Monday, 30 March 2020

சத்திய போதிமரம் - சிறுகதை


 




கே.கணேஷ்

அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பால்கார கிரிபண்டாவோ இரட்டைநாடி ஆசாமி. மூன்று பேர் அமர்ந்ததும் என்பாடு சிரமமாகிவிட்டது. நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒருவகையாக உட்கார்ந்தோம். பஸ்ஸும் புறப்பட்டுச் சென்றது. பாதித் தூரத்திற்குக் கிட்டத்தட்ட வந்திருக்கும். எவனோ ஒருவன் சைக்கிளில் சென்றவன், சைகை காட்டிவிட்டுச் சென்றான். ‘பொலிஸ்காரர்கள் இருக்கின்றார்கள்’ என்பதுதான் அதன் பொருள். டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பிரயாணிகள் எல்லோரையும் உட்கார வைக்கத் தொடங்கினான். இரண்டுபேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்குபேரை உட்கார வைக்கும் சிரமமான காரியத்தில் ஈடுபட்டான் கண்டக்டர். வெளிப்பார்வைக்கு ‘ஓவர் லோடா’கத் தோன்றாமலிருக்கும் என்பது அவன் எண்ணம். மீண்டும் பஸ் புறப்பட்டது.

வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுவது எங்கள் இலாகா அல்ல என்று நிலைநாட்டுவது போல ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜனும் பஸ்ஸை நிறுத்தினார்கள். நிறுத்தியதும் கான்ஸ்டபிள் ஒருவன் பிரயாணிகள் தொகையை எண்ணினான்.  டிரைவர் இறங்கி வெளியே இன்ஸ்பெக்ரரிடம் தலையைச் சொறிந்தவாறு பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான். பஸ் நின்ற இடத்திற்கு அருகில் அரசமரம் ஓங்கி வளர்ந்திருந்தது. வயதின் முதுமையைக் காட்டுவது போல மரம் பரந்து விசாலமாக இருந்தது. அதனைப் பொதுவாக ‘தியுரும் போதி’ (சத்திய அரசமரம்) என அழைப்பார்கள். அவ்வூரின் சுற்று வட்டாரங்களிலிருந்தும் இன்னும் தொலைவு தூரங்களிலிருந்தும் சத்தியம் செய்வதற்கு அங்குதான் வருவார்கள். அங்கு சத்தியம் செய்துவிட்டால் அவர்களின் சர்ச்சைகளும் பூசல்களும் அத்துடன் நின்றுவிடும். பொய்ச் சத்தியம் செய்தவன் அழிந்தே விடுவான் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த அரசமரத்தின் கீழுள்ள பெளத்த ஆலயந்தான் அத்தகைய சக்தி வாய்ந்ததாம். அதிலே அன்று ஆள்நடமாட்டம் அதிகமாக இருந்தது. கிராம உத்தியோகத் தேவதைகள் அங்குமிங்குமாக நடமாடின. பொலிஸ்காரர்கள், பஸ் டிரைவரிடமும் கண்டக்ரரிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அந்தக் கோவிலுக்குள்ளேயே சென்றனர். பஸ் டிரைவரும் ‘டிரிஸ்ரிட் கோர்ட்’ நீதிபதியே கோவிலுக்கு ஒரு வழக்கு விஷயமாக வந்திருக்கிறாராம். அதற்குக் காவலாகப் பொலிஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். ‘அவர் வருவது முன்னமே தெரியாது போய்விட்டது’ என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மீண்டும் பஸ் புறப்பட்டது.

”ஆமாம் நானும் மறந்துவிட்டேன். அந்த ரேஸ் டிக்கட் வழக்குத் தீர்ப்பல்லவா இன்றைக்கு. நான் கூட அந்த இரண்டு பேர்களை அங்கே கண்டேன்’ என்றான் ஆசனத்தில் நகர்ந்து கொண்டே கிரிபண்டா!

”அது என்ன ரேஸ் டிக்கட் வழக்கு?” என்று ஏககாலத்தில் பல குரல்கள் கேட்டன.

“தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி, கடைக்காரன் ஒருவனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து கண்டிக்குப் போகும்பொழுது ரேஸ் டிக்கட் ஒன்று எழுதிவிட்டு வரச் சொன்னான். கடைக்காரன் தன் பெயருக்கே எழுதிவிட்டான். தற்செயலாக பரிசும் கிடைத்துவிட்டது. தொழிலாளி அதை அறிந்து பரிசைக் கேட்டான். கடைக்காரன் வேண்டுமென்றால் இரண்டு ரூபாயைத் திருப்பித் தருவதாகக் கூறினான். முடிவில் பலர் உதவியுடன் தொழிலாளி வழக்குத் தொடர்ந்தான். ஆதாரம் எல்லாம் கடைக்காரன் பக்கமே இருக்கவே, தொழிலாளி ‘தியுரும் போதி’யில் சத்தியம் செய்தால் போதும் என்று கூறிவிட்டான். இதுதான் விஷயம்” என்று விஷயம் அறிந்தவனது கம்பீரத்தில் தனது புஷ்கோட்டை முட்டிக் கொண்டு தொந்தி தெரிவதை அறிந்து கோட்டை இழுத்து விட்டுவிட்டுக் குடுமியை முடிந்தான் பண்டா.

“ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும்பொழுது தாராளமாய் எவனும் பொய்ச் சத்தியம் செய்வான். சத்தியத்திலெல்லாம் என்ன இருக்கிறது? என்றேன்.

“அப்படிச் சொல்லாதீர்கள். மற்ற இடத்தில் சத்தியம் செய்வதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த அரச மரத்தில் சக்தி இருக்கத்தான் செய்கிறது” என்றார் எனக்கு எதிர் ஆசனத்தில் அமர்ந்திருந்த கடைக்காரர் ஒருவர்.

”அதர்மம் செய்பவர்கள் அழிந்துவிடுவதாகக் கூறுவதெல்லாம் சுத்தப் பொய். உண்மையில் பார்க்கப் போனால், அயோக்கியனுக்கும், தில்லுமுல்லுக்காரர்களுக்குந்தான் நல்ல காலமாகத் தெரிகிறது. பண்டைக் காலத்தில் ஏன் இன்றைக்குந்தான் என்ன? மக்களின் வயிற்றிலடித்துக் கொழுத்த கடைக்காரர்களுக்கும் தண்ணீரில் பாலை ஊற்றி பணம் பெருத்தவர்களுக்கும் என்ன வந்துவிட்டது? அவர்கள் எல்லாம் நன்றாய்ச் செளகரியமாகத்தான் இருக்கிறார்கள். வீடு, வயல், தேயிலைத்தோட்டம் என்று வாங்கிக் கொழுத்துத்தான் இருக்கிறார்கள்” என்றேன்.

பக்கத்திலமர்ந்திருந்த பண்டாவும் எதிரில் அமர்ந்திருந்த கடைக்காரரும் தங்களையே கூறியதாக நினைத்துக் கொண்டார்கள் என்பதை அவர்கள் முகம் காட்டியது.

“தம்பீ, நன்மையான காரியம் செய்தால் நன்மை சம்பவிக்கும். தீமை செய்தால் தீமை கிட்டும். எதை நாம் செய்கிறோமோ அது நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இது நமது பெளத்த மதத் தத்துவம். இது என்றும் பொய்யானதில்லை” என்று அடுத்து அமர்ந்திருந்த ஆப்பக் கடை ஆச்சி கூறினாள்.
“என்னவோ என் அனுபவத்தில் நன்மை செய்தவர்கள் நன்மை அடைவதையும் தீமை செய்தவர்கள் தீமை அடைவதையும் கண்டதில்லை. நடைமுறையில் எதிராகத்தான் நடக்கிறது” என்றேன்.

”உனக்கு என்ன வயது வந்துவிட்டது. மகா அனுபவஸ்தன் மாதிரிப் பேசுகிறாய். என் ஐம்பத்தைந்து வருட அனுபவத்தில் எத்தனை எத்தனையோ பார்த்திருக்கிறேன். இந்தத் ‘தியுரும் போதி’யைப் பற்றிய ஒரு சம்பவம் உண்டு. அதைத் தெரிந்த பின் நீ நம்பிக்கை அடைவாய்” என்று தாத்தா முறையான ஒருவர் என்னை நோக்கிக் கூறத் தொடங்கினார். அவர் மேல் பகுதியிலிருந்து வருகிறவர்.

“இது நடந்து இருபது முப்பது வருஷம் இருக்கும். சம்பந்தம்பிள்ளை என்பவர் பெரிய முதலாளி. நம்மூரில் முதல்முதல் கடை வைத்தவரும் அவர்தான். நல்ல தாராளமான மனசு. பலருக்கும் உதவி செய்தார். அவர்கள் தகப்பனார் தேடிய பூர்வ சொத்தான தோட்டம் இருந்தது. விலைவாசிகளும் அன்று நன்றாக விற்றது. செலவு இன்றைக்குச் செலவழிப்பதில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாது. இன்றைக்குந்தான் பஸ் என்றும் கார் என்றும் வந்துவிட்டது. தொசுக்கென்று எடுத்ததற்கெல்லாம் கார், கொஞ்சதூரம் போக வேண்டுமென்றாலும் டவுன் பஸ்ஸுக்கு மணிக்கணக்காக கால் கடுக்க நிற்பார்களே ஒழிய நடக்க மாட்டார்கள். அப்பொழுது இந்தத் தூரமெல்லாம் காலாலேதான் நடந்து தீர்ப்போம்.

”இன்றைக்குத்தான் நன்றாகப் பளபளவென்று கருத்த ரோட்டிலே லொறிகளில் சாமான்களைக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுதெல்லாம் பொதி மாட்டின்மேல்தான் கொண்டு வருவது வழக்கம். ஓ…! மறந்து விட்டேனே, எதையோ சொல்லிக் கொண்டு வருகிறேனே… வந்து… வந்து… ஆமாம் சம்பந்தம்பிள்ளைக்குச் செலவு மிகக் குறைவு. ஆனால் வருமானம் நிறைய வந்தது. எனவே நல்ல மிச்சம். அவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் பெயர் சிங்காரம்பிள்ளை. அவர் இந்தியாவிலுள்ள சொத்துக்களைப் பார்த்துக் கொள்வார். பூர்வீகச் சொத்துக்களின் வருமானத்தை இருவரும் பிரித்துக் கொள்வார்கள். இப்படியாகச் சிறிது காலம் நடைபெற்றது. உள்ளூர்க் கடையில் நல்ல லாபமென்றவுடன் மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டுவிட்டது. பணம் இருக்கிறதே அதுவும் கஞ்சா, அபின் போன்ற ஒரு போதை வஸ்துதான். மேலும் மேலும் சம்பாதிக்க ஆசை ஏற்படுகிறதே ஒழிய, போதும் என்று ஒரு எல்லை ஏற்படுவதில்லை.

”கொழும்பிலுள்ள எவனோ ஒரு சினேகிதன், ‘பலசரக்கு மொத்த வியாபாரம் தொடங்கினால், நல்ல மிச்சம்’ என்று கூறினான். தூத்துக்குடி மிளகாயை தூத்துக்குடியிலிருந்தும், பெல்லாரி வெங்காயத்தை பெல்லாரியிலிருந்தும் நேரே வரவழைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்றும் எடுத்துக் காட்டினான். சம்பந்தம்பிள்ளையும் ஒரு கூட்டாளி ஆகி தொழிலை ஆரம்பித்தார். தொழில் கொஞ்சக்காலம் நன்றாகத்தான் நடந்தது. அதில் வேலை செய்த தெக்கித்திச் சீமைப் பயல் ஒருவன், பெருச்சாளி மாதிரி சுரண்ட ஆரம்பித்துவிட்டான். பெரும் நஷ்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கொழும்பு போய் வந்த சிலர், இதனை சம்பந்தம்பிள்ளையிடம் கூறி, எச்சரித்து வைத்தார்கள். கிராமத்துக் கடையில் ‘டா டு’ என்று ஏதோ பொட்டை அதிகாரம் செய்ய முடியுமே ஒழிய கொழும்பில் போய் இவரால் என்ன செய்யமுடியும்? பொதுவாக, அவர் கடை கொழும்பில் எந்தத் தெருவில் இருக்கிறது என்று அவரைக் கேட்டாலே சரியாகச் சொல்லமுடியாது. என்றைக்கோ எப்பொழுதோ அங்கு போய்விட்டு புதுமை வீடு, துறைமுகம், மிருகக்காட்சிச்சாலை என்பவற்றைப் பார்த்ததோடு தன்னுடைய கடையையும் பார்த்துவிட்டு வந்தார். அவ்வளவுதான். கடையில் நஷ்டம் ஏற்பட்டால் கடைக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தப் பங்காளியிடமும் வசூல் செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது என்று ஒருவன் கூறினான். உடனே முன்னெச்சரிக்கையாகத் தனது பாகமாக இலங்கை இந்தியச் சொத்தை எல்லாம் சுத்தக் கிரயமாக அண்ணன் பேருக்கே எழுதி வைத்தார்.”

”எதிர்பார்த்தபடி கொழும்புக்கடை நொடித்துவிட்டது. கடன் கொடுத்தவர்களும் சம்பந்தம்பிள்ளையின் சொத்தை ஜப்தி செய்ய முயன்றார்கள்.

அவர் பெயரில் சொத்து இல்லை என்றறிந்ததும் சும்மா இருந்துவிட்டார்கள். கடன்காரர்களிடமிருந்து சொத்துக் காப்பாற்றப்பட்டது. ஆனால் அண்ணனிடமிருந்து சொத்தைக் காப்பாற்ற முடியவில்லை. சொத்தெல்லாம் தன் பெயருக்கிருக்கவும் சிங்காரம்பிள்ளை முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி தம்பியையும், தம்பியின் மகனையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார். சம்பந்தம்பிளை வழக்குத் தொடர்ந்தார். ருசு இல்லாத பொழுது வழக்கு என்ன செய்யமுடியும்! முடிவில் சத்திய போதியில் சத்தியம் செய்துவிட்டால் போதுமென்றார். அதன்படி அந்தப் படுபாவி சிங்காரமும் கூசாமல் சத்தியம் செய்தேவிட்டான்.”

”சம்பந்தம்பிள்ளை மனமுடைந்தவராய் இந்தியாவிற்குப் போய் மாமனார் வீட்டில் ஒட்டுக் குடித்தனம் நடத்தினார். அதே மன வருத்தத்தால் வியாதி வாய்ப்பட்டு விரைவில் மாண்டுவிட்டார். மகன் சுந்தரம் அனாதையாகி விட்டான். ஊரில் மாடு ஓட்டிக்கொண்டு வயிறு வளர்த்து வந்தான். பின்னர் சிலர் தயவால் இலங்கையில் ஒரு கடையில் பொடியனாக வேலை கிடைத்தது.”

“பணம் கிடைத்தால் பத்தும் கிடைக்கத்தான் செய்கிறது. பவிசும் பெருமையும் எங்கிருந்துதான் வருமோ? சிங்காரம்பிள்ளையின் சொத்தும் மதிப்பும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தன. சொல்லி வைத்தாற்போல் தேயிலைக் கூப்பன் ஏற்படுத்தினார்கள். பணம் பணமாகத் காய்த்துத் தள்ளியது. சிங்காரம்பிள்ளை வெகுவிரைவில் லட்சாதிபதியாகிவிட்டார். யாரோ எவரோ என்றிருந்த சிங்காரம்பிள்லையைத் தேடி பெரிய மனிதர் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் சுற்றத் தொடங்கினார்கள். சர்க்கரையைக் கண்ட இடத்தில் ஈ மொய்க்கிறது. பணமுள்ள இடத்தில் பலரும் மொய்க்கிறார்கள்; யோசனை கூறுகிறார்கள்; கைகட்டி வாய் புதைக்கிறார்கள். பணந்தானே இன்று மூலமந்திரமாக இருக்கிறது. ஆமாம்! பல விதத்திலும் பணத்தைச் சிங்காரம்பிள்ளை பெருக்கிவிட்டார். கார்க் கம்பனியென்றும் பெட்ரோல் ஷெட்டென்றும் பல ஸ்தாபனங்களின் சொந்தக்காரராகிவிட்டார். கொஞ்சக்காலம் இப்படி ஓடியது யாதொரு குறையுமின்றி. நவீனமயமான பங்களாவில் சுகமாகக் குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தார் சிங்காரம்.”

”பங்கு முறிந்துவிட்டது; பிஸ்னஸ் முறிந்துவிட்டது என்று யாராவது கூறப் போகிறீர்கள்” என்றேன் அவசரக்குடுக்கையாகிய நான்.

“அதெல்லாம் இல்லை தம்பி, முறிந்தது வேறு விஷயம். அதற்குள் ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையுடன் கேளேன். கரடு முரடாயிருந்த ரோடெல்லாவற்றையும் நேராக்கி ரோடு போட்டார்கள். சிங்காரம்பிள்ளை கார் கூட வாங்கிவிட்டார். அந்தக் காலத்தில் கார் என்பதை எனது பகுதியில் அபூர்வமாகத்தான் பார்ப்பார்கள். யாராவது உத்தியோகஸ்தர்கள்தான் வாங்குவது வழக்கம். இன்றைக்குத்தான் கார் தண்ணீர்பட்ட பாடு படுகிறதே. அப்படி அபூர்வமான சமயத்தில் கார் வைத்திருந்தார். ஒருநாள் குடும்ப சமேதராக கண்டியில் பெரஹரா பார்த்துவிட்டு சிங்காரம் வந்துகொண்டிருந்தார். வரும் வழியில்தான் சத்தியபோதி இருந்தது. பாரேன் அதிசயத்தை. சிறிது நேரத்துக்கு முன்னால் யாதொரு பின்னமும் இல்லாமல் இருந்த அந்த அரசமரத்தின் கிளையொன்று அவர்கள் காரில் திடீரென்று விழுந்து சிங்காரத்தின் குடும்பத்தைக் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பிவிட்டது. கோர்ட்டும், சமூகமும் தண்டிக்க முடியாத மனிதனை அந்த சத்தியபோதி மரமே தண்டித்துவிட்டது. மேலும் அதிசயம் தெரியுமா? அக்காரின் டிரைவருக்கு ஒரு சின்ன சேதமாவது இருக்கவேண்டுமே! கொஞ்சநேரம் மயக்கம் போட்டிருந்தான். அவ்வளவுதான். ஆனால் காரும், சிங்காரம்பிள்ளையும் குடும்பத்தாரும் சட்டினி. சிங்காரம்பிள்ளை மாண்ட செய்தி சுந்தரத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தந்தி கிடைத்த இரவு ஒருமணிக்கு சுந்தரம் என்ன செய்துகொண்டிருந்தான் தெரியுமா? புடவைக்கடையில் புடவை அடுக்கிக் கொண்டு இருந்தான். இரவு ஒரு மணிக்கா? ஷாப்புச் சட்டமாச்சே என்கிறாயா? அதெல்லாம் ஏட்டிலே தானே. கதவைத்த பிறகு உள்ளே நடப்பது சிப்பந்திகளுக்குத் தானே தெரியும்? முடியாது என்றால்தான் வயிற்றிலடி. என்ன செய்வது, சிவனே என்று செய்யவேண்டியதுதான். இதை எதற்காகச் சொன்னேன் என்றால் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் சுந்தரம் என்பதற்காகத்தான். சிங்காரம்பிள்ளையின் குடும்பத்தில் ஒருவரும் மிஞ்சவில்லையாதலாலும், அடுத்த வாரிசு சுந்தரமானதாலும் சொத்தெல்லாம் அவனுக்கே சேர்ந்தது. இதுதான் என்றைக்கிருந்தாலும் தருமம் வெல்லும் என்பது” என்று முடித்தார்.

”வில்லம்பை விடச் சொல்லம்பு கொடுமையானது” என்று கம்பர் சொன்னாரல்லவா? அவர் வாய்ச் சொல்லால் பாண்டியன் குலம் கெட்டதைப் போல் சிங்காரம்பிள்ளையின் குலமும் சாம்பாராய் போயிற்றுப் போலும்” என்று தமது தமிழறிவைக் காட்டினார் செண்டிரல் ஸ்கூல் வாத்தியார் சிவஞானம்பிள்ளை.

“கதை நன்றாயிருக்கிறது” என்றேன் நான்.

“கதை இல்லையடா. நிஜமாக நடந்தது” என்றார் அவர்.

மலையகச் சிறுகதைகள் - 1949

1 comment: