அதிகாரம் 16 - களை எடுத்தல்
பதினைந்து வருடங்களுக்கு முன்னர்
கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள்
பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும்
வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும்
சுத்தமாக அழகாக இருந்தது.
2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை
கட்டாய பணி நீக்கம்
செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து
மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது.
யார் தலை எப்போது உருளும் என்று எல்லோரும் பயந்தபடி இருந்தார்கள். தினமும்
வேலை செய்யுமிடத்தில் இதைப்பற்றிய பேச்சுத்தான் முக்கிய இடம் பிடித்தது. ஸ்மோக்கோ
நேரத்திலும் (smoko Time
– தேநீர், புகை பிடிக்கும் இடைவேளை) இதைப்பற்றித்தான் கதையாக இருந்தது.
ஆனால் திறமையற்றவர்களையும், வேலைக்கு ஒழுங்காக வராதவர்களையும், வேலையில் குழப்படி செய்பவர்களையும்தான்
நிர்வாகம் நீக்க இருப்பதாக செய்தி கசிந்தது.
வேலை ஆரம்பமாவதற்கு முன்னர் ஐந்து நிமிடங்கள் கூட்டமும் உடற்பயிற்சியும்
நடைபெறுவது வழக்கம். சமீபத்தில்தான் இதை அறிமுகம் செய்திருந்தார்கள்.
வேலை நீக்கம் பற்றிய செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவித்து மூன்று
மாதங்கள் இருக்கலாம். அன்றும் குறூப்லீடர், ரீம்லீடர் உட்பட எல்லோரும் உடற்பயிற்சி
செய்தார்கள். வேலை தொடங்கி அரைமணி நேரம் கழிந்திருக்கும். இரண்டு பாதுகாவலர்கள்
நந்தனின் குறூப்றூம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அங்கே கொம்பியூட்டரின்
முன்னால் ஹெவின் இருந்தார். Elvis Presley இன் ‘Maybe I didn’t treat you’ என்ற பாடல் கொம்பியூட்டரில் இருந்து ஒலித்துக்
கொண்டிருந்தது. வந்தவர்கள் இருவரையும் அதிசயமாகப்
பார்த்தார். பின்னர் கதிரையில் அவர்களை அமரும்படி சொன்னார். பாடலை நிறுத்திவிட்டு
அவர்களுடன் உரையாடத் தொடங்கினார்.
வந்தவர்களின் முகத்தைப் பார்த்தபடி அவர்கள் சொல்வதைக் கேட்டுக்
கொண்டிருந்தார்.
ஹெவினின் முகம் சட்டெனக் கறுத்தது. இருக்கையைவிட்டு எழுந்தார்.
தன்னுடைய இருக்கையைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அது சுவருடன் மோதி ஓசை
எழுப்பியது. மேசை லாச்சியைத் திறந்து தனது கார்த்திறப்பு, வலற் என்பவற்றை
எடுத்துக் கொண்டார். பாதுகாவலர்கள் இருவரும் அவர் செய்வதைப் பொறுமையாக இருந்து
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் காட்சியை நந்தனும் பெளசரும் தூரத்தில் இருந்தபடி அவதானித்துக்
கொண்டிருந்தார்கள். இனியும் தாமதிக்கக் கூடாது என்னும் நோக்கில் அறையை நோக்கிச்
சென்றார்கள்.
பாதுகாவலர்களில் ஒருவன் எழுந்து அறையின் முன்னே வந்தான். இவர்கள்
இருவரையும் உள்ளே நுழைய முடியாதவாறு தடுத்தான்.
“ஒருவரும் உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. நீங்கள் போகலாம்” சொல்லிவிட்டு
அறையின் உள்ளே சென்றவன்,
“திருவாளர் ஹெவின் அவர்களே! இந்த
அறையில் உங்களது உடமைகள் ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் இங்கே
வருவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது” என்றான்.
”முப்பத்தைந்து
வருடங்கள் வேலை செய்தேன். எனக்கென்று ஒரு மண்ணாங்கட்டியும் இங்கு இல்லை” கூடவே சில கெட்ட வார்த்தைகளால் தொழிற்சாலை
நிர்வாகத்தைத் திட்டி ஏசினார்.
கொம்பியூட்டரை லொக் ஓஃப் செய்தார்.
ஓடிக்கொண்டிருந்த ரி.வியை நிறுத்தினார். அறையை ஒருதடவை சுற்றுமுற்றும்
பார்த்துவிட்டு “நான் ரெடி” என்றார்
ஹெவின். அறையின் விளக்கை அணைத்தார்.
அதன் பிற்பாடு இரண்டு போர் வீரர்கள்
அருகே அணிவகுக்க நடுவிலே ஒரு குறுநில மன்னராக முன் இருந்த ஒஃபீஸ் நோக்கிச்
சென்றார்.
அன்று இரவு பத்துமணிக்குள் நடந்த களை
எடுப்பில் 18 பேர்கள் இவர்களின் பகுதியில் தொலைந்தார்கள். மொத்த தொழிற்சாலையில் இருந்து 100 பேர்கள்வரை
அகற்றப்பட்டிருந்தார்கள். தொழிலாளர்கள் மனேஜர்கள் என்று எந்தவித பாகுபாடுமின்றி
எல்லோரும் சமமாகவே நடத்தப்பட்டார்கள். ஆனால் எல்லோருக்கும் அவரவர் வேலை செய்த
காலத்தைப் பொறுத்து ஒரு தொகைப் பணம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹெவினுக்கு நான்கு லட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் தேறும் என்றார்கள். இருப்பினும்
அவர்கள் தொழிற்சாலையில் இருந்து அகற்றப்பட்டிருந்த முறையில் பலரும் விசனம்
தெரிவித்திருந்தார்கள். அதற்கு ‘பாதுகாப்பு’ என்ற ஒரே ஒரு காரணத்தை நிர்வாகம் முன் வைத்தது.
அன்றைய தினம் கடைசி ஆளாக பெளசர்
அனுப்பப்பட்டார். ஹெவினை சிலர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் பெளசரை ஒருவரும்
நினைத்தும் பார்க்கவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் களை
பிடுங்கும் நாட்களாக இருந்தன. மொத்தம் 240 பேர்கள் வரை நீக்கப்பட்டிருந்தார்கள்.
வேலைக்கு புருடா விட்டுக் கொண்டு வீட்டில் நின்ற சிலரும் இதற்குள் அடங்கும்.
அவர்களுள் ஆலினும் ஒருத்தியானாள்.
●
இன்னும் வரும் ...
No comments:
Post a Comment