கஸ்டப்பட்டு
உழைக்கும் பணத்தை, தட்டிப்
பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது.
இந்திரன் மிகவும்
கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில்
பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு
அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக்
கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே
கழிகின்றது.
"என்ன! இன்னும்
ஒரு பத்து வருஷம் உழைச்சேனில்லை. அதுக்குப் பிறகு உடம்பு ஆட்டம்
கண்டுவிடும்."
தொலைபேசி
அழைப்புகள்
இந்திரனது
உறக்கத்தைக் கலைக்கும்போது அவர் கடுப்பாகிப் போகின்றார். இன்று அவருக்குப் பகல்
வேலை இல்லை. 'றோஸ்ரர் டே ஓஃப்'. உடம்பு அசதி தீர நன்றாகப் படுத்து உறங்கலாம் என நினைத்திருந்தார்.
"நான் மைக்கல்,
Telstra Company இல் இருந்து
கதைக்கின்றேன். தாங்கள் நான்கு வருடத்திற்கு முன்பு எமது தொலைபேசி இணைப்பைப்
பாவித்துள்ளீர்கள். பின்பு ஏதோ காரணங்களால் விலகி விட்டீர்கள். தற்போது தாங்கள்
எந்த இணைப்பைப் பாவிக்கின்றீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?"
"சொல்ல முடியாது!"
"சரி
பரவாயில்லை. நாங்கள் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி பல புதிய நல்ல திட்டங்களை,
மலிவு விலையில் அறிமுகம்
செய்திருக்கின்றோம். தாங்கள் ஏன் மீண்டும் எமது இணைப்பில் இணைந்து கொள்வது பற்றி
சிந்தித்துப் பார்க்கக் கூடாது?"
"நாங்கள்
தற்போதைக்கு வேறு ஒன்றிற்கும் மாறுவதாக உத்தேசம் இல்லை."
"தாங்ஸ்
சேர்."
"தாங்ஸ்"
"நன்றி"
என்ற நயமான வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டார் மைக்கல். மைக்கல் பண்புள்ள மனிதராக
இருக்க வேண்டும்.
முன்பு ஒருநாள்
இந்திரனுக்கு இப்படியும் நடந்தது. அவள் ஒரு சீனப்பெண்ணாகவோ அல்லது வியட்நாமியப்
பெண்ணாகவோ இருக்க வேண்டும். அவள் எங்கிருந்து கதைக்கின்றாள் என்பதைக் கண்டறியவே
இந்திரனுக்கு மூன்று நிமிடங்கள் பிடித்தன. அவளின் ஆங்கிலப் புலமையின்
விசித்திரத்தில், தான் ஏதோ
சரளமாகக் கதைப்பதாக அவளுள் ஒரு நினைப்பு. அவள் ஒரு Mortgage Broker Company
இல் இருந்து கதைத்தாள். இந்திரனது
வீட்டிற்கான Bank loan ஐ
மாற்றுவதற்கான திட்டம் அவளுடையது.
"நீங்கள்
முதலில் ஆங்கிலம் நன்றாகக் கதைப்பதற்குப் பழக வேண்டும்" என்றான் இந்திரன்.
அதை அவள் எங்கே
கேட்டாள். கரிக்கோச்சி போவது போல, பாடமாக்கியதையோ
- பார்த்து வாசிப்பதையோ நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனாள். அவளுடன் கத்தியதில் 'வீசிங்' வந்துவிடவே தொலைபேசியின் இணைப்பை துண்டித்தார்
இந்திரன். மறுகணம் திரும்பவும் தொலைபேசி அடித்தது. அவள்தான் திரும்பவும்
எடுத்தாள்.
"ஏன் இணைப்பைத்
துண்டித்தீர்கள்? உங்களுக்கு என்ன
ஆங்கிலம் கதைக்க பேசத் தெரியாதா?" என்றாள் அவள்.
இந்திரனுக்கு வந்த
சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே தொலைபேசியின் இணைப்பை மீண்டும்
துண்டித்தார். அதன் பின்பு தொலைபேசி அடிக்கவில்லை.
இந்திரனது மனைவி
வத்சலா. அவள் ஒரு 'ஜாலி'ப் பேர்வழி. அவளுக்கு அதிஸ்டம் ஒருநாள்
இப்படிக் கிடைத்தது.
"உங்களுக்கு Queensland
இல் உள்ள Gold coast ஐ சுற்றியுள்ள ஹோட்டல்களில் ஒரு மாத காலம்
தங்குவதற்கு அதிஸ்டம் கிடைத்துள்ளது. இந்த வருடம் கிறிஸ்மஸ் காலங்களில்
நீங்கள் இதனைப்
பாவித்துக் கொள்ளலாம்."
"You keep it!" என்றாள் வத்சலா.
மறுமுனையில்
இருந்தவள் வத்சலாவை விடுவதாக இல்லை. வசியம் செய்து கொண்டே இருந்தாள். ஆற்றாக்
கொடுமையினால், "தயவு செய்து
எல்லாவற்றையும் தபாலில் எனக்கு அனுப்பி வையுங்கள்" என்றாள் வத்சலா. "நோ!
நோ! அந்த offer இன்று மாலை 5.30 மணியுடன் முடிவடைகின்றது. நீங்கள்
நூற்றிப்பத்து டொலருக்கு உங்கள் கிறடிற் கார்ட் மூலம் ஒரு 'வண் ஓஃப்
பேய்மன்ற்' செய்து கொண்டால்
போதும். அதிஸ்டம் உங்களுக்கே!" மறுமுனையில் ஒலித்தது.
அதிஸ்டம் என்னவென்று
கடைசியில் புரிந்தது.
ரெலிவிஷன்
விளம்பரங்கள்
காலை ஆகாரமாக 'கோர்ண் ஃபிளேக்ஸ்'சை ஒரு கப்பினுள் போட்டு, அதற்குள்
கொஞ்சம் பாலையும் ஊற்றிக் கொண்டு ரெலிவிஷனுக்கு முன்னால் அமர்ந்தார் இந்திரன்.
ரி.வி. யை 'ஓன்' செய்ய - "லவ் இற்! லவ் இற்!! லவ்
இற்!!!" என்று மூன்று பெண்கள் ஏக காலத்தில் கூக்குரலிட்டார்கள். அதைத்
தொடர்ந்து ஒரு சிறிய போத்தலும், முத்துப்பரல்கள்
சிதறுவது போன்றதுமான காட்சி விரிந்தது. அது ஒரு - முகத்துக்கும் முழு உடம்பிற்கும்
பூசக்கூடிய களிம்பு ஒன்றிற்கான விளம்பரம். ஏதோ ஒரு வரண்டு போன பூமியில், வறுமையில் வாடும் ஒரு சிலரை இனம் கண்டு -
அவர்களை முகம் கழுவாமல் ஒரு படமும், பின் முகம் கழுவி களிம்பு பூசி கொஞ்சம் சிரிக்கச் செய்து எடுத்த படமும்
விரிந்தது. அவர்கள் வாயினாலே அந்தக் களிம்பின் மகிமை பற்றிப் புகழ் பாட
வைத்தார்கள். சம்பந்தமேயில்லாத உருவங்கள்.
நூற்றி அறுபது டொலர்
பெறுமதியுள்ள அந்தக் கிறீமை 'தேற்றி
நைன் நைன்ரி ஃபைவ்' டொலருக்குத் தருகின்றார்களாம். ஸ்பெஷல்.
அதுவும் இப்பொழுதே 'கிறடிற்
கார்ட்' குடுத்து
வாங்குவீர்களாயின் அதனுடன் ஒரு இலவச 'பிறஷ்'. அதுவும் 'தேற்றி நைன் நைன்ரி ஃபைவ்' பெறுமதியானதாம்.
இன்னுமொரு விசேட செய்தி - முதலில் வரும்
நூறு தொலைபேசி அழைப்புகளிற்கு இன்னுமொரு கிறீம் போத்தலும் ஒரு பிறஷ¤ம் இலவசம். இலவசம்! இலவசம்!! உங்கள் வசம் வசம்.
ஆக மொத்தம் நானூறு டொலர் பெறுமதி வாய்ந்த பொருட்களை உங்களுக்கு நாற்பது
டொலருக்குத் தருகின்றோம்.
இரண்டு வெள்ளை
உருவங்கள், ஒரு நீக்கிரோ, ஒரு மஞ்சள், ஒரு பொது நிறமென ஐந்து பெண்கள் வர்ண பேதமற்று வலை
விரித்தார்கள்.
இரண்டு வருடங்களுக்கு
முன்பு இதே போல ரி.வி. விளம்பரம் பார்த்து வாங்கிய 'கிறைண்டர்' இந்திரனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. 'கிறைண்டர்' வாங்கினால் 'ஹாண்ட் பாக்'
இலவசம் என்று சொன்னதும் வத்சலா ஒற்றைக்
காலில் நின்று கொண்டாள். கிறைண்டர் வந்து சேருவதற்கு இரண்டு கிழமைகளுக்கு
முன்பதாகவே கிறடிற் கார்டில் காசு மறைந்து விட்டது.
கிறைண்டருக்கு எழுபது
டொலர். அனுப்புவதற்கு பன்னிரண்டு டொலர். கிறைண்டர் வந்ததும் வத்சலா முதலில்
அரைத்தது எள்ளு. எள்ளு கிறைண்டருக்குள் வழுக்கி போக்குக் காட்டியதில் கிறைண்டரின்
பல்லுப் போச்சு. ஒரு வருடம் 'வொறன்ரி'
என்பதால் அதைப் பார்சல் செய்து
பன்னிரண்டு டொலர் முத்திரை ஒட்டி அனுப்பினார்கள். கிறைண்டர் அவர்களிடம் போய்ச்
சேர்ந்ததும்,
"கிறைண்டருக்குள்
என்ன அரைத்தீர்கள்?" மூக்கால்
கேட்டாள் ஒரு பெண்.
"எள்ளு"
என்றாள் வத்சலா.
கிறைண்டர் பெட்டியில்
எழுதியிருப்பதைத் தவிர வேறொன்றையும் அரைக்கக் கூடாது என்று விளக்கம் குடுத்தாள்
அந்தப் பெண். பத்து டொலர்களுக்கு 'செக்'
அனுப்பினால் பழுதான கிறைண்டரைத் திருப்பி
அனுப்ப முடியும், அல்லது திருத்தி
அனுப்புவதென்றால் அறுபது டொலர்கள் என்றார்கள்.
"ஒரு
இத்துனூண்டு எள்ளையே அரைக்க முடியாத கிறைண்டரை வைத்து நான் என்ன செய்வது. நீங்களே
அதை வைத்திருங்கோ" வத்சலா சொல்லிவிட்டாள்.
ஆக மொத்தம்
தொண்ணூற்றி நாலு டொலருக்கு வத்சலா ஒரு 'ஹாண்ட் பாக்' வாங்கியிருந்தாள்.
அதுவும் ஒருநாள் - இரண்டு போத்தல் 'டே
அண்ட் நைற்' கிறீமை அதற்குள்
வைத்தபோது 'வார்' கழுத்திலும், 'பாக்' நிலத்திலுமாகிப்
போனது.
அதுதான் போனது போச்சு
தொண்ணூற்றி நாலு டொலருடன். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்திரனது நண்பன்
சிவகடாச்சத்திற்கு ஒரு விசித்திரமான 'ஸ்ரேற்மன்ற்' வந்தது. அவன்
தனது 'கிறடிற் கார்ட்' தகவல்களை சரி பார்த்ததில் ஏழு டொலருக்கான ஒரு
மர்ம முடிச்சைக் கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடினான். அதற்கு முந்தைய
மாதத்திற்கான 'ஸ்ரேற்மன்றைப்'
பார்த்தபோது அதிலும் ஏழு டொலருக்கு 'டிபெற்' இருந்தது. இப்படியே இரண்டு வருடங்களுக்கு அனுமான் வால்
போல முன்னோடியது அந்த ஏழு டொலர்களும். 7 x 24 = 168 டொலர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாங்கிய 'ஷேவிங் றேஷர்' ஒன்றிற்கான பணத்தை உடனேயே கிறடிற் கார்ட் மூலம்
செலுத்தியிருந்தான் சிவகடாச்சம். ஆனாலும் ஏதோ தவறு நடந்து விட்டது அல்லது
வேண்டுமென்றே செய்துள்ளார்கள். கொம்பியூட்டரில் ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகவும்,
இனிமேல் அந்தத் தவறு நடவாது என்றும்
உறுதிமொழி கூறினார்கள். இரண்டு வருசத்தில் கழித்த காசை திருப்பித் தருமாறு
கேட்டபோது 'பாஸ்ற்' - 'பாஸ்ற்' என்றார்கள்.
ரி.வி.யில்
விளம்பரங்களைச் மிக நயமாகச் செய்துவிட்டு, அதன் 'Terms & Coditions'ஐ கடுகதி வேகத்தில் புரியாதபடி கூறுவதும் - விளம்பரங்களை கொட்டை எழுத்தில்
போட்டுவிட்டு அதன் 'Terms & Coditions'ஐ உறுக்குட்டி எழுத்தில் எழுதுவதும் கலையாகிப் போய் விட்டது.
கடிதங்கள்
இந்திரன் ரி.வி.யில்
ஒரு தமிழ்ப்படம் போட்டுப் பார்த்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு குட்டித்தூக்கம்
போடுவதற்காக சரிந்தார். மனைவி பிள்ளைகள் வருவதற்கு இன்னமும் மூன்று நான்கு
மணித்தியாலங்கள் எடுக்கும். மனைவி வேலை முடிந்து வரும்போது மகனை
பள்ளிகூடத்திலிருந்து கூட்டி வருவாள். மகள் 'யூனி' முடிந்து
வர ஆறு மணியாகும்.
அவருக்குப்
பக்கத்தில் மலைபோல கடிதங்கள் கட்டுக் கட்டாக குவிந்து கிடந்தன. சிவகடாச்சத்திற்கு
நடந்ததற்குப் பிறகு - கிறடிற் கார்ட் பில்லை மாதா மாதம் 'செக்' பண்ணும்
வேலையை - துணி துவைப்பது, சமையல்
செய்து பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளுடன் 'அடிசனலாக'க் கூட்டியிருந்தாள் வத்சலா.
'றீடஸ்ற் டையஸ்ற்'
(Readers Digest) ஒரு காலத்தில் மிகத்
தரமான புத்தகம். இப்பொழுது 'Yes' 'No' என்று பத்திரங்களை அனுப்பித் திண்டாடுகிறது. அவர்களிடம் இருந்து வந்த
மஞ்சள் நிற 'கவர்' ஒன்று 'Sweepstake Lotto' என்று முகம் காட்டியது. வழமையைப் போல 'No
Form" இல் நிரப்பாமல் 'Yes
Form' இல் நிரப்பச் சொல்லி அது
மன்றாடியது. பன்னிரண்டு வருஷம் தளரா முயற்சியுடன் முத்திரை ஒட்டி 'நோ ஃபோம்' அனுப்பி இன்னமும் 'Sweepstake Lotto'வும் விழாமல் தொடர்ந்தும் காத்திருக்கின்றார்
இந்திரன். அதற்கு என்று ஒரு 'File' கூடத்
திறந்து வைத்திருக்கின்றார். இந்திரனுக்கு ஓசிப்புத்தகம் படிப்பதில்தான் அலாதிப்
பிரியம் என்பதை அவர்கள் இன்னமும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்தும் கட்டுக் கட்டாக
அனுப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்.
கடிதக்கட்டை பார்த்துவிட்டு
கண் அயர்ந்தார் இந்திரன்.
மின் அஞ்சல்கள்
இதுகளைவிட
மின்னஞ்சலுகளிலைகூட 'ரோச்சர்'
பண்ணுறாங்கள்.
நேரடி வருகை
'ஹோல்' அழைப்பு மணி கேட்டது. 'அதிக நேரம் உறங்கி விட்டேனோ?' எனக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 2.25 காட்டியது. அழைப்பு மணி விட்டு விட்டுத்
தொடர்ந்தது. மெதுவாக நடந்து ஹோலினுள் நுழைந்தார் இந்திரன். உள்ளே இருந்த 'கமரா' திரையில் ஒரு இளம் பெண்ணின் உருவம் தெரிந்தது. தாமதிக்காமல் உடனே கதவைத்
திறந்தார். அந்த அழகிய பெண் தயாராக 'ஷேக் ஹாண்ட்' கொடுத்தாள்.
அவரின் கைகளினூடாக குளிர் ஊடுருவிப்
பாய்ந்தது. தன்னை 'அண்ட்றியா'
என அறிமுகம் செய்த அவள் தனது திட்டத்தை
விலாவாரியாக விளக்கினாள்.
வெண்ணைக்கட்டியில்
வளர்ந்து, உருண்டு திரண்டு அழகாக
அவள் இருந்ததால் இந்திரனின் நித்திரைக் கலக்கம் விரைவாகவே தெளிந்தது. மின்சாரம்,
எரிபொருள் வாயு (Gas) போன்றவற்றை வழங்கும் 'சப்ளையரை' (Supplier) மாற்றும் திட்டம் அவளுடையது. இப்படி எத்தனையோ
திட்டங்களையெல்லாம் தவிடு பொடியாக்கிய இந்திரன் அவளிடம் 'ஆமாப்' போட்டு
திணறிக் கொண்டிருந்தார். அவள் அதற்கெனவே கற்றுத் தேறி வந்தவள் அல்லவா?
அவளிற்கு கொம்பனி
வழங்கியிருந்த அடையாள அட்டை - கழுத்திலே கிடந்த பட்டியிலிருந்து - அவள் குனிந்து
குனிந்து கதைக்கும் போதெல்லாம் ஆடியது. வெம்மை தாளாமல் மார்புகளை அகலவே திறந்து
விட்டிருந்தாள். முகத்தில் பளிங்குக்கற்கள் போல வியர்வை படர்ந்திருந்தது.
"நான்
உங்களுக்கு 'றிவோட்' தர வந்திருக்கின்றேன். ஏன் வேண்டாம் என்கின்றீர்கள்?
உங்களிடம் 'றைவேர்ஸ் லைசென்ஸ்' இருந்தால் தாருங்கள். நான் எல்லாவற்றையும்
முடித்துவிடுவேன்" சிரித்துச் சிரித்துப் பேசினாள். அவள் கதைக்கும் அழகையே
பார்த்துக் கொண்டிருந்தார் இந்திரன்.
"என்னுடன் ஒரு 'ஃபைவ் மினிற்' செலவழிக்க மாட்டீர்களா?" கெஞ்சினாள் அவள். அந்தக் கேள்வி இந்திரனின் சிந்தனையைத்
திசை திருப்பியது.
"யு சீ! ஐ ஆம்
வெர்ரி •பியூட்டிபுல்
கேர்ள்" நெருங்கி வந்து தனது அடையாள அட்டையை அவரின் முகத்துக்கு நேரே
தூக்கிக் காட்டினாள்.
"எத்தனை பேர்
இப்படி வெளிக்கிட்டிருக்கின்றீர்கள்?"
"நான் ஒருத்தி மட்டும்
தான் இந்த ஏரியாவிற்கு."
"என்னத்தில்
வந்தாய்?"
"காரில். காரை
சாலையின் தொடக்கத்தில் நிற்பாட்டி வைத்திருக்கின்றேன்."
"காரில் வேறு
ஒருவரும் இல்லைத்தானே!"
"இல்லை. நான்
மட்டும்தான் வந்தேன்."
சந்தர்ப்பம் சாதமாகி
வரும் மகிழ்வில் மேலும் நெருக்கமானார்கள். இந்திரன் அவள் காதருகில் ஏதோ
சொல்வதற்காகக் குனிந்தார். அவள் உடலில் இருந்து அலை அலையாக எழுந்த 'ஹோலோன்' வாசனை நாசித் துவாரங்களினூடு புகுந்து இந்திரனை ஒரு
தூக்குத் தூக்கியது. வலைக்குள் விழுந்தார்.
"ஒரு நாளைக்கு
எவ்வளவு சம்பளம் எடுக்கின்றாய்?"
"றெயினிங்கில்
இருப்பதால் எண்பது டொலர்கள்."
நான் உனக்கு அரை
மணித்தியாலத்திற்கு ஐம்பது டொலர்கள் தருகின்றேன். சம்மதமா?"
"தாங்ஸ். தாங்
யூ வெரி மச்."
"வன்
மினிட்" என்று சொல்லிவிட்டு வீதிக்கு விரைந்தார். வீட்டிற்கு அண்மையில்
வாகனங்கள் ஒன்றும் மருந்துக்கும் தரித்து நிற்கவில்லை என்பதை உறுதி செய்து
கொண்டார். வீட்டிற்கு திரும்பினார்.
"உள்ளே வா"
என்றுவிட்டு தேவலோகத்தை உட்புறமாகப் பூட்டினார். வீட்டிற்குள் வந்ததும் அவள்
"நூறு டொலர்கள்" என்றாள். அவளை ஒரு தடவை மேலும் கீழும் பார்த்தார்.
"மணி பொஸ்ற் (money first)" சிரித்தாள் அண்ட்றியா.
இந்திரன் காசை
எடுத்து வருவதற்காக அறைக்குள் போனார். அவள் தயக்கமின்றி அவரைப் பின் தொடர்ந்தாள்.
"இங்கேயே நில்" என்றார் இந்திரன்.
காசைக் காணவில்லை. 'ஒரு டொலரும் இல்லாமல் பொறுக்கி எடுத்துக்
கொண்டு போய் விட்டாள்' வத்சலாவைத்
திட்டித் தீர்த்தார். மகளின் அறைக்குள் புகுந்தார். சுவரினில் மகளின் முழு அளவிலான
படம் சிரித்தபடி. நிமிர்ந்து மகளைப் பார்த்தார். அவளின் வயதுதானே இந்தப்
பெண்ணிற்கும் இருக்கும்! நெஞ்சு திக்கென்றது.
திரும்பி வரும்போது அவர்
கையில் நூறு டொலர்கள் இருந்தன. அவள் 'றெடி'யாக நின்றாள். காசை
அவளிடம் நீட்டினார். அவள் அதை வாங்கி பொக்கற்றினுள் வைக்கும் போது ஓங்கி 'பளார்' என்று அவளது கன்னத்தில் அறைந்தார். அவரது கை கொடுத்த முத்தத்தினால் அவளது
கன்னம் மாதுளம்பழம் போல சிவந்தது. தர
தரவென அவளை இழுத்து, கதவைத்
திறந்து வெளியே தள்ளி விட்டார்.
நிலை குலைந்து -
மண்ணிற்குள் சறுக்கிக் கொண்டே விழுந்தவள், எழுந்து தன் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டியவாறே ஓடத் தொடங்கினாள். 'கேற்' வரை ஓடிச் சென்றவள், நின்று
நிதானமாக இந்திரனைத் திரும்பிப் பார்த்தாள். அவரை நோக்கி, கை காட்டி ஏதோ ஏசி விட்டு அந்த இடத்டை விட்டு
நகர்ந்தாள்.
இந்திரன் அப்பொழுதும்
வாசலில் நின்று கொண்டிருந்தார். அவளை அடித்த கையை ஒருமுறை பார்த்தார். கொஞ்சம்
வலிப்பது போல இருந்தது.
ஞானம் (சித்திரை, 2009)
No comments:
Post a Comment