டொமினிக் ஜீவா
உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம்
உச்சம் தலையில் போய் உறைத்தபோது, பதைபதைப்புடன் தட்டுத் தடுமாறி இடதுகால்
பாதத்தைத் தூக்கித் திருக்கூத்தாடிய பாவத்துடன் துள்ளிக் குதித்தான், முத்து
முகம்மது.
வைரித்த கெட்டியான
உதடுகளும், பிடிவாதம் தேங்கிய முகமும் அப்போதைக்கு வலிப்பு வாதை கொண்ட நோயாளி யைப்
போல, அவனைச் சுட்டிக்காட்டின.
சே! சே! காலிலே ஒரு
செருப்புக் கிடந்தால்? திரும்பித் தார் ரோட்டைப் பார்த்தான். புகைத்த பின்பு
குறையாக வீதியில் வீசி எறியப்பட்டிருந்த சிகரட் துண்டொன்று தரையோடு தரையாக
நசுங்கிக் கிடந்தது. அவன் திரும்பிப் பார்க்கும்பொழுது நிலத்துடன்
ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் குறள் சிகரெட், தனது கடைசிப் புகையைக்
கக்கிக்கொண்டிருந்தது.
உள்ளங்காலைப்
பதம்பார்த்துச் சுட்ட உஷ்ணத் தகிப்பு இன்னும் முற்றக நீங்காத நிலை.மனம் எரிந்தது.
ஒருகாலத்தில் செம்மா தெரு
ஒழுங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டு இன்று மாநகர சபையாரின் ஜனநாயகக் கண்களுக்குத்
தவறாகத் தெரிந்த சாதிப்பெயர் அகற்றப்பட்டு, அந்த ஒழுங்கையின் மடக்கு முனையில்
பெரிய பள்ளிவாசலின் பெயரைத் தாங்கி, அறிவிப்புப் பலகையுடன் பிரபலப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்
ஜும்ஆ மொஸ்க் லேன் வழியாக நடந்து, கஸ்தூரியார் வீதியின் முகப்பிற்கு வந்து,
திரும்பிக் கொண்டிருந்த சமயம்தான் முத்து முகம்மது இப்படி நடனம் ஆடிக் காலைத்
தூக்கி நிற்கும் சம்பவம் நிகழ்ந்தது.