்கம். ஆறாம் வகுப்பின் பின் அந்த யோகம் ஒருவருக்கும் கிட்டவில்லை. கூப்பிடு தூரம்தான். 'பருவத்தே பயிர் செய்' என்று உரக்க கூப்பாடு போடுவதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான்.

செந்தில் மாத்திரம் கொக்கு மாதிரி தலையை நீட்டி யசோ வருகிறாளா என எட்டிப் பார்த்தான். அவனுக்கு அவள் மீது ஒரு கண். சோயா என்று அவளின் பெயரை அடி தலை மாற்றி, அவனைக் கூப்பிடுவோம். அவனுக்கும் அதில் இன்ப மகிழ்ச்சி.

உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால் வகுப்பில் எல்லாப் பாடங்களுக்கும் பரீட்சை வைத்திருந்தார்கள். ஒருவரும் இரசாயனவியல் பாடத்தில் எண்பது புள்ளிகளைத் தாண்டுவதில்லை. மனம் திக்குத் திக்கென்று எல்லாருக்கும் அடித்தது.

யசோ கொப்பிகளைக் கொண்டு வந்து மேசைமீது வைத்து விட்டு, தனது கொப்பியை எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தாள். எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு தங்கள் தங்கள் கொப்பிகளை எடுத்துக் கொண்டார்கள்.

வகுப்பு களை கட்டத் தொடங்கியது. யசோ மேசை மீது குப்புறப் படுத்துக் கொண்டாள். அபர்ணா என்னை ஒருதடவை பார்த்து விட்டு கொப்பியில் பார்வையைச் செலுத்தினாள். செந்தில் ஒட்டகச்சிவிங்கி போல கழுத்தை நீட்டி யசோவைப் பார்த்துவிட்டு மெளனமானான்.

சோதிலிங்கம் மிஸ் எழுந்து நின்று மேசைமீது ஓங்கி ஒரு தட்டுத் தட்டினா. வகுப்பு நிசப்தமாகியது. பார்வையை வகுப்பு மீது ஓடவிட்டா. யசோ மட்டும் மேசைக்குள் புதைந்து கிடந்தாள். நெஞ்சுக்கூடு மேலும் கீழும் எழுந்து அசைவது தெரிகிறது.

"யசோ!" என்று ஒரு தடவை கூப்பிட்டா. அதற்கு ஒருவித சலனமுமில்லை. அவவுக்குக் கோபம் தலைக்கேறியது. முகத்தில் வியர்வை வடியத் தொடங்கியது. பத்திரகாளி போலானா. பாடசாலைக்குப் பக்கத்திலை அவவின்ரை வீடு இருக்கிறதாலை மத்தியானம் வீட்டை போய் சாப்பிட்டிட்டு வருவா. வருகிற அவசரத்திலை முகத்துக்குப் பவுடரும் அப்புவா. வரும்போது வடிவாகத்தான் இருப்பா. அப்புறம் தான் வேஷம் கலையும். முகத்திலை அப்பிய பவுடர் திட்டுத் திட்டாகக் கரைந்து கிடக்கும். இப்போது அது புலப்பட்டது.

"யசோ!!" பேய் போலக் கத்தினா. அதற்கும் பதிலில்லாது போக, கிட்டப்போய் முகத்தை தூக்கி நிமிர்த்தினா. அவள் முகம் சிவந்து, கண்களிலிருந்து கண்ணீர், தாமரை இலைத் தண்ணீர் போல, வழிந்து கொண்டிருந்தது. எதற்குமே துணிந்தவள் இன்று எதற்கோ ஆட்டம் கண்டு, கல்லுக்குள் ஈரம் போலாகி விட்டாள்.

"யசோ! உனக்கு நல்ல மார்க்தானே வந்திருக்கு. பிறகு ஏன் அழுகிறாய்?"
"ரீச்சர்...   இஞ்சை பாருங்கோ ரீச்சர்!"

அவள் கைகளிலிருந்து ஒரு கடதாசித் துண்டு படபடத்து மேசைமீது விழுந்தது. சோதிலிங்கம் மிஸ் அதை எடுத்து பிரித்துப் படித்தா. அது ஒரு சுவாரஷ்யமான, மயிர்க்கூச்செறியும் கடிதம். எச்சிலை மிடறு விழுங்கி, எழுத்துக் கூட்டி வாசிச்சா. அவவின் நாற்பது வருட வாழ்க்கையில் இப்படியொரு கடிதத்தை வாசிக்கும் பாய்க்கியம் கிட்டவில்லை. இப்படி ஒரு கடிதம் அவவின் இளமைக் காலத்தில் கிடைத்திருந்தால் - ஒருவேளை அவ கூட இப்ப திருமதியாக இருந்திருக்கலாம்.

அப்படியே திரும்பி செந்திலை முழுசிப் பார்த்தா. கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பாய்ந்து, வகுப்பறையை விட்டு வெளியேறினா. கடுகதி வேகத்தில் அப்படியே அடுத்த வகுப்பறையை நோக்கி நடந்தா. சொதி வடியும் கோலத்தில் நின்ற 'சந்நிதி கோயில் அவியலைக்' கண்டவுடன் நடையைப் பாதியில் நிறுத்தி, எதிர்ப்புறமாக நடையின் வேகத்தைக் கூட்டினா. சண்முகம் வாத்தியார் வகுப்பறையை விட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்தார். அவவின் நடை அவருக்குச் சிரிப்பை யூட்டியது.

மதியத்திற்கு முதல் வரும் பாடத்தை சண்முகம் வாத்தியார் எந்த வகுப்பிற்கு எடுக்கின்றாரோ, அவர்கள் வாழ்க்கையில் பெரும்பேறு கொண்டவர்கள். 'லஞ் பெல்' அடிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பதாக, 'சந்நிதி கோயில் அவியல் இப்ப வீட்டிலை முடிஞ்சிருக்கும்' என்று சொல்லி வகுப்பை நிறுத்துவார். அந்த வாக்கியம் எப்பவடா அவர் வாயில் இருந்து புறப்படும் என்று வீட்டிற்குப் போவதற்காக ஏங்கி நிற்பர் மாணாக்கர்.

"முரளி! உனக்கு எத்தினை மார்க்?"
"இதுவாடா இப்ப முக்கியம்!"

அபர்ணா திரும்பி கையில் ஆறு விரல்களைக் காட்டி, பின்பு '' போட்டுக் காட்டினாள். நான் பதிலுக்கு இரண்டு - ஏழு போட்டேன்.

பின் வரிசையில் இருந்த குகநேசன், மேசையில் குப்புறப் படுத்திருந்த யசோவைச் சீண்டும் வகையில் 'ராதை உனக்குக் கோபம் ஆகாதடீ' என்று ஆலாபனை செய்தான். 'எங்கள் வகுப்பு மேசையும் சோயாப்பால் குடிக்கும்' வெடி வெடித்தால் ஓடுவதற்குத் தயாராக நின்றபடி மற்றவன் கத்தினான்.

மிஸ் சோதிலிங்கமும் மிஸிஸ் கமலாகரனும் வகுப்பறைக்கு வந்து யசோவைக் கூட்டிக் கொண்டு போனார்கள். அவர்கள் பின்னால் அவள் தேம்பிக் கொண்டே போனாள். இந்தக் கண் கொள்ளாக் காட்சியை பெரும்பாலான மாணவர்கள் பார்த்து இரசித்தார்கள்.

"டேய் செந்தில்! உனக்கு துண்டு கிழியப் போகுது."
"யசோவுக்கு என்ன சித்து விளையாட்டுக் காட்டினாயப்பா!"

அவன் எல்லாரது நையாண்டியையும் பார்த்துக் கொண்டு வாளாவிருந்தான்.

மாணவர்கள் ஏதோ பூகம்பம் வரப் போகின்றது என்பதை உணர்ந்தார்கள். அதிபரின் அறையிலிருந்து கமலாகரன் ஆசிரியை மாத்திரம் வெளியே வந்தா. எங்களுக்குரிய அடுத்த பாடத்தை அவதான் எடுக்க வேண்டியிருந்தது.
"இண்டைக்கு அடுத்த பாடம் நடக்காது. முந்திச் செய்த கணக்குகளை  றிவிசன் செய்யுங்கோ." யசோவின் புத்தகம் கொப்பிகளைத் தூக்கிக் கொண்டு போய்விட்டா.

கொஞ்ச நேரத்தில் மிஸ் சோதிலிங்கம், யசோவைக் கூட்டிக் கொண்டு பாடசாலையை விட்டு வெளியேறுவது தெரிகிறது. "இனி அடுத்தது என்ன?" என்று எல்லாரும் பதட்டப் பட்டுக் கொண்டிருக்கும் போது, அதிபரின் அறையிலிருந்து செந்திலுக்கு அழைப்பு வந்தது. எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு அழுவாரைப் போல போனான். அதன் பின்பு ஆசிரியர்கள் தங்களுக்குள் முறுகிக் கொண்டார்கள். வகுப்பறைக்குள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று மாணவர்கள் குசுகுசுத்தனர். பாடசாலை இரண்டுபட்டது.

செந்தில் கிரிக்கட் பிளேயர். அவனை இழக்க ஒரு சில ஆசிரியர்களுக்கு விருப்பமில்லை. வாக்குவாதங்கள் பலத்தன. மாணவர்களும் இரண்டாக அணி வகுக்கத் தொடங்கினர்.

"டேய் வாங்கடா! கார்ட்ஸ் விளையாடுவம்" என்றார்கள் பின் வரிசையில் இருந்தவர்கள்.

"நாங்கள் என்ன செய்வம்?" - முரளி.
"எக்ஸாம் வரப்போகுது. படிப்பம்."
"உனக்கு எப்பவுமே படிப்புத் தான்."

ஆனாலும் ஒருவருக்கும் படிக்க மனம் வரவில்லை.
"வா, ஒரு புது விளையாட்டு விளையாடுவோம்!" - "என்ன விளையாட்டு?"
"நான் உன்னுடைய முதுகிலை, சட்டைக்கு மேலாலை என்ரை விரலாலை எழுதுவன். நீ அது என்னண்டு கண்டுபிடிச்சு சொல்ல வேணும்."

விளையாட்டு தொடங்கியது. ஸ்பரிச விளையாட்டு. 'படம்' என்று எழுத, படம் என்றேன். அப்புறம் பாடம். 'தமிழ்' சரியாக வர மறுத்தது. 'ழ்' பிசகியது. அப்புறம், "அ - ப - ர் - " என்று முரளி பாதி எழுதிக் கொண்டிருக்கும் போதே, அவனது கைகளை உதறிவிட்டு கோபத்துடன் எழுந்து கொண்டேன். விளையாட்டு வினையில் முடிந்தது. அவன் கை கொட்டிச் சிரித்தான். அப்புறம் அவனுடன் கதைக்காமல் விட்டுவிட்டேன்.

'வெறிநாய்' வருகிறது என்று வகுப்பறைக்கு முன்பாக ஒருவன் சத்தமிட்டுக் கொண்டு கோமாளி போல ஓடினான். அதிபர் வகுப்பறைக்குள் நுழைந்தார். கோபத்தில் கர்ச்சித்தார். "யாராவது படிக்கிற நோக்கமில்லாமல் வேறை எண்ணத்தோடை இஞ்சை வருகிறதெண்டால், தயவு செய்து வீட்டிலையே இருங்கோ! வந்து பள்ளிக்கூட மானத்தை வாங்காதையுங்கோ!" என்று முழங்கினார். "அப்ப வெளியிலை இதுகளை வைச்சுக் கொள்ளலாமோ?" என்று முணுமுணுத்தது ஒரு தறுதலை. அபர்ணா திரும்பிப் பார்த்தாள். 'இனிமேல் வேண்டாமே!" என்பது போன்றிருந்தது அந்தப் பார்வை.

செந்தில் அதன்பிறகு வகுப்பறைக்கு வரவில்லை. அவனும் வீட்டிற்குப் போய்விட்டான். ஒரு கிழமைக்கு ஸ்கூல் வரப்படாது என்பது அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை.

வீட்டிற்குப் போய் சேர்ந்தவுடன் அம்மா பள்ளிகூடத்தில் நடந்தவற்றைப் பற்றி விசாரித்தாள். அவ்வளவு வேகத்தில் வீடு போய்ச் சேர்ந்திருந்தது அந்தச் செய்தி.

மூன்று நாட்களின் பின் யசோவின் பெற்றோர்கள் பாடசாலைக்கு வந்து, அதிபருடன் கதைத்து, யசோவை ஊரின் அடுத்த பெரிய பாடசாலைக்கு மாற்றிவிட்டார்கள். யசோ பள்ளிக்கூடம்  மாறுவாள் என்று ஒருவரும் எதிர் பார்க்கவில்லை. எல்லாருக்கும் அது அதிர்ச்சிதான். அதற்கப்புறம்தான் செந்தில் படிக்க வந்தான். மிகவும் அமைதியாகிப் போய்விட்டான். ஒருவரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. சில காலைப் பொழுதுகளில் பாடசாலைக்கு பிந்தியும் வந்தான். என்றாலும் படிப்பில் முன்னரைவிட கூடுதல் முன்னேற்றம் தெரிந்தது. இப்படியெல்லாம் நடந்து போய்விட்டதே என்று உள்ளுக்குள் ஊமையாக அழுது கொள்வது போலவும், எதையோ பறிகொடுத்து விட்டது போலவும் இருந்தான்.

அந்தச் சம்பவத்தின் பின்பு, அபர்ணாவுக்கும் எனக்குமிடையே இருந்த தொடர்பு குறைந்து போய்பிட்டது. அவளது அழகான பேச்சு, சிரிப்பு எல்லாம் போய் விட்டது. எனது பள்ளிகூடத்துக் கனவுகள் இப்படிச் சிதைந்து போய் விட்டன.
 
                               
 படம் ஓடிக்கொண்டிருந்தது. மனம் ஏனோ அதில் லயிக்கவில்லை. எனக்கு முன்பாக இருளினுள் மூவரினதும் பின்புறம் தெரிந்தன. அவனது மனைவியைப் பார்த்து விடவேண்டும் என்று மனம் உந்தியது.

'இன்ரேவலுக்கு' எங்காவது ஓடித் தப்பி விடவேண்டும். அவனைக் கண்டால் மீண்டும் எனது பழைய நினைவுகள் வந்து விடும். சிறுகச் சிறுகக் கட்டிய கூட்டைக் குழப்பியவன் அவன். கோபம் கோபமாக வந்தது.

பள்ளிக்கூட வாழ்க்கையின் பின்பு எல்லாருமே திக்குத் திசை தெரியாது போய் விட்டோம். இனப் பிரச்சினை காரணமாக, ஒரு நடு இரவில் கிராமமே அள்ளுண்டு போயிற்று.

முரளிக்கும் எனக்கும் சிறுவயதில் இருந்தே படிப்பில் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால் அது ஆறாம் வகுப்பு வரைக்கும் தான் நிலைத்திருந்தது. அதன் பின்பு, அவன் படிப்பில் எங்கோ வெகுதூரம் பின் தங்கி விட்டான். அவனுக்கு என் மீது ஒரு பொறாமை உள்ளே தீயாக வளர்ந்திருக்க வேண்டும். தெரிந்து கொண்டே செய்திருக்கின்றான். தனது பெற்றோர்கள் மூலம் அபர்ணா வீட்டுக்காரரை அணுகி, அவளைத் திருமணம் செய்து கனடாவிற்கும் கூட்டிக் கொண்டு போய் விட்டான்.

இடைவேளையின் போது தலையைக் குனிந்து இருக்கையில் புதைந்தேன்.

செந்தில் மகனைக் கூட்டிக் கொண்டு வெளியேறுவது தெரிகிறது. செந்திலின் மனைவி மாத்திரம் தனியே இருக்கின்றாள். அவளுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு 'ரவுண்ட்' போய் வந்தால் அவள் யாரென்று புரிந்து விடும்.

மெதுவாக எழுந்து நடந்து ஒரு சுற்று சுற்றி வந்தேன். அவளின் இருக்கை வந்ததும் பார்வையை அவள் மீது சுழல விட்டேன். எனது துர்அதிர்ஷ்டம். அவளும் என்னைக் கண்டுகொண்டாள். அவள்......

யசோ!

எங்களுடன் படித்து, அன்றொருநாள் பாடசாலையில் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்த அதே யசோதான்.

1  பாலம் சஞ்சிகை (மார்கழி 2003)

No comments:

Post a Comment