அதிகாரம் இரண்டு : கார் தொழிற்சாலை
நந்தன் இலங்கையில் படித்தது ஒன்று.
அவுஸ்திரேலியாவில் இன்று வேலை செய்வது இன்னொன்று. அவன் ஒரு குறிக்கோளை வைத்துக்
கொண்டுதான் அங்கு வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத் தொழிலாளிக்கே அங்கு மணித்தியாலம்
25 டொலர்கள் கொடுத்தார்கள்.
மனித சஞ்சாரமற்ற வனாந்தரங்களாலும்
புல்வெளிகளாலும் பரவிக் கிடக்கும் அவுஸ்திரேலியப் கண்டத்தில் - அமைதியான ஒரு
கிராமத்தின் பெருநிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது
அந்தத் தொழிற்சாலை. தொழிற்சாலையின் ஒரு புறத்தே இருபத்துநான்கு மணி நேரமும்
கடகடத்து ஓடும் வாகனங்கள் நிரம்பிய வீதியும் வானளாவிய கட்டடங்களும், ஏனைய மூன்று
பக்கங்களும் புல்வெளியும் புதரும் ஓடையுமாகக் கொண்டுள்ளது.