Wednesday, 21 October 2015

அந்த உருவம் - குறும் கதை



அனேகமான கோடை விடுமுறையின்போது நாங்கள் மெல்பேர்ணிலிருந்து சிட்னி போய் வருவது வழக்கம். காரை எடுத்தால் சிட்னி போக பதினொரு மணித்தியாலங்கள் போதும்.

மெல்பேர்ண் திரும்ப முன்னர்  ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தை ஒருதடவை தரிசித்துவிட்டுப் போங்கள்என்று எனது சிட்னி நண்பன் ராஜா – சிட்னி போன முதல்நாளே சொல்லியிருந்தான். விருப்பம் என்றால் தானே கூட்டிச் செல்வதாகவும் சொல்லியிருந்தான். ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் வொலங்கொங் (Wollongong)   என்ற இடத்திற்குப் போகும் வழியில் ஹெலன்ஸ்பேர்க் என்ற நகரில் இருக்கின்றது. சிட்னியில் முதன்முதல் ஆகமநெறிப்படி கட்டப்பட்ட கோவில் இது. இங்கு சிவனுக்கு ஒரு கோவில் தொகுதியும் விஷ்னுவிற்கு ஒரு கோவில் தொகுதியும் என சைவ வைஸ்ணவக்கோவில்கள் ஒரே இடத்தில் உள்ளன.

அங்கு நின்ற நாட்களில் சிட்னி கார்பர், ஒப்ரா ஹவுஸ், ஒலிம்பிக் பார்க், முருகன் கோவில் என்று சிட்னியில் போக வேண்டிய எல்லா இடங்களிற்கும் போயிருந்தோம். வொலங்கொங் கோவிலிற்கு மாத்திரம் போகவில்லை.

நாளைய தினம் மீண்டும் மெல்பேர்ண் புறப்படுகின்றோம். அதற்கிடையில் அருகே ஒருமணித்தியாலம் கார் ஓடும் தூரத்தில் இருக்கும் பூங்கா ஒன்றிற்கு போக விரும்பினோம்.

பூங்காவை அடைந்தபோது மதியமாகிவிட்டது. நாங்கள் மொத்தமாக பத்துபேர் மட்டில் இருந்தோம். பூங்காவில் எங்களைத் தவிர வேறு இரு குடும்பத்தவர்கள் இருந்தார்கள். அவர்களும் ஏறக்குறைய அவ்விடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். பூங்கா வெறிச்சோடிக் கிடந்தது. அனைவரும் நாங்கள் கொண்டுவந்த தரைவிரிப்புகளை புல்தரையில் விரித்துவிட்டு கொண்டுவந்த பொருட்களைப் பரப்பி அமர்ந்தோம். சிறுவர்கள் அங்குமிங்குமாக ஓடி பூங்காவை அமர்க்களமாக்கிக் கொண்டிருந்தனர். சும்மா மலையாகக் கிடந்த நிலத்தை வெட்டி சமதரையாக்கி பூங்காவாக அமைத்திருக்க வேண்டும். ஒருபக்கம் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஓடும் நீரைவிட தேங்கிக் கிடந்த அழுக்கு நீரே அங்கு அதிகம். மறுபுறம் புதர். இடையிடையே பிள்ளைகள் விளையாட சறுக்கீஸ் ஊஞ்சல் என பூங்கா பசுமையாக இருந்தது.

சிறுவர்கள் மலைச்சரிவு மீது ஏறி, பின்னர் அங்கிருந்து சரிவுமீது வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தாவிடில் ஆற்றினுள் போய் விழவேண்டியதுதான். சிறிது நேரம் அவர்களுடன் விளையாடிவிட்டு, மறுபுறத்தில் இருந்த இருக்கைகளை நோகிச் சென்றோம். இருக்கைகளை அடைவதற்கு நீண்டதொரு சரிவுமீது ஏறவேண்டியிருந்தது. சரிவின் அருகே பெரியமரங்கள் சடைத்திருந்தன. அங்கே மரத்தாலான சில மேசைகளும், அதைச் சுற்றி வாங்குகளும் இருந்தன.

மதியச்சாப்பாட்டை ஆரம்பித்தோம். சுவையான சாப்பாடு. கண் மூடி முழிக்கும் நேரம்.

ரிஷி கீழே விழுந்துவிட்டான்என்று கத்தினான் தீபன். அவன் காட்டிய திசையில் எட்டிப் பார்த்தேன். ஒரே இருட்டு. நாங்கள் மேலே ஏறிவந்த சரிவின் அருகேயுள்ள பள்ளம் அது. அதன் ஆழம் குறைந்தது பத்து மீற்றராவது இருக்கும். கீழே என்ன இருக்கின்றது என்பது தெரியாமல் மரங்கள் அடர்ந்திருந்தன. செய்வதறியாது அந்தச் சரிவுமீது கீழே ஓடினோம்.

ரிஷி தான் அணிந்திருந்த ஷூ ஒன்றுடன் பள்ளத்திற்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். நெற்றியிலிருந்தும் நாடியிலிருந்தும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கூட வந்தவர்கள் முகத்திலிருந்து வழியும் இரத்தத்தைத் துடைத்து காயத்திற்குக் கட்டுப் போட்டார்கள்.

“என்ன நடந்தது? ஏன் விழுந்தாய்?
“விளையாடிக் கொண்டிருக்கேக்கை விழுந்து போனேன்.
“ஏதாவது ஹொஸ்பிற்ரல் கிட்ட இருக்குதா? கூட வந்தவர்களிடம் மனைவி கேட்டாள். அவர்கள் இல்லை என்றார்கள். திரும்பவும் புறப்பட்ட இடத்திற்குத்தான் போக வேண்டும்.

 “அப்பா... நான் கீழே விழுந்துகொண்டிருக்கேக்கை ஏதோ ஒரு பெரிய உருவம் என்னைப் பிடிச்சு தள்ளிவிட்டது. இல்லாவிட்டால் கீழேயிருந்த றொக்கிலை அடிபட்டிருப்பன். கீழே போய்ப் பாருங்கள் பெரிய பெரிய கல்லுகள் எல்லாம் இருக்கின்றன.

நான் அந்தப்பற்றைக்குள் சென்று கொண்டிருக்கும்போது,
“அப்பா என்ரை மற்ற ஷீவையும் தேடி எடுத்துவாங்கோஎன்றான் ரிஷி.

எங்குமே மரக்கொப்புகள் நீட்டிக்கொண்டிருந்தன. கீழே கூரான பெரிய பாறாங்கல்லுகள். ஒரேயொரு சிறிய இடம் மாத்திரம் வெறுமையாக கல்லுகள் இல்லாமல் இருந்தது. மரத்தின் கிளை ஒன்றில் நைக் ஷூ தொங்கிக் கொண்டிருந்தது. அது அவனது பிறந்தநாள் பரிசாக வாங்கியது.   
அதை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து விரைவாக நகர்ந்தோம். ஹொஸ்பிற்றலில் அவனது நாடிக்கு இழை போடவேண்டியிருந்தது.

அன்று முழுவதும் தன்னைக் காப்பாற்றிய அந்த உருவம் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான் ரிஷி. எங்களுக்கும் அந்த நிகழ்ச்சி வியப்பாகத்தான் இருந்தது.

அடுத்தநாள் காலை மெல்பேர்ண் புறப்பட்டோம். வொடொங்கா என்ற இடத்தை அண்மித்துவிட்டோம். இன்னும் நான்கு மணித்தியாலம் கார் ஓடவேண்டும். இருமருங்கிலும் இருந்த அடர்ந்த மரங்கள் காடு போன்ற தோற்றத்தைக் கொடுத்தன. முன்னாலே வானத்தில் கருமுகில்கூட்டங்கள். திரும்பவும் நேற்றைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

“உண்மையாகவே ஒரு உருவம் உன்னைப்பிடிச்சுத் தள்ளிவிட்டதா?
அம்மா மகனிடம் கேட்டாள்.

“அம்மா... அது கடவுள்என்றான் மகன்.
“நான் இதை நம்பமாட்டேன் என்றாள் அம்மா.

வானத்திலே இருந்த முகில்கூட்டங்களில் ஒன்று சற்று வித்தியாசமாக தோற்றமளித்தது. அது ஒரு கடவுளின் திருவுருவமாக எனக்குக் காட்சி தந்தது.
“அங்கே பாருங்கள்.... கமராவை எடுங்கள்.
மனைவியும் மகனும் அந்த உருவத்தைப் பார்த்து வியந்தபடியே கமராவைத் தேடினார்கள். கமரா கைக்குக் கிட்டியபோது அந்த முகில்கூட்டம் முற்றாகக் கலைந்திருந்தது.

அடுத்த வருடம் நாங்கள் சிட்னிக்குப் போனபோது, முதல் காரியமாக ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தைத் தரிசித்தோம்.



No comments:

Post a Comment