பாலகிருஷ்ணனின் மாமா
அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். 'ஹோல்' மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது.
விருந்தாளி,
பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.
குளியலறைக்குள் பாலகிருஷ்ணன்
'ஷேவ்' செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.
"மன்னிக்கிற மனப்பான்மை இன்னும் எங்கடை ஆக்களுக்கு வரேல்லை எண்டுதான் சொல்லுவன்" வந்திருக்கின்ற நண்பருக்கு, மாமா சொல்லிக் கொள்கிறார். வந்தவருக்கு அடியும் விளங்கவில்லை; நுனியும் விளங்கவில்லை.
"அமிர்... கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்" என்றவருக்கு வாயில் கைவிரலை வைத்து 'உஷ்' என்று சைகை காட்டிவிட்டு,
தன்
கைகளை குளியலறை நோக்கி விசிறிக் காட்டுகிறார் அமிர். வந்தவர் தனது இடுப்பை இரண்டாக மடித்து, பார்வையை குளியலறை நோக்கி எறிகின்றார்.
பாலாவின்
முகத்திலே சரேலென்று 'ஷேவிங் றேஷர்' பதிந்தது. மெல்லிய கீறலாக இரத்தம் கசிந்தது.
"பாலா எத்தனை மணிக்கு உங்கடை ஃபிரன்ஸ் வாறதெண்டு சொன்னனியள்?" மனைவி செல்வி அவனுக்குப் பின்னால் வந்து நின்று கேட்டாள். 'டவலி'னால் முகத்தை ஒற்றியபடியே "ஆறு மணிக்கு" என்று சொல்லிவிட்டு நிலாமுற்றத்திற்கு விரைந்தான் பாலா.
நிலாமுற்றம்
- இரண்டு பூச்சாடிகள், ஒரு உடுப்புக் காயப்போடும் 'குளோத் றாக்', மற்றும் மூன்று மனிதர்கள் நிமிர்ந்து நிற்கக்கூடிய இடம். 'கென்னடி றோட்டில்' இருக்கும் அந்த 'பிளற்றின்' பத்தாவது மாடியிலிருந்து பார்க்கும்போது ஸ்காபரோவின் பெரும்பாலான பகுதிகள் தெரிகின்றன. திட்டமிட்டு அமைக்கப்பட்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நீள்சதுர வடிவில் விரிந்து கொண்டே அழகு காட்டுகின்றன. எங்குமே 'சிக்னல்' விளக்குகள். மருந்துக்கும் 'றவுண்ட் எபவுற்' ஐக் காணமுடியவில்லை.
'தம்பீ!' என்று இழுத்தபடியே மாமாவின் நண்பர் பாலாவிடம் வருகின்றார்.
"தம்பி... 'தெமட்டகொட அங்கிள்' கான்சர் எண்டு ஆறேழு மாதமாப் படுத்துக் கிடக்கிறாராம். இன்னும் இரண்டோ மூன்று கிழமைகள் இருந்தாரில்லை. உம்மை ஒருக்கால் பாக்கவேணுமெண்டு ஆசைப்படுகிறாராம். ஒருக்கால் போய் பாரும். வாய்விட்டுக் கேட்டாப் போலும் பாக்காமல் இருக்கிறது சரியில்லை."
"நாங்கள் கனடாவுக்கு வந்தது எப்படி அவருக்குத் தெரியும்? மாமாதான் சொல்லியிருக்கிறார். அவர் என்னைப் பாக்க வேணுமெண்டு சொல்லுறது கூட மாமாவின்ரை இட்டுக்கட்டின கதை. அவரைப் போய்ப் பாக்கப் பண்ணுறதுக்கு மாமா செய்யிற தந்திரம்." அவனுடைய பதிலில் வந்தவர் விறைத்துப் போனார்.
"இஞ்சாரும்... இஞ்சை வாரும் காணும். அவையள் 'என்ஜொய்' பண்ணுறதுக்கெண்டு இலங்கையிலையிருந்து இஞ்சை வந்திருக்கினம். அந்த மனிசனை ஏன் போய்ப் பாக்க வேணும்?' மாமா தன் நண்பரைக் கூப்பிட்டார்.
●
பாலாவிற்கு
'தெமட்டகொட அங்கிளுடன்' பழகிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்தன. 'தெமட்டகொட அங்கிள்' அமிரின் உற்ற நண்பர். அவர் எப்பொழுதிலிருந்து அமிருக்கு நண்பரானார் என்பது பாலாவுக்கு என்றுமே வியப்புத்தான். இருவரும் இரண்டு துருவங்கள். அமிர் - அன்பும் அமைதியும் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையும் கொண்ட கலகலப்பான மனிதர். 'தெமட்டகொட அங்கிள்' சிடுமூஞ்சியும் 'நான்' என்ற அகம்பாவமும் கொண்ட கஞ்சன். அவர் சிரித்து எவருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர் கதைப்பதுகூட குதிரை கனைப்பது போன்றிருக்கும். வேண்டுமென்றால் தோற்றத்தில் இருவருமே ஒரே 'தினுசு' எனலாம்.
'தெ.அ' குடிக்கும்போது மிகவும் வாஞ்சையுடன் மாமாவுடன் பழகுவார். அதை நேரில் பல தடவைகள் பாலா பார்த்திருக்கின்றான். குடி தவிர்ந்த நேரங்களில் தன்னை ஒரு கனவானாகக் காட்டிக் கொள்ளுவார். அவரை யாரும் எளிதில் சந்தித்துவிட முடியாது. காலையில் விடிவதற்கு முன்பு வேலைக்குப் போய்விடுவார். மாலையில் இருள் கவிந்த பிற்பாடுதான் வேலை முடித்து வீடு திரும்புவார். எப்போவாது '·பிளட்'டிலிருந்து(Flat)
கீழிறங்கி கடைக்குப் போகும் தருணங்களில் அவரைக் காணலாம். உடம்பை 'சிக் ஷாக்'காக அசைத்து பூமிக்கு உதை கொடுக்கும் கம்பீர நடை. மடிப்புக் கலையாத ஆடை. கண்ணைக் கொஞ்சம் கீழிறக்கி உற்றுப் பார்க்கும் பார்வை. இவை அவரை ஒரு கனவானாக பார்ப்பவர் மனதில் நிலை நிறுத்தும்.
1990ஆவது ஆண்டளவில் இருக்கும். அப்பொழுதெல்லாம் பாலா வேலை அலுவலாக வவனியாவில் இருந்து கொழும்பு போய் வருவான். குறைந்தபட்சம் இரண்டுகிழமைகளுக்கு ஒரு தடவையாவது. அப்பொழுது கலைச்செல்வி 'கொட்டஹேன' என்ற இடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்தாள். கொட்டஹேனவும் தெமட்டகொடவும் கொழும்பில் உள்ள இரண்டு நகரங்கள். கொழும்பில் அப்பொழுது பதற்றமான காலம். ஆண் பெண் வயது பேதமற்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தெமட்டகொட அங்கிளின் வீடுதான் பாதுகாப்பு என உணர்ந்தான். அவருக்கு பொலிஸ் செல்வாக்கும் இருந்தது..
'தெ.அ' இற்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவரது மனைவி அவருடன் வாழப் பிடிக்காமல் எப்போதோ பிரிந்து போய் விட்டாள். பிரிவின் பின்னர் அவர்கள் இருவருமே வேறு திருமணங்கள் செய்யவில்லை. அவரை விட்டு மனைவி போனபின் மகளை வளர்ப்பதற்கு அவர் மிகவும் கஸ்டப்பட்டுப் போனார் என்று மாமா சொல்லுவார். சிலவேளைகளில் அவரில்லாத சமயங்களில் 'அந்த அம்மா' தனது மகளைப் பார்ப்பதற்காக வருவார். வீட்டிற்குள் வரமாட்டார். வெளியே நின்று கதைத்துவிட்டு பணமும் குடுத்துவிட்டுப் போவார். சிலபொழுதுகளில் அந்த அம்மாவுடன் பாலா கதைத்திருக்கின்றான். எந்தவித மாசு மறுவற்ற தங்கமான பெண் அவர். அவர்களுக்கிடையே என்ன பிரச்சனை என்று மாமாவிடம் கேட்டால், "கொடிகளிலை கூட இரண்டு வகை இருக்கு. ஒன்று மரம் தடிகளில் படரும். மற்றது நிலத்திலை படரும். அது அது அந்தந்த இடத்திலேதான் வளர முடியும்" என்று இப்படி விளக்கம் தருவார்.
ஒரு
சனிக்கிழமைதான் அது நடந்தது. அப்பொழுது அமிர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்திருந்தார். நீண்ட நாட்களின் பின்பு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால் 'கைபிடி' போட்ட போத்தலொன்றை இறக்கினார் தெமட்டகொட அங்கிள். கைபிடி போட்ட போத்தலை எவர் விருந்தில் வைக்கின்றாரோ அவர் அமிருக்கு பெரும் கனவான் ஆகிவிடுவார். குடி நீண்டு கொண்டு சென்றது. குடி முற்றி, பாலாவையும் உள் வாங்கியது. அறை சின்னாபின்னமாகிக் கிடந்தது. அமிர் கையிலே தட்டித் தட்டி பாடத் தொடங்கினார். அங்கிள் தனது திருமண அல்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு புலம்பினார்.
"உங்கள் மனைவி இப்போது எங்கே இருக்கின்றாள்?" அமிர் தூண்டில் போட்டார்.
"அவள் இப்ப கனடா யூனிவர்சிட்டியில் லெக்ஷரராக இருக்கின்றாள்" என்றார் கண் கலங்கியபடியே.
இரவு
பதினொரு மணியாகியும் வெப்பத்தின் அகோரம் தாளாமல் ஜன்னலை திறந்து வைக்க வேண்டியிருந்தது. மேலேயிருந்து பார்க்கும்போது 'தெமட்டகொட' நகரத்தின் ஒரு பாதி தெரிந்தது. திறந்து கிடந்த கடைகளிலிருந்தும், கலையும் இரவுச் சந்தையிலிருந்தும் மக்களின் பேச்சொலிகள் கேட்டன. விதவிதமான மனிதர்கள் கைகளில் பைகளுடன் நடந்து திரிந்தனர். கொத்து ரொட்டிக் கடையிலிருந்து வரும் 'கட புடா' சத்தத்திற்கு 'பங்காரா' (Bhangra) மியூசிக் சுருதி சேர்த்தது. கொலன்னாவ எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திற்கு விரையும் வாகனங்களில் சில அவ்விடத்தே தரித்து விட்டுப் போயின.
இரவு
முழுவதும் அந்த பன்ஞாப் (Punjab )
நாட்டு நடனப்பாட்டை ரசித்தவாறே படுக்கையில் இருந்தான் பாலா. செல்விக்கு இவையெல்லாம் பிடிப்பதில்லை. பாடக்குறிப்புகளைத் தயார் செய்வதிலும் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதிலும் நேரம் போய்விடும். நேரத்துடன் தூங்கி விட்டாள். விடிந்து எழுந்தபோது தனது உடலில் சில கொப்பளங்கள் போட்டிருந்ததை பாலா கண்டான். பின்னர் அவை அமீபாக் கலங்கள் போன்று வேகமாகப் பெருகத் தொடங்கியது. 'சிக்கன் ·பொக்ஸ்' (chicken pox). நோய் முற்றி தெமட்டகொட அங்கிளின் கோபம் முற்றுவதற்கிடையில் வவனியா திரும்புவது நல்லதெனப் பட்டதால் திரும்பி விட்டான். அங்கே வேலை செய்யுமிடத்தில் அவனுக்கொரு அறை ஒதுக்குப்புறமாக இருந்தது.
பருக்கள்
முதலில் மார்பிலும் பின்னர் வயிற்றிலுமென ஆரம்பித்து உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் வட்டமடித்துப் பரந்தன. மண்டையோட்டையும் விட்டு வைக்கவில்லை. சித்திரை மாதத்தின் அகோரத்திற்கு ஈடாக காய்ச்சல் அடித்தது. உயிர்க்கொல்லி என்று சொல்வது சரிதான். எல்லாரும் ஓடி ஒளித்தார்கள். வலி,
வேதனை, எரிச்சல், தூக்கமின்மை. அந்த அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. குளிர்ச்சியான உணவுகள் பழங்கள்தான் சாப்பாடு. வேப்பங்குருத்தும் மஞ்சளும்தான் மருந்து. அவனுடன் வேலை செய்யும் ஒருவனது வீட்டு வேப்பமரம் மொட்டையாகிப் போனது. பலசரக்குக் கடைகளில் மஞ்சள் தீர்ந்து போனது.
மூன்று
மாதங்களின் பின்பு கொழும்பு சென்றபோது அங்கிளின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவர் பாலாவுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை. போனவுடன் களைப்புத்தீர ஆசையாக 'ஷவரில்' முழுகினான். அறைக்குள்ளிருந்து தலையைத் துவட்டிக் கொண்டு இருக்கும்போது ஒரு உருவம் 'விறுக்'கென்று பாத்றூமிற்குள் போனது போல இருந்தது. மறைந்து நின்று அவதானித்தான். அங்கிள் ஒரு முழு 'டெற்றோல்' போத்தல் ஒன்றை பாத்றூமிற்குள் கவிட்டு ஊற்றினார். தனக்குள் புற்புறுத்துக் கொண்டே குளியலறையை தும்புத்தடி கொண்டு கழுவினார். குளித்துவிட்டு தனது அறைக்குள் சென்று பலமாகக் கதவை அடித்து இழுத்து மூடினார். ஜன்னலையும் இழுத்து மூடும் சத்தம் கேட்டது. அன்று முழுக்க வெளியே வரவில்லை. மெளன விரதம் அனுஷ்டிப்பவர் போல அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். அம்மை வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் என்றும், அயலவர்கள் பாலாவைப் பார்த்துப் பயப்படுவதாகவும் கலைச்செல்வியிடம் சொன்னார் தெமட்டகொட அங்கிள்.
அந்த
நிகழ்வின் பின் மனைவிக்கு வவனியாவிற்கு மாற்றம் எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினான் பாலா. அடிக்கடி கொழும்பு செல்வதைத் தவிர்த்துக் கொண்டான். சில மாதங்களில் செல்விக்கு வவனியாவிற்கு மாற்றம் கிடைத்தது. பாலா அடிக்கடி கொழும்பிலிருந்த தலைமையகத்திற்கு செல்லவேண்டி இருந்ததால், அங்கிள் வீட்டு அறையை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினார்கள்.
ஒருநாள்
வேலை செய்யுமிடத்திற்கு அங்கிளின் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களது அறையை விடும்படியும் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் சொன்னார். அவருக்கு என்றுமே சுற்றி வளைத்தோ, மனிதரை நோகடிக்காமலோ பேசத் தெரியாது. நேரடியாகவே கதைத்தார். பாலா ஒருமாத தவணை கேட்டான். கட்டில், மேசை, கதிரை, ·பான், இரண்டு மூன்று 'பாக்ஸ் (Bags); வேறும் சில பொருட்களும் அவரது வீட்டில் இருந்தன.
மாத
முடிவில் ஒரு வாகனத்தை ஒழுங்கு செய்து கொண்டு பொருட்களை எடுப்பதற்காக அங்கிளின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்போது அங்கிள் அங்கு இருக்கவில்லை. அவர்களது கட்டில் மேசை என்பவற்றில் 'இன்பெக்சன்' (infection) இருந்ததால், அவற்றைக் கொத்தி அங்கிள் எறிந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஏங்கிப் போனார்கள் பாலாவும் செல்வியும். அவற்றை வாங்குவதற்கு எத்தனை மாதத்து சம்பளப்பணத்தில் மிச்சம் பிடித்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அம்மை நோயின் கொடூரத்தை பாலா அன்றுதான் உணர்ந்தான். அவருடைய மகளிற்கு இப்படியொன்று நடந்திருந்தால் கொத்தி எறிந்திருப்பாரா? மிகுதிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வவனியா திரும்பி விட்டார்கள்.
சகிப்புத்தன்மையும் காருண்யமும்
இல்லாத அந்த மனிதரால் எப்படி ஒரு அரசாங்க உயரதிகாரியாக இருக்க முடியும் என சில வேளைகளில் எண்ணுவதுண்டு. மாமா தொடர்ந்தும் அவருடன் பழகினார். நண்பராச்சே! மாமா கூட - அவரிடம் ஏன் அப்படிச் செய்தீர்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் குடியும் கும்மாளமும்தான். எப்போதுமே அவரை 'ஒரு மேலுலகத்தில் இருந்து வந்தவர் போல' நினைத்துக் கொள்வார். அந்தச் சம்பவத்தின் பிறகு அவர்கள் வவனியாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். தெமட்டகொட அங்கிள் என ஒரு மனிதர் இருந்தார் என்பதையே மறந்து விட்டார்கள். இப்பொழுதுதான் அவர் கனடாவில் இருக்கின்றார் என்பதை அறிந்தார்கள்.
●
மாமாவின்
விருந்தாளி போய் விட்டார். மாமா இருப்புக் கொள்ளாமல் ஹோலிற்குள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தார். அவருக்கு எட்டு சகோதரங்கள் கனடாவில் இருக்கின்றார்கள். எட்டுப் பேருக்கும் குறைந்தது நாற்பது பிள்ளைகளாவது இருப்பார்கள். பேரப்பிள்ளைகளைக் கணக்கெடுத்தால் வாண்டுகளில் இருந்து பெரிசுகள் வரை அறுபதாவது தேறும். ஆக மொத்தம் உறவினர்களில் நூறு பேர் வரை கேட்கும் கேள்வி இதுதான்:
"தெமட்டகொட அங்கிளைப் போய் பார்த்துவிட்டீர்களா?"
ஒரு
மனிதருக்கு வருத்தம் வருகின்ற வேளையில் அன்பு காட்டி, ஆதரவு செலுத்தத் தோன்றாத அந்த மனிதரைப் போய் ஏன் பார்க்க வேண்டும்? பாலாவின் மனதில் இப்பொழுது எழுகின்ற கேள்வி இதுதான்.
'ஹோலிங் பெல்' சத்தம் கேட்டது. நண்பன் வந்து விட்டான். பாலாவின் பள்ளி நண்பன், அவர்களை றெஸ்ரோரண்டில் சாப்பிட அழைத்திருந்தான். 'டின்னர்' முடிந்து திரும்பும்போது - வயது முதிர்ந்தவர்கள் வசிக்கும் தனியார் நர்சிங் ஹோமில் இறக்கிவிடும்படி நண்பனிடம் கேட்டிருந்தான் பாலா. நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றார்கள். கூட ஒரு பெண்ணும் அவர்களுடன் சென்றாள்.
"உங்களைப் பார்க்க விசிட்டேர்ஸ்' என்று சொல்லிவிட்டு இரண்டு கதிரைகளை அவரருகே போட்டாள். போய்விட்டாள்.
அந்த
'ஆஜானுபாகுவான' தோற்றம் 'சிங்கிள் பெட்' என்ற அந்தச் சடப்பொருளிற்குள் சுருண்டு கிடந்தது. அவரைப் பார்க்க பாலாவிற்கும் செல்விக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கம்பீர நடையும் அனல் வீசும் பார்வையும் கொண்ட தெமட்டகொட அங்கிளா இவர்? தலைமுடி கொட்டி உடல் இழைத்து ஒடுங்கிப் போயிருந்தார். இத்தனை கால இடைவெளியில் இவ்வளவு மாற்றமா? அல்லது நோயின் தீவிரமா? ஒரு காலத்தில் ஒரு இடத்தின் பெயரையே சுட்டி நின்ற அந்த மனிதரின் கண்கள் மாத்திரம் விழித்திருந்தன.
"என்னைத் தெரிகிறதா?" பாலா வாஞ்சையுடன் அவரைக் கேட்டான்.
"இல்லை" முகம் வலியில் சுருங்க தலையாட்டினார்.
"என்னை?" மனைவி கேட்டாள். அவர் அவளின் கைகளைப் பற்றி எடுத்து முத்தமிட்டார். கைகள் குறண்டி நடுங்கின.
"நீ அமிரின் பிள்ளை..."
"கலைச்செல்வி" என்றாள் அவள்.
அவரும்
"ஓம்... ஓம்... செல்வி" என்றார். திரும்பவும் அவள் கைகளைப் பற்றி எடுத்து முத்தமிட்டார்.
"இவரைத் தெரியுதா எண்டு - நல்லா ஞாபகப்படுத்திப் பாத்துச் சொல்லுங்கோ" கலைச்செல்வி கேட்கின்றாள்.
"இல்லைப் பிள்ளை, உன்ரை தம்பியே?" மீண்டும் தலையாட்டினார்.
வேண்டுமென்றே
நடிக்கின்றாரா என்ற சந்தேகம் வந்தது. மூப்புடன் தணியும் ஆசை,
கோபம், குரோதம் போன்ற உணர்ச்சிகள் அவருக்கு இன்னமும் அப்படியே இருந்தன. காலம் அவருக்கு உடல் ரீதியான மாற்றத்தைக் கொடுத்ததே தவிர உணர்வு ரீதியாக எதையும் செய்யவில்லை.
"எப்படி இருக்கின்றீர்கள் அங்கிள்?" கலைச்செல்வி அவரைச் சுகம் விசாரித்தாள்.
"ஏன் எனக்கென்ன பிரச்சினை? எனக்கொண்டுமில்லையே! நான் நல்லாத்தானே இருக்கிறேன்" என்றார் 'தெ.அ'.
"அம்மா உங்களை வந்து பார்த்தார்களா?" கலைச்செல்வி கேட்டாள். "இல்லை" என்று கவலையுடன் தலையாட்டினார். அவள் 'அம்மா' என்று கேட்டது அவரின் மனைவியைத்தான்.
"மகள் - யாமினி?"
"அவளும் கணவனும் ஒரு தடவை வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள். அவள் இப்பொழுது சுவிசில் இருக்கின்றாள்."
சிறிது
நேரம் கதைத்தார்கள். மருந்துகளின் கொடூரத்தில் சிறிது நேரம் கதைப்பதற்குள் அவர் களைத்துப் போனார். விடைபெறும் தருணத்தில் பாலா எதிர்பாத்திராத வகையில், அவன் கைவிரல்களை இறுகப் பிடித்து அமுக்கினார். ஒரு அசுரப்பலம் அவன் நாடி நரம்புகளிடையே ஊடுருவியது. பாலா மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு இன்னமுன் தணியவில்லை என்பதை அவனுக்கு அது உணர்த்தியது. பின் மெதுவாக கையை விட்டார். அவர்கள் இருவரையும் தன்னருகே வரும்படி அழைத்தார். தனது வலது கையை அவர்களை நோக்கி நீட்டினார். சுருக்கங்கள் விழுந்த அவர் கையை, மந்திரக்கோலைத் தொட்டு நிற்பவர்கள் போல அவர்கள் இருவரும் பற்றி நின்றார்கள். அவர் ஏதோ சொல்வதற்கு விழைந்தார். குரல் பிசறியது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
அவரைப்
போய் பார்த்த விஷயம், அவரால் மற்றவர்களுக்குத் தெரிந்தாலொழிய - தாங்கள் இருவரும் ஒருவருக்கும் சொல்லுவதில்லை என வீடு திரும்பும் போது இருவரும் முடிவெடுத்துக் கொண்டார்கள். இரவு முழுவதும் பாலா தனது 'லப்ரொப்' கொம்பியூட்டரில் இருந்தான். 'கூகிளில்' எதையோ தேடினான். படுப்பதற்கு இரண்டு மணியாகிப் போய் விட்டது.
அதற்கடுத்த
மறுநாள் இரவு தெமட்டகொட அங்கிள் இறந்துபோய்விட்டதாக மாமா சொன்னார்.
"தம்பி! அந்தாள் உயிரோடை இருக்கேக்கைதான் பார்த்து நாலு ஆறுதல் வார்த்தை சொல்லேல்லை. செத்தவீட்டுக்காதல் வாங்கோ" மாமா நினைவு படுத்தினார்.
"என்னாலை முடியாது, வேணுமெண்டா நீங்கள் போகேக்கை கலைச்செல்வியையும் கூட்டிக் கொண்டு போங்கோ" விறைப்பாகப் பதில் தந்தான் பாலா. அவள் பாலா வராமல் தான் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.
"அவருடைய வீட்டிலை இரண்டு வருஷமா இருந்தியள். ஒரு நன்றிக்கடன் இல்லை? தம்பி! நல்ல காரியங்களுக்கு சொல்லிப் போக வேணும். துக்ககரமான நிகழ்வுகளுக்கு சொல்லாமல் போக வேணும்."
"உதையே இன்னும் எத்தனை வருஷங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கப் போறியள்? சீ... அந்தாளும் ஒரு மனிசனா?" பாலா கத்தினான்.
"உன்ரை புருஷன் இரக்கமேயில்லாத சரியான கல் நெஞ்சுக்காரன்" இருந்த நாற்காலியை வேகமாகத் தள்ளிவிட்டு குசினிக்குள் நுழைந்தார் அமிர். குசினிக்குள்ளிருந்து வெளியே வரும்போது ஒரு கையில் 'ஜொனி வோக்கர்' போத்தலுடனும் மறு கையில் கிளாசுடன் வந்தார். ஹோலிற்குள் இருந்த செற்றிக்குள் தலையைக் கவிழ்த்தபடியே புதைந்தார் அவர்.
"பிள்ளை செல்வி உனக்கொரு விஷயம் தெரியுமா? தெமெட்டகொட அங்கிளின்ரை மனிசி வந்து அவரைப் பாத்திட்டுப் போன பிறகுதான் அவர் இறந்திருக்கிறாராம். இவ்வளவுகாலமா வருத்தம் வந்து இருகேக்கை அந்த அம்மாவுக்கு சொல்ல வேணுமெண்டு ஒருத்தருக்கும் யோசனை வரேல்லை. இரங்கல் பா பாடுறதுக்குத்தான் இஞ்சை உள்ளவை எல்லாரும் சரி. எப்பிடியோ அந்த மனிசி கேள்விப்பட்டு வந்திட்டா" வாயைப் பொச்சடிச்சுக்கொண்டே சொன்னார் அமிர்.
கலைச்செல்வி
பாலாவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உதட்டிற்குள் புன்முறுவலிட்டபடியே கொம்பியூட்டரில் மூழ்கிப் போயிருந்தான்.
திட்டமிட்டபடியே மறுநாள்
பாலாவும் கலைச்செல்வியும், நண்பர்களுடன் 'நயகரா' நீர்வீழ்ச்சிக்குப் புறப்பட்டார்கள். ஏழு பேர் இருக்கைகள் கொண்ட அந்த வாகனத்தின் பின்புறத்தில் பாலாவும் செல்வியும் அமர்ந்தார்கள்.
"நாங்களும் செத்தவீட்டுக்குப் போயிருக்க வேணுமோ?" கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் பாலாவின் தோள் மீது சாய்ந்தபடியே செல்வி கேட்டாள்.
"நான் என்ன கல்நெஞ்சுக்காரனா? எனக்கும் விருப்பம்தான். ஆனா நீ இன்னும் உலகத்தைப் புரிஞ்சு கொள்ளவில்லை. இவர்களுக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் இப்படி ஒரு வீராப்புக் காட்ட வேணும்" கோபத்துடன் சொன்னான் பாலா.
"அப்பா பாவமல்லே! அங்கிளைப் போய்ப் பார்த்ததையாதல் சொல்லியிருக்கலாம்தானே!" பாலாவின் காதிற்குள் கிசுகிசுத்தாள் செல்வி. பாலா திடீரென்று செல்வியை உதறிக் கொண்டே சிலிர்த்தெழுந்தான்.
"நாங்கள் எங்கே போய்ப் பாத்தோம் அவரை" சீறினான் பாலா. செல்வி திடுக்கிட்டுப் போனாள். அவர்களின் சச்சரவில் வாகனமும் ஒரு தடவை பிறேக் அடித்து பின்னர் வேகம் எடுத்தது.
●
No comments:
Post a Comment