Tuesday 27 October 2015

மதங்களின் பெயரால் - குறும் கதை



நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் 'அக்ஷிடென்ற்' ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான். விபத்து நடந்தது மாலை நான்கு மணிக்கு. இப்போது நேரம் இரவு 10 மணி. அவரின் மகன் கார் ஓடிக்கொண்டு போகும்போது 'புற்ஸ்கிறே' (Footscray) என்ற இடத்தில் விபத்து நடந்தது. அவனுக்கு தலை வெடித்து 12 இழைகள் போடப்பட்டிருப்பதாகவும், தனக்கு நெஞ்சில் கார் பெல்ற் இழுத்ததில் சாதுவான நோ எனவும் சந்திரன் சொன்னான். மகன் நாளைக் காலையில் ஹொஸ்பிட்டலில் இருந்து வீடு வந்துவிடுவான் எனவும், எங்களை பத்துமணி மட்டில் வீட்டுக்கு வந்தால் போதுமானது என்றும் சொன்னான்.

எனக்கு மனம் கேட்கவில்லை. இரவுச் சாப்பாடு சாப்பிட்டார்களா என்பதும் தெரியவில்லை. ஏதாவது ஒன்று என்றால் பதறிப் போகின்ற குடும்பம் அது. நான் அவர்களுக்கு ரெலிபோன் செய்தேன்.
"மனைவி, மகள் எப்படி இருக்கின்றார்கள்?"
"அவர்கள் காரின் பின்பக்கம் இருந்தபடியால் அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை."

"சாப்பாடு எல்லாம் என்ன மாதிரி?"
"சாப்பிட்டு விட்டோம். நீங்கள் நாளைக்கு வாங்கோவன். அப்ப எல்லாம் சொல்லுறன்."

இன்னும் சந்திரனுக்கு பதட்டம் தணியவில்லை என்பது அவரின் பேச்சின் உளறலில் தெரிந்தது.

மறுநாள் காலை பதினொரு மணியளிவில் நாங்கள் அவர்கள் வீட்டிற்குப் போனோம். கதவைத் திறந்துவிட்டு ஒரு கதிரைக்குள் போய் புதைந்து கொண்டார் சந்திரன். ஒன்றும் கதைக்காமல் தலையைக் குனிந்து கொண்டு மெளனமாக இருந்தார். அவரது செய்கைகள், அவர் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதைக் காட்டியது. வீட்டிற்குள்ளிருந்து பக்திப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நானே பேச்சைத் தொடங்கினேன்.

"ஆர் ஹொஸ்பிட்டலுக்கு மகனைக் கூட்டிக் கொண்டு வரப் போயிருக்கிறார்கள்?"
"மனைவியும் மகளும். எனக்கு நெஞ்சு நோவாக் கிடக்கு. எழும்பி நடக்கவே நோகுது"

அவர் எதையோ எனக்கு ஒளிப்பது போன்றிருந்தது.

"புற்ஸ்கிறேயிலை எதிலை அக்ஷிடென்ற் நடந்தது?"

அவர் நடந்த சம்பவத்தை சொல்லத் தொடங்கினார்.

"உங்களுக்கு 'மார்க்கெட்' இடம் தெரியும்தானே!. நான் என்ர மகனுக்குச் சொன்னனான். முன்னுக்கு நிக்கிறவன்ர நிலமை சரியில்லை. குடிச்சுபோட்டோ என்னவோ காரை டுர் டுர் எண்டு வைச்சுக் கொண்டு நிக்கிறான். ஏதோ அவசரம் போல, பாத்து எடு எண்டு. மகனும் 'கிறீன்' விழுந்த உடனை மெதுவாத்தான் எடுத்தவன். அவன் என்னப்பா அதுக்கிடையிலை பாய்ஞ்சு விழுந்து எடுத்து அடிச்சுப் போட்டான்"

"சரியான விசரனா இருப்பான் போல கிடக்கு" என்றேன் நான்.

"ஒரே அடிதான். எங்கடை கார் சப்பழிஞ்சு போச்சு. அவன்ரை காருக்கு ஒண்டுமில்லை. நல்ல காலம் நாங்களும் அந்த இடத்திலை வேகமா எடுத்திருந்தோமெண்டால் இப்ப ஒரு உயிரும் இருந்திருக்காது. மகனுக்கு தலை வெடிச்சு இரத்தம் ஒழுகுது. அவன் எண்ணண்டா 'அல்லா' மேலை அடிச்சு தன்னிலை பிழை இல்லையெண்டு சத்தியம் செய்யுறான்."

"சனங்கள் எல்லாம் அவனிலைதான் பிழை எண்டு சத்தம் போட்டினம். அவனோ கேக்கிறதா இல்லை. 'அல்லா'தான் காரை எடுக்கச் சொன்னவர் எண்டமாதிரி சொல்லிக் கொண்டே இருந்தான். சனங்களுக்கை நிண்ட ஆரோ ஒருத்தர்தான் பிறகு அப்புலன்ஸ்சிற்கும் பொலிசுக்கும் போன் செய்தது. அம்புலன்ஸ் என்னையும் மகனையும் ஏத்திக் கொண்டு ஹொஸ்பிட்டலுக்கு போனது. பிறகு எனக்கு ஒண்டுமில்லை எண்டு கொஞ்ச நேரத்திலை விட்டிட்டான்கள். பொலிஸ் அவனிலைதான் பிழை எண்டு சொல்லி எல்லாம் பதிஞ்சு கொண்டு போனது."

"அப்ப உங்கடை கார்?"
"கார் write off. Full insurance செய்த படியாலை பறவாயில்லை. ஆனா ஒண்டு பாருங்கோ அவனோ கடைசி வரை அல்லாவைத்தான் துணைக்கு வைச்சுக் கொண்டான். பாத்தியளே மதங்களை என்ன என்னதுக்கெல்லாம் இழுக்கினம் எண்டு" மூச்சு வாங்கக் கதைத்தார் சந்திரன்.

"நீங்கள் ஒண்டுக்கும் இப்ப பதட்டப் படாதையுங்கோ. பிறகு நெஞ்சுதான் நோகும். இப்ப எல்லாம் சரிதானே! மகனை ஹொஸ்பிட்டலிலை இருந்து கவனமாக் கூட்டிக் கொண்டு வந்தால் சரி. எப்பிடி உங்கடை மனைவியார், கார் கவனமா ஓடுவாதானே! ஏனெண்டா மகனுக்கு 12 இழை போட்டிருக்கு எண்டு சொல்லுறியள். ஆடாமல் அசையாமல் கூட்டிக் கொண்டு வரவேணும். ஒரு சின்ன 'பிறேக்' போட்டாலே இழையள் எல்லாம் அறுந்து போம். வழி நெடுக எத்தினை 'அக்ஷிடென்ற்' எண்டு ஒவ்வொரு நாளும் நடக்குது. எனக்குச் சொல்லியிருக்கலாம். நான் கூட்டிக் கொண்டு வந்திருப்பன்."

"இல்லை. இல்லை. உங்களுக்கு ஏன் வீண் சிரமம். மகள் நல்லா 'றைவ்' பண்ணுவாள். அவள் கவனமா கூட்டி வருவாள்"

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட்டது. சந்திரன் எழுந்து கதவைத் திறந்தார்.

மனைவியினதும் மகளினதும் கைத்தாங்களில் மகன் நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தான். அவனது தலையெல்லாம் கட்டுப் போடப்பட்டிருந்தது. நெற்றியில் பெரிய விபூதிப்பட்டையும் அதிலே பெரிய நாணயக்குற்றி அளவிற்கு சந்தணப்பொட்டும் துலங்கியது. காதிலே ஒரு மரக் கொப்பளவிற்கு பூ வேறு.

"அப்பப்பா! கோயிலிலை என்ன சனம். எலும்பிச்சம்பழம் வெட்டி நாவுறு கழிக்க நான் பட்ட பாடு. சா!" மனைவி சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.

"இப்ப நீங்கள் எல்லாம் எங்கை போட்டு வாறியள்?" எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

"பிள்ளை காலமை 9 மணிக்கே ஹொஸ்பிட்டலாலை வந்திட்டான். இப்ப நாங்கள் கோயிலுக்குப் போட்டு வாறம்."

இங்கே எதுவுமே நடக்கவில்லை என்பதுமாப் போல் - கதவைத் பூட்டிவிட்டு மீண்டும் அதே கதிரைக்குள் போய் புதைந்து கொண்டார் சந்திரன்.







No comments:

Post a Comment