கூப்பிடு தூரம்
சிட்னியில் தமிழர்கள்
5, 6 இடங்களில் செறிந்து
வாழ்கின்றார்கள். இதனால் சிட்னி போகும்போது நண்பர்கள் உறவினர்களைச் சந்திப்பது
இலகுவாகின்றது. மெல்பேர்ண் அப்படியில்லை. ஒன்றிரண்டு பகுதிகளைத்தவிர தூரத்தூரவே
பெரும்பாலும் இருக்கின்றார்கள். இதனால் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் ஒன்றரை,
இரண்டு மணிநேரம் கார் ஓடவேண்டும்.
சிட்னியிலிருக்கும்
நண்பர் ஒருவர் மெல்பேர்ண் வந்து போகும் சமயங்களிலெல்லாம், அவரது மனைவி தனது சினேகிதியைப் பார்ப்பதற்கு, தன்னைக்
கூட்டிசெல்லுமாறு கணவரைக் கேட்பார். அவரும் தூரத்தையும் நேரத்தைக் காரணம் காட்டி
தட்டிக்கழித்து விடுவார். "உமது ஃபிரண்டைப் பார்ப்பதென்றால் 2 மணித்தியாலக்கள் கார் ஓடவேண்டி வரும். அதுவும்
கடைசி அரைமணி நேரம் மலைப்பாங்கான பாதையில் ஓடவேண்டும்" என்று
சமாளித்துவிடுவார்.
இம்முறை ஏனோ
மனைவியைக் கூட்டிச் செல்வதற்கு விரும்பினார். பின்சீற்றில் இரண்டு பிள்ளைகளும்
மனைவி றைவர்சீற்றுக்குப் பக்கத்திலுமாகப் புறப்பட்டார்கள். கார் புறப்பட்டு சற்று
நேரத்தில் மனைவி உறங்கிவிட்டார். ”அப்பா.... அம்மா நித்திரையாப்போனா.." என்றான்
பின்னாலிருந்த மகன். "சரி பேசாமல் இரு. அம்மா களைச்சுப்போனா போலை. நல்லாப்
படுக்கட்டும்."
கார் தொலைதூரம் ஓடியது.
சனிக்கிழமை என்பதால் ஒரே நெரிசல் வேறு. மலைகளில் வளைந்து வளைந்து ஒருமாதிரி
போய்ச்சேர வேண்டிய இடத்தை அண்மித்துவிட்டது.
"இஞ்சாரும்
எழும்புமப்பா.... வீடு வந்திட்டுது" என்றார் கணவன்.
மனைவி சோம்பல்
முறித்தபடியே "என்ன போக 2
மணித்தியாலம் எடுக்கும் எண்டியள்! டக்கெண்டு வீடு வந்திட்டுது!"
"டக்கெண்டோ?
நீர் நல்லாப் படுத்து நித்திரை
கொண்டிட்டீர்!"
"சும்மா
போங்கோ.... நீங்களும் உங்கடை காரும். கூப்பிடுதூரத்திலை இருக்கிற என்ரை சினேகிதி
வீட்டை போக இவ்வளவுநாளும் பேய்க்காட்டியிருக்கிறியள்!"
No comments:
Post a Comment