அதிகாரம் 26 - அதிகார போட்டி
நான் மாட்டுத்
தொழுவத்திலிருந்து திரும்பி வந்து விருந்தாளிகள் அறைக்குள் கால் வைத்தேன். பிள்ளைகள் அங்கு ஏலவே வந்திருந்தனர். அவர்கள் போர் முடிவை அறிய ஆவலாக இருந்தனர். குறிப்பாக
அண்ணையைப் பற்றி அறிய ஆர்வம் காட்டினர். வதனங்களில் அவர்களது
உள்ளத்து ஏக்கம் சோகம் பளிச்சென தெரிந்தது.
‘பிள்ளைகள்.
இன்றைக்கு ஆனந்தபுரம் போருக்கு முந்திய நாலாம் ஈழப் போர் தொடங்கி
இறுதி ஆட்டம் வரை."
●
கிழக்கு மாகாண
அரசியல் பிரிவு புலித் தளபதி-இறுதி அழிவை கைகூப்பி
வரவழைத்தவர்களில் ஒருவர். தூரப்பார்வை போதாமை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு அணைக்கட்டு வழியாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்களக் கிராமங்களுக்கு நீர் செல்வதைத் தடை செய்து
தனது வீரபிரதாபத்தைக் காட்டினார். அதனால் சிங்கள
ஆகாய விமானப்படை மாவிலாறு புலிகள் நிலைகள் மீது குண்டுகள் பொழிந்தது. அங்கிள் பாலா ஆரம்பித்த நாலு ஆண்டுகள் சமாதானத்தின்
பின்னர் மீண்டும் போர் வெடித்தது.
ஸ்ரீலங்கா இராணுவம்
மாவிலாற்றைக் கைப்பற்றிய பின்னர், தொடர்ந்து
முன்னேறி மட்டக்களப்பைக் கைப்பற்றியது. புலிகளுடன் எட்டு மாதம் போராடி மன்னார் வடக்கை அடைந்தது. வெள்ளாங்குளம் வீழ்ச்சி
அடைந்ததோடு புலிகள் பின்வாங்கி மன்னாரை விட்டு வெளியேறி வன்னியில் நிலைகொண்டனர்.
இராணுவம் சிங்கக்
கொடி ஏந்தி தொடர்ந்து வன்னி மண்ணில் நத்தை வேகத்தில் நம்பிக்கையுடன் முன்னேறியது. புலி பதுங்குகிறது. ‘வாங்கிக் கட்டப் போகினம.;’ புலி ஆதரவாளர் ஊடகபிரசாரம் வெளிநாடுகளில் செட்டைகட்டிப் பறந்தது.
●
சமாதான காலத்திலும்,
பின்னரும் வன்னி மண்ணில் புலித்தளபதிகள்
மத்தியில் அதிகாரப் போட்டி வனத்திரை மறைவில் கொதிக்க ஆரம்பித்திருந்தது. அண்ணை உலக ஆசைகளை எல்லாம் தியாகம் செய்து, தனது
மனைவி பிள்ளைகளின் மனித உரிமைகளையும் தியாகம் செய்து, தமிழ் இனத்தின் விடுதலைக்காக நான்கு தள ஆழ பங்கரில் வாழ்ந்தமை தளபதிகளுக்கு
வாய்ப்பாக வரப்பிரசாதமாக அமைந்தது. தலைகால் தெரியாமல்
நடந்தனர். புதிய ஜீப் வண்டிகள். நவீன வீடுகள்.
ஆடம்பரங்கள். அண்ணையின் பெயரில் அட்டகாசம் புரிந்தனர். நோர்வே தலைமையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான காலத்தில்தான் விடுதலைப்
புலிகளின் வீழ்ச்சி விதைகள் உயர் மட்டத் தளபதிகளால்
விதைக்கப்பட்டன.
அண்ணையின் பாலியல்
எச்சரிக்கையை மீறிய, புகழ்பூத்த தளபதியை அண்ணை எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. எத்தனை பேரை முதுகில் போடுவது? அண்ணையின் கையறு நிலையை உணர்ந்த இளைய
போராளி கிளைமோர் வைத்து அந்தத் தளபதியை கொல்ல வேண்டியிருந்தது.
சமூகத்துக்கு வேறு கதைசொல்ல வேண்டியிருந்தது.
வன்னியில் முன்னேறும்
இராணுவத்தைத் தடுத்து நிறுத்த முடியவிலலை. ஆயுத
பற்றாக்குறை பெரிதாக உதைத்தது. கப்பலில் வந்த இராணுவப் பொருட்கள்
இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்டன. ஆறு கப்பல் ஆயுதங்கள் அத்தனையும் கப்பலோடு
தென்சீனக் கடலில்வைத்து அமிழ்த்தப்பட்டன. கே.பி.---பத்மநாதன்---பொறுப்பில் ஆயுத
கொள்வனவு இருக்கு மட்டும் அப்படி எதுவும் துயரம் தரும் நிகழ்வுகள்
நடக்கவில்லை. இல்லாததும் பொல்லாததும் அண்ணைக்குச் சொல்லி கே.பியை
அப்புறப்படுத்துவதில் அரசியல் வித்தகரும் மற்றும் உயர் தளபதிகளும்
வெற்றி பெற்றனர்.
புலிகளின் போராளிகள்
எண்ணிக்கை வெளியுலகிற்கு
மிகைப்படுத்திக் காட்டப்பட்டன.
முன்னேறும் இராணுவத்தை எதிர்கொண்டு நிறுத்துவதற்குப் போதுமான
போராளிகள் இல்லை. இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே நிறுத்தியிருக்க
முடியும். நாலாம் ஈழப் போரில் மட்டும் 27,639 போராளிகள் களத்தில் போராடி மாண்டனர்.
●
வன்னியில் முன்னேறும்
இராணுவம் அட்டகாசம் புரிந்தது. அவர்களுக்கு உள்வீட்டு இரகசியங்கள்
கசியத் தொடங்கின.விடியற்காலை கிபீர் விமானம் குத்தி வந்து, அண்ணர் வீரக்கோன் துயின்ற பங்கர்மீது குறிவைத்து பாரிய குண்டை வீசிவிட்டுக் கரும்புகை தள்ளிக்கொண்டு போகுமளவுக்கு காட்டிக்
கொடுப்புகள் எழுச்சிகண்டன.
●
இராணுவம் முன்னேறும்
வேளை அடிக்கடி விழுந்து வெடித்த செல்கள், கிபீர் விமானங்கள் வீசிய குண்டுகள், ஹெலிகொப்டர் மெசீன்கன் வெடிகள் ஆயிலடியை அச்சுறுத்தின.
விரைவில் ஆயிலடியை
மறந்து அகதிளாக ஓடவேண்டி
வரும் என்று அப்பா அம்மா எதிர்
பார்க்கவில்லை. ராச நாச்சியார் வம்சத்தின் பாரம்பரிய
உடைமைகளுக்கு சேதம் வரும் என்றும் எண்ணவில்லை. ஆறு
பிள்ளைகளும்---ஒருவர்கூட எஞ்சாமல்---தமிழ் ஈழ விடுதலைக்காகப் பேராடச்
சென்றுவிட்டனர். ஐவர் ஏற்கனவே பூவுலகைவிட்டு மேலுலகத்திற்குப் போய்ச்
சேர்ந்து விட்டனர். எவர் இறந்துவிட்டார் எவர்
போராடுகிறார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. பிள்ளைகள் ஆறும் போர்
முடிந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் தினமும்
வழிபார்த்து வாழ்ந்தனர்.
●
இராணுவம் கிளிநொச்சி
நோக்கி முன்னேறத் தொடங்கியது. காலாதிகாலமாக வன்னியில்
வாழ்ந்த மக்கள் தமது கிராமங்களை விட்டு வெளியேறினர்.
தலையில் பொதிகளுடன், வாகனவசதி உள்ளவர்கள் வாகனத்தில் வெளியேறினர். வனத்தின் ஊடான வீதிகள் எங்கும் அகதிகள். ஏங்கும் உள்ளங்களைச்
சுமக்கும் வன்னி அகதிகள். அடுத்த நாள் விடியுமா? உத்தரவாதம் இல்லாத அகதிகள்.
பாதையில் தங்குவதும்,
இராணுவம் முன்னேறத் தாமும் முன்னேறுவதுமான வாழ்நாள். நரக வேதனை நித்தம் நித்தம் வருத்தி நிற்கும் வாழ்நாள்கள்.
கிளிநொச்சியை
இராணுவம் கைப்பற்றியது. விடுதலைப்புலிகளின் தலைநகரம் வீழ்ந்தது.
ஏறக்குறைய வன்னி
மக்கள் அனைவரும், கிளிநொச்சிக்குக் கிழக்கேயுள்ள ஊர்களின் வீதிகளிலும் காட்டுமர
நிழல்களிலும், சாக்கடை
ஓரங்களிலுமே தங்கியிருந்தனர். எங்கே போகிறோம் என்பது தெரியாது. ஆனால் போய்க்கொண்டிருந்தனர். என்றோ ஒருநாள் விடிவு வரும்
என்ற நம்பிக்கையில் உயிர் நழுவிப் போகாது பாதுகாக்க
ஓடிக்கொண்டிருந்தனர்.
ஆயிலடி மக்களும்
வெளியேறப் பணிக்கப்பட்டனர். அப்பா தனது காரைக்கொண்டு
புறப்பட்டிருக்கலாம். வயோதிபர், கர்ப்பிணிகளைக்
கருத்தில் கொண்டு ட்ரக்டரில் புறப்பட்டார். அவர்களையும் தனது முக்கியஆவணங்கள் பொருட்கள் அடங்கிய நான்கு சூட்கேசுகளையும் ஏற்றிக்
கொண்டு புறப்பட்டார்.
வீதியில் வாகனத்தைக்
கண்டால் யுத்த விமானங்கள் தேடித்தேடிக் குண்டு வீசித்தாக்கின. இரவில் மட்டுமே
வெளிச்சமில்லாமல் மெதுவாக பிரயாணம் செய்தனர். பகலில் வீதி ஓரம்
மரநிழல்களில் வாகனத்தை நிறுத்தினர். வீதி ஓரத்தில் சமயல்.
பாம்புபூச்சி பற்றி அக்கறைப்படாமல் வீதி ஓரத்தில் உறக்கம்.
ஒரு தினம் மரநிழலில்
நின்ற ட்ரக்டரை மேலே வட்டமிட்ட கிபீர் கண்டு விட்டது.
குறிபார்த்து வானத்தில் வட்டம் போட்டது. மக்கள் தூர ஓடிச் சென்று
குப்புறப் படுத்துக் கொண்டனர்.
விமானம் பயங்கர
கூச்சலுடன் குத்திக் கீழே வந்து மேலே எழும் பொழுது குண்டைத்
தள்ளிவிட்டுப் போனது. பெரும் வெடிஓசை. கரும் புகை மண்டலம். வாகனம் சுக்கு நூறாய்க்
காட்சி கொடுத்தது.
ஓர் இளம் பெண் இறந்த
தனது இரண்டு வயது குழந்தையை கட்டியணைத்தபடி அழுதாள்.
ஏனையவர்கள் அவ்விடத்தை விட்டுத் தமது பிரயாணத்தை
ஆரம்பித்தனர். அந்தப் பெண் தன் இறந்த குழந்தையைச் சுமந்தபடி
அவர்கள் பின்னே நடந்தாள். மூன்றுநாட்கள். கெட்ட நாற்றம் காரணமாக வீதி ஒரம்
வளர்த்தி சருகுக் குவியலால் மூடிவிட்டுச் சென்றாள்.
ஒரு இளைஞன் தனது
தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை
இரு நாட்கள் சுமந்தான். எவரும் எவருக்கும் ஆறுதல் கூறும் நிலையில் இல்லை. எதிர் காலம் புரியாத பயங்கர இருண்ட யுகத்துள் மூழ்கியிருந்தனர்.
கிளிநொச்சியை
இராணுவம் கைப்பற்றிய பின்னர், மக்கள் கிளிநொச்சிக்குச் செல்ல விரும்பினர். அவர்கள்உள்ளே
செல்வதைப் புலிகள் விரும்பவில்லை. கிராமங்களை விட்டு
வெளியேறிய மக்களை புலிகள் மனித கேடயமாகஉபயோகித்தனர்.
உள்ளே செல்வதை எதிர்க்க அதுவேகாரணம்.
அடுத்து அரசு யுத்த
வலையத்துள், பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி, மக்களை எல்லாம் அதற்குள் செல்லுமாறு ஆகாயத்திலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
வீசியது. வானொலி தொலைக்காட்சிகளில் அறிவித்தல் செய்தது.
இரண்டாவதாக நிறுவிய
சிறிய பாதுகாப்பு வலையத்துள் ஏறக்குறைய 300,000 மக்கள் பாதுகாப்புத் தேடினர். புலிப்போராளிகளும்
பாதுகாப்பு வலயத்துள் புகுந்து கொண்டனர். சிறிய பகுதிக்குள் வாழ முடியாத பேரவலம். மக்கள் இராணுவ பிரதேசத்துள் புக
விரும்பினர். புலிகள் விரும்பவில்லை.
இராணுவம் ஏவிய
செல்கள் தினம் தினம் பாதுகாப்புவலயத்துள் விழுந்து விழுந்து வெடித்து வெடித்து
உயிர்களைக் காவுகொண்டன. சிதறி ஓடும் மக்கள் வெறி கொண்ட
ஓநாய்களின் கோரப் பற்களுள் சிகக்கியவர்கள் அன்ன அவலப்பட்டனர்.
மக்கள் பங்கர்கள்
தோண்டி அகிழான்களாக, நில எலிகளாக,
அவற்றினுள்ளே நாள் முழுவதும் சீவியம்
பண்ணினர். பங்கரை விட்டு வெளியேறப் பயந்து ஆகாயத்தை அண்ணாந்து
நோக்கி ஏங்கி அழுது நடுங்கும் இளம் குமர்கள், தாய்மார்கள். இரைந்து வரும் கிபீரைக் கண்டு பயந்து நடுங்கி 'ஐயோ கொல்லப் போறான்' என்று கத்திக் கதறி கைக்
குழந்தையோடு ஓடும் அன்னையர்கள். சிதறிய உடல்களை கட்டி அணைத்து
அழும் திக்கற்ற மனிதர்கள். இறந்தசடலங்களைப் புதைக்க வழிதெரியாமல் திணறி
அழுதுபுலம்பும் பெற்றார்கள். எங்கும் ஒப்பாரியின் ஓயாத ஓலம்.
ஒரு கொத்துக் குண்டு
ஒரு பங்கரின் மேல் விழுந்தது. அங்கு பாதுகாப்புத்தேடிய அத்தனை
ஜீவன்களும் சிதறிச் செத்தனர். உடல்களை மண்
மூடியிருந்தது. கால், கை, தலை ஆங்காங்கு வெளியே காட்சி கொடுத்தன.
வைத்திய வசதி
கிட்டாமல் வீதியோரங்கள், மரநிழல்களில் விக்கி விக்கிச் சாகும் ஜீவன்கள். உற்றார் உறவினர்
எவருமில்லாமல் அந்தர வழியில் உயிர் போகும் ஜீவன்கள்.
இறந்த உடல்களைக்
குதறும் நரிகள். காகங்கள். கழுகுகள்.வெறும் எலும்பாய்க் காட்சிதரும் மனித
சடலங்கள். அவற்றின் மீது
ஏறியிருந்து கத்தும் தவளைகள்,
ஊர்ந்து நகரும் எறும்புத் தொடர்கள்.
மாதக் கணக்காய்த்
துவைக்காத அழுக்கு உடைகள்.எண்ணெய் காணாத வரண்டு பறக்கும் தலை முடி. தேகத்தில் நீர் ஊற்றிக் குளித்து மாதங்களாகின்ற கோலங்கள். கெட்ட
மணத்தைச் சுமந்த நிற்கும் மனித ஜென்மங்கள்.
உணவு தா தா என்று
ஓயாமல் கதறும் ஒட்டிய வயிறுகளைச் சுமந்து ஏங்கும் மூன்று
லட்சம் ஆண்டிகள். நடைப் பிணங்களான வன்னி மக்கள். பசி,
பட்டினி, பயங்கரம், பரிதாபம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உதவிக்கு எவரும் வருவதில்லை. ஏன்
என்று கேட்க யாரும் இல்லை. கொல்வதற்கு மட்டும்
கொலைஞர்கள் ஐம்பதினாயிரம் சூழ்ந்து நின்றனர்.
●
அப்பா, அம்மாவும் மற்றும் ஆயிலடி மக்களும் பாதுகாப்புவலயம்
செல்லும் பாதையில் போய்க்கொண்டிருந்தனர்.
புதுமாத்தளன் இடம்
மாறும் வைத்திசாலையில் நான் காயப்பட்டு இருப்பது
பெற்றாருக்குத் தெரிய வந்தது. மிகக் கஷ்டப்பட்டு மாலைநேரம் வைத்திசாலை அடைந்தனர்.
கமக்கட்டுள்
கோல்களுடன் நான். பதை பதைத்துப் போனார்கள். கட்டி அணைத்து அழுதனர்.அழுதுமுடிந்து
தரையில் அமைந்த எனதுபடுக்கை விரிப்பில் உட்கார்ந்தனர்.
அடிக்கடி கடைக்
கண்ணால் அவதானித்தேன். மழிக்காத நரை விழுந்த தாடி.
வளர்ந்த தலைமுடியை அப்பா குடுமியாய்க் கட்டியிருந்தார்.
அம்மாவின் தலையில் சீப்புப் பட்டு மாதங்கள் போலும். உடைகள் அழுக்கு
மண்டி அருவருப்பான மணம் வீசி தமது சரிதையை வெளிப்படுத்தின.
முகங்களில் கோலோச்சிய
ராசகளை செத்துப் போனது. ஆனந்த குளிர்மை இல்லை. செந்தளிப்பு, அதுவும் இல்லை. விறகுதடியாகத் தெரிந்தார்கள். ஆண்டுக்கணக்காக சேகரித்த சோகம் முகங்களில் குழைத்து அப்பியிருந்தது.
எனது கைகளை வருடியபடி
அம்மா விசாரித்தார். 'பிள்ளை,முல்லை வளர்ந்திருக்கிறாளே?" என் நெஞ்சு திக் என்றது. உடைந்து வெந்துபோன உள்ளங்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை.
'ஓம் அம்மா."
உயிரிழந்த சொற்கள்.
'பாவலன் நல்லா
வளர்ந்திருப்பானே?"
'ஓம் அம்மா.
அப்பாவிலும் உயரம்."
அம்மாவின் முகத்தைப்
பார்த்தேன். மகிழ்ச்சி ரேகைகள் துள்ளி விளையாடின.
‘பிள்ளை, வீரக்கோனின் பிள்ளைகளைப் பார்க்க ஆசையாய் இருக்குது. என்டை பேரப் பிள்ளைகளை எங்கே பார்க்கலாம்?"
‘சண்டை முடியப்
போகுதம்மா. சண்டை முடிய கிளிநொச்சியில் பார்க்கலாம். புதிய வீடெல்லே
கட்டினவர்." அதுவரை எதுவும் பேசாதிருந்த அப்பா 'ரதிக்கு இப்ப மூன்று வயது. ராகவனுக்கு இரண்டு. இல்லையோணை?"
'ஓமப்பா. அதுகளும்
வீரக்கோனைப் போல அழகாய், உயரமாய்
ராச நாச்சியார் வம்ச வாரிசுகள் என்பதை உரத்துச் சொல்லும்.சண்டை முடிஞ்சவுடனே
முதல்வேலைஎன்டை பேத்தி பேரனையும் முல்லையையும்
பார்க்கிறதுதான்."
நள்ளிரவாகிவிட்டது.எனதுஅருகில்
சயனிக்க வசதி இல்லை.
இருவரும் எழுந்து,
'நாங்கள் வைத்தியசாலையில் எங்காவது ஓரிடம் பார்த்து தூங்குகிறோம். விடிய வந்து
பார்க்கிறோம்," என்று கூறிவிட்டு எழுந்து நடந்தார்கள். தூரச் சென்ற பின்னர்
அம்மா சிறிது நேரம் நின்று திரும்பிக்கைஅசைத்துவிட்டுப்
போனார்.
அடுத்த தினம் காலை
நேரம். இராணுவத்தின் மோட்டார்குண்டுகள் வைத்தியசாலைமீது தொடர்ந்து கொட்டுப்பட்டன. 'ஐயோ! முறையோ!" என்ற ஓலக்
குரல்கள் ஓங்கி ஒலித்தன. அழுகுரல் ஓசை இதயங்களைப் பிய்த்து
எடுத்தது. எங்கும் புகை மயம். வெடிபொருள் மணம். குருதி மயம்.
யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் தங்கிய பகுதி சேதம் இல்லாது
தப்பியது.
நாற்பத்தொன்பது
நோயாளர்கள் கொல்லப்பட்டனர். ஐம்பது நோயாளர்கள் காயமடைந்தனர்.
ஊன்றுகோல் உதவியுடன்
அப்பா-அம்மாவைத் தேடினேன்.
நீண்ட நேரத்தின் பின்னர்
பார்த்தேன். உடல்கள் இரண்டும் சிதறிப்போயிருந்தன.
அடையாளம் காண்பதே சிரமமாயிருந்தது. ஓலமிட்டுக் கத்தினேன்.
மயங்கி விழுமட்டும் கத்தினேன்.
உடல்களுக்கு என்ன
ஆனது? புதைத்தார்களா? எரித்தார்களா? அப்படியே அழுகி அழியவிட்டார்களா? மிருகம் பறவைகள் தின்றனவா? எனக்கு எதுவுமே தெரியாது.
உடல் சிதறியது ராச
நாச்சியார் வம்சத்துக்குஇதுமுதற்தடவை அல்ல. முல்லையும்
கொழும்பில் உடல் சிதறித்தான் சுதந்திரப்போரில் ராச நாச்சியார் வம்சப் பங்கைச்
செலுத்தியவள். ராசநாச்சியார் வம்சத்தின் குருத்துகள் அத்தனை பேரும்---என்னைத்தவிர---போய்ச்
சேர்ந்து விட்டனர். நானாவது எஞ்சவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகின்றது. ராச நாச்சியார் வம்சம் அழிந்து மறைந்து போவதை என்னால் எண்ணிப் பார்க்கமுடியவில்லை.
●
மக்கள் பாதுகாப்பு
வலையத்தைவிட்டு வெளியேறி ஸ்ரீலங்கா அரசின் புலத்துள் நுழைய
முயன்றனர். விடுதலைப் புலிகள் மக்களை வெருட்டி அடக்கி
வைத்துக்கொண்டனர். மனித கேடயம் இன்றேல் அவர்கள்தம் கதை அத்தோடு நிறைவு
பெற்றுவிடும்.
எல்லையைக் கடக்க
நந்திக் கடலேரி ஓரம் சகல வன்னி மக்களும்---மூன்று லட்சம்
பேர்---நின்றனர். அவர்களின் எதிரே துப்பாக்கிகளுடன் இரு
இளைஞர் காவல் புரிந்தனர். மக்கள் துப்பாக்கி கண்டு எல்லை
கடக்கப் பயந்து நின்றனர். துணிந்து சென்ற இருவர் சுடப்பட்டனர்.
பின்னர் யாரும் எல்லை பாய்வதை நினைக்கவில்லை.
●
ஆனந்தபுரம்
தோல்விக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் போர்க்களமாகியது. அதுவே
இறுதிப் போர்க்களம் என்று தவறுதலாக சொன்னார்கள். ஆனந்தபுரப் போரின் பின்னர்
விடுதலைப்புலிகள் இராணுவத்தை எதிர்த்துப் போர் புரியாத பொழுதிலும், விமானங்கள் குண்டு வீசின. இராணுவம் செல்கள் ஏவியது.
●
புலிகளின் வீழ்ச்சி
வெளியிலிருந்து வரவில்லை. நம்பிக்கையானவர்களாக நடித்து, பங்கர் இருளில் மூழ்கி இருந்த அண்ணையை, முக்கிய பொறுப்புகளில் இருந்த தலைவர்கள் தவறான
வழியில் வழிநடத்தினர். தாய்லாந்துப் பேச்சுவார்த்தையை
அடுத்து நோவேயில் பேச்சுவார்த்தை. பாலசிங்கம் அங்கிள் உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியக
சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசினார். கூட ஐரோப்பா சென்ற அரசியல்
வித்தகர் அண்ணைக்கு சிரித்து சிரித்துப்போட்டுக் கொடுத்தார். விளைவு பாலா அங்கிள்
நுகத்திலிருந்து கழற்றப்பட்டார்.
வித்தகர் நுகத்தில்
கழுத்துக் கொடுத்து இழுக்கத் தொடங்கினார். பாவம். வைக்கோல் பாரம் மலையாக ஏற்றிய
வண்டில் நுகத்தில் எலிக்குஞ்சு பூட்டியது
போலிருந்தது.அண்ணையை முருக அவதாரமாக உயர்த்திக்
கவிபாடி, கட்அவுட் வைத்து
கைக்குள் வைத்துக் கொண்டார். வெறும் மட் பானைக்குள்
சிரட்டை அகப்பைசோறு அள்ளிப் பரிமாறியது. புலிக் கொடி அதன் பின்னர் ஏறியதே இல்லை. இவர் கிபீர் குண்டு வீச்சில் விடை பெற
இன்னொருத்தர் இராசதந்திரி வேசம் போட்டார். சலவைத்
தொழிலாளியின் நீலப்பானைக்குள் விழுந்த நரி இராச வேசம் அணிந்து சிங்காசனம் ஏறியது போல.
சிகரம் வைத்தது போல
அம்மான் வெளிநாட்டு அதிகாரங்களை அப்பி வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டார். கணக்குக் காட்டவில்லை என்று கே.பியின் அதிகாரங்களை புடுங்கி
எடுத்த கையோடு புலிகளின்கதை இறுதிக் காட்சி ஆரம்பித்தது.
ஏலவே, தாம் செய்த கொலைகளை எல்லாம் அண்ணை தலையில் சுமத்திய இவர்கள், தமிழன் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்த முடியுமா என்ற
கேள்வி திக்குத்திக்காய் மறைவில் ஒலித்தது. புலிகளின் வீழ்ச்சியை
பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த பெருமை அரசியலில் வித்தகருக்கே உரியது.
புலி ஆதரவு ஊடகங்கள்
இந்தப் பூச்சியங்களை வீரதீரசூர இராட்சத சாணக்கியர்களாக
தமிழ் மக்களுக்குக் காட்டின. அவன் மௌனமாகத் தலை அசைத்துக்
கொண்டிருந்தான். புலிகளின் கதை நிறைவு பெற்றுக்
கொண்டிருந்தது. ஈழத் தமிழன் போர்க் காலவரலாறு குழந்தைகள் மண்ணில் சோறு கறி ஆக்கிக்
குதூகலித்தது போலாகியது.
●
எல்லாம் கடந்த
நிலையில் எஞ்சிய தளபதிகள் போராளிகள் அண்ணையின் இறுதிமுடிவை ஆவலடன் எதிர்பார்த்து நின்றனர்.
அண்ணை போர்க்களப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார்:
'தனித்து நின்று
போராடும் என்னை இருபத்தைந்து நாடுகளின் உதவி பெற்ற சிங்கள பௌத்த பேராதிக்க அரசு
இன்று தோற்கடிக்கலாம். வரலாற்றில் புலிகள் தலைவன்
சரண் அடைந்தான் என்ற பதிவு அமையக் கூடாது. எதிர்காலச் சந்ததிக்கு எடுகோளாக அமைய கூடாது. விடுதலைப் போராட்டம்
முள்ளிவாய்க்காலோடு முடிந்து போன கதையல்ல. தொடர் கதை. மகா பாரதத் தொடர் கதை. இராமநாதன் தோற்றதோடு போராட்டம் ஒழிந்து போனதாகக் கதை இலலை. அருணாசலம், பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் தோற்றுப் போனதோடு விடுதலைப்போராட்டம்
ஒழிந்து போகவில்லை. எனக்குப் பிறகும் விடுதலைத் தலைவர்கள் தோன்றுவார்கள். புதிய சாணக்கிய முயற்சிகள் அரங்கேறும். சிங்கள
இராணுவம் மூட்டைமுடிச்சோடு வெளியேறும். தமிழ் ஈழவிடுதலைக் கொடி
கம்பீரமாகப் பறக்கும்.
நாங்கள் எங்கள்
பூமியை உயிராக நேசித்தோம். எங்கள் மண்ணில் சுதந்திரமாக வாழ
விரும்பினோம். அதனைப் பொறுக்காது உலக நாடுகளின் உதவியோடு எங்களை அழித்துள்ளார்கள். இன்று வலுவிழந்து வீழ்;ந்து நிற்கும் தமிழன் எழுந்து நின்று போராடும் காலம் ஒன்று கனிவாகி வரும். கன்னத்தில்
முத்தமிட்டுக்கால் வாரப்பட்டவர்கள் நாங்கள். கண்ணிருந்தும் பார்க்காத, காதிருந்தும் கேட்காத உலகம் மாறும். உண்மையின்
பக்கம் திரும்பும், காலம் நாளை ஓடி வரும். ஈழத்தமிழன்அக்கிரம வரலாறு மரணித்து மறையும். ஒன்பது கோடி தமிழன் உதிரத்தோடு
ஒட்டிய போராட்ட வரலாறு.அது என்னோடு முடிந்து
போன கதை அல்ல.
●
எனது உயிரிலும் மேலான
போராளிகளுக்கு, உங்களுக்கு மூன்று வாய்புகள் தருகிறேன். நீங்கள் விரும்பினால் பொதுமக்களுடன்
வெளியேறலாம் அல்லது சரணாகதி அடையலாம் அல்லது போர்க்களத்தில்
கடைசிவரை என்னோடு நிற்கலாம். நான் இறுதிவரை போர்க்களத்தில்
நிற்பேன்."
போராளிகள்
துப்பாக்கிகளையும் சைனைட் குப்பிகளையும் வீசிவிட்டு வெளியேறும்
முயற்சியில் ஈடுபட்டனர். என்னைப் பொறுத்தளவில் அவை ராச நாச்சியார் வம்சத்து ஞாபக
சின்னங்கள்.அவற்றைப் பாதுகாக்கத் தீர்மானித்தேன்.
பொல்லை ஊன்றி தேகத்தை
முன்னே இழுத்து முள்ளிவாய்க்காலில், நந்திக் கடலோரம் அடைந்தேன். கால்கள் தாங்கமுடியாத வலி கொடுத்தன. நாவல் மரம்
ஒன்று. அதன் கீழ் அங்கு கிடைத்த இரும்புக் கம்பியால் கிடங்கு கிண்டி,
எனது பொக்கிசங்களை---பிஸ்ரல், தோட்டா, சைனைட் குப்பி---புதைத்துவிட்டு,இரும்புக் கம்பியை அடையாளங்காட்ட மரத்தோடு குத்தி
வைத்து விட்டு கண்ணயர்ந்து தூங்கிவிட்டேன்.
~~~~~~~~~~~~~~ இன்னும் வரும்...
No comments:
Post a Comment