சு.இராஜநாயகன்
முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தியிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது.
முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டுவிட்டார்.
தூரத்தில் சேவல் ஒன்றின் கொக்கரக்கோ’ கேட்டது. நேரம் அதிகாலை நாலரை மணியாக இருக்கும். இயல்புநிலை குலையாமல் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும் நார்க் கடகத்தில் இலைச் சருகுகளைத் தலையில் தாங்கி, மண்வெட்டியுடன் தன் நிலத்தை நோக்கிச் சென்றிருப்பார்.
இன்று..?