அதிகாரம் 15 - காசிருந்தால் வாங்கலாம்
2009 ஆம் ஆண்டு இலங்கையில் –
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மிகவும் மனம் உடைந்து போனான்
நந்தன். ஒரு வாரமாக அவன் வேலைக்கு வரவில்லை. அதன் பின்னரும்
சிலமாதங்கள் அவனால் வேலையில் ஒன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை.
மெல்பேர்ண், சிட்னி, கன்பராவில் நடந்த ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களில்
எல்லாம் அவனும் முன்னர் பங்குபற்றியிருந்தான்.
பாம் விவாகரத்துச் செய்து மூன்று
வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் வந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் வியட்நாம்
சென்றிருந்த பாம், திரும்பி வரும்போது தன்னில் பாதி வயது கொண்ட அழகிய யுவதி
ஒருத்தியை மணம் முடித்துவிட்டு வந்தான்.
வெளிநாட்டு மாப்பிள்ளை. அவளும் ஓமென்று
உடன்பட்டுவிட்டாள்.
கொஞ்சக் காலம் அந்த அழகிய யுவதியின்
புகைப்படங்கள்தான் வேலையிடத்தில் பிரசித்தம். அவளை மூன்று சில்லுச்
சைக்கிளில்---ஓட்டோ மாதிரி ஒன்றில்---பாம் இழுத்துச் செல்லும் காட்சிகள்,
பூங்காவில் பாம் அவளைக் கிஸ் அடிக்கும் சீன்கள் என போட்டோ ஷொப்பில் மினுக்கப்பட்ட
புகைப்படங்கள். அதற்கடுத்த விடுமுறையின்போது வியட்நாம் சென்றவன் தன் புதிய
மனைவியுடன் அவுஸ்திரேலியா வந்து சேர்ந்தான். தன்னுடன் வேலை செய்பவர்களைக் கூப்பிட்டு
பார்ட்டி கொடுத்தான். புதிய மனைவி நன்றாகப் பாடுவாள். இடுப்பை ஆட்டி ஆட்டி அவர்கள்
மொழியில் பாடினாள். இடையிடையே மனைவியைக் கட்டிப் பிடித்து பலமுறை முத்தமழை
பொழிந்தான் டாக்டர் பாம். வைனை அதிகம் குடித்துவிட்டு நடு ஹோலில் வீழ்ந்து
கொண்டாள் அந்தப்பெண். மனைவியை மேல்மாடிக்குத் தூக்கிச் சென்று படுக்கையில்
கிடத்திவிட்டு, “இந்த வைன் தானே அவளை மயக்கியது. இந்தா பார் நானும் மயங்குகின்றேன்” என்று கத்திப் புலம்பி அவள் குடித்து
விட்டுப்போன மிகுதி வைனைத் தான் குடித்தான் பாம்.
அதன்பிறகு வந்த ஒரு வருடமும், வேலை
முடிய மூன்று முப்பதிற்கு வீட்டிற்குப் பறந்து விடுவான் பாம். ஒருபோதும் ஓவர்டைம்
வேலை செய்யவில்லை.
“நீ சதா வேலை... வேலை... என்று அலைந்து
திரிந்தாய். அதனால்தான் உன் முதல் மனைவி ஓடிவிட்டாள். புதிய மனைவியை மகிழ்வி.
தினமும் அவளை வெளியே அழைத்துச் செல். சினிமாவுக்கு பீச்சுக்கு ஹோட்டலுக்கு எண்டு
கூட்டிச் செல்” என்று பலர் பாமிற்கு ஆலோசனை சொன்னார்கள்.
அந்த ஆலோசனையை பாம் செயற்படுத்தினான்.
அந்த ஒரு வருடமும் தொழிற்சாலையில் எந்தவிதமான பாட்டுச் சத்தமும் கேட்கவில்லை.
கச்சேரி நடக்கவில்லை. வீட்டிலேயே எல்லாக் கச்சேரிகளையும் முடித்து விடுகின்றான்.
ஆனால் கடந்த சில மாதங்களாக – மீண்டும்
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல – இரவு பத்துமணி வரை வேலை செய்ய
ஆரம்பித்திருக்கின்றான். மனைவிக்கு வீடு, மனைவிக்கு வைர அட்டியல், மனைவிக்கு....
என்று எல்லாமே மனைவி புராணமாக இருந்தது. பதிலுக்கு அவள் இவனுக்கு என்ன செய்யப்
போகின்றாள் என்பதே - கூட அவனுடன் வேலை செய்பவர்களின் கேள்வியாகும். பாமைக்
கண்டதும் ஜாடை செய்து பேசுவார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக டாகடர் பாமை மாலை வேளைகளில் காணவில்லை. பகல்
வேலைக்கும் வரவில்லை என்று சொன்னார்கள். கூடவே ஆலினும் வேலைக்கு வரவில்லை.
ஆலின் வேலைக்கு வருவதும் வராமல் போவதும் புதுமையானது அல்ல. ஆனால் பாம்
வேலையில் காசில் குறியாக இருப்பவன். அவன்
வராதது வியப்பாக இருந்தது.
அதற்கு முதல் இரண்டு வாரங்கள்கூட பகல் வேலைக்கு வந்தும், ஓவர்டைம்
வேலை செய்யாமல் வீட்டிற்குப் போய் விட்டான். அவனுக்கு குடும்பத்தில் ஏதோ
பிரச்சினைகள் இருப்பதாகச் சொன்னார்கள்.
நிர்வாகம் அவனது முகவரிக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பியது. பதில்
இல்லை. மறுவாரமும் அவன் வரவில்லை. வேலை செய்பவர்களிடையே சந்தேகம் கிழம்பியது.
சிலர் அவனது வீட்டிற்குச் சென்று பார்த்தார்கள். அவனது வீடு பூட்டிக் கிடந்தது.
அவனது கார் வீட்டு முகப்பினில் நின்றது. கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு
வந்துவிட்டார்கள்.
அவனது முன்னாள் மனைவியிடம் விசாரித்தார்கள்.
“இரண்டாவது மனைவியும் அவனைவிட்டு ஓடிப் போய்விட்டதாகக்
கேள்விப்பபட்டேன். உவனோடை எவன் தான் வாழுவான். சும்மா தட்டித் தட்டி பாடினால்
மட்டும் போதுமா? எங்களையும் கொஞ்சம் தட்டிப் பாக்கவேண்டாம்!” ஆத்திரத்தில் கத்தினாள் அவள்.
இதற்கிடையில் வியட்நாம் நண்பர்கள்
பொலிஸ் ஸ்ரேசன் சென்று தகவல் சொன்னார்கள். பொலிஸ் வந்தது.
யன்னல் கதவை உடைத்துப் பார்த்தார்கள்.
உள்ளிருந்து மணம் கிழம்பியது. முன் கதவைத் திறந்து உள்ளே போனார்கள். அவனது அழுகிய
உடல் நாக்குத் தள்ளியபடி ஹோலில் இருந்த மின்விசிறியில் தொங்கியது.
அதன் பிறகு ஒவ்வொருவரும் தமது
ஊகங்களைச் சொன்னார்கள்.
முதல் மனைவியைப் பிரிந்ததும்,
பிள்ளைகள்கூட அவனை விட்டுவிட்டதாகச் சொன்னார்கள்.
இரண்டாவது மனைவிக்கு அவனால் ஈடு
கொடுக்க முடியவில்லை. அவனால் அவளைத் திருப்திப்படுத்த முடியவில்லை. அதனால்
தனக்குத் தோதான ஒருவனுடன் ஓடிவிட்டாள்.
கடைசியாக வேலைக்கு வந்த காலங்களில்
அவன் பெரிதாக ஒருவருடனும் கதைக்கவில்லை. தாளம் தட்டிப் பாடவில்லை. அடிக்கடி
முகட்டைப் பார்ப்பதும் வெளியே சென்று புகைப்பதுமாக இருந்தான் என்று எல்லோரும்
சொன்னார்கள்.
●
இன்னும் வரும் ...
No comments:
Post a Comment