இராஜ.அரியரட்ணம்
மின்னல் மின்னி இடியிடித்தது. தொடர்ந்து நிகழ்ந்த
ஊழிக்கூத்தைப் படம் பிடிக்க வேண்டியதில்லை. இப்படித்தான் வானம் பார்த்து நிற்கும்
யாழ்ப்பாணத்தில் இருந்தாற்போல் இருந்து வெள்ளம் வரும். ஒரு கலக்குக்
கலக்கும். மக்களை அல்லோல
கல்லோலப்படுத்திவிட்டு அகப்படுகிற எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போய்விடும்.
சிங்கப்பூர் பணத்தில் முளைத்த கல்வீடுகள் நிமிர்ந்து
நிற்கும். ஏழை மக்களின் குடிசைகளைச் சின்னாபின்னமாக்கித் தலைசாய்க்க இடம் இல்லாமற்
தவிக்கச் செய்துவிடும். கல்வீடுகளில் இருந்த பணக்காரர்களையும் அந்தமுறை வந்த
வெள்ளம் பீதிகொள்ளச் செய்துவிட்டது.
இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை.
திடற்பூமி. வெள்ளம் வந்தாலும் எங்கேயோ ஓடி மறைந்துவிடும்.
காலையில் எழுந்ததும் கந்தப்பருக்குக் கண்ணில் பட்டது
வெள்ளத்தில் நீச்சுப் பழகும் ஒரு நுகம். சுருட்டுப் பிடிப்பதையும் மறந்து கொட்டிற்
பக்கம் போனார். நுகம் அங்கில்லை. சரி, என்று
சொல்லி தவித்துத் திரிந்த நுகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவந்து
பத்திரமாக வைத்துவிட்டார்.
ஒரு பசுவும், இரண்டு நாம்பன்களும் சிலிர்த்துக் கொண்டு
வெள்ளத்தில் நின்றன. அவிழ்த்து அக்கம்பக்கத்தில் கட்டுவது முடியாத காரியம்.
கந்தப்பர் ‘லொக் லொக்’ என்று இருமிக் கொண்டு, மாடுகளைப் பார்த்தபடி நின்றார்.
கந்தப்பர் இப்போதெல்லாம் எலும்புந்தோலுந்தான். ஆளில்
ஒருபிடி இரத்தமில்லை. நரம்புகளெல்லாம் உடம்பிலே பச்சைப் பசேலென்று நெளிந்து
மிதந்து கிடந்தன. போதாக்குறைக்கு கொடிய இருமலும் அவரை ஆட்டும்வரை ஆட்டி வைத்தது.
சிவகாமி அப்போதுதான் பாயைச் சுருட்டி அசைவில்
வைத்துவிட்டுப் புகைச்சட்டியைத் தூக்கிக் கொண்டு அடுக்களைப் பக்கம் போனாள். வாயிற்
சுருட்டில்லாமற் கந்தப்பர் அன்று சோர்ந்து நின்றது சிவகாமிக்குப்
புதுமையாகவிருந்தது.
“வெள்ளத்திக்கை நில்லாதே அப்பு - அது கொஞ்ச நேரத்தால்
வத்திப்போம். நீ வந்து புகைச்சட்டியில காலைக் காச்சு” என்றாள் மகள்.
கிழவனுக்கு அப்போதுதான் சுருட்டின் ஞாபகம் தட்டியது.
“தலைமாட்டுக்கை போயிலை கிடக்குது, பாதி கிள்ளிக்கொண்டு வா பிள்ளை” என்று சொல்லித்
திண்ணையிற் போய் கையை ஊன்றிக் குந்தினாரோ இல்லையோ, வெள்ளத்தை விழுங்கி, மிக
வீங்கிக் கிடந்த திண்ணை, அழுகிய பழம் போல் நெகிழ்ந்துவிட்டது.
அடுக்களைக்குள் இருந்த சிவகாமி “அப்பு” என்று சொல்லிச்
சிரித்தும் விட்டாள்.
அப்பு எரிந்து புகையவில்லை. அடிச்சுருட்டைச் சப்பிச்
சப்பிப் புகைவிட்டுக் கொண்டிருந்தார்.
“மோனே, காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்” என்று
சொல்லி ஒருமாதிரிச் சமாளித்து ஒல்லித் தேகத்தைத் தூக்கிக்கொண்டு, எழும்பிவிட்டார்.
மகள் அடுக்களைக்குள் தேநீர் யத்தம் செய்துகொண்டு
இருந்தாள். இப்படித்தான் பெருமழை பெய்து “விர்” என்று குளிராக இருந்தாற்
கந்தப்பருடைய குடிசையிலும் தேயிலை வாசம் - கமகமக்கும்.
“இந்தா அப்பு, இருமலுக்குமிது நல்லது. சுடச்சுடக்
குடித்தால் சுகமாகவிருக்கும்” என்று சொல்லி சிரட்டையைக் கையிற் கொடுத்து
முட்டிக்குள்ளே கிடந்த தேநீரைப் பக்குவமாக ஊற்றினாள், மகள். கிழவர் சீனியை
உள்ளங்கையிற் கொட்டி, நாக்காற் தடவி பொச்சடித்துக் குடிப்பதை மகள் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
தாயார் இறந்து இவ்வளவு காலமாகியும் அவள் தகப்பனாருக்குச்
செய்யவேண்டிய தொண்டுகளை மறந்துவிடமாட்டாள்.
w
சிவகாமியின் முகத்தில்
அழகு பொங்கி வழிந்துகொண்டிருந்தது. ஒளி தட்டும் விழிகள். மாந்துளிர் மேனி.
சூரியனின் கூரிய அம்புகள் அவளுடைய மார்பைக் கிழித்துக்கொண்டு போகும் வேளைகளில்
எல்லாம், அவளுடைய உடம்பு அப்படியே பளபளக்கும். பொன் - தோடுகள் காதுகளில்
ஒட்டிக்கொண்டு கிடந்தன. ஒரு சின்னப் பொன் மூக்குத்தி மின்னி மின்னி அவளுடைய
முகப்பொலிவுடன் போட்டியிட்டது. கூந்தலை அள்ளிவாரி ஒரு பெரிய கொண்டை
கட்டியிருந்தாள். கொத்துக் கொத்தாக மலர்கள் அவள் கொண்டையை அலங்கரிக்கவில்லை.
சேலையைக் கட்டி இடுப்பிலே இறுக்கமாகச் சொருகிக் குடமும் கையுமாகக் கிணற்றடிக்குச்
செல்லும்போதும், தண்ணீருடன் திரும்பும் வேளைகளிலும், சிவகாமி ஒரு கைவீசி ஒய்யாரமாக
அடி எடுத்து வைப்பதே ஒரு தனி அழகு.
இதையெல்லாம் கண்டு அவஸ்தைப்பட்டு, உள்ளத்தைப்
பறிகொடுத்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவியாய்த் தவிக்க, அக்கம்
பக்கத்தில் ஒரு வாலிபன் இருந்தானோ இல்லையோ, கடவுள் அவளிடம் ஏன் அவ்வளவு அழகையும்
வாரியிறைத்திருக்க வேண்டும்?
w
கிழட்டுக்கட்டை, சிரட்டையை இறப்பிற் சொருகிவிட்டு,
சுருட்டைப் பிடித்தபடி அடுக்களைக்குள் நுழைந்தது நெருப்புக்காக.
“மேனே, ஒருநாளுமில்லாத பெருமழை. வயல் என்ன பாடோ
தெரியாது. போன கிழமை அங்கின ஒருமாதிரியெல்லாம் பச்சையாக் கிடந்தது. இந்தமுறை
கடவுள் கண்பார்த்துவிட்டார். குறையில்லை என்று கிடக்க வெள்ளம் அடித்துக்கொண்டு
வந்திட்டுது. ஒருக்காய்ப் போய்ப் பார்த்துக்கொண்டு வாறன். டுகாற் சுப்பர் வந்தால்
இருக்கச் சொல்லு” என்று கிழவர் தலைப்பட்டையை எடுத்துத் தட்டித் தலையிற்
போட்டுக்கொண்டு வயற்பக்கம் திரும்பினார்.
“அப்பு நல்ல வெள்ளம், இப்ப என்ன அவசரம் - நீயும்
போகவேணும் எண்டு நிற்கிறாய். வாய்க்காற் பக்கம் போகும்போது கவனமாய்ப் போ. இந்தா
இந்தத் தடியையும் கொண்டு போ” என்று மகள் சொல்லிக் கிழவனுக்கு ஒரு சிறு துண்டு
பனாட்டும், தேங்காய்ச் சொட்டுகளும் கொடுத்து அனுப்பினாள்.
w
கந்தப்பர் வீட்டுப் பக்கம் ஒரு குருவியும்
தலைகாட்டுவதில்லை. இத்தனைக்கும் அந்த மனுஷன் ஒரு பொல்லாத ஆள் அல்ல. தானும் தன்
பாடும். ஆனால் டுகாற் சுப்பர், கந்தப்பரைக் கண்டு அரட்டைக்கச்சேரி வைக்காமல்
விடுவதில்லை.
ஏன் அம்மாக்குட்டியும் சிவகாமியிடம் அன்பு
வைத்திருந்தாள். “அப்படிச் செய் மேனே; இப்படிச் செய் மேனே” என்று
அம்மாக்குட்டிதான் சிவகாமிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது. அப்பெண் ஓர் ஏழை.
என்றாலும் நல்ல மனுஷி.
w
அந்த வெள்ளத்தைத் தாண்டி ஒருமாதிரி வயற்பக்கம்
சேர்ந்துவிட்டார் கந்தப்பர். கிழடுதட்டிய காலத்தில் இப்படியெல்லாம் வெள்ளத்திலே
நீந்தவேண்டியிருந்தது, அந்த உயிருக்கு! வயல் இருந்ததாகத் தெரியவில்லை. வெள்ளம்
எல்லாவற்றையும் விழுங்கிக் கக்கிக்கொண்டு பாய்ந்தது. செத்த பசுக்கன்றும், ஒரு
கறுத்த நாயும் மரக் கிளைக்ளுடன் சிக்குண்டபடி கிழவனை நோக்கி வந்துகொண்டிருந்தன
சொற்ப தூரத்திலே ஒரு குடில் மிதந்து திரிந்தது. குடிலின் உச்சியில் ஒரு சேவலும்,
பெட்டைக் கோழியும் கூனிக் குறுகிக் கொண்டிருந்தன.
கந்தப்பர், நாவல் மரத்தைக் கண்டுவிட்டார். மரத்தருகேதான்
வாய்க்காலென்பது அவருக்குத் தெரியும். வாய்க்காலைக் கடந்துவிட்டால் முதலிற் கால்
படுவது கந்தப்பருடைய நிலத்தில். னால் அங்கே எதற்காகப் போகவேண்டும்? நீச்சுப்
பழகவா? கிழவனுக்குக் குளிர் ‘வெடு வெடு’ என்று நடுக்கங் கொடுத்தது.
வாய்க்காற் பக்கம் போய்க் கால் வைத்தாரோ இல்லையோ,
‘குபுக்’ என்று சறுக்கி வீழ்ந்தார்! வாய்க்கார் வரம்பு இருந்த இடமும் தெரியாமல்
வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவிட்டது. அந்த இடத்தைப் பார்த்துத்தான் கந்தப்பரும் காலை
வைத்தார். “வாய்க்காற் பக்கம் போகும்போது கவனமாகப் போ” என்று சிவகாமி ஏற்கனவே
சொல்லியிருந்தாள். சிவகாமியும் அடுக்களையும், கந்தப்பரின் மனக்கண் முன் மின்னி
மின்னி மறைந்தன.
திக்குமுக்குப் பட்டு எழுந்துவிடலாமென்றால் அது அவரால்
முடியவில்லை. அந்தப் பக்கம் ஒரு குருவிகூடப் பறக்கவில்லை. தூரத்தில் எங்கோஒரு
ஆந்தை அலறியது. மகள் கொடுத்த தடியைப் பிடித்தபடி கந்தப்பர் செத்துக்
கொண்டிருந்தார்.
w
சிவகாமி ‘அப்பு’வைப் பார்த்தவண்ணம், கொதித்துப் பறக்கும்
உலைக்கு அரிசி போடுவதற்காக, அரிக்கன் சட்டியில்
அரிசியை அலசிக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலே ஒரு சட்டியிற் பிட்டுக்காக
ஒடியல் மா தண்ணீரில் ஊறுகின்றது.
அப்புவைக் காணவில்லை. ஆடுகாற் சுப்பர் வருவார், அவரிடம்
சொல்லி வயலுக்கு அனுப்பலாம் என்றால் அவரும் வந்தபாடில்லை.
அதிக தூரத்தில் இருக்கும் பள்ளன் ஒருவன் ஒருநாளுமில்லாத
திருநாளாக அன்று வந்தான்.
“நாச்சியார் கமக்காரன் எங்கே?” என்றான் பள்ளன்.
“வயலுக்குப் போட்டார். இன்னும் வரயில்லை” என்றாள்
சிவகாமி.
அம்மாக்குட்டிகூட அன்று வர அவ்வளவு நேரமாகிவிட்டது.
“அப்பு எங்கே” என்றாள்.
“வயலுக்குப் போட்டார். ஆடுகாற் சுப்பர் வந்தால்
அப்புவைப்பார்த்துவரச் சொல்லவேணும்”
“ஓம் பிள்ளை ஒருக்கா அனுப்பி விடு” என்று சொல்லிவிட்டு
அம்மாக்குட்டி பறந்து சென்று விட்டாள்.
w
ஆடுகாற் சுப்பர் கந்தப்பரின் வீட்டுக்குப்
போகவில்லைத்தான். ஆனால் வெள்ளத்தின் வேடிக்கையைப் பார்க்கலாமென்று
வாய்க்காற்பக்கம் போனவர், கந்தப்பரை அங்கு கண்டு கண்ணீர் வடித்தார். சுப்பரின்
கண்ணீர்த்துளிகள் வெள்ளத்துடன் கலந்துகொண்டன. அவர் அங்கும் இங்கும் பார்த்தார்.
ஒருவருமில்லை. கந்தப்பருடைய தலைப் பட்டை மாத்திரம் தண்ணீரிலே தவித்துக் கொண்டு,
வருவதும் போவதுமாக இருந்தது.
நண்பனின் உடலைத் தூக்கி கவர்விட்ட மரமொன்றில்
வைத்துவிட்டு கந்தப்பரின் குடிசையை நோக்கி ஆடுகாற் சுப்பர் ‘விறுவிறு’ என்று
நடந்தார்.
w
வெள்ளம் வந்தது.
இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை.
இப்போது ஆடுகாற் சுப்பர் கந்தப்பருடைய குடிசையை அசைக்கப்
போகின்றார்.
சுப்பர் போகின்ற போக்கிலே குடிசை ‘பொலு பொலு’ என்று
இடிந்து மண்ணோடு மண்ணாகிவிடுமா?
ஈழகேசரி
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
ReplyDeleteதற்போது, தங்களது வெள்ளம் – சிறுகதை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு