Monday, 14 November 2022

ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’


 பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி, ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’ என்னும் நூல் வெளியீட்டுவிழாக் கண்டது. அங்கேதான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிவா விஷ்ணு ஆலய `பீக்கொக்’ மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்விற்கு, ஸ்ரீமதி பாலம் லக்‌ஷ்மண ஐயர் அவர்கள் தலைமை தாங்கினார்.

Tuesday, 1 November 2022

ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை

                             

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங் விமான நிலையத்தில் காத்திருந்தார். புது தில்லியில், கரோல் பா நகரில் அமைந்திருக்கும் `இரும்புக் கோட்டை’ ஹோட்டலுக்குப் போய் சேருவதற்கிடையில் புது தில்லியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லிவிட்டார் பிரதாப்சிங்.

மெல்லிய செயற்கை வெளிச்சத்தில் வீதிகள் அழகாக இருந்தன. அமைதியாகவும் இருந்தன.

“இப்போது மயான அமைதியாக இருக்கும் இந்தப் பிரதேசங்கள் எல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் விழிப்படைந்துவிடும். அதன் பின்னர் மனிதர்களே நகர்ந்துகொள்ள முடியாதவாறு நெரிசலாகவிடும்.” சொல்லிவிட்டு கண்ணைச் சுழற்றி எல்லாரையும் பார்த்துவிட்டு, “மிகவும் அவதானமாக இருங்கள்” என்று தாழ்ந்த குரலில் எச்சரிக்கையும் செய்தார். காரின் கதவுக் கண்ணாடிகளில் ஒன்று சிறிது பதிந்திருக்க வேண்டும். இரவுக்காற்று காரிற்குள் விசில் அடித்து அவரது எச்சரிக்கையை ஆமோதித்தது.

Tuesday, 25 October 2022

தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி

 
ஐந்து  பாத்திரங்கள் :           சிந்து, பிரதீபன் (சிந்துவின் தம்பி),

சிந்துவின் அம்மா, சிந்துவின் அப்பா,

ஜோதி ரீச்சர்

 

காட்சி 1

உள்

வீடு

மாலை

சிந்துவும் பிரதீபனும் ஹோலிற்குள் இருந்து, ரெலிவிஷனில் தமிழ் சினிமா பார்க்கின்றார்கள். (க்ளோஸ் ஷாட் / close shot). ஹோலிற்குள் லைற் எரிகின்றது. வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் சத்தம்.

      பிரதீபன்    : அக்கா…! அப்பாவும் அம்மாவும் வேலையாலை வந்திட்டினம்.

சிந்து       : சனலை நியூசிற்கு மாத்து. படிக்கிறதை விட்டிட்டு, படம் பாத்துக் கொண்டிருக்கிறாய் எண்டு தெரிஞ்சா அம்மா கத்துவா.

பிரதீபன் அவரசப்பட்டு ரி.வி சனலை மாத்துகின்றான். அது எத்தனையோ சனலுக்கு மாறி மாறிப் போய் கடைசியில் நியூஸ் சனலுக்கு வருகின்றது. சிந்து வீட்டின் கதவை நோக்கிப் பார்க்கின்றாள். சிந்துவின் அம்மா கதவைத் திறந்தபடி நிற்கின்றார்.

சிந்துவின் அம்மா : சிந்து… பிரதீபன்… இரண்டு பேரும் நான் சொல்லுறதை வடிவாக் கேளுங்கோ… நானும் அப்பாவும் ஒருக்கா ஜோதி ரீச்சர் வீட்டை போட்டு வாறம். வாறதுக்கு கொஞ்சம் லேற்றாகும். நீங்கள் இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டுப் படுங்கோ. நாங்கள் திறப்பு வைச்சிருக்கிறம்... திறந்துகொண்டு வருவம்.

சிந்து & பிரதீபன்  : ஐய்… ஜோதி ரீச்சர் வீடுதானே! நாங்களும் வாறம்.

சிந்துவின் அம்மா : உங்களை நாங்கள் இன்னொருநாள் கூட்டிக்கொண்டு போவம். இப்ப ஒரு அவசர அலுவலாப் போறம். அப்பா காருக்குள்ளை இருக்கிறார்.

சிந்து              : என்னம்மா நீங்கள்? (சலித்தபடி) ஜோதி ரீச்சர் ஒஸ்ரேலியாக்கு வந்தாப் பிறகு நான் ஒருக்காவும் அவவைச் சந்திக்கேல்லை.

சிந்துவின் அம்மா : சரி.. சரி.. கண்ணைக் கசக்கிறதை விட்டிட்டு ஹப்பியா இரு. இன்னும் ஆறு மாசத்திலை உனக்குக் கலியாணம். கதவை உள்ளாலை பூட்டிப் போட்டு இருங்கோ. Bye

சிந்து & பிரதீபன்  : bye அம்மா…

Wednesday, 12 October 2022

என்றும் பதினாறு – ஐந்து நிமிடக் குறும் திரைப்படப் பிரதி

 

நான்கு பாத்திரங்கள் :   ரவிச்சந்திரன், மோகன், இளம் பெண்,

முதியவர் (இளம்பெண்ணின் தந்தை)

 

காட்சி 1

வெளி

ஒரு புற நகரம்

இரவு

ஒரு புறநகரப் பகுதி. மழை தூறிக் கொண்டிருக்கின்றது. ஒரு சில வாகனங்கள் வீதியில் போய்க் கொண்டிருக்கின்றன. மோகன், ரவிச்சந்திரன் என்ற இரண்டு இளைஞர்கள்/ நண்பர்கள் ஒரு காரில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். ரவிச்சந்திரன் காரை ஓட்டுகின்றான். மெல்லிய இசையில் சினிமாப்பாடல் ஒலிக்கின்றது. கார், பஸ் ஸ்ராண்ட் ஒன்றைக் கடக்கின்றது. யாரோ ஒரு இளம் பெண் பஸ் ஸ்ராண்டிற்குள்ளிருந்து வெளியே வந்து காருக்குக் கை காட்டுகின்றாள். `ஸ்றீற் லாம்பின்’ வெளிச்சத்தில் அவள் ஒரு பள்ளி மாணவி போலத் தெரிகின்றாள்.

ரவிச்சந்திரன் :    ஏய் மோகன்… பள்ளிக்கூடப் பிள்ளை போலக் கிடக்கு. பஸ் இனி இந்தப் பக்கம் வருமோ தெரியாது. நேரமும் இருட்டிப் போச்சு. பாவம். என்னெண்டு கேட்டுக் கூட்டிக் கொண்டு போய் விடுவோமா?

காரின் வேகம் குறைகின்றது. மோகன் சற்றுத் தயங்கியபடியே தலையை ஆட்டுகின்றான். கார் றிவேர்ஷில் திரும்புகின்றது. அந்தப்பெண் – அழகான பெண் காரிற்குக் கிட்ட வருகின்றாள்.

      மோகன்           :      எங்கே போக வேண்டும்?

      பெண்             :      மில்பாங்க் றைவ்

ரவிச்சந்திரன்      :      எங்கடை இடத்திலையிருந்து ஒரு ஃபைவ்  

                         மினிற்ஸ் றைவ் தான். கூட்டிக்கொண்டு போவம்.

மோகன்          :      சரி… ஏறுங்கோ

அந்தப் பெண், காரின் பின் புறக் கதவைத் தானே திறந்து ஏறிக்கொள்கின்றாள். (கார்க் கதவு மூடும் சத்தம்) / (அவளது முகம் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றது. இளம் பெண். பதினாறு வயது இருக்கும்.)

கார் பிரதான வீதியில் இருந்து உள்ளே திரும்புகின்றது. வீதியின் ஒருபுறம் வீடுகளும், மறுபுறம் `றிசேவ்’ ஆகவும் இருக்கும். அறுபது எழுபது வீடுகள் கொண்ட இருண்ட பயத்தை ஏற்படுத்தும்  `நோ எக்சிற்’ வீதி. பிரதானவீதியில் இருந்து உள் வீதியில் நுழையும் போது மழை பலக்கத் தொடங்குகின்றது. காரின் வானொலிச்சத்தத்துடன் மழை இரைச்சல் போட்டி போடவே மோகன் வானொலியை நிறுத்தி வைக்கின்றான். (சற்றே பயத்தை ஏற்படுத்தும் ஓசை, மழை பலக்கும் சத்தம்). இந்த இடத்தில் படத்தின் டைட்டில்கள் போடலாம்.

அந்தப்பெண் மோகனையும் ரவிச்சந்திரனையும் நோட்டம் விடுகின்றாள்.

      மோகன்           : ரவி… வாசனை ஒரே தூக்குத் தூக்குது…

      ரவிச்சந்திரன்     : உங்கடை பெயர் என்ன?

      பெண்            : (சத்தமில்லை)

      மோகன்           : நீங்கள் என்ன படிக்கிறியள்?

      பெண்            : (மெளனமாக இருக்கின்றாள்)

மோகன்          : ரவி… உவள் குடிச்சிட்டு வந்திருக்கிறாள் போல கிடக்கு. அதுதான் ஒண்டும் கதைக்கிறாள் இல்லை. குடிச்ச மணம் போக பெர்வியூம் அடிச்சிருக்கிறாள். நீ ஒருக்கா காரை ஓரம் கட்டு…

ரவிச்சந்திரன்      : இவன் இனிக் கிறுக்குத்தனம் பண்ணப் போறான். என்ன நடந்தாலும் இனிப் பிடிபடப் போறது நானும் தான்.

கார் ஒரு ஓரமாக `ஹசாட் லைற்’ போட்டபடி நிற்கின்றது. மோகன் மழைக்குள் இறங்கி, பின்புறக் கதவைத் திறந்து, உள்ளே ஏறி அந்தப் பெண்ணின் பக்கத்தில் அமர்கின்றான். அவளை முகர்ந்து பார்க்கின்றான். அவள் முகம் சுழித்து அழகு காட்டுகின்றாள்.

      பெண்              : கடைசி வீடு… (சொல்லிவிட்டு தலை குனிந்தபடி இருக்கின்றாள்.)

மோகன் திரும்பவும் காரில் இருந்து இறங்கி வந்து, முன்னாலே ஏறிக் கொள்கின்றான்.

மோகன்          : எடு காரை. குடிச்சிருக்கிறாளா எண்டு அவளை நான் முகர்ந்து பாத்ன். ஆனால் அவள் குடிக்கேல்லை. நல்ல பிள்ளை. அச்சாப் பிள்ளை.

வீதியில் இரண்டொரு வீடுகளில் மாத்திரம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. கடைசி வீடு `வெதர் போர்ட் ஹவுஸ்’. வீடு வெளிச்சமின்றி இருண்டு கிடக்கின்றது. கார் நிற்கின்றது. பெண் இறங்குகின்றாள்.

      பெண்                   : தாங்ஸ்… bye

      மோகன் & ரவிச்சந்திரன் : Bye

பெண் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே செல்கின்றாள். கேற் கிரீச் என்று ஓசை எழுப்புகின்றது. மோகனும் ரவிச்சந்திரனும் காருக்குள் இருந்து அவள் போவதைப் பார்த்தபடி இருக்கின்றார்கள். கேற் ஓவென்றபடி திறந்து கிடக்கின்றது. சற்று நேரத்தில் வீடு வெளிச்சம் போடுகின்றது. இவர்கள் காரை `U’ ரேணில் திருப்பி போகின்றார்கள்.

கார் சிறிது நேரம் ஓடுகின்றது. தற்செயலாக காரின் பின் இருக்கையைத் திரும்பிப் பார்க்கின்றான் மோகன். அங்கே அந்தப் பெண் இருந்த இடத்தில் ஒரு `ஸ்காவ்’ (scarf) இருக்கின்றது.  (ஸ்காவ் க்ளோஸ் அப்பில் காட்டப்படுகின்றது)

மோகன்    : டேய் ரவி… கிளி ஸ்காவை விட்டிட்டுப் போட்டுது.  திருப்பு காரை. குடுத்திட்டுப் போகலாம் (பதட்டத்துடன்)

கார் திரும்பி மீண்டும் பெண் வீட்டுக்குப் போகின்றது. அவர்கள் வீட்டு `லைற்’ எரிந்து கொண்டிருக்கின்றது. `கேற்’ ஓவென்று திறந்திருக்கின்றது. சருகுகள் காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன. இருவரும் உள்ளே சென்று கதவைத் தட்டுகின்றார்கள். (கதவை மெலிதாகத் தட்டும் சத்தம்) வீட்டினுள் இருந்து குரல் ஒலிக்கின்றது. உள்ளிருந்து ஒரு மனிதர் நடந்து வரும் காலடிச்சத்தம். ஒரு முதியவர், எழுபது எழுபத்தைந்து வயதிருக்கலாம், கதவைத் திறக்கின்றார்.

மோகன்     : கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை – ஒரு பெண்ணைக் காரில் கொண்டுவந்து இங்கே இறக்கி விட்டோம். அவள் இந்த ஸ்காவை மறந்துபோய்  எங்கடை காருக்குள்ளை விட்டிட்டாள்.

மோகன் அந்த ஸ்காவை முதியவரிடம் நீட்டுகின்றான்.

முதியவர்   : அவள் என்னுடைய மகள் தான். உள்ளே வாருங்கள்.

முதியவர் இருவரையும் உள்ளே கூட்டிச் செல்கின்றார்.

 

காட்சி மாற்றம் 2

உள்

முதியவரின் வீடு

இரவு

உள்ளே மங்கலான வெளிச்சம். வீடு அலங்கோலமாகக் கிடக்கின்றது. சுவர்க்கடிகாரத்தின் ஒலியைத் தவிர வேறு சத்தம் இல்லை. சுவரில் மனைவி, மகளின் படங்கள் தொங்குகின்றன.

ரவிச்சந்திரன்     : எழுபது வயது முதியவருக்கு பள்ளி மாணவி வயதில் மகளா? (மோகனின் காதுக்குள் கிசுகிசுக்கின்றான்)

முதியவர்          : இந்தப் படத்தில் இருப்பவள் தானே! ) சுவரில் தொங்கும் படத்தைச் சுட்டிக் கேட்கின்றார்

மோகன்           : ஓம்…

முதியவர்         : அவள் என்னுடைய மகள் தான். தனது பதினாறு வயதில் கார் அக்‌ஷிடென்ற் ஒண்டில் இறந்து போனாள். முப்பது வருஷங்களுக்கு முந்தி அவள் பள்ளிக்கூடம் போகேக்கை நடந்தது. அப்ப அவள் காருக்குள்ளையிருந்து ஸ்காவ் பின்னிக் கொண்டிருந்தாள்.

முதியவரை, ரவிச்சந்திரனும் மோகனும் மேலும் கீழும் பார்க்கின்றனர். ரவிச்சந்திரன் பயந்தபடியே பின்புறமாக அடியெடுத்து வைக்கின்றான். (பயத்தை ஏற்படுத்தும் ஓசை)

முதியவர்   : இப்பிடித்தான் இடைக்கிடை காரில் ஏறி இங்கே வந்துவிட்டுப் போவாள்.

மோகன் சுவரில் தொங்கிய அந்தப் பதினாறு வயதுப் பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் பார்க்கின்றான். அது ஒருதடவை அவனைப் பார்த்துக் கண் சிமிட்டுகின்றது. ரவிச்சந்திரனைப் பார்க்கின்றான். அவன் அங்கு இல்லை. அவன் முன்னதாகவே ஓடிச் சென்று கார் கதவின் பக்கத்தில் நிற்கின்றான்.

            மோகன்    : போய் வருகின்றேன். (சொல்லிவிட்டு முதியவரின் பதிலுக்குக் காத்திராமல் அவசர அவசரமாக வெளியேறுகின்றான்)

            முதியவர்   : நல்லது. போய் வாருங்கள்.

மூச்சிரைக்க பயக் கலக்கத்தில் வெளியே வருகின்றான் மோகன். காரடியில் ரவிச்சந்திரன் காரின் கதவைத் திறந்தபடி நிற்பதைப் பார்க்கின்றான்.

            மோகன்    : ரவி… எடு காரை. சீக்கிரம்.

ரவிச்சந்திரன் மோகனது காற்சட்டையைப் பார்க்கின்றான். அது ஈரமாக நனைந்திருக்கின்றது. மோகன் பயத்தில் சிறுநீர் கழித்துவிட்டான் என்பதைக் கண்டுகொண்டான் ரவிச்சந்திரன். கார் கிரீச்சிட்டபடி விரைந்து புறப்படுகின்றது.

(முற்றும்)


Friday, 7 October 2022

புதிய சிறுகதைத்தொகுப்பும், குறுநாவலும்

 



இந்தியாவில் பெற்றுக்கொள்ள 

www.zerodegreepublishing.com

zerodegreepublishing@gmail.com

+91 98400 65000


இலங்கையில் பெற்றுக்கொள்ள







அவுஸ்திரேலியாவில் பெற்றுக்கொள்ள

kssutha@hotmail.com


Saturday, 1 October 2022

பூவண்ணம் - சிறுகதை

 

“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில் இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன் கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லை என்பதை அவள் அறிவாள்.

“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”

“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப் போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”

நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச் செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் படிகளில் இறங்கிக் கீழே போகவும், நான் படுக்கையில் இருந்து எழுந்து மாடிமுகப்புக்குப் போனேன். கீழே நின்று, கையைக் காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினாள் பமீலா.

பமீலா என்னைவிட மூன்று வயது சிறியவள். என்னுடன் கணினித் துறையில் செயல்முறைப் பயிற்றாசிரியராக வேலை செய்கின்றாள். நான் இந்த வாடகை வீட்டில் இரண்டு வருடங்களாக இருந்து வருகின்றேன். எட்டு மாதங்களுக்கு முன்னர் தான், நான் பமீலாவை இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்.

மூன்று நாட்களுக்கு முன்னர், கனடாவில் இருந்து ரமணனின் கடிதம் வந்தது முதல் நான் செயலற்றுப் போனேன். என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. வேலைக்கும் போகவில்லை. இந்த மூன்று நாட்களில் ரொயிலற் பாத்றூம் என நான்கு தடவைகள் தான் நான் அறையைவிட்டு வெளியே போனேன்.

`என்னை மறந்துவிடு சாகித்தியா’ கடிதத்தில் இருந்தது இதுதான்.

Thursday, 15 September 2022

பால்வண்ணம் - புதிய சிறுகதைத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் குறித்து

 

பால்வண்ணம்

காதல் பிரச்சினைகள் தொடர்பான தற்கொலைகள் எமது பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்துள்ளன. எனது சீர்மிய வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் இதுபற்றி என்னிடம் நிறையவே கேட்பார்கள்.எப்படி பிள்ளைகளோடு கதைப்பது? காதல் சரி என்று சொல்வதா?---இப்படி பல கேள்விகள். இன்றைய வகுப்பில் உங்களுடைய `'பால்வண்ணம்கதையை வாசித்துக்காட்டினேன். காதல் உயரமானது - உன்னதமானது என்ற கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதையின் பல சிறப்பம்சங்களை விவாதித்தோம். ''காதல் உணர்வு ஆரோக்கியமானது. சிலரின் நடத்தைகள், எடுக்கும் அவசர முடிவுகள் பற்றித்தான் நீங்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும். காதலிப்பது தவறென்று சொல்லக்கூடாது'' என்ற உளவியல் உண்மைக்கு உங்கள் கதையைச் சாட்சியாக்கிக் கொண்டேன். உண்மையில் என்னை மிகக் கவர்ந்த கதை. எழுத்தாளர் ஆணாக இருந்தும் ஒரு பெண்பாத்திரத்தை உயர்த்திவைத்துள்ள நேர்த்தி அற்புதம். மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

-    கோகிலா மகேந்திரன்

 

வெந்து தணிந்தது காடு

பிப்ரவரி கணையாழி இதழில் 'கோரானா 'பற்றிய அற்புதமான கதை வாசித்தேன். தன்னனுபவம் இல்லாமல் இவ்வாறு நேர்த்தியான சிறப்பான ஒரு படைப்பை தர இயலாது. தாங்கள் ஒரு மருத்துவராஇல்லை எனினும் நோயாளியாக இருந்த அனுபவம் அவ்வாறு தீட்டுவதற்கான திரைச்சீலையை விரித்திருக்கக்கூடும். அல்லது திறன்மிகு ஒரு கலைஞன் புறஅனுபவங்களை தொகுத்து எழுதவும் சாத்தியப்படும். குடும்பம் மருத்துவமனை ஒலிவர் வார்டு எலிசபெத் தாங்கள் என ஒரு நேர்த்தியான சித்திரங்களை வரைந்திருக்கிறீர்கள். படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள்!

-    பா. செயப்பிரகாசம், எழுத்தாளர்

 

கலைந்தது கனவு

ஆரம்பத்தில் சாதாரண கதை போலத் தோன்றினாலும் படிப்படியாக உங்களுக்கே உரித்தான முத்திரை பதிந்தது. கால மாற்றம் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. அத்துடன் மனித உணர்ச்சிகள் நேரம் போகப்போக வடிந்து குன்றிப் போவதும் அழகுற கதையோட்டத்தினாலேயே சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. சிறந்த கதை. பாராட்டுகள்.

-    யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 

 

ஏன்?

நீங்கள் எழுதிய சிறுகதையை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. நானும், எனது மனைவியும் இந்தச் சிறுகதையை வாசித்து, உட்கருவினை நன்றாக அனுபவித்தோம். கதையின் கரு, எழுதிய பாணி, சொற்பிரயோகம் என்பன வாசித்த எங்களின் ஆர்வத்தை கடைசி வரை கவர்ந்திருந்தது. மருத்துவரான என் மனைவி முரளியின்வளர்ப்புமகளை முரளியின் மகள் என்று உங்கள் வசனங்களை வாசிக்க முன்னரே கூறிவிட்டார். இப்படியான பரங்கித் தோற்றமுள்ள சிலர் எங்கள் உறவினரிலும் உள்ளனர். உங்கள் முடிவுரையான வசனங்கள் மிகவும் உண்மையான கருத்தாகும். உங்கள் மற்றைய கதைகளையும் வாசிக்க ஆர்வம் உடையேன்.
- Dr R Sri Ravindrarajah

 

பாம்பும் ஏணியும்

மிகவும் இலகுவான நடையில், ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் புகலிடத்தில் அடையும் சவால்களை, துயரங்களை வெளிப்படுத்தும் கதை இது. இவற்றையெல்லாம் மீறி எவ்விதம் உயரப் பறக்கின்றாள் என்பதை வெளிப்படுத்தும் கதை. நடையும், கருத்தும் இக்கதையின் சிறப்பான அம்சங்கள்.

-    ..கிரிதரன்

 

யாரோ ஒளிந்திருக்கிறார்கள்

புலம்பெயர் வாழ்வை சொல்கிறது. ஆஸ்த்ரேலியாவை களமாக கொண்டது. ஸ்மார்ட் போனின் வருகை, உளவு பார்க்கப்படும் உணர்வை ஏற்படுத்துகிறது. கதைசொல்லி கணவன், பாதிக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் உள்ள மனைவியைப் பற்றி கதை சொல்கிறான். நினைவுகளும் நிகழ்வுகளும் பின்னிச் செல்கிறது. சுதாகருக்கு பிசிறற்ற நிதானமான மொழி வாய்த்திருக்கிறது. கதை இறுதி ஒருவகையில் நம் அனைவரின் இரட்டை நிலையின் மீதான விமர்சனமாக முடிகிறது

-    சுனில் கிருஷ்ணன்