Wednesday, 18 March 2020

தண்ணீர்த் தாகம் - க.சச்சிதானந்தன் (ஆனந்தன்)




பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடா' என்று ஆடிஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோத்தில் கிடந்தசிறு நிழலில் இளைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில், பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார். 
அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை. நியாயஸ்தலத்துக்குப் போகும் கிளைறோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச்சந்திக்கும் சந்தி அது. அந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கும் உகந்த குளிர்நிழல், தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய், பிஞ்சு மிளாகாய் நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தன. அவளுக்குச் சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லை. அன்றைக்கு வியாபாரம் அவ்வளவு ருசியாகவில்லை. கோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின் ருசி தெரியும். கொண்டுவந்த பெட்டியை காலி செய்து விட்டே, வீடு திரும்புவாள். அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான். 

தலையைக் கோதிக்கொண்டே பள்ளமான அடியிற் சாய்ந்தாள். அரசமிலைகளை இடையிடையே அசைக்கும் காற்று அவள் கூந்தலையும் ஆட்டிக்கொண்டிருந்தது. ஒரு காகம் மாத்திரம் கொப்பிலே இருந்து பலத்த தொனி வைத்தது.
 

அவளைப் பார்த்தால் யாருமே இழிகுலத்தவள் என்று சொல்ல மாட்டார்கள். அவளுடைய சிவந்த மேனியும் கருவண்டுக் கண்களும் யாரையும் கொள்ளை கொண்டுவிடும். அவள் ஜாதியைப் பற்றி யாருமே கேட்டதில்லை.
 

அப்படி அவர்கள் அறிந்திருந்தால் எப்பவோ அவள் வியாபாரத்தில் மண் விழுந்திருக்கும். ஊரார் மாத்திரம் அவளிடம் எதுவும் வாங்குவதில்லை. அவர்களுக்குத்தான் விசயம் தெரியுமே?
 

வெயில் எரிய எரிய அவளுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியது. பொறுத்துப்பார்ததாள். நா வறளத் தொடங்கியது. இனி அவளால் சகிக்க முடியாது மெதுவாக அவற்றைப் பெட்டியிலே போட்டுக்கொண்டு கிளம்பினாள். பக்கத்தில் வீடுகளில்லை. அவையெல்லாம் காய்கறி விளையும் பூமியும் பற்றைக்காடுகளுந்தான்.
 

செழித்த கமுகுகளும் வாழைகளும் அங்கே கிணறு இருக்க வேண்டுமென்பதை ருசுப்படுத்தின. மெல்ல மெல்ல வீட்டின் அருகே வந்தாள். தெருவழியே ஓடிய சேற்றுத் தண்ணீர் இன்னும் அந்த எண்ணத்தைப் பலப்படுத்தியது. உள்ளே பெட்டியை வைத்துவிட்டு அங்கும் இங்கும் பார்த்தாள் யாரையும் காணவில்லை.
 

கிணற்றைக் காணக்காண மேலும் தாகம் அவளை வாட்டியது. அடிநாவிலே சொட்டு ஜலமில்லால் வறண்டு போயிற்று. அந்த வெயிலின் அகோரத்திற்கு யாருக்குத்தான் தாகமில்லை!
 
கிணற்றுக் கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறைய குளிர்ந்த ஜலத்தைக் காண அவள் உள்ளமும், வாயும் அதிலே ஆழ்ந்துபோயிற்று, பாவம் அந்த விடாயை அடக்க இன்னொருவிடாய் உதவியாய் இருந்தது. தான் அந்த விடாயைத் தீர்க்க அருகதையற்றவள் என்பதை அவள் அறிவாள். இழிகுலத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் தாகசாந்தி செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் என்பது அவள் அபிப்பிராயம். அந்தச் செம்பை மாறி மாறிப்பார்த்தாள். யாரையும் காணவில்லை.
 

'என்னடி செய்தாய் பாதகி' என்று மிரட்டல் கேட்டது அதிகார தோரணையில்.
 

ஏங்கி விலவிலத்துப் போனாள் மீனாட்சி, உடம்பு சொட்ட வியர்த்தது. நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. கண்கள் மிரள மிரள விழித்தன. அவள் தான் செய்த களவு பிடிபட்டதை எண்ணிக் கல்லாய் சமைந்து போனாள்.
 

'உனக்கு அவ்வளவு மமதையா பறைச் சிறுக்கி' என்று ஆத்திரத்தோடு ஓடிவந்தார் நடேசய்யர். விபூதியைப் பொத்திக்கொண்டே கைகள் ஆத்திரத்தால் அங்குமிங்கும் எதையோ தேடின. கோபாக்கினி கண்களிலிருந்து பறந்தது.
 

'அவ்வளவு நெஞ்சுத் துணிவு, கிணற்றுக்குக் கிட்ட வந்து செம்பு சலத்திலும் தொட்டுவிட்டாயே? அனு
ஷ்டான ஜலத்தில் தொட உனக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டது' பல்லைக் கடித்து ஆத்திரத்தோடு அவளை விழுங்கப்போனார். பாவம் பறைப் பெண் அல்லவா? கோயிலுக்குப் போனால் எப்படிப் பிராயச்சித்தம் செய்வது என்று விட்டுவிட்டார் போலும். 

'மூதேவி நாயே, இனி என்னுடைய கிணற்றை நான் என்ன செய்வது? அனுஷ்டான பாத்திரத்தை வைத்துவிட்டு விபூதி எடுத்து வருவதற்கிடையில் இப்படிச் செய்துவிட்டாயா? இனி இந்தச் செம்பை.....! நீ அந்தக் கதிரவன் மகளல்லவா? என்னுடைய அனுஷ்டான ஜலத்தைத் தொட்ட நீ கொள்ளையிலே போகமாட்டாயா? சிவன் வதைக்க மாட்டானா?'
 

ஒரு மின்னல் மின்னியது போல் இருந்தது. உலகமே இருண்டு மடமடத்து அவள் தலையில் கவிழ்ந்தது போல் இருந்தது. பூமியே அவள் கால்களிலிருந்து நழுவிவிட்டது. இரத்தம் நெற்றியிலிருந்து குபீரிட்டது. களங்கமற்ற பார்வைக் கண்ணீரோடு இரத்தமும் சேர்ந்து ஓடியது. செம்பு அலங்கோலமாய் உருண்டு போய்விட்டது. அது அவள் கனிவாயை பற்றப்போய்த் தோல்வியடைந்ததற்காக அழுது கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தது.
 

'மூதேவி, இனி இந்தப்பக்கம் தலைகாட்டு, உன் தலையை நுள்ளி எடுத்துவிடுகிறேனோ இல்லையோ பார், உனக்கு இது போதாது போ நாயே வெளியே, சனியன்கள் வீட்டில் வந்து கூசாமற் கால் வைக்குதுகள்'
 

தங்கச்சிலை போல இவ்வளவும் நின்ற உருவம் இரத்த ஆற்றோடு பெயரத்தொடங்கியது. பெட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு மெதுவாகவெளியே போய்விட்டாள். அவர் எறிந்தபோது வாய்ச்செம்பு அவள் நெற்றியில் நன்றாகக் கணீரிட்டுவிட்டது. தீண்டாமை அசுரனின் அசுரத்தன்மை அவள் பிறைநுதலில் இரத்தத்தை வாங்கி விட்டது.
 

பாவம் தாகவிடாய் தீர்ந்தபாடில்லை. களவுக்கேற்ற தண்டனை கிடைத்துவிட்டதல்லவா? ஒரு பிராமணனின் அனுஷ்டானப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டாளல்லவா? எவ்வளவு பொல்லாத கோரக்களவு, இதற்கு இந்தத் தண்டமை போதுமா? சிவனுடைய அனுஷ்டானத்தை முடிக்க விடாமல்தண்ணீரைத் தொட்டு தீட்டாக்கியவளல்லவா? பெண்ணைத் திட்டிய திட்டுக்களைப் பார்த்துப் பகவான் சிரித்துக் கொண்டிருந்தார். 'என் பிள்ளையின் கடூர நா வரட்சியைத் தணிக்காத உனக்கு என்மீது அன்பா? உன்னுடைய அனுஷ்டானம் கொடிய நரகிற்கு வாயிலல்லவா' என்று அழுகையோடுதான் அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
 
சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம். அது இன்றோடு பூர்த்தியாகிவிட்டது. அவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.
 

ஏழையின் தண்ணீர்; விடாய் என்றுதான் திருமோ?
 

.............................
 

நடுநிசி, எங்கும் ஒரே நிசப்தம், ஆனால் அறைகளில் இருமும் சப்தமும் குழந்தைகளின் கீச்சுக்குரலும் இன்னும் ஒழிந்தபாடில்லை. 'ஐயோ அம்மா' என்று அடுத்த அறைகளில் வியாதிக்காரர் கஷ;டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மாரின் பல தினுசான குரல், அங்கங்கே மின்சாரவிளக்குகள் தூங்கிக்கொண்டிருந்தன.
 

ஒரு கிழவன் பூணூலை இழுத்துவிட்டுக் கொண்டு மூலையிலே செருமிக் கொண்டு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு முக்கி முனங்கிக்கொண்டு இருந்தான். அவனை யாரும் கவனிப்பார் இல்லை. அவன் சுற்றமெல்லாம் இன்று அவனைக் கைவிட்டுவிட்டன. அவன் அவர்கட்கெல்லாம் என்ன செய்தான்? ஒரே ஒரு பிழை, வாலிபமாய் இருந்த காலத்திலே தெரியாமல் தூரத்திலே உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பணத்தி என்று கல்யாணம் செய்தான். சிலநாட்கள் சென்றதன் பின் சுற்றம் எல்லாம் அவனை இகழ்ந்து தள்ளிவிட்டது. அதன் பின்புதான் அவனுக்கு விஷயம் புரிந்தது. தான் வெள்ளாளப் பெண்ணைக் கட்டிவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல அவளைக் கைவிட்டான்.
 

பெண்வழியால் லாபமும் இல்லை, இனசனமும் இல்லை. இன்றுவரையும் தனியேதான் காலந் தள்ளினான். இன்றைக்கு வியாதியாய்ப் போனான். கவனிப்பார் இல்லை. தர்ம ஆசுப்பத்திரியிலே கிடக்கிறான்.
 

அவனுக்கு மேலும் மேலும் மூச்சுவாங்கத் தொடங்கியது. தண்ணீர் விடாயெடுத்தது. அடிநாவிலே ஈரலிப்பில்லை. இருமி இருமி வரண்டு போயிற்று. தாகவிடாய் வரவர அதிகரித்தது. பேச்சுக் கொடுத்தாலோ இருமல் வாட்டுகிறது.
 

'அம்மா, தண்ணீர்! நாவை வறட்டுகிறது' என்று சொன்னான் அந்தக் கிழவன் கெஞ்சும் குரலில், பதிலே இல்லை, அடுத்த அறையில் இருந்து ஒரு இருமல் அதற்குப் பதில், கொஞ்சநேரம் நிசப்தம்.
 

'அம்மா, என்னால் சகிக்க முடியவில்லை. தண்ணீர் விடாயால் செத்துப் போய்விடுவேன். தண்ணீர் கொடுங்களம்மா' யாருமே மூச்சு விடவில்லை. தாதிகள் எல்லாம் ஒரே உறக்கம் போலும்.
 

ஒரு பெண்ணுருவம் அந்த மூளையருகே வந்தது. ஆமாம் அவளும் ஒரு தாதிப்பெண்தான். அந்த ஆஸ்பத்திரியில், காலதேவன் கீறிய கோடுகள் பதிந்த அவன் முகத்தை உற்றுப் பார்த்தது. ஆனாலும் அந்த முகம் அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. கிழவன் தண்ணீருக்காக வாயைத் திறந்தான்.
 

'ஐயா, பறைச்சி தொட்டுத் தண்ணீர் தந்தால் குடிப்பீர்களா? தாங்கள் பிராமணரல்லவா?' என்றாள் அவள்.
 

'அம்மா, அம்மா, குழந்தாய் பிராமணனானாலென்ன? பறையனானாலென்ன? என் தாகத்திற்கு நீர் கொடம்மா! கொடிய மரணதாகம் நெஞ்சை அடைக்கிறது.'
 

அவள் ஒரு சின்னப் பாத்திரத்தில் இளஞ்சூடான நீரைக் கொண்டு வந்தாள். கிழவன் விடாய் அவதியால் வாயைத் திறந்தான். ஆகா! உள்ளம் பூரிக்க ஆத்மா சாந்தியடைய மெல்ல மெல்ல நீரை வார்த்தாள் பெண்மணி.
 

'அம்மா, இந்த மரணவிடாயில் என்னைக் காப்பாறினாய் உன் குலம் நன்றாகவாழட்டும். நீ யாரம்மா?'
 

'ஐயா, என்னைத் தெரியாதா? நன்றாக உற்றுப் பாருங்கள்' என்று குனிந்தாள் அந்தத்தாதி.
 

'ஞாபகம் இல்லையே?'
 

தன் நெற்றியை அவன் முகத்திற்கு நேரே பிடித்தாள். 'இதோ பாருங்கள் இந்தமறுவை. தண்ணீர் விடாய்த்து அன்றொருநாள் உங்கள் வீட்டில் வந்தேனல்லவா? தாகவிடாய் தாங்காமல் சிறுபிள்ளைத்தனத்தால் ஏதோ அனுஷடானச் செம்பைத் தொட்டுவிட்டேனென்று நீங்கள் செம்பால் எறிந்த காயம் இதுதான்' அவள் நெற்றியைக் காட்டினாள் கிழவனுக்கு.
 

கிழவன் முகம் காட்டிய குறியின் உணர்ச்சி, ஏதோ புதிதாய் இருந்தது. 'ஆமாம், கதிரவன் மகளல்லவா? எப்படியம்மா இங்கே வந்தாய்? தாதியாவும் வேலைபார்க்கிறாயே?'
 

'ஆம், ஐயா, எல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபைதான். அன்றைக்கு நீங்கள் தீர்க்காத தாகத்தை அந்தப் பெரியார்கள் தீர்த்தார்கள். கல்வியுமளித்து இந்தநிலையில் வைத்தார்கள்.'
 

கிழவன் உள்ளம் வெடித்துவிட்டது. 'என் மரணதாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்று இரத்தக்கறை ஏற்படவேண்டும்! இந்த விடாய் தானே அந்தப் பசலைக்கும் அன்று'
 

'அம்மா என்னை மன்னி, ஜாதிக் கர்வத்தால் அன்று உன்னை எறிந்த என்னை மனப்பூர்வமாய் மன்னி!'
 

கிழவன் அவள் காலடியில் விழ எழுந்தான், பாவம்! அப்படியே தொப்பென்றுவிழுந்தான். விடாய் அடங்கியதோடு, அவன் கண் திறக்கவேயில்லை.
 

ஈழகேசரி (12.02.1939)

2 comments:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது தண்ணீர்த் தாகம் – க.சச்சிதானந்தன் (ஆனந்தன்) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    Plerase Use page break option into your post

    ReplyDelete
  2. சிறந்த படைப்பு
    தொடருங்கள்

    ReplyDelete