Tuesday, 31 March 2020

இரத்தம் – சிறுகதை




மு.தளையசிங்கம்

‘இன்னும் இந்தப் பு… அவங்கட…. ஊ… போறாங்கள்!”

சோமு, ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத்தாலும் உடலாலும் எல்லாவற்றாலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்கலின் நோவை, விழுந்தெழும்பியதினுள் ஏற்பட்ட வெட்கத்தைத் தனியே அனுபவிக்கத் தான்.

கமலம் அவனைத் தாண்டி அப்பால் போய் விட்டாள். ஆனல் அவள் பேசியவை அவனைச் சுற்றியே இன்னும் நின்றன. பச்சையாக நின்றன. சோமு அவற்றை ஒருக்கால் தன் வாயில் மீட்டிப் பார்க்க முயன்றன். முடியவில்லை. வாயில் வருவதற்கு முன் நினைவில் வரும்போதே நிர்வாணமாகிவிட்ட ஒரு கூச்சம் அவனைக் குறுகவைத்தது. எப்போதாவது இடுப்பிலிருந்து கழன்று விழப்போகும் சாரத்தைக் கை தூக்கும் போது கூடவரும் உடலின், உள்ளத்தின் ஓர் குறுக்கம். அவனுள் முடியவில்லை. அவனுக்கு அவை பழக்கமில்லை. அவன் வளர்க்கப்பட்ட விதம் அதற்கு மாறானது. சின்ன வயதில் இரத்தினபுரிக்கு அவன் படிக்கப் புறப்பட்டபோது ஆச்சி அவனுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொடுக்கும் புத்திமதிகள் அப்போது நினைவுக்கு வந்தன. அப்பு நீ மரியாதையா நடக்கோணுமப்பு. மரியாதையாப் பேசோணும். கெட்ட பேச்சுப் பேசக் கூடாது, என்னப்பு? நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும். மற்றப் பொடியளோடு சேந்து விளையாடித் திரியக்கூடாது, கெட்ட பழக்கங்கள் பழகக்கூடாது. நல்லாப் படிச்சு மரியாதையா வரோணும், என்னப்பூ?

ஒவ்வொரு சமயமும் ஊரிலிருந்து புறப்படும் போதெல்லாம் அதுதான் ஆச்சியின் வாயிலிருந்து அடிக்கடி வரும் உபதேசம். அவற்றைச் சொல்லும்போது அவனது முகத்தைத் தடவிவிட்டுக்கொண்டே தன் தலையை ஆட்டி ஆட்டி ஆச்சி சொல்லும் விதத்தை இப்போதும் அவனுல் நினைத்துப் பார்க்க முடிந்தது.

ஆச்சி ஊட்டிய பால், ஆச்சி தீத்திய சோறு என்பனபோல் ஆச்சி வகுத்த அவனுடைய வாழ்க்கை அது. அது அவனை என்றுமே கைவிட்டதில்லை. இரத்தினபுரியில் அப்பரின் கடையில் நின்று படித்த போதும் அதற்குப்பின் இப்போ கிளறிக்கலில் எடுபட்டு அதே ஊரில் வேலை பார்க்கும் போதும் அங்குள்ளவர்கள் அவனைப்பற்றிக் கூறுபவை அதற்கு அத்தாட்சிகள். தங்கமான பிள்ளை! கந்தையர் முதலாளியற்ற மகன் இருக்குதே அதுதான் பிள்ளை! அவனே தன் சொந்தக் காதால் அவற்றைக் கேட்டிருக்கிறான். அப்படி வளர்க்கப்பட்டதினால்தானா இப்போ கமலம் சொன்னதை அவனுள் திருப்பிச் சொல்ல முடியாமல் இருந்தது?

ஆனல் அதுதான் காரணமென்றால் கமலத்தால் கூட அப்படிப்பேச முடியாதே! சோமுவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவனைவிட வித்தியாசமாய் கமலம் வளர்க்கப்படவில்லையே! அவனைப் போலத் தானே அவளும் வளர்க்கப்பட்டாள்! அவளின் அப்பர் கார்த்திகேசரும் கொழும்பில் ஒரு முதலாளி. கந்தையரை விடப் பெரியமுதலாளி. ஏன், கமலத்தின் ஆச்சியும் அதே தங்கந்தானே? சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. அவனைப்பற்றி இரத்தினபுரிச் சோற்றுக்கடையில் ஒவ்வொருவரும் புகழ்கிறார்கள் என்றால் கமலத்தை ஊரில் ஒன்பதாம் வட்டாரத்திலுள்ள ஒவ்வொருவரும் புகழ்ந்திருக்கிறார்கள். அவனே அதைக் கேட்டிருக்கிறான் , அதுமட்டுமல்ல. அப்படிக் கேட்கும்போது அவனுக்குத் தன்னைப் பற்றிய நினைவுதான் அடிக்கடி வரும். தங்கமான பிள்ளை. சோற்றுக்கடையில் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அப்போ கமலமும் அவனும் ஒரே வர்க்கமா? ஆமாம், அப்படித்தான் இருக்கவேண்டும். அப்படித்தான் அவன் நினைத்திருக்கிறான். அதே வர்க்கம், அதே கலாசாரம்.

எது யாழ்ப்பாணக் கலாசாரம் என்று சொல்லப்படுகிறதோ அதைத் தன் சொந்தக் கலாசாரமாக வைத்திருக்கும் அந்த மத்தியதர வகுப்புக்கே உரிய பாணியில் எப்படி சோமு வளர்க்கப்பட்டானோ அப்படித்தான் கமலமும் வளர்க்கப்பட்டாள். சோமுவுக்கு இன்னும் அந்தக் கலாசாரத்தின் தரத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. சந்தேகம் ஏற்படும் என்ற நினைவே அவனுக்கு இல்லை. ஒன்பதாம் வட்டாரத்திலிருந்து பத்தாம் வட்டாரத்துக்கு பஸ்ஸுக்காக நடந்துவர முன் அடுத்தவளவில் உள்ள ஐயனார் கோயிலில் கும்பிட்டு விட்டு ஆச்சியையும் கொஞ்சி விட்டுப் புறப்படும்போது வட்டமாய் உடைந்த தேங்காய்ப் பாதிகளைக் கையில் வைத்துக்கொண்டு *பத்திரமாய்ப் போய்வாப்பு" என்று வழியனுப்பிய அந்த உருவம் அவன் நெஞ்சைவிட்டு என்றுமே மறையாது. அது இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கையும் போகாதென்றே அவனுக்குப்பட்டது. எப்படி அவனது ஆச்சி அந்தக் கலாசாரத்தின் உருவமாகத் தெரிகிறளோ அப்படித்தான் கமலமும் அவனுக்கு ஒரு காலத்தில் தெரிந்தாள். தலைகுனிந்து மணவறையில் பொன்னம்பலத்துக்குப் பக்கத்தில் அவள் இருந்த காட்சி சோமுவுக்கு இன்னும் நினைவிருக்கிறது. கழுத்தில் கிடந்த தங்கக் கொடியின் பின்னணியில் பொலிந்து சிரித்த முகத்தோடு அவனைக் காணும் போதெல்லாம் ‘எப்படித் தம்பி?’ என்று அவள் விசாரிப்பது இன்னும் அவனின் நினைவை விட்டு மறையவில்லை. அவளைப்போலத்தான் இளமையில் அவனது ஆச்சியும் இருந்திருப்பாள் என்று அவன் நினைத்திருக்கிருன், ஆச்சியைப்போலத்தான் கமலமும் பிற்காலத்தில் வருவாள் என்று அவன் கற்பனை செய்திருக்கிருன். ஆனால் கமலம் அப்படி வரவில்லை. அவள் இப்போ பேசிக்கொண்டு போனது போல் அவனது ஆச்சி ஒருநாளும் பேசியதேயில்லை.

கமலத்துக்குப் பைத்தியமா?

ஊர் அப்படித்தான் சொல்கிறது. பொன்னம்பலம் செத்தபின் அவள் அப்படி ஒருகோலத்தில் தான் திரிகிறளாம். வீட்டில் இருப்பதில்லை. வடிவாக உடுப்பதில்லை. சரியாகச் சாப்பிடுகிறாளோ தெரியாது. இப்போ எவ்வளவோ மெலிந்து விட்டாள். முன்பு பூரித்துத் தெரிந்த முகம் இப்போ எவ்வளவு கோரமாக இருக்கிறது! வைத்தியம் எதுவும் பலிக்கவில்லை. கல்யாணம் செய்யவும் விரும்பவில்லை. எங்கெல்லாம் திரிகிறாளோ தெரியாது. யார் வீட்டில் படுக்கிறாளோ என்னென்ன செய்கிறாளோ தெரியாது. வீட்டில் அவளைக் கட்டிவைத்துக் கூடப் பார்த்திருக்கிறார்களாம். ஆனால் முடியவில்லை. அப்படியெல்லாம் அவளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். பார்த்ததில்லை. எவ்வளவோ நாட்களுக்குப்பின் இன்றுதான் சோமு அவளைப் பார்த்திருக்கிறான். அதனால்தான் தூரத்தில் வரும்போதே அவன் சிரிக்கமுயன்றான், ஆனல் அவள் அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மாறாக அப்படிப் பச்சையாகப் பேசிக்கொண்டு போகிறாள். சுத்தப் பைத்தியம்! ஆனல் சுத்தப் பைத்தியம் என்றால் அவள் அப்படிப் பேசியிருக்கமாட்டாளே! சோமுவுக்கு அது நெஞ்சை உறுத்திற்று. அவள் சொன்னதில் உண்மை இருந்தது. அதுதான்! அவளைப் பைத்தியம் என்று தட்டிக்கழிக்க அவனால் முடியவில்லை. ஏதோ ஒன்று பிழைப்பதுபோல் பட்டது. அவளிலும் குற்றமில்லை தன்னிலும் குற்றமில்லை என்று அவனல் நியாயமாக்கிச் சரிக்கட்டல் செய்து தப்பமுடியவில்லை. அவள் சொன்னதில் உண்மை இருந்தது, இருக்கிறது! சோமுவுக்குத் திரும்பவும் ஒரு குறுக்கம். உண்மையில் நான் ஆரம்பத்தில் வெட்கப்பட்டது அவள் ஊத்தையாகப் பேசிவிட்டாள் என்பதற்காகவா அல்லது உண்மையைச் சொல்லிவிட்டாள் என்பதற்காகவா? அல்லது இரண்டுக்குமாகவா?

சோமுவால் எதையுங் கண்டுபிடிக்க முடியவில்லை. பயமா? தெரியாது. ஆனல் பழைய நினைவுகள் ஏனே வேண்டாமலே ஓடிவந்தன.

கமலமும் போயிருக்கிறாள். ஆமாம் இப்படித் தடபுடலாக உடுத்துக்கொண்டு பஸ் ஏறிப்போயிருக்கிறாள். பாணந்துறை அங்குதான் பொன்னம்பலம் கடை வைத்திருந்தான். புதுமுதலாளி, புது மாப்பிள்ளை. நான்கு வருடங்களுக்கு முன் தானே அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்? ஆமாம் நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான்கு வருடங்களால்தான் கமலம் சோமுவுக்கு மூப்புங் கூட. கல்யாணம் நடந்தபோது சோமு கிளறிக்கலில் எடுபடவும் இல்லை. ஊரில்தான் நின்றன். கல்யாண வீட்டுக்கும் போயிருக்கிறான். அவனுக்கு எல்லாம் நினைவிருக்கிறது. தலைகுனிந்து மணவறையில் பூக்கொத்துத் தெரிய கமலம் அழகாக உட்கார்ந்திருந்தாள். அதற்குப்பின் அடுத்த மாதமே அவனைப் பொன்னம்பலம் கூட்டிக்கொண்டு போய்விட்டான். பாணந்துறையில் வீடெடுத்து வைத்திருப்பதற்காக. ஆனால் பாவம் எத்தனை காலம் இருந்தார்கள்?

சோமுவுக்கு அதற்குப்பின் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. ஒரு கஷ்டம். அவன் எப்பவுமே அப்படித்தான். அந்தக் கதை வரும்போது அவன் தட்டிக் கழித்துவிடுவான். ஆனல் இப்போ மட்டும் அது தப்பும் மனப்பான்மையாகப்பட்டது.
ஒரு குறுக்கம்.

சோமு அதை வேண்டுமென்றே வருவித்தான். இப்போ அதை வருவிப்பது ஒருவித பலப்பரீட்சையாக அவனுக்குப்பட்டது.

அவர்கள் போனபின் ஐந்து மாதங்களுக்குள் இனக் கலகம். பொன்னம்பலத்தின் கடை தட்டப்பட்டது. கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போகமுன் அவர்கள் வந்துவிட்டார்கள். வீட்டுக்குப் போனாலும் தப்பிவிடலாம் என்ற நிச்சயம் இல்லை. ஆனல் போகத்தான் வேண்டும். கமலம் அங்குதான் இருந்தாள். வேலைக்காரப் பையன் என்ன செய்வான்?

கடையை விட்டுவிட்டுப் பொன்னம்பலம் பின் பக்கத்தால் ஓடினன். ஆனல் வீட்டுக்குப் போகமுடியவில்லை. கூட்டம் ஒன்று துரத்திற்று வேறு வழி இருக்கவில்லை. எதிரே தெரிந்த கோயிலுக்குள் புகுந்துவிட்டான். கடவுள்தான் காப்பாற்றவேண் டும். கோயிலுக்குள்ளாவது அடைக்கலம் கிடைக்காதா?

ஆனல் கடவுளையே காப்பாற்ற யாரும் அங்கு இல்லை. கோயிலுக்கே அடைக்கலம் கிடைக்கவில்லை. கோயிலையே காடையர்கள் கொளுத்தத் தொடங்கி விட்டார்கள். பொன்னம்பலம் ஒடி ஒரு மரத்தில் ஏறினானாம். என்ன ஏறினானாம்? என்ன “னாம் ?

சோமுவின் நினைவில் ஒரு குத்தல் குறுக்கிட்டது. அந்தக் கட்டத்துக்குப்பின் எப்பவுமே அவனுக்கு ஒரு நடுக்கந்தான். அந்தக் கதையை மற்றவர்கள் சொல்லும்போது அவன் வெளியே எழுந்து போய் விடுவதுமுண்டு. அதைப் பச்சையாக நினைத்துப் பார்க்க அவனால் முடிவதில்லை. ஆனல் முன்பு அதைத் தட்டிக்கழித்துவிட்டு நிம்மதியாக இருக்க முடிந்த அவனல் இன்றுமட்டும் கமலத்தைக் கண்ட பின் ஏனே அது முடியவில்லை. இன்று தான் அவனுக்கு இதுவரை அதைத் தட்டிக்கழித்திருக்கிருன் என்ற நினைவே வந்திருக்கிறது. அவன்.திரும்பவும் மீட்டிப் பார்க்க முனைந்தான். பச்சையாக, பச்சையாக.

பொன்னம்பலம் மரத்தில் ஏறினான். ஆனல் அவர்கள் விடவில்லை. துரத்திக்கொண்டு போனார்கள். இழுத்துக் கீழே போட்டார்கள். பொன்னம் பலம் கும்பிட்டான், கையெடுத்துக் கும்பிட்டான். கத்தி அழுதான். சோமுவுக்கு அதை நினைக்கும் போது அந்தக் கட்டத்தில் தானும் அப்படித்தான் செய்திருப்பான் என்றே பட்டது. இல்லை, நான் சும்மாவே செத்திருப்பேன்.
நினைக்கவே பயப்பட்டால் அதை நேரடியாகச் சந்தித்திருந்தால்?

பொன்னம்பலம் கும்பிட்டான். அவர்கள் அதற்காக விடவில்லை. அடித்தார்கள், உதைத்தார்கள். அணுவணுவாய்க் கொன்றுவிட்டார்கள். பொன்னம்பலம் அப்போ எப்படிக் குழறியிருப்பான்?
சோமுவுக்குக் கண்ணிர் வருவதுபோலிருந்தது. ஆனல் அதேசமயம் அது வேறுதிசையில் விசயத்தை வேண்டுமென்றே மறைக்கமுயல்வது போல் பட்டது.

பிறகு?

ஆமாம் அதுதான் முக்கியம். அவன் வேண்டுமென்றே திரும்பவும் முனைந்தான். பச்சையாக, பச்சையாக.
பொன்னம்பலம் செத்துவிட்டான். ஆனல் அவர்கள் அதற்குப்பின்பும் விடவில்லை. அவனைக் கட்டி - அவனைக் கட்டி - இம், ம், சொல்லு - கட்டி றோட்டு றோட்டாக இழுத்தார்கள். பின்பு? சோமு அதை வாந்தி எடுப்பதுபோல் வெளியே கக்கினான். பெற்றோல் ஊற்றி நெருப்புவைத்துப் பற்ற வைத்து எரிய எரிய இழுத்தார்கள், தெருத்தெருவாக இழுத்தார்கள்!

சோமுவுக்கு வியர்த்தது. கைலேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பஸ் வருகிறதா என்று அவசரமாகப் பார்த்துக் கொண்டான். வரவில்லை. ஏதோ துன்பம் நெஞ்சை நிறைத்தது.

ஏன்?

ஆம், கமலம்?

ஆமாம் இன்னும் இருக்கிறது. சோமு திரும்பவும் பஸ் வருகிறதா என்று பார்த்தான். வரவில்லை. ஆயிரம் வருடங்களாக அந்தப்பக்கம் பஸ் வராதது போல் அவனுக்குப்பட்டது. ஆனல் விசயம் வேறு என்றும் புரியாமலில்லை.

ஆமாம், கமலம்?

வேலைக்காரன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான்.
கமலம்?

அவளால் ஓடமுடியவில்லை. பிடித்துவிட்டார்கள். எட்டுப்பேர்கள். பின்பு மயங்கிய நிலையில் பொலிஸ் ஜீப் காப்பாற்றியது. கொழும்புக்கு அனுப்பி அகதிக்கப்பலில் இங்கு அனுப்பப்பட்டாள். பைத்தியம்! இல்லை, பைத்தியம் மாதிரி.

ஆனல் சோமுவால் திருப்திப்பட முடியவில்லை. பஸ் வருகிறதா என்று எட்டிப்பார்த்தான். புங்குடுதீவில் பஸ் என்ற ஒன்று ஓடுகிறதா?

பஸ்ஸை விட்டுவிடு, கமலம்?. பச்சையாக, பச்சையாக…

எட்டுப்பேர்கள் - இம், ம், -ஒருவன், மற்றவன்… இம்… அப்படி எட்டுப்பேர்களும். இம்…

ஐந்து… ஐந்துஸெல் டோர்ச்…

சோமுவால் அதற்குப்பின்பு முடியவில்லை. தலை ஏனோ சுற்றுவது போல்பட்டது. மயக்கம் போடுவதுபோல் வந்தவேளையில் சிவப்பாகத் தெரிந்தது.

சோமு வேகமாகக் கையை உயர்த்தினன். பஸ் வந்து நின்றது.

ஆனால் கால்கள் நகர மறுத்தன. இன்னும் அவங்கடையை…

“தம்பி, ஏறுமன் கெதியா?" கண்டக்டர் சினந்தான்.

சோமு கஷ்டப்பட்டு ஒருபடியாக ஏறினான். ஆனல் அடுத்தகணம் கால்தட்டுப்பட்டு உள்ளே விழுந்து விட்டான், பெட்டியும் கையுமாய்.

முன்னல் இருந்த சீட்டின் முனை கண்ணா மண்டையில் நல்லாக அடித்து விட்டது.
பஸ்ஸுக்குள் பரபரப்பு, சிரிப்பு எல்லாம். சோமு ஒருவாறாகச் சமாளித்துக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான். அடிபட்டபின் எல்லாம் தெளிந்துவிட்டது. வலதுகண் மேல் முனையில் மட்டும் வலிவலியென்று வலித்தது. அடிபட்ட இடத்தை கையால் தேய்த்துவிட்டான். கைவிரலில் மெல்லிய இரத்தக் கசிவின் அடையாளம் தெரிந்தது.

இரத்தம்!

இரத்தம்! ஏதோ ஒரு பழைய பயம் உள்ளே ஒலித்தது.

ஆமாம், ஒரு காலத்தில் அந்தளவு இரத்தத்தைக் கண்டாலும் அவன் பயந்து அழுதுவிடுவான். சின்னப் பையனாய் இருந்த காலத்தில் அடுத்த வீட்டுப் பூச்சன், பனையிலுள்ள பெருங்குளவிக் கூட்டுக்கு வீசிய சின்னக் கல் அவனது தலையில்பட்டதினால் மெல்லக் கசிந்த இரத்தத்தைக்கண்டு அவன் அழுது கத்தியிருக்கிறான் கருக்கில் ஒருக்கால் காலை வெட்டியபோது அவன் குழறியிருக்கிறான், ஏன், அதைக் கண்டு ஆச்சி கூடத் தலையில் அடித்து அடித்துக் குழறியிருக்கிறாளே! அதுமட்டுமா? ஆஸ்பத்திரியில் யாரோ ஒருவனின் மண்டையில் ஓடிய இரத்தத்தைக் கண்டு ஆச்சி மயங்கி
விழுந்திருக்கிறாளாமே!

சோமுவை ஏதோ குத்திற்று.

திடீரென்று ஆச்சி காட்டிய வாழ்க்கையில், கலாசாரத்தில், ஏதோ குறையொன்று இருப்பது போல் முதன்முதலாக அவனுக்கு ஏதோ ஒன்று உணர்த்திற்று.

பச்சையாக எதையும் ஆச்சி பார்ப்பதில்லை, காட்டியதில்லை!. இரத்தத்தைக் கண்டால் மயக்கம். நீங்கள் நாங்கள் எண்டுதான் எவரோடும் பேசோணும், கெட்ட பேச்சுப் பேசக்கூடாது என்னப்பூ?... மரியாதையாப் பழகோணும் மரியாதையாப் பேசோணும், என்னப்பூ?... தங்கமான பிள்ளை! கந்தையருடைய பிள்ளை இருக்குதே அது தான் பிள்ளை!
எல்லாம் ஒரு பூச்சு, பச்சையாக எதையும் அணுகாத ஒரு பூச்சு வாழ்க்கை!

அதனால்தானா இப்போ கமலம் பேசியது பைத்தியம் அல்ல என்று பட்டும் அவன் பயணம் போகிறான்? சோமு தன்னையே கேட்டுக் கொண்டான். அதனல்தான இன்னும் அவங்கடைய -இம், பயப்படாமல் சொல்லிப் பார், இன்னும் அவங்கடையை ஊ… அங்கே போகிறேன்? அதனால்தான வெட்கம் என்பது இல்லாமல் கமலம் என்ற ஒரு பெண்ணின், ஏன் கமலம் என்ற ஒரு இனத்தின், கமலம் என்ற ஒரு கலாசாரத்தின், கமலம் என்ற ஒரு மொழியின் விதவைக் கோலம் என்ற முதலில், விசர்க் கோலம் என்ற முதலில், என் வாழ்க்கை வருமானம் என்பவற்றை உழைக்கப் போகிறேன்?

அதனல்தானா, அந்த மேல் பூச்சுக் கலாசாரத்தினால்தானா கமலத்தின் மனநிலையும் அந்த ஒரு நிகழ்ச்சியால் முற்றாக மாறித் திருத்த முடியாத வகையில் சீர்குலைந்து போயிற்று?

அதனால்தானா ஒவ்வொரு சமயமும் அதைப் பற்றிய நினைவிலிருந்து நான் ஒளித்து மறைய முயன்றிருக்கிறேன்? அதனால்தானா? அந்தத் தப்பும் மனப்பான்மையால் தான் சோமுவுக்கு வேறு நினைவுகளும் தொடர்ந்தன. தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல்லாம் அவன் பேசியிருக்கிறான், அதுவும் பிரச்சனையைக் கடத்தித் தள்ளிப்போட்டுத் தப்பப்பார்க்கும் அதே மனப்பான்மைதானா? கச்சேரியடியில் உட்கார்ந்து விட்டு, இரண்டுகிழமை தாடிவளர்த்து வழித்து விட்டு அவன் திருப்திப்பட்டிருக்கிறான். அதே தப்பும் மனப்பான்மை தானா?

'தம்பி, இரத்தம் வழியுது, லேஞ்சியால் கட்டி விடும்’ என்றான் கொண்டக்டர்.

கொண்டக்டர்! வழிநடத்துபவர்! இந்த வழி நடத்துபவர்கள் எல்லாருக்கும் பச்சையாகப் பார்க்கமுடியாதா? கட்டிமறைத்துக் கடத்தத்தானா தெரியும்?
*பறுவாய் இல்லை. வழியட்டும், கொஞ்ச ரத்தம் வழிஞ்சால் செத்துவிடமாட்டன்’ என்றான் சோமு.

கொண்டக்டர் விழித்தான். அவனுக்குப் புரியவில்லை.

ஆனால் சோமுவுக்குத் தான் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நன்றாகப் புரிந்தது. கண்ணா மண்டையில் கசிந்த இரத்தத்தை கைவிரலால் தொட்டு அளையத் தொடங்கினான்.


1 comment: