Saturday, 17 October 2015

பறக்காத பறவைகள் - சிறுகதை



அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றேன்.

"என்ன எழும்பியாச்சுப் போல!"

"இரவு முழுக்கப் பிள்ளை நித்திரை கொள்ள விடேல்லை!"

"சரி போட்டு வாறன்."

கதவைப் பூட்டி விட்டு, ஒரு கள்ளனைப் போல, படிகளிலிருந்து இறங்கி இருளிற்குள் நடந்து செல்கின்றேன். மெதுவாக நடக்காவிடில் நாய்கள் விடியலை ஆரவாரப் படுத்திவிடும். தரிப்பிடத்தில் நின்ற 'ஹொண்டா சிவிக்' கார் குளிருக்கு ஸ்ராட் செய்ய மறுக்கின்றது. துருப்பிடித்த அந்தக்கார் நீண்ட நாட்களாக எனக்குத் தொல்லை தருகின்றது. கடற்கரைக்குக் கிட்ட இருப்பதால் கார்கள் இலகுவில் துருப்பிடித்து விடுகின்றன. 'மனுவல் கார்' என்ற படியால் தள்ளி ஸ்ராட் செய்யலாம். வீட்டிற்குச் சென்று மனைவியை அழைத்து வந்தேன். கார் சரிவில் நின்ற படியால் தள்ளுவதற்கு மனைவிக்கு சிரமமிருக்காது. இருப்பினும் குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் 'பச்சை உடம்புக்காரியான' அவளிற்கு சிரமம் கொடுப்பதையிட்டு கவலையாக இருந்தது. வேறு வழியில்லை. தள்ளிவிட்டு வயிற்றைப் பொத்தியபடியே படியேறிப் போகின்றாள் அவள்.
இந்தப் பூபாள ஆரவாரம் எல்லாம் - நியூசிலாந்தில் உள்ள குடிமனைகளுக்கு புதினப்பத்திரிகை விநியோகிப்பதற்குத்தான்.

'மெடோபாங்கி'லிருந்து 'றெமியூறா'விற்கு போவதற்கு பதினைந்து நிமிடங்கள் போதுமானது. 'றெமியூறா' சந்தியில் எங்களுக்கான பேப்பர் பொதிகள் காத்திருக்கும். அந்தப் பொதிகளில்  ஒரு வெள்ளைப் பேப்பர் வெளியே நீண்டு கொண்டிருக்கும். அதில் எங்களுக்குரிய எண்ணும், போடப்பட வேண்டிய வீட்டின் இலக்கங்களும் காணப்படும். ரவியும் மணியும் காருக்குள் பேப்பர் கட்டுகளை ஏற்றிக் கொண்டு நின்றார்கள். மூன்று கிழமைகளுக்கு முன்பு இறந்து போயிருந்த டாக்டர் ராமச்சந்திரனுக்குப் பதிலாக ஒரு வெள்ளைக்காரப் பெடியன் வந்திருந்தான். இதுவரை காலமும் அந்தப் பேப்பர்களையும் மணிதான் போட்டுக் கொண்டு வந்தான்.


"நேசன் ஒரு விஷயம். வாற கிழமை நான் மனைவி பிள்ளைகள் ஒஸ்ரேலியா போகின்றோம்" ரவி என்னை நோக்கி வந்தான்.

"நல்லது. எத்தனை கிழமைகள் அங்கு நிற்கின்றீர்கள்?"

"நிரந்தரமாக அங்கு இருப்பதற்குப் போகின்றோம்."

நான் வியப்பில் ஊமையானேன். நியூசிலாந்து எங்களுக்கு உயிர் வாழ இடம் கொடுத்து உரிமையும் கொடுத்த நாடு. வாழ்வதற்கான பணம், படிக்க வசதி, இலவச மருத்துவம் போன்ற - பிறந்த மண்ணிலே கூட கிட்டாத வாய்ப்புகள். உலகத்திலேயுள்ள அழகான நாடுகளில் இதுவும் ஒன்று. வேலை வாய்ப்புகள் இல்லாமல், வசதியாக வாழ முடியவில்லையே என்பதால் பிரஜா உரிமை பெற்றுக் கொண்ட சிலர் இன்னொரு நாட்டிற்கு போக எத்தனிக்கின்றார்கள்.

83ஆம் ஆண்டு இனக்கலவரங்களின் பின்பு ஒரு தொகையினர் எமது நாட்டிலிருந்து நியூசிலாந்துக்குப் படையெடுத்து வந்திருந்தனர். அதன் பின்னர் பரவலாக வந்து கொண்டிருந்தாலும், 95 ஆம் ஆண்டிலிருந்து படித்தவர்கள் புள்ளிவிபர அடிப்படையில் நாட்டிற்குள் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள். இப்படி பின்பு வந்தவர்களில் ஒருவர்தானும் படித்த படிப்பிற்கான வேலையை பெற்றுக் கொள்ளவில்லை. சுழல் நாற்காலிக்கு பழக்கப்பட்டவர்கள்கூட இந்தச் சுழலுக்குத் தப்பவில்லை. இதில் மருத்துவர்கள் திரும்பவும் இங்கே பரீட்சை எழுதினால்தான் விமோசனம் உண்டு. பரீட்சை மிகவும் கடுமையானது. அதனால் சிலர் அயல்நாடான அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அங்கே பரீட்சை எழுதிவிட்டு வருகின்றார்கள். அவுஸ்திரேலியப் பரீட்சை சற்று இலகுவானது. கட்டணம் அதிகமானது. 2500 டொலர்களுக்கும் மேல் செலவாகும். டாக்டர் ராமச்சந்திரன் கூட இரண்டு முறை நியூசிலாந்துப் பரீட்சை எழுதி தோல்வி கண்டவர். ஐம்பது வயதைத் தாண்டி விட்ட அவர் மூன்றாவது முறை முயற்சி செய்யும் போதுதான் மூளை நரம்பு வெடித்து இறந்தார். படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. மிகவும் பண்பான மனிதர். மணியின் பிள்ளையின் பிறந்த தின விழாவின் போது கடைசியாக நான் அவரைச் சந்தித்திருந்தேன். 'இவர்களுக்கு வேலை செய்வதற்கு படித்த முட்டாள்கள் வேண்டும். அதுக்குத்தான் எங்களைப் போன்றவர்களுக்கு நாட்டிற்குள் வர முன்னுரிமை கொடுக்கின்றார்கள்' என்று அப்போது சொல்லியிருந்தார்.
ஏழு மணிக்குள் பேப்பரைப் போட்டு முடித்தால்தான் 'செர்ரி கலர்' வேலைக்கு சரியான நேரத்திற்குப் போகலாம். அதில்தான் எனது நிரந்தர வேலை.


'செர்ரி கலர்' என்பது 'ஸ்கிரீன் பிரிண்டிங்' தொழிற்சாலை. சொந்த நாட்டில் இருக்கும்போது இந்தத் தொழிற்சாலைகளின் பக்கம் நிழலுக்கும் ஒதுங்கவில்லை. அம்மாவும் அப்பாவும் நாங்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தார்கள். வறுமைப்பட்ட பெரிய குடும்பம். ஒருவரையும் அப்பா தோட்டப்பக்கம் அண்ட விடுவதில்லை. தானே தனித்து நின்று விவசாயம் செய்தார். எங்கே எங்கள் கவனம் எல்லாம் வேறு திசைகளுக்குத் திரும்பி விடக் கூடாதே என பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். நான் கூட பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போது "எல்லாரும் படிக்க வேணுமா?" என்று அக்கா அம்மாவிடம் கேட்டா. அம்மா முழுசிய முழுசில் அக்கா பயந்தே விட்டா. பணக் கஸ்டத்தையும் அப்பா படும் வேதனைகளையும் பார்த்து அக்கா இதைக் கேட்டிருக்கலாம். அக்காவின் பிள்ளைகள் இருவரும் படிப்பில் 'மொக்கு'. அக்காவின் கேள்வியை அப்போது நான் வேறு விதத்தில் அர்த்தப் படுத்திக் கொண்டேன். பிறகு நான் படித்து முடித்து சொந்த ஊரிலேயே வேலை பார்த்த போது பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சி சொல்ல முடியாதது.. 'ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்பதை மெய்ப்பிக்கும் வகையிலே நடந்து கொண்டேன்.

கிழமைக்கு 'செர்ரிக் கலரில்' கிடைக்கும் வருமானம் 460 டொலர்கள். இதில் சரிக்குச் சரி அரைவாசி வீட்டு வாடகைக்குப் போய் விடும். மிகுதிப் பணமெல்லாம் ஒவ்வொரு நாட்களையும் நகர்த்துவதற்கு மாத்திரமே போதுமானது. பேப்பர், 'பிஷா கட்' போன்ற 'ரக்ஸ்' இல்லாத தொழில்களால் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் ஆறுதல்.

இந்த 'செர்ரிக் கலரில்' வேலைக்கு வந்ததுகூட தற்செயல்தான். அப்போது ஆக்லாந்து தொழில் நுட்பக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் படிப்பதற்கு வருவதில்லை. வேலை தேடியே வருகின்றார்கள். ஒரு சில பாடங்களைப் போட்டு தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்கின்றார்கள். பின்னர் மாணவர்களுக்கான வேலை தேடும் இடத்தில் (Student Job Search) வேலை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். மீண்டும் அவர்களைக் கண்டு கொண்டால் சரிதான். அங்கே அப்படி நான் எடுத்த வேலைகள் பல. வாழ்க்கையில் விரக்தியையும் சலிப்பையும் ஏற்படுத்திய காலங்கள் அவை. அப்பொழுது எனக்கு மகள் பிறந்திருந்த நேரம். மகிழ்ச்சியாகக் குடும்பத்துடன் இருப்பதை விட்டு இந்த 'ஸ்டூடன்ற் ஜொப் சேர்ச்'ச்சில் அலைந்து கொண்டு திரிந்தேன். அது ஒரு 'பிச்சைக்கார' வேலையை வழங்கும் அமைப்பு.


ஒரு முறை நாள் முழுவதும் 'ஸ்ரொக் ரேக்கிங்' (Stock taking) என்று நட்டு ஆணியளைத் தூசி தட்டிக் கணக்கெடுத்ததற்கு 44 டொலர்கள் தந்தார்கள். தூசி தட்டியதில் 'வீசிங்' வந்ததுதான் மிச்சம். இதில் பஸ் போக்குவரத்திற்கு பத்து டொலர்கள். 'ஆஸ்மா பம்'பின் விலை முப்பது டொலர்கள்.

வீட்டிற்கு வந்து குளித்து வேலைக்குப் புறப்படும் போது - மகன் தொட்டிலிற்குள் கால்களை உதைத்தபடி கிடந்தான், மகள் பள்ளிக்கூட உடுப்பில் பளிச்சென இருந்தாள். மகள் நாலாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி.

"அப்பா இந்தப் பறவையைப் பற்றி ரீச்சர் எழுதி வரச் சொன்னவா" கையிலே ஒரு பறவையின் படத்தை நீட்டியபடி கேட்டாள்.

"உது என்ன தீக்கோழியா அல்லது வான்கோழியா?"

"அப்பா இது எமு எண்ட பறவை. அவுஸ்திரேலியாவிலை இருக்குது."

"எமுவா? நான் கேள்விப்பட்டதே இல்லை. பின்னேரம் இன்ரநெற்றிலை பாத்துச் சொல்லட்டுமா செல்லம்"

அவள் ஏமாற்றத்துடன் தலையாட்டினாள்.

நேரத்திற்கு வேலை செய்யுமிடம் போய் விட்டேன். வாசலில் எனது மனேஜரான 'அன்டி தொம்ச'னும் தொழிற்சாலை மனேஜர் 'போலு'ம் சிகரட் பிடித்தபடி பனிப்புகாரினுள் நிற்பது தெரிகிறது. இரவு பெய்த கடும்பனி - சூரிய ஒளி பட்டுக் கரைந்து கட்டடத்தின் கூரை மீதிருந்து ஒழுகிக் கொண்டிருந்தது. சிகரெட்டைக் கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த என்னை நோக்கி விரைந்து வந்தான் அன்டி. இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை ஒப்புவித்துவிட்டு மீண்டும் தனது காரிலேறிப் போனான். இனிப் பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு போய் விட்டு வர பத்து மணியாகும். அன்டி தொம்சன் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன். மிகவும் நல்லவன். அவனது நெடிய தோற்றமும் வசீகரப் புன்னகையும் எளிதில் எவரையும் கவர்ந்து விடும்.

இந்த 'செர்ரிக் கலர்' வேலை கிடைத்த போது பல எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்தன.

"என்னடாப்பா வேலை எடுத்திட்டியாமே! என்ன வேலை? எங்கை?"

"ஒரு பிறிண்டிங் இண்டஸ்றியிலை."

"அப்ப உன்ரை பீல்டிலை இல்லையா? சரி சரி அங்கை என்ன வேலை?"

"கொம்பியூட்டரிலையப்பா!"

"கொம்பியூட்டரும் பரவாயில்லைத்தான். கொம்பியூட்டரிலை சொவ்ற்வயரா? ஹாட்வயரா?"

மனிசருக்கு இருக்கிற பிரச்சினையளுக்கை கேள்விகளைப் பாருங்கள்! தாங்கள் வாழ் நாள் பூராவும் 'பிசின்' பூசி ஒட்டினாப் போல 'இன்கம் சப்போற்றிலை' இருப்பினம். ஆராவது கொஞ்சம் முயற்சி செய்து வேலைக்குப் போனால் அதுக்கு வியாக்கியானங்கள். அடுத்தவரைப் பரிகசிப்பதிலேயே எப்போதும் இன்பம் காணுகின்றார்கள் இவர்கள்.
நியூசிலாந்தில் வாழ வழியற்றவர்களுக்கு அரச அமைப்பான 'இன்கம் சப்போற்' உதவுகின்றது. நாட்டிற்கு வந்த ஆரம்ப நாட்களில் நானும் உதவி பெற்றேன். வாழ்க்கையும் மிக இனிமையாகக் கழிந்தது. ஆனால் எத்தனை நாட்கள்தான் அதில் தங்கி இருப்பது? ஒரு அறை கொண்ட சிறிய 'யுனிற்'. அதில் ஒரு கட்டில். அதன் அருகே ஒரு தொட்டில். குசினி. சிறிய ஓடை போன்ற ஹோல். சமைத்தால் நாள் முழுக்க வீட்டிற்குள் மணம். இதுவா வாழ்க்கை?

'படித்த படிப்புக்குத்தான் வேலை செய்வேன்' என்று அடம் பிடித்தால் எப்பொழுதுதான் வேலை செய்வது? 'இன்கம் சப்போற்' பக்கம் போகப்படாது என்று பிடிவாதம் பிடித்ததில் உடம்பு உருக்குலைந்தது. 'அன்டி தொம்சனுக்கு' ஒரு படித்த முட்டாள் கிடைத்துக் கொண்டான். கடந்த மூன்று நான்கு வருடங்கள்- வாழ்க்கையில் பெரிதும் முன்னேற்றம் இல்லையென்றாலும் அமைதியாகக் கழிந்து கொண்டிருக்கிறது. நண்பர்களில் பலர் இன்னமும் 'இன்கம் சப்போற்'றில் இருந்து கொண்டு, 'ரக்ஸ்' இல்லாத வேலைகள் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

ஒருமுறை எனது நண்பனின் தந்தை ஒருவர் திடீரென தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருந்தார். அப்போது நான் 'போக் லிவ்ற்'றின் உதவியுடன் பேப்பர் உருளைகளை நகர்த்திக் கொண்டிருந்தேன். உளவு பார்க்க வந்தவருக்கு மிகவும் திருப்தி. கொம்பியூட்டர் சம்பந்தமாக எழுந்த பிரச்சினைக்கு சொவ்ற்வயரோ ஹாட்வயரோ காரணம் அல்ல என்பதைப் புரிந்து கொண்டார்.

'குளொக்'கில் 'கார்ட்டை' அடித்துவிட்டு ரொயிலற் பக்கம் போனேன். இரண்டு கதவுகள் மூடப்பட்டிருந்தன. சகிக்க முடியாத துர்நாற்றம் கிழம்பிக் கொண்டிருந்தது. இரண்டு மனிதர்கள் 'சளோம் பிளோம்' என்று ரொயிலற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

சமீபகாலமாக தொழிற்சாலையில் ஏதோ மர்மமான முறையில் சம்பவங்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. பல வருடங்கள் பழமை வாய்ந்த தொழிற்சாலையில் மூன்று வருடங்கள் வேலை செய்து விட்டேன். கடந்த மாதம் தொழிற்சாலையில் நீண்ட காலமாக வேலை செய்து வந்த மூன்று பேர் - ஒரு இரண்டாந்தர மனேஜர் உட்பட - தமது சுய விருப்பின் பேரில் விலகியிருந்தார்கள். அவர்களில் 'ராங்' என்னும் சீன தேசத்தவன் என்னுடன் அன்பாகப் பழகுவான். சுறுசுறுப்பானவன். நகைச்சுவைப் பேர்வழி. அவனிடம் ஏன் விலகுகின்றாய் என்று தூண்டில் போட்டேன். அதற்கு அவன் சம்பளம் போதாது என்று சொன்னான். 'பணிஸ், மஃபின், பேகர்' செய்து விற்கப் போவதாகக் கூறினான். அவனது பதில் எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

ராங்கை என்றுமே மறப்பதற்கில்லை. எனக்கு தொழிலைக் கற்றுத் தந்தவன். 'லேபல்'களைத் தரம் பிரிப்பது, மெஷினில் மட்டைகள் வெட்டுவது, பொதிகளைக் கட்டுவது, 'குளூ கண்ணால்' (Glue Gun) ஒட்டுவது போன்றவை. வேலைக்குச் சேர்ந்த முதல்நாள், 'குளூ கண்ணால்' ஒட்டும்போது வந்த எஞ்சிய பசையைத் திரட்டி உருண்டையாக்கி என் உள்ளங் கைகளில் வைத்தான். 'என்ன?' என்றேன். சிரித்துக் கொண்டே தனது மூக்கைக் காட்டிவிட்டுப் போனான்.

அந்த மூன்று பேருக்கும் நிர்வாகம் பிரியாவிடை வைத்தது. அதற்கு ராங் மாத்திரமே சமூகமளித்திருந்தான். மனேஜர் அவனுக்கு புகழாரம் சூட்டுகையில், "இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் ராங்கை நான் ஒரு தெருவீதியில் கண்டு பிடித்து இங்கு வேலைக்கு கொண்டு வந்து சேர்த்தேன்" என்றார். ராங் கையைக் கட்டியபடியே குனிந்து நின்றான். அவனது உதடுகளும் கைகளும் நடுங்கின. முடிவில் அவனது இருபத்தைந்து வருட சேவையைப் பாராட்டி, மரத்தாலான அழகிய வேலைப்படுகள் கொண்ட அகப்பை ஒன்றை பரிசாகக் கொடுத்து, அவனைப் பேச அழைத்தார் மனேஜர். ராங்கினது குரல்வளையிலிருந்து காற்றுத்தான் வந்தது. அவனால் பேச முடியவில்லை. அழுதான். அவனது நகைச்சுவை உணர்வு எங்கு போனதென்றே தெரியவில்லை. மனேஜர் அவனை அணைத்து அருகில் இருந்த கதிரையில் அமர்த்தினார்.

அவர்கள் மூவரும் விலகிப் போன மறுவாரம் தொழிற்சாலைக்கு ஒரு இயந்திரம் வந்து சேர்ந்தது. சற்றே பழசாகிப் போன பெரிய இயந்திரம். தடித்த 'கார்ட் போட்' போன்ற மட்டைகளை விரும்பிய டிசைன்களில் வெட்டுவதற்குரிய இயந்திரம் அது. அத்துடன் ஆறு புதியவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்திருந்தார்கள். பெரிய மல்லர்களைப் போன்றிருந்த அவர்களும் என்னைப் போலவே வேலை எடுத்து வந்திருந்தார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேர் நித்திரையால் எழும்பியதும் வீட்டிலிருந்து நேரே இங்கு வந்துவிடுவார்கள். காலைக்கடன்கள் தொட்டு கன்ரீனில் தேநீர் அருந்துவது வரை எல்லாமே இங்குதான். கழிப்பறையின் உள்ளே இருப்பவர்கள் நிச்சயமாக அவர்கள்தான்.

கன்ரீனுக்குள் சென்று எனது மதியச் சாப்பாட்டை அங்கு வைக்கும் போது, அங்கே பொஸ்னியப் பெண் சுவாதா இருப்பதைக் கண்டேன். 'கோர்ண் ஃபிளேக்ஸ்'சிற்குள் பாலை ஊற்றிக் கொண்டிருந்தாள். 'ஸ்கிரீன் பிரிண்டிங்'கில் கை தேர்ந்தவள் அவள். கடின உழைப்புக்காரி. இங்கே எத்தனை மணிக்கு வேலைக்கு வருகின்றாள், வேலை முடித்துப் போகின்றாள் என்று ஒருவருக்கும் தெரிவதில்லை.

"இரவு ஏழு மணி மட்டும் 'ஓவர் டைம்' செய்ய முடியுமா?"

"மாதக் கடைசி. நிறைய வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு. காலை விடிய நாலு மணிக்கு வர முடியுமா?"

"சனிக்கிழமை? ஞாயிற்றுக்கிழமை?"

எல்லாவற்றிற்கும் 'ஓம்' என்றுதான் சொல்லுவாள் அவள். குளிர் காலம் என்றால் வெப்பத்தைக் கொடுக்கும் ஒரு 'கீற்றரை' தன்னுடன் வைத்திருப்பாள். "நரகத்தில் ஒரு இரண்டு மணித்தியாலம் ஓவர் டைம் இருக்கு. வேலை செய்ய முடியுமா என்று கேட்டாலும் வேலை செய்வாள் சுவாதா" என்று அங்கு வேலை செய்பவர்கள் அவளைப் பற்றிச் சொல்லுவார்கள். 'பணப்பிசாசு' என்பது அவளின் பட்டப் பெயர்.

நாற்பது கிலோ இருக்கக் கூடிய பேப்பர் உருளையைத் தூக்கி மெஷினில் பொருத்தினேன். தொழில் ரீதியாக இருபத்தைந்து கிலோவிற்கு மேல் தூக்கக் கூடாது என்று சட்டம் இருக்கின்றது. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்று நினைத்துக் கொண்டு இங்கு எதுவுமே கதைத்துவிட முடியாது. 'முட்டாள்' என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒருநாளைக்கு நாலைந்து தடவைகள் இப்படித் தூக்கி வைப்பதற்காக இன்னொருவனைத் தேடி அலைவதும் புத்திசாலித்தனமற்றது. 'கற்றவனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. நாட்டுப் பிரச்சனையளுக்கை அலைந்து, நாலு வருஷப் படிப்பை நாலிரண்டு வருஷத்துக்குள்ளை முடித்தோம். அதுவும் நாடாறு மாதம்; காடாறு மாதம். எதற்காக இந்த வாழ்க்கை? எட்டு வருட படிப்பெல்லாம் எதற்காக? வீண்! இப்படியான இடங்களிலை வந்து இறப்பதைவிட அந்த 'சிறப்பை' விட்டுக் கொடுப்பதில் தப்பில்லை.

பேப்பர் உருளையை எக்கித் தெக்கி தூக்கி வைத்ததில் மூச்சு வாங்கியது. உடலை ஆசுவாசப்படுத்தி நிமிர்கையில் 'சேல்ஸ் மனேஜர்' ஒரு துண்டுப் பேப்பருடன் அங்கு வந்து சேர்ந்தார். பேப்பரில் ஒரு புது வேலை முளைத்திருந்தது. அதை முதலில் செய்யும்படி சொன்னார். அவரும் நல்ல மனிதர்தான். 'மனேஜர்' என்ற அடைமொழி இருந்தால் 'சேல்ஸ் மனேஜர்' என்ன 'வேஸ்ற் மனேஜருக்கும்' மதிப்புக் கொடுக்க வேண்டியதுதான். எல்லாரும் தருகின்ற வேலையை மகிழ்ச்சியுடன் 'ஆம்' என்று சொல்லி, மறு பேச்சுப் பேசாமல் கச்சிதமாகச் செய்வதால் நானும் 'நல்லவன்' என்று பேர் எடுக்கின்றேன்.

சிம்மாசனத்தில் ஏறிய பேப்பர் உருளை இறங்கியது. இன்னொரு உருளை ஏறியது. மூச்சும்.

இந்தப் பேப்பர் உருளைகளுடன் தினமும் உறவாடியதில் ஒருமுறை எனது இடது புற வயிற்றில் வலி கண்டது. அதனால் குடும்ப வைத்தியரை அடிக்கடி சந்திக்கலானேன். அவரும் பொறுமையாக என்னைப் படுக்க வைத்து, வயிற்றை அமர்த்திப் பார்த்துவிட்டு 'ஒன்றுமில்லை' என்பார். நானும் ஒரு முடிவு காணும் வரை அவரைச் சந்தித்துக் கொண்டே இருந்தேன். பொறுமையை இழந்த டாக்டர், கடைசியில் 'கவர்மெண்ட் ஹொஸ்பிட்டல்' போக வேண்டும் என்றார். அங்கே ஒரு நுண்ணிய உபகரணத்தை வாயின் முலமாகவோ அல்லது குதத்தின் மூலமாகவோ உள்ளே செலுத்தி பரிசோதிப்பார்கள் என்றார். 'எது வரைக்கும் செலுத்துவார்கள்?' என்ற எனது சந்தேகத்திற்கு 'வேறு எதுவரைக்கும்? வலி கண்டுள்ள இடம் வரைக்கும்தான்' என்றார் டாக்டர். அவ்வளவுந்தான். அன்றுடன் வலி பறந்து போனது. அனேகமாக அந்த வலி அவர் சொன்ன அந்த இரண்டு பாதைகளில் ஒன்றினூடாகத்தான் தப்பிப் பிழைத்திருக்க வேண்டும்.

சேல்ஸ் மனேஜர் தந்த வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, அன்டி பதறிக் கொண்டு ஓடி வந்தார் .

"ஆர் உதைச் செய்யச் சொன்னது?"

"சேல்ஸ் மனேஜர்!"

"நான் தந்த வேலை மதியம் பன்னிரண்டு மணிக்குள் குடுத்தாக வேண்டும்."

காலை எட்டி வைத்து கோபத்துடன் 'ஒபிஸ் றூமிற்'குள் போனார். இரண்டு பேரும் கொஞ்ச நேரம் வாக்கு வாதப்பட்டார்கள். போன வேகத்தில் திரும்பி என்னிடம் வந்தார் அன்டி.

"பரவாயில்லை. சேல்ஸ் மனேஜருடைய வேலையை முதலில் முடியுங்கள். அவருக்கு இண்டைக்குத்தான் கடைசி நாள்" சொல்லிவிட்டு மீண்டும் ஒபீஸ் றூமை நோக்கிப் போனார்.
"அவருக்கு இண்டைக்குத்தான் கடைசி நாள்!" எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே என்னதான் நடக்கின்றது? அன்டியை கலைத்துக் கொண்டு பின்னாலே ஓடினேன்.

"சேர்! நான் உங்களோடை ஒன்று கதைக்க வேண்டும்"

"நேசன் பயப்படாதீர்கள். லஞ்சிற்குப் பிறகு ஆறுதலாகக் கதைப்போமே!"

மதியம் கழிய அன்டி தொம்சன் தனது அறைக்குள் வரும்படி என்னைக் கூப்பிட்டார். முன்னால் உள்ள கதிரையில் அமரும்படி சொன்னார். மேசையின் மீது ஒரு பேப்பரை என் முன்னே வைத்தார்.
"Due to the tough trading conditions and the liquidation of a major client, Seri colour was placed into voluntary liquidation. Therefore ..." இன்னும் பத்து நாட்களில் தொழிற்சாலையை மூட இருக்கின்றார்கள் என்று அதில் இருந்தது. என் தலை சுழன்றது. மேசையை இறுகப் பற்றிக் கொண்டேன். பூமியதிர்ச்சி வரும்போது மேசையைப் பிடித்தென்ன மரத்தைப் பிடித்தென்ன! இருபத்தைந்து வருடங்கள் ஆட்டம் காணாத தொழிற்சாலையை நம்பி என் படிப்பைக் கை விட்டேன். இடையில் வேறு எந்தவொரு தொழிலுக்கும் முயற்சி செய்யவில்லை. இப்போது எதை வைத்துக் கொண்டு வேலை தேடுவது? பட்டங்கள் அறுந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன.

அதன் பின்பு வேலை ஓடவில்லை. மனம் உடைந்து விசராக இருந்தது. மனைவிக்கு ரெலிபோன் செய்து விஷயத்தைச் சொன்னேன். அந்த அதிர்ச்சியில் அவள் பயந்து போனாள். வேலை முடித்து வெளியே வரும்போது, அந்த பொஸ்னியப் பெண் கால்களை பக்கவாட்டிற்கு விரித்த படி, சிறகுகளை இழந்த ஒரு பறவையைப் போல மர நிழலில் விழுந்து கிடந்தாள். வேலை செய்யும் காலங்களில் ஒருபோதும் நான் அவளுடன் கதைத்ததில்லை. இன்று ஏனோ அவளுடன் கதைக்க வேண்டும் போல இருந்தது. அவளிற்கு அருகே போய் நின்றேன். நிமிர்ந்து பார்த்திவிட்டு பின்புறத்தில் ஒட்டிக் கொண்ட மண்ணைத் தட்டிக் கொண்டு எழுந்தாள்.

"கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன செய்வதாக இருக்கின்றீர்கள்?"

"நான் ஒஸ்ரேலியா போவம் எண்டு ஜோசிக்கிறன். அங்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்கின்றார்கள். அங்கையாவது படிச்ச படிப்பிற்கு வேலை கிடைக்குதா பார்க்கலாம்."

"என்னால் வேறு எந்தவொரு நாட்டிற்கும் போக முடியாது. இன்னும் அகதியாக சிறகொடிந்த ஒரு பறவையைப் போலவே இங்கு இருக்கின்றேன். இந்த நாட்டிற்கு நான் வரும்போது கொடுத்த உண்மையான வாக்குமூலத்தில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. பிரஜா உரிமை தர மறுக்கின்றார்கள்"

அவளுடயை கதையை ஏற்கனவே நான் அறிந்து வைத்திருந்தேன்.

"என்னைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொஸ்னியாவில் இருந்து 95 ஆம் ஆண்டு இங்கு வந்தேன். அப்போது அங்கே ஒரு பெரிய இனப்படுகொலை நடந்தது. பொஸ்னிய - சேர்பிய படைகள் கிழக்கு பொஸ்னியாவில் உள்ள பல ஆயிரக்கணக்கான முஸ்லிங்களை படுகொலை செய்து புதைகுழிகளில் போட்டார்கள். அதில் எனது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்தேன். அங்கிருந்து தப்பி வர ஒரு பிரயாண தரகர் எனக்கு உதவி புரிந்தான். அவன் கேட்ட பணத்தை இன்னமும் என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் இங்கு இரவு பகலாக வேலை செய்து வருகின்றேன்." அவளின் வேதனைகளில் மனப்பூர்வமாக இரக்கப் பட்டேன். அந்தச் சிந்தனையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

மனைவி தேநீரைத் தந்துவிட்டு சற்றே தள்ளி நின்றாள். நான் ரெலிபோனைக் கையில் பிடித்தபடி, முகவரிகள் எழுதப்பட்டிருந்த 'டைரி'யை ஒவ்வொரு பக்கமாகத் தட்டிக் கொண்டிருந்தேன். மகள் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு ஒளிந்து கொண்டாள். 'ஓ! காலமை ஏதோ பறவையைப் பற்றிக் கேட்டவள். மறந்தே போய் விட்டேன்.' எங்களுக்கு இருக்கிற பிரச்சனையளுக்கை பிள்ளைகளை தவிக்க விடக் கூடாது.

"இஞ்சை வா செல்லம். இரண்டு பேருமா சேர்ந்து இன்ரநெட்டிலிலை அந்தப் பறவையைத் தேடுவம்."

"அப்பா... இண்டைக்கு ரீச்சர் அதைப்பற்றிச் சொல்லித் தந்தவா. EMU வை எமு. ஈம்யூ அல்லது ஈமியூ எண்டும் சொல்லலாமாம். உயிர் வாழும் பறவையளிலை தீக்கோழிக்கு அடுத்த பெரிய பறவையாம். சாம்பல் நிற உடல் கொண்ட அது தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும். 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 2 மீட்டர் உயரமும், 50 கிலோகிராம் எடையும் கொண்டது.
அவுஸ்திரேலியாவில் பரவலாக இருக்கிறது. அது ஒரு பறக்காத பறவை." ரீச்சர் சொல்லிக் கொடுத்தது போல கடுகதி வேகத்தில் மகள் சொன்னாள்.
"இரண்டு மீற்றர் உயரம். ஐம்பது கிலோகிராம் எடை. பறக்காத பறவை. அது நாங்கள்தானடா செல்லம்" அவளைக் கட்டிப் பிடித்து செல்லமழை பொழிந்தேன்.

"அப்பாவுக்கு விசர்" சொல்லியபடி துள்ளிக் கொண்டு மறைந்தாள் அவள்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்யுகமாயினி, தை 2011

‘செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2010),  ஞானம் சஞ்சிகை, இலங்கை


No comments:

Post a Comment