Saturday, 11 April 2015

ஃபொலோ மி ! - சிறுகதை

ரி.வி.யில் 'டிஸ்கவரி சனல்' பார்த்துக் கொண்டு, இறைச்சி வெட்டும் கத்தியை தீட்டிக் கூர் பார்த்துக் கொண்டிருந்தார் 'இஞ்சாருங்கோ'. 120cm  LCD ரி.வி. அவரின் கால்மாட்டின் கீழ் இருந்த சின்ன 'ஷெல்' சிணுங்கியது.

"ஹலோ! ஹலோ!! இஞ்சாருங்கோப்பா. பாதையை தவற விட்டிட்டன்."
"மஞ்சுவை ரியூசன் சென்ரலிலை விட்டிட்டீரா? அதை முதலிலை சொல்லும்."

"ஓமப்பா. விட்டிட்டு வெளிக்கிடேக்கைதான் இந்த உபத்திரவம்."
"மஞ்சுவை விட்டது நல்லதாப்போச்சு. சரி. உதிலை காரை விட்டிட்டு பக்கத்திலை இருக்கிற றோட்டு ஒண்டின்ர பேரைச் சொல்லும். நான் எப்பிடி வாறதெண்டு 'மெல்வே'யைப் பாத்துச் சொல்லுறன்."

 "ஏதோ 'சனிசைட்' எண்டு எழுதிக் கிடக்கு."
"போயும் போயும் சனியன்ர சைட்டுக்குள்ளையே நிக்கிறீர். அது 'சனிசைட்' இல்லையப்பா 'சணிசைட்'. சரி சரி உம்முடைய மெல்வேயிலை 59 J2 ஐப் பாரும். அதிலை இருந்து 'பேர்க் றோட்டுக்கு' வாரும். அப்பிடியே நேரை பிடிச்சுக் கொண்டு வந்தால் 'பிறின்சஸ் கை வே' வரும். பிறகு உமக்குத் தெரியும்தானே!"

"எந்தப்பக்கமா வாறது? எல்லாமே செய்வினை சூனியம் செய்துவிட்டது மாதிரி றோட்டெல்லாம் கிளறிவிட்டுக் கிடக்கு. இடப்பக்கமா? வலப்பக்கமா?"
"பதினெட்டு வருஷமா மெல்வே பாக்கிறீர். இன்னும் உமக்கு பாக்கத் தெரியாமல் கிடக்கு."

"சரி. ஏதாவது ஈஸியாக் கண்டுபிடிக்கிற மாதிரி இருந்தாச் சொல்லுங்கோ. இல்லை விடுங்கோ"
"உப்பிடியே காரை எடுத்து ஓடும். கிட்டடியிலை வாற பெற்றோல் ஸ்ரேசனிலை போய்க் கேளும்.'

இராசலட்சுமி காருக்குள் வந்து ஏறினாள். அவள் கிளிப்பிள்ளை மாதிரி. சொல்லிக் குடுத்ததைத்தான் செய்வாள். மகள் மஞ்சுவின் ரியூசன் சென்ரருக்கு போக வர, மூண்று தரம் கார் ஓடிப் பழகி இருந்தாள். அந்த 'றெயினிங்'குடன் போய் வரும் பாதையை கச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள்.

மகள் மூத்தவள் - பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். உச்சப்படிப்பு நடக்கும் காலம். அடுத்தவன் மகன் - எட்டாம் வகுப்பு. அவனுக்குப் படிக்கிறதுக்கே நேரம் போதாது. இராசலட்சுமிதான் சாப்பாடு தீத்தி விடுவாள். அவன் படிச்சுக் கொண்டு இருக்கேக்கை ஒரு சைற்றாலை இராசலட்சுமி அவனுக்குச் சாப்பாடு ஊட்டி விடுவாள். அவன் ருசிச்சுச் சாப்பிடுறானோ, அரைச்சு செமிக்கச் சாப்பிடுகிறானோ ஆருக்குத் தெரியும். மற்றது கடைக்குட்டி பெண். நாலாம் வகுப்புப் படிக்கிறாள். அவளுக்கு படிப்பு அவ்வளவு கடுமை எண்டில்லை. அதாலை அவள் தானே அள்ளிச் சாப்பிடுவாள். ஏதாவது 'சொப்பிங் சென்ரருக்கு' எண்டு சாமான்கள் வாங்கப் போனாலும் கடைசி இரண்டையும் எங்காவது ஒரு கரையிலை சொப்பிங் சென்ரரிலை இருத்தி விடுவாள் இ.லட்சுமி. அதுகள் இருந்து தங்கடைபாட்டிலை கணக்குச் செய்து கொண்டு இருக்குங்கள். இல்லாட்டி அதுகளின்ர நேரத்திலை அரை மணித்தியாலம் பாழ்.

இராசலட்சுமி பெற்றோல் ஸ்ரேசன் காணும் வரைக்கும் ஒடோடொன்று ஓடினாள். வடமராச்சியிலை ஓடி ஓடி எண்ணெய் வழிய வழியப் படிக்கேக்கைகூட இப்படிக் கழைத்திருக்க மாட்டாள். பாதைகள் எல்லாம் இடியப்பச் சிக்கல்களாகி மறைந்தன. ஒரு பேப்பர் துண்டில் தனது வீட்டு விலாசத்தை எழுதிக் கொண்டு தனது 'மெல்வே'யுடன் கடைக்குள் நுழைந்தாள்.

உள்ளே வெள்ளைக்காரப் பெடியன் ஒருவன் நின்றான். அடையாளம் வைச்சிருந்த 59ஆம் பக்கத்தைத் திறந்தாள். தனது விலாசத்தை அவனிடம் நீட்டி, தனக்குத் தெரிஞ்ச பாஷையில் கேட்டாள். அவன் மேலும் மூன்று பக்கங்களைத் திருப்பி 62ஆம் பக்கத்திற்குப் போனான். கையில் வைத்திருந்த சிவப்புப் பேனையால் ஒரு இடத்தில் வட்டம் போட்டு 'யு ஆர் கியர்' என்றான். இராசலட்சுமி திகைத்துப் போனாள். இவ்வளவு தூரம் ஓடிவிட்டேனா?

அவன் சொல்லிக் கொண்டே தனது சிவப்புப் பேனையால் உளுவான் மண்ணுக்குள்ளை படம் கீறுவது போல மெல்வே முழுக்கக் கீறினான். இ.லட்சுமியின் புது 'மெல்வே' பாழாகிப் போனது. அவனுடன் மேலும் பேச்சுக் குடுத்தால் 'மெல்வே' நாசம் எண்டதைக் கண்டு கொண்ட இ.லட்சுமி, அவன் சொல்லும் எல்லாத்துக்கும் 'யா யா' என்றாள்.

"இஞ்சாருங்கோ! அவன் சொல்லுற ஒரு இழவுமே விளங்குதில்லை."
"உதுக்குத்தான் இங்கிலீசைப் படி படி எண்டு சொல்லுறனான். கலியாணம் செய்த புதுசிலை, கொழும்பிலை இருக்கேக்கை, 'ஃபொலோ மி' படியும் எண்டு சொன்னன். கேட்டனீரே!"

"இன்னும் கத்தி தீட்டி முடியேல்லையே? எப்ப எடுத்தாலும் கறா கறா எண்ட சத்தம்தான்."

இ.லட்சுமிக்கு 'ஃபொலோ மி' என்ற சொல் வேதவாக்காகியது. ஒரு தீப்பொறியாகி மூளைக்குள் விழுந்தது. தனது 'ஷெல் போனைத்' தூக்கிக் கொண்டு திரும்பவும் பெற்றோல் ஸ்ரேசனுக்குள் ஓடினாள். "கோல் ரக்ஷி" என்று தனது ரெலிபோனை அவனிடம் நீட்டினாள். அவனுக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. அவளின் பரிதாப நிலையும் புரிந்தது.

சற்று நேரத்தில் ஒரு வாடகைக்கார் அவள் நிற்கும் இடம் நோக்கி வந்தது. தனது முகவரியைக் கொடுத்து எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள் லட்சுமி. அவன் "எவ்வளவு பேர்?" என்றான். லட்சுமி "ஒருத்தருமில்லை. யு கோ! ஐ ஃபொலோ" என்றாள்.

அவன் 'ரக்ஷி'யைச் செலுத்த, இராசலட்சுமி அதைப் பின் தொடர்ந்தாள். 'பிறின்சஸ் கை வே' வந்ததும் இராசலட்சுமிக்கு இடம் பிடிபட்டுக் கொண்டது. அவள் அவனிற்கு கையைக் காட்டிக் கொண்டே 'ஓவர் டேக்' செய்து அவனுக்கு முன்னால் காரை எடுத்தாள். 'இவள் ஏதோ தன்னை ஏமாற்றப் பார்க்கின்றாள்' என்ற தோரணையில் அவளின் பின்னாலே கலைத்துக் கொண்டு போனான் ரக்ஷிக்காரன்.

கடைசியில் வீட்டிற்குக் கிட்டவாகவுள்ள ஒரு ஒதுக்குப் புறத்தில் 'ஹசாட் லைற்றை'ப் போட்டு காரை நிற்பாட்டினாள் லட்சுமி. 40 டொலரை அவனுக்குக் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். தீட்டிய கத்தியைப் பதம் பார்த்துக் கொண்டே ரி.வி. க்கு முன்னால் இருந்த 'இஞ்சாருங்கோ' எழும்பினார்.

"இவ்வளவு நேரமும் ரி.வி.க்கு முன்னாலேயே இருந்தனியள்?" கோபத்துடன் கர்ச்சித்தாள் இராசலட்சுமி.

"என்னண்டு வலு கெதியா வந்தனி?" ஆச்சரியத்துடன் கேட்டார் 'இஞ்சாருங்கோ'.

"ஏன் நான் என்ன படு மொக்கு எண்டு நினைச்சியளாக்கும்!"

அவன் அவளைக் கூர்ந்து பார்த்தார்.


யுகமாயினி (ஆடி , 2009) ; வெற்றிமணி (வைகாசி, 2015)

No comments:

Post a Comment