அதிகாரம் 13 - மாயா
ஆலின் தினமும் எழுதும்
கொப்பியை – டைரியை – யாரோ திருடி விட்டார்கள். ஹெவினும் அவளுமாக தொழிற்சாலைக் குப்பைக் கூடைகளைக்
கிழறினார்கள். அவளது மூன்று வருடத் தேட்டம் தொலைந்து போயிற்று. அதை எடுத்த கடன்காரனை
தனக்குத் தெரியுமென்று அன்று முழுவதும் திட்டியபடி இருந்தாள்.
அந்த டயரி – எத்தனை மனிதர்கள் அவளைச்
சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள் என்பதைக் கூறும்.
கிழவர் வலது புறமாகவும் ஆலின் இடது புறமாகவும்
குப்பையை நோண்டினார்கள். கிழவருக்கு இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த
விபத்தால் அங்கவீனமானவர். ஆலின் சமீபமாகத்தான் நொண்டுகின்றாள். சிலவேளைகளில் கழுத்து
நோவும் அதனுடன் சேர்ந்து விடும். அழுது கொண்டே 'மெடிக்கல் சென்ரர்' போவாள்.
அங்கு அரை மணித்தியாலம் றிலக்ஸ் பண்ணிவிட்டு வரும் போது சிரித்தபடி வருவாள்.




