Monday, 6 April 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 24 - வீரத்தின் மகிமை

டானியலின் நீல ஜீப் நயினாமடு முகாம் பக்கமிருந்து மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

நான் பிள்ளைகளை அவதானித்தேன். சோபாக்களில் கதை கேட்கும் பதினொரு பேர். வழமையைப் போல அழகாக உடுத்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள். இன்றைக்கு விசேடமாக நெற்றி யில் வீபூதி சந்தனப் பொட்டு. என் உள்மனம் பேசியது.

'இன்று மூத்தண்ணர் வீரக்கோன் பற்றிய கதை. அவர் புளியங்குள விடுதலைப் புலிகள் முகாம் சென்ற தோடு கதையை முன்னர் நிறுத்தியிருந்தேன். பாவலன் இயக்கத்தில் சேர முன்னரே மூத்தண்ணர் இந்தியாவில் தஞ்சாவ்வூரில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் மேற்குப் பயிற்சி முகாமில், இந்திய உளவுத்துறை றோவின் ஏற்பாட்டில் பயிற்சி வழங்கிய உயர்ந்த தாடிவைத்து தலைப்பா கட்டிய நரேந்திர சிங்கிற்கு அண்ணர் வீரக்கோனின் அதிவிவேகம், கற்றல் வேகம் அதிசயமாய் இருந்தது. அவரிடம் கற்ற ஏனையவர்கள் பெரும்பாலும் பாடசாலைக் கல்வியை கைவிட்டவர்கள். நரேந்திர சிங்கிற்கு அந்த வேறுபாடு தெரியாது.
அண்ணர் வீரக்கோனுக்கு கடல்-தரைப் பயிற்சி வழங்கப்பட்டது.
குறிபார்த்துச் சுடும் நிகழ்ச்சி இரண்டு கிழமைகளாக நடந்தும் பழைய போராளிகள் யாரும் அதுவரை தேறவில்லை. அண்ணருக்கு முதல் நாள் பயிற்சி முடிந்து பரீட்சார்த்தமாக கம்பு நுனியில் வைத்த மண் பாவைக்குச் சுடும்படி நரேந்திர சிங் பணித்தார்.
முதலாவது சூட்டிலேயே பாவை சிதறிப் பறந்தது. சிங் அண்ணரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். குருடன் பெண்டாட் டிக்கு அடித்தது போலப் பட்டிருக்கு. அவர் மனம் கூறியது.
'அதோ அந்த மர நுனியில் இருக்கும் வெள்ளைக் கொக்கைச் சுடு."
சூடுபட்ட கொக்கு தலைகுத்திக்கொண்டு நிலத்தில் விழுவதைக் கண்டார். அதிசயம் பொறுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். உசார் அடைந்தார். 'அதோ நான்கு கறுப்புக் கடற் தாராக்கள் பறந்து வருகின்றன. சுடு."
தாராக்கள் பறந்து உச்சி அருகே வந்துவிட்டன.
சூடுபட்ட ஒன்று நரேந்திர சிங்கின் எதிரே தொப்பென விழுந்தது.
நரேந்திர சிங்கின் அகக் கண்களில் துரோணரின் மாணவன் அர்ச்சுனன் ஒரே அம்பால் மரத்து இலைகள் யாவற்றிலும் துவராங்கள் ஏற்படுத்திய அதிசயம் காட்சி கொடுத்துக் கண்சிமிட்டிச் சிரித்தது.

மூத்தண்ணர் வீரகோனின் இயக்கப் பெயர் மாவீரன் என நாமகரணஞ் செய்யப்பட்டது.

மாவீரன், அண்ணை குடும்பத்தின் பெருமதிப்பைப் பெற்றவர். பயிற்சி முடிந்து இந்தியாவில் வாழ்ந்த வேளை அண்ணை அவர்கள் தம் துணைவி மதிவதனியின் மெய்ப் பாதுகாவலராய்க் கடமைபுரிந்தார். கோவிலுக்கு அல்லது கடைக்குச் செல்லும் வேளைகளில் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினார்.
ஒரு தினம் கும்பிட்டு முடிந்து கோவிலுக்கு வெளியே வாகனத்தை நோக்கி வரும் வேளை, ஒருவன் மதிவதனி அக்காவின் கழுத்துச் சங்கிலியை---இருதயம் போன்ற சிவப்பு பதக்கம் இணைந்த ஆறு பவுண் சங்கிலி---அறுத்துக்கொண்டு ஓடினான். மாவீரன் துரத்திப் பிடித்து இழுத்து வந்தான். சங்கிலியைத் திருப்பிக் கொடுத்து, மதிவதனி அக்கா காலில் விழுந்து அழுதான். 'அம்மா எனது மகன் உயிருக்குப் போராடுகிறான். வைத்தியத்துக்கு வழி தெரியவில்லை. மன்னியுங்கள்."
மதிவதனி அக்கா பேசைத்திறந்து பார்த்தார். பின்னர் கையில் இருந்த ஒரு காப்பைக் கழற்றிக் கொடுத்து 'கொண்டு போய் வைத்தியம் செய்" என்று அனுப்பினார்.

அண்ணை இந்தியாவில் வாழ்ந்த வேளை யாழ்ப்பாணத் தளபதியாகக் கிட்டு கடமையாற்றினார். அவருக்கு மக்கள் மத்தியில் பெரு மதிப்பு. மக்கள் அண்ணையை---தலைவரை---மறந்தமாதிரி. அண்ணை யாழ்ப்பாணம் செல்லத் தீர்மானித்தார். ஆலோசகர் பாலசிங்கம் அங்கிளுக்கும் பேசாமல் யாழ்ப்பாணம் செல்ல முடிவு செய்தார்.
அண்ணை மூவரை மட்டும் தனது பாதுகாப்பிற்கு அழைத்துச் சென்றார். ஒருவர் மூத்தண்ணர் மாவீரன். அந்தளவுக்கு அண்ணையின் மதிப்பைப் பெற்றிருந்தார். மாவீரன் அண்ணையைப் பற்றிப் பெரிதாக அண்ணைக்குச் சிபாரிசு செய்தவரே துணைவியார் மதிவதனி அக்காதான்.
அண்ணை இரகசியமாய்க் கடல் வழியாக யாழ்ப்பாணம் திரும்பிய வேளை மூத்தண்ணை அவருக்குப் பாதுகாப்பு வழங்கினார்.

புலிகள் அமைப்பின் புகழ்பூத்த தலைவர் மாத்தையா றோவுடன் இணைந்து காலைவார முயல்கிறார் என்று அண்ணைக்கு முதன்முதலில் துப்புச் சொல்லி உசார் படுத்தியவர் மாவீரன். மாத்தையாவைக் கைதுசெய்ய பொட்டம்மானுடன் சென்றவர்களில் முக்கியமானவர். மாத்தையாவின் ஆதரவாளர்களான புலி உறுப்பினர்கள் கைது மாவீரன் தலைமையிலேயே நடந்தது.

இந்திய சமாதானப் படையினர் கொக்குவில் இல்லத்தில் வைத்து அண்ணையை சுற்றி வளைக்க எத்தனித்த வேளை, வாக்கி டோக்கியில்பிழையான தகவல்களைச் சொல்லி, ஜவான்களை சாதுரியமாய்த் திசை திருப்பி வண்ணாத்தி பாலத்தில் காவலிருக்க வைத்துவிட்டு, அண்ணையைப் பாதுகாப்பாக முல்லைத் தீவுக் காட்டுக்குப் பெண் வேடத்தில் அழைத்துச் சென்றவர் ஆயிலடி மாவீரன்.

ஆனையிறவுப் போர்.

மூத்தண்ணர் கப்ரன் மாவீரனும் நானும் ஆனையிறவு போர்கள் இரண்டிலும் பங்கு பற்றினோம். இரண்டாவது ஆனையிறவுப் போரில் அவரின் பங்கு அற்புதமானது.
வன்னியை யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து பிரிக்கும் எல்லையில் ஏ9 நெடுஞ் சாலையில் ஆனையிறவு தளம். கைப்பற்ற அண்ணைதிட்டம் வகுத்தார்.
பிள்ளைகளே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராணுவதளத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியவேணும்.

இலங்கையை ஆண்ட போத்துக்கேயர் ஆனையிறவில் கோட்டை கட்டினர். டச்சுக்காரர் அதனைப் புதுப்பித்து படைகள் வைத்தனர். பிரித்தானியர் நவீன ராணுவ தளமாக்கினர். பின்னர் றெஸ்ற் ஹெளசாகமாற்றம் பெற்றது. கள்ளக் குடியேற்றம், கடத்தல்களைக் கண்காணிக்க சுதந்திரத்தின் பின்னா நிரங்தர படை குடி கொண்டது. கொழும்பிலிருந்து ஏ9 வீதி வழியே யாழ்ப்பாணம் செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பிரயாணம் செய்யும் மக்கள் இன்னல்களை எதிர்நோக்கினர்.

விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்திய பின்னர், ஸ்ரீலங்கா இராணுவம் ஆனையிறவை ராட்சத இராணுவ கட்டமைப்புப் பிரதேசமாக மாற்றியது. வடக்கே ஆறு மைல்கள் தூரத்தில் உள்ள இயக்கச்சியிலும் பாரிய ராணுவ முகாம் அமைத்து, இரண்டையும் இணைத்து ராட்சத இராணுவ தளமாக்கியது.

ஆனையிறவைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் தொடுத்த முதலாவது போரில்---1991, ஆயிரம் வரையான போராளிகள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் இருவர் ராச நாச்சியார் குடும்ப வாரிசுகள்---கப்ரன் மாவீரன், நான் மேஜர் சிவகாமி.

யாழ் தேவி போர், சத்திய வெற்றி போரின் பொழுது ஸ்ரீலங்கா இராணுவம் ஆனையிறவை தாக்கு தளமாய்ப் பயன்படுத்தியது. எனவே அண்ணை ரண்டாவது தடவையும் ஒன்பது ஆண்டுகள் கழித்து ஆனையிறவைத் தாக்க ஆயத்தமானார்---2000. இந்தப் போர் ஓயாத அலை கள்மூன்றுஎன்று நாமகரணஞ் செய்யப்பட்டது.

கப்ரன் மாவீரன் ஆனையிறவு கிழக்குக் கடற்கரை ஓரமாக அமைந்த தாக்குதலுக்குப் பொறுப்பாய்க் கருமமாற்றினார். வடபகுதி தாக்குதலுக்கு கேணல் பானு தலைமை தாங்கினார்.
ஆனையிறவு மிகவும் சக்திவாய்ந்த பலமான ராணுவதளம். ஆனையிறவின் கிழக்குப் பக்கத்தில் கடல் வழிக்கு பாதுகாப்பான அரண் வைத்திருந்தது.
போரின் வேளை கடல் வழியாக ஸ்ரீலங்கா ராணுவத்துக்குக் கப்பல்களில் கொண்டு வந்த உதவிப் படை கடற்கரையில் இறங்க முயற்சித்தது. வானத்தில் ஹெலிகொப்டர்களும், கடற் பகுதியை டோறா படகுகளும் காவல் புரிந்தன.
கப்ரன் மாவீரன் படை அணி, இராணுவம் தரையில் இறங்காமல் போராடியது. ஹெலிகொப்படர் படைகளை இறக்குவதில் வெற்றி கண்டது. மாவீரனின் போராளிகள் ஹெலி இறக்கிய அனைவரையும் கொன்று தள்ளினர். கடற்கரையில் இறக்கிய இராணுவவீரர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்.
ஹெலிகொப்டர் ஒன்று சேதமாகி கரும் புகை கக்கியபடி ஆனையிறவு முகாமுள் வீழ்ந்தது. பின்னர் ஹெலிகள் தாக்குவதை நிறுத்திக் கொண்டன.
கப்ரன் மாவீரன் சிங்கள இராணுவத்தை வெற்றி கொண்டு வெற்றிலைக்கேணி,  கட்டைக்காடு,  ஆழியவளை,  உடுத்துறை, முள்ளியான்,  நல்லதண்ணித் தொடுவாய் இராணுவமையங்களைக் கைப்பற்றினார். இராணுவ முகாமுக்கு கடல்வழியாக உதவி கிடைக்காமல் செய்தார். அது வடபகுதி தாக்குதலுக்கு பேருதவியாகவும், வெற்றிக்கு உறுதுணையாகவும் அமைந்தது.
அந்த சாதனையே அண்ணை வீரக்கோனுக்கு எமனாகப் போகிறது என்பது யாருக்கும் அப்போது தெரியாது.

 ‘ஓயாத அலைகள் போரில்வடபகுதியில் நிலை கொண்டு தாக்கிய போராளிகளுக்கு கேணல் பானு தலைமை தாங்கினார்.

போர்க்கள வடபகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள்அணி ஒன்று எனது---மேஜர் சிவகாமியின்---தலைமையில் இயங்கியது. நூற்று இருபது பேர். நாம் இயக்கச்சியில் இராணுவ வட எல்லைப்பகுதியைத் தாக்குவதில் ஈடுபட்டோம்.
எமது அணியினர் தவழ்ந்து தவழ்ந்து முன்னேறினர். நான் முதலாவது வரிசையில் தவழ்ந்து முன்னேறினேன். ஆரம்பத்திலேயே என் அருகில் தவழ்ந்தவர்கள்---பூமலர், நாமகள்---தலைகளில் சன்னம் பட்டு மடிந்தனர். மேலும் சிலர் காயப்பட்டனர்.
வடபகுதியில் வேறு பல அணிகளும் களத்தில் நின்றன. முதலாவதாக இந்த அணிகள் ஆனையிறவு முகாமுக்கு வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ தளங்களிலிருந்து வரும் உணவு, ஆயுதம், உதவிப் படை வராது பாதைகளை அடைப்பதில் வெற்றி கண்டன.
இரண்டாவது தினம் ஸ்ரீலங்கா இராணுவ தளபதி படைகளை பின்வாங்கும்படி கட்டளையிட்டார்.

படைகள் ஒன்றும் புரியாமல் களத்தைவிட்டு ஓடத் தொடங்கின. 54வது பிரிவுப் பெரும்பாலான படைவீரர்கள், விடுதலைப்புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தின் மத்தியில் மேற்கே கிளாளி இராணுவ தளத்துக்கு ஒடினர். பலர் தாக்குதல்களில் சிக்கி மரணமாகினர். ஓடித்தப்ப எங்கள் பகுதியில்---வடபகுதியில்---வாய்ப்பிருக்கவில்லை.

ஏராளமான யுத்த ஆயுதங்கள் வாகனங்கள் அழிக்கப்பட்டன. அழிக்கப்படாதவற்றை கைப்பற்றினோம்.

நாற்பத்தெட்டு மணிநேர ஆனையிறவு இரண்டாவது போரில் 704 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 357 பேர் காயப்பட்டனர். 199 பேரைக் காணவில்லை. அவர்களுள் ஒரு மேஜர் ஜெனரல், ஒரு பிரிகேடியர்,ஒருகேணல் அடங்கும். விடுதலைப் புலிகள் தரப்பில் 150 பேர் மரணமாகினர்.

எனது அணியில் பன்னிரண்டு பெண்கள் காலமாகினர். அவர்களின் சடலங்களை நான் அவரவர் வீட்டில் சேர்ப்பித்தேன். வழமையைப் போல ராச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடந்தன.

பிள்ளைகளே, அதிசயிக்க வைக்கும் ஒரு சிங்கள ராணுவவீரனின் கதை கூறப்போகிறேன். அவனது போர்க்கள வீரத்தை சிங்களவர்கள் மட்டுமல்லாது அண்ணையும்மெச்சி மதித்தார்.

அந்த ஒல்லியான இளம் சிங்கள வீரனின் பெயர் காமினி குலரத்தின. அவன் ஆனையிறவு முதலாவது போரின் வேளை, ஆனையிறவு முகாமின் பிரதான வாயிலில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தான். கதிரவன் கடமை முடிய, காரிருள் பூமியை அணைக்கத் தொடங்கியது. புலிகள் படைகள் அலை அலையாக ஆனையிறவு முகாமுள் புகுந்து கொண்டிருந்தன.
முகாம் வாயிலை நோக்கி யுத்த ராங்கி போன்ற ராட்சதவாகனம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. காவல் நிலையத்திலிருந்தவர்கள் புரியாமல் றைபிளால் சுட்டார்கள். வாகனம் சேதப்படாது நத்தையாக நகர்ந்தது.
அந்த வாகனம் புலிகளுடைய தற்கொலைக் குண்டு வாகனம். முதல் முதல் மில்லர் என்ற போராளி தான் அப்படி ஒரு தற்கொலை வாகனத்தை நெல்லியடியில் இராணுவ முகாமுள் செலுத்தி நூற்றுக் கணக்கான சிங்கள சிப்பாய்களை கொன்ற போராளி.
புலிகளின் தற்கொலைக் குண்டு வாகனம் என்பதை குலரத்தின புரிந்து கொண்டான். உள்ளே சென்று வெடித்தால் நூற்றுக்கணக்கான வீரர்கள் இறப்பர். வெடிமருந்து களஞ்சியம் வெடித்து எரியும். புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிவிடுவார்கள் என்று அஞ்சினான்.
இரவு நேரம். குலரத்தின வாகனத்தை உற்று அவதானித்தான். அவசரமாக வாகனத்தின் பின்புறத்தை நோக்கி முன்னேறினான். ஏணி வழியே மேலே ஏறிக் கொண்டு சென்ற இரண்டு கைக்குண்டுகளின் ஊசியைக் கழற்றி வாகன மேல் துவராத்தினூடாக உள்ளே வீசினான். வெடி ஓசை ஆறு மைல்களுக்கு அப்பால் இயக்கச்சியிலும் அதிர்வு ஏற்படுத்தியது.
குலரத்தின இறந்த பின்னர், இராணுவம் அவனுக்கு கோப்போரல் பதவி உயர்வு வழங்கியதோடு, வீரத்துக்காக ராணுவவீரருக்கு உரிய அதி உயர்  ருதான 'பரம வீர விபூசனாவ' விருதும் வழங்கிக் கௌரவித்தது. முதன் முதலில் அந்த விருதைப் பெற்ற பெருமையும் கோப்போரல் குலரத்தினவுக்கு உரியது. அவனுக்குப் பாரிய நினைவுச் சிலை ஆனையிறவு முகாம் வாயிலில் அமைக்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகள் கழித்து இரண்டாவது ஆனையிறவுப் போரில் நாம்---புலிகள்--- ஆனையிறவைக் கைப்பற்றினோம். கோப்போரல் குலரத்தினவின் வீரத்துக்கான நினைவுச் சின்னத்தை அழிக்கப்படாது என்று அண்ணை கட்டளையிட்டார்.

பிள்ளைகளே, மீண்டும் மூத்தண்ணர் வீரக்கோனின் கதைக்கு வருகிறேன்.

மூத்தண்ணர்வீரக்கோன் நோர்வேதலைமையில் நிகழ்ந்த சமாதான காலத்தில் போராளியான நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாவைத் திருமணம் புரிந்து, கிளிநொச்சியில் புதிய மனைஅமைத்து வாழ்ந்தார். இரண்டு பிள்ளைகள். ரதி, ராகவன்.

ஆனையிறவுப் போருக்குப் பழிவாங்க ஸ்ரீலங்கா அரசு துடித்தது. கிழக்குப் போர்க்களத்தில் சிங்களப் படை முன்னேற்றத்தை முறியடித்து, போரின் தோல்விக்கு முதற் காரணமாகவிருந்த மூத்தண்ணர் வீரக்கோனை லக்கு வைத்தது.
இராணுவம் அவருடைய பங்கர் தூங்கு தளத்தைத் துப்பறிந்து, அவரை அழித்துப் பழிவாங்க குண்டு வீச்சு விமானத்தை அனுப்பியது. அதிகாலை கிபீர் விமானம் வீசிய குண்டு வீச்சில் பங்கரில் துயின்று கொண்டிருந்த மூத்தண்ணர் வீரக்கோன்---மாவீரன், மனைவி பிள்ளைகள் அனைவரும் மரணமானார்கள். ரதி ஓன்றரை வயது. ராகவன் ஆறு மாதக் குழந்தை. ஒருவரும் உருவமாய்க் கிடைக்க வில்லை. இறைச்சி துண்டகாளாகவே பொறுக்கி எடுத்தோம்.


ராச நாச்சியார் வம்சத்தின் வாரிசுகளில் நான் மட்டும் எஞ்சியிருந்தேன்.

~~~~~~~~~~~~~ இன்னும் வரும்...

No comments:

Post a Comment