[புலம்பெயர்ந்த
எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]
உலகில்
எத்தனையோ
நாடுகளில்
வாழ்ந்து
கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில்
ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன.
காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்' எனவும் 'புகலிட தமிழ் இலக்கியம்' எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்' என்று கூறுவது தவறு என்றும், அதை 'அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்' என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு 'புகலிட தமிழ் இலக்கியம்' என்பதையே சுட்டி நிற்கின்றது.
'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்'
என்னும்போது அதில்
'மக்கள்'
முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். 'புகலிட இலக்கியம்' என்னும்போது அதில் 'வாழ்விடம்' முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள்
எனப்படுபவர்கள் யார்? ஈழத்தைப் பிறப்பிடமாகக்
கொண்டு
பல்வேறு
நாடுகளில்
வாழ்ந்து
வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த
எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். 'புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்' என்கின்றார் செங்கை ஆழியான். 'புலம்பெயர் இலக்கியம், புலம்பல் இலக்கியம்' என்கின்றார் ஜெயகாந்தன். 'பிரச்சனைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு ஓடும் காகக்கூட்டம்' என்கின்றார் டொமினிக் ஜீவா. மேலும் கம்பவாரிதி ஜெயராஜும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். 'புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் இன்னும் பலதுறை விற்பன்னர்களும் வந்துகொண்டிருக்கும் வேளையில் எழுத்தாளர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது' என்று தெளிவாகவே சொல்லிவிடுகின்றார் சுஜாதா.
அக, புற நெருக்கடிகளான
சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமது வாழ்விடங்களை
விட்டுப்
புதிய இடங்களை நோக்கிச் சென்றவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என சுருக்கமாகச்
சொல்லலாம்.
அவர்களின்
படைப்புகளை 'புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளிகளின் படைப்புகள்' என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
உண்மையில்
மன்னர்
காலத்திலிருந்தே இந்தப்புலம்பெயர்வு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின்னர் திரைகடலோடி திரவியம் தேடப் புறப்பட்டவர்களும், காலணியாட்சியாளர்களால் தமது தேவைக்காக இழுத்துச் செல்லப்பட்டவர்களுமாக மக்களைப் புலம்பெயர வைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய ஒடுக்குமுறை, பஞ்சம், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கில் அடித்தட்டுத் தமிழர்களில் பெருண்பான்மையானவர்கள் கப்பலேறியதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தரவுகள் சொல்கின்றன. மலேசியாவில் பினாங்கிற்கும், இலங்கையில் மலையகத்திற்கும் மற்றும் சிங்கப்பூர், பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளுக்கும் இந்தியத்தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். அடுத்து சுயமாக - வேலை தேடி சீக்கியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் செட்டியார்கள் முஸ்லிம் வணிகர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள். ஈழத்துமக்கள் புலம் பெயர்ந்தமைக்கும் இந்தியமக்கள் புலம்பெயர்ந்தவைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துமக்கள் அரசியல் மற்றும் பொருள் தேடும் காரணங்களால் புலம் பெயர்ந்தார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தார்கள். வசதி வாய்ப்புப்பெற்றவர்கள் ஐரோப்பியநாடுகள் கனடா அவுஸ்திரேலியா செல்ல, ஏனையோர் தமிழ்நாடு சென்றார்கள்.
மலேசியாவின் முதல் தமிழ் நாவல் எழுதியவர்களாக
தமிழகத்தின் வெங்கடரத்தினமும் புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தவரும் சொல்லப்படுகின்றார்கள். அடுத்து மலேசியாவின் புலம்பெயர்வாழ்வைச் சித்தரிக்கும் நூல்களாக ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி'(1962) , 'கடலுக்கு அப்பால்'(1950) என்ற நாவல்களும் ஆர்.சண்முகம் எழுதிய 'சயாம் மரண ரயில்', ரங்கசாமியின் 'லங்கா நதிக்கரையில்', குமரனின் 'செம்மண்ணில் நீல மலர்கள்', இளம்வழுதியின் 'லட்சியப்பாதை' என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் 'புயலிலே ஒரு தோணி' தமிழுக்கு வளம் சேர்க்கும் நாவல்களில் ஒன்று எனலாம். தாயகம் பற்றிய கனவுகளுடன் வாழும் ஒருவனை இரண்டாவது உலகமகாயுத்தம் எப்படிச் சுவீகரித்துக் கொள்கின்றது என்பதையும், யுத்தத்தின் வெற்றி தோல்விகள் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் எழுதியுள்ளார் சிங்காரம். 1942இல் ஜப்பான்நாடு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை காடுகளூடாக ஒரு ரயில்பாதையை நிர்மாணித்தனர். இதில் 15000 போர்க்கைதிகளுடன் மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த ஆசியத்தொழிலாளர்களும் ஈடுபட்டனர். கடும் உழைப்பு, உணவின்மை, தொற்றுநோய் காரணமாக பலர் இறந்தனர். இவற்றைப் பின்னணியாகக் கொண்டது 'சயாம் மரண ரயில்' நாவல். மலேசியாவில் இன்று ரெ.கார்த்திகேசு, கே.பாலமுருகன் போன்றோர் நாவல் எழுதி வருகின்றனர்.
சிங்கப்பூரிலிருந்து இளங்கோவன், ஜெயந்தி சங்கர் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளிற்குச் சென்றவர்களின் வாரிசுகள் இன்று தமிழே தெரியாமல் தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் இலக்கியப்பதிவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப்பற்றித் தெரியவில்லை. இலங்கையின் மலையகத்திற்கு கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக எண்ணற்ற தமிழர்கள் பிடித்துச் செல்லபட்டார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களையும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைக்குள்தான் அடக்கவேண்டும்.
தமிழரின்
புலம்பெயர்ந்த இலக்கியம்
என்றதும்
எல்லோருக்கும் உடனடியாக
நினைவுக்கு வருவது
ஈழத்தமிழர்களின் எழுத்துகள்தான். இலங்கை அரசியல் நிலவரம், இராணுவத்தாக்குதல்கள், இயக்கங்களிடையேயான சகோதரச் சண்டைகள் காரணமாக பலர் தமிழகத்திற்கும் பிரான்ஸ், கனடா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர்.
கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம்,
கதிர்.பாலசுந்தரம்,
வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன்,
குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை 'திருப்படையாட்சி'(1998), 'வினாக்காலம்'(1998), 'அக்னி திரவம்'(2000), 'உதிர்வின் ஓசை'(2001), 'ஒரு புதிய காலம்'(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட 'கனவுச்சிறை' என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது 'யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்' என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது.
'உண்மை கலந்த நாட்குறிப்புகள்'
என்ற படைப்பை அ.முத்துலிங்கம்
எழுதியுள்ளார். எண்ணற்ற
பல நல்ல சிறுகதைகளைத்
தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச்
சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்.
'மறைவில் ஐந்து முகங்கள்'
(2004), 'கனடாவில்
சாவித்திரி' (2003), 'சிவப்பு நரி' (2004) என்பன 'மனித உரிமைவாதி' எனக்கூறும் கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். ஐந்து தமிழ்தேசியவாத இயக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட 'மறைவில் ஐந்து முகங்கள்' தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பானது. இவரது 'Blood and Terror' (2006), 'His Royal Highness, The
Tamil Tiger' (2012) ஆங்கில நாவல்களில் முதலாவது நாவல் 'மறைவில் ஐந்து முகங்கள்' நாவலை ஒட்டியது. அமெரிக்க பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இரண்டாவது ஆங்கில நாவல் விடுதலைப்புலிகளின் சமாதான கால வரி வசூலிப்பை கருவாகக் கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் - ஆசிரியர் - மாணவிகளை மையமாகக் கொண்ட 'சிவப்பு நரி' நாவல் கதையைத் தழுவியது. உள்நாட்டு போர்க்கால அரசியல் புயலும், மனித அவலங்களும் நாவல்களின் சதையும் உயிருமாயுள்ளன.
மற்றும்
'மண்ணின்
குரல்',
அமெரிக்கத்
தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும் 'அமெரிக்கா' , தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை
விபரிக்கும்‘குடிவரவாளன் (AN IMMIGRANT)’ என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் -
'திசை மாறிய தென்றல்', 'கண்ணின் மணி நீயெனக்கு' நாவல்களை எழுதிய அகில் -
'கரையைத் தேடும் கட்டுமரங்கள்'
(2009) எழுதிய
கே.எஸ்.பாலசந்திரன்
-
'உன்னருகே நான் இருந்தால்',
'எங்கே அந்த வெண்ணிலா'
(2006), 'உறங்குமோ
காதல் நெஞ்சம்' (போர்க்காலச் சூழ்நிலையைக்
கொண்டது), விகடனில் வெளிவந்த ‘நீர் மூழ்கி நீரில்
மூழ்கி’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள். பார்த்திபனின் படைப்புகளும் பெரும்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய 'பாதி உறவு' என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள். பார்த்திபனின் படைப்புகளும் பெரும்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய 'பாதி உறவு' என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
பொ.கருணாகரமூர்த்தி
புதிய முயற்சிகளுடன்
சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருப்பவர். மூன்று
குறுநாவல்கள் கொண்ட
'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்ற படைப்பைத் தந்திருக்கின்றார்.
பிரான்ஸ்
நாகரத்தினம் கிருஷ்ணா---தமிழகத்துப் படைப்பாளி---'நீலக்கடல்'(2005),
'மாத்தாஹரி'(2008)
என்ற நாவல்களையும்
'காதலன்'(2008),
'வணக்கம்
துயரமே'
என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பு
நாவல்களையும் தந்துள்ளார். 'நீலக்கடல்'
நாவல்
18ஆம் நூற்றாண்டில்
மொரிஷியஸ்
தீவுகுப்
பிரெஞ்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்ற தமிழர்களின் துயரவாழ்க்கையைச் சொல்கின்றது.
ஷோபாசக்தி
- கதைக்களத்தில் மட்டுமல்லாது புனைவிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் 'கொரில்லா' நாவல், போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினைச் சொல்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 15 வயதுச் சிறுவனாகிய ஷோபாசக்தியின் துயரங்களைச் சொல்லும் இந்த நாவல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவரின் அடுத்த நாவல் 'ம்'. வெலிக்கடை சிறைக்கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என்பவற்றுடன் தொடர்புபடும் நேசகுமாரன் என்ற பாத்திரமும், புலம்பெயர்ந்தநாட்டில் அவனின் பதின்ம வயது மகள் நிறமியின் கர்ப்பத்தையும் இணைக்கும் பின் நவீனத்துவப் போக்குக் கொண்ட நாவல் இது.
தூயவன்
- யுத்த காண்டம்(2006)
மா.கி.கிறிஸ்ரியன்
- உள்ளத்தில் மட்டும்(1998),
புயலுக்குப் பின்
சுவிற்சலாந்து
இந்த வருடம் வந்த நாவல்களில், சயந்தனின் 'ஆறா வடு' பெரிதாகப் பேசப்படுகின்றது.
தமிழினி
பதிப்பகமாக வந்திருக்கும் இந்த நாவலில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை
என்றாலும்
நடுநிலமையுடன் அங்கதச்சுவை கொண்டு
எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்ட காலத்து(1987) சம்பவங்கள் தொடக்கம் 2002 சமாதான காலம் வரை நடந்த சம்பவங்கள் பற்றி பேசும் வரலாற்று நாவல் இது.
நோர்வேயில் வாழும்
படைப்பாளியான இ.திஜாகலிங்கம்
அழிவின்
அழைப்பிதழ்(1994), நாளை(1999), பரதேசி(2008), திரிபு(2010), எங்கே(2011), வரம்(2009) என்று பல நாவல்களைத் தந்திருந்தபோதிலும் இவை எதுவுமே பரவலாகப் பேசப்படவில்லை.
டென்மார்க்கிலிருந்து எழுதும் ஜீவகுமாரன் - மக்கள்... மக்களால்... மக்களுக்காக... (2009), கடவுச் சீட்டு (2013) என்ற நாவல்களையும், சங்கானைச் சண்டியன்(2010) என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். அ.பாலமனோகரன் 'தாய்வழி தாகங்கள்' என்றொரு நாவலை வெளியிட்டுள்ளார்.
ராஜேஸ்வரி
பாலசுப்பிரமணியம் 'ஒரு கோடை விடுமுறை', 'தேம்ஸ் நதிக்கரையில்', 'அம்மா என்றொரு பெண்', 'தில்லையாற்றங்கரையில்', 'உலகமெல்லாம் வியாபாரிகள்' போன்ற பல நாவல்களை எழுதியிருக்கின்றார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பல மாறுபாடான கருத்துகளைக் கொண்ட 'ஒரு கோடை விடுமுறை' பலராலும் பேசப்பட்ட நாவலாகும்.
வவனியூர்
இரா.உதயணன் சுருதி பேதமடைகிறது
(2008), விதி வரைந்த பாதையிலே(2009),
நூல் அறுந்த பட்டங்கள்
(2009), பனி நிலவு
(2010), உயிர்க்காற்று (2010) என்ற நாவல்களை எழுதியுள்ளார்.
இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.
இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.
இலங்கையின் கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்த
விமல் குழந்தைவேல் எழுதிய 'வெள்ளாவி' நாவல் சலவைத்தொழிலாளர்கள் பற்றிப்பேசுகின்றது. இதுவும் விடுதலைப்புலிகளால் தடைசெய்யபட்டது. இவரது இன்னொருநாவல் 'கசகறணம்', தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வை ஆயுதக்குழுக்கள் எப்படிச சிதைத்தார்கள் என்பதைச் சொல்கிறது. இனத்தகராறில் எரிக்கபட்ட அக்கரைபற்றுச் சந்தையில் வியாபாரம் செய்யும் நான்குபேரைச் சுற்றிச் செல்லும் கதை.
மற்றும்
முடிந்த
கதை தொடர்வதில்லை(1999)
என்ற நாவலை எழுதிய முல்லை அமுதன் (இ.மகேந்திரன்) எழுதியிருக்கின்றார்.
அவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள்.
எஸ்.பொ எவரும் எழுதத்துணியாத
படைப்புகளைத் தந்தவர்.
இலங்கை
அரசியலில்
பிரதான
பாத்திரம்
வகித்த
தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும்
நாவல் மாயினி(2007).
இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க
வாழ்க்கை
அலசப்படுகின்றது.
மாத்தளை
சோமுவின்
பேசப்படும் படைப்புகளாக 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்',
'எல்லை தாண்டா அகதிகள்', 'மூலஸ்தானம்',
'நான்காவது
உலகம்'
என்பவற்றைச் சொல்லலாம்.
இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர்.
முருகபூபதியின் நாவல் பறவைகள்(2001).
சாகித்திய விருது பெற்றது. 'என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப்
பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு
வந்துதான்
ஆகவேண்டும்' என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக்
கொண்டிருக்கும் நாவல் இது.
என்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது. இவற்றுள் வண்ணாத்திக்குளம் ஆங்கிலத்திலும்
சிங்களத்திலும் (Butterfly Lake – Samanala Weva) மொழிபெயர்க்கப்பட்டது.
உனையே மயல் கொண்டு ஆங்கிலத்தில் (Lost In You) மொழிபெயர்க்கப்பட்டது.
மற்றும் ‘அசோகனின் வைத்தியசாலை’ (2013) - முழுமையாக அவுஸ்திரேலியாவைக் களமாகக்கொண்டு
ஒரு மிருக மருத்துவரின் வாழ்வனுபங்களையும் வெள்ளை இனத்தவர்களின் கலாச்சாரம் அதிலிருக்கும்
சிக்கல்கள் முடிச்சுகள் பற்றி பேசும்
நாவல்.
கபிலன்
வைரமுத்துவின் படைப்பு
'உயிர்ச்சொல்'(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில்
நிகழும்
குழப்பத்திற்கு இணையாக
தமிழகத்து
அரசியல்
குழப்பத்தையும் இணைத்து
நாவல் செல்கின்றது.
மறைந்த
எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு
- பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு? எது நிஜம்? என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.
மற்றும்
மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000),
பாமினி
செல்லத்துரை எழுதிய
'சிதறிய
சித்தார்த்தன்' North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்---நாவல் மணம் பட்டும்படாமலும்
வீசுகின்ற
ஞாபகப்
பதிவுகள்---பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி
மகளிர்
கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்---யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். 'நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது' என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவறுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன.
புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்கள்
கொண்டிருக்கும் உட்கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தாய்நாட்டுப்
பிரச்சினைகள் / நினைவுகள்
2. அகதி நிலை
3.என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பி வாழ்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கும் - புதிய சூழலோடு இயைபாக்கமடைந்து
வாழும்
அவர்களின்
இளைய சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள்
4. தாயகத்திற்கும்
புகலிடத்திற்குமிடையேயான குடும்ப உறவுகள், உணவுப்பழக்கங்கள், காலநிலை வேறுபாடுகள், மொழி, ஆண் - பெண் உறவுகள், பெண்ணியம் தொடர்பானவற்றை ஒப்பீடு செய்தல்
5. அறிவியல், தகவல் தொழில்நுட்பம்
சார்ந்தவை
புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது
மூன்றாவது
தலைமுறையினரின் படைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன? இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா? புலம்பெயர்ந்து சென்ற கலாமோகன், சுசீந்திரன், பாலமனோகரன்(Bleedings Hearts) போன்றவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த, தாம் வாழும் நாட்டு மொழிகளிலும் எழுதக்கூடியவர்களாக உள்ளனர்.
கனடாவில்
வாழும்
இலங்கையரான சியாம்
செல்வதுரை,
கதிர் பாலசுந்தரம்,
அவுஸ்திரேலியாவில் வாழும் நிரோமினி டி சொய்சா ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையுடையவராக இருக்கின்றனர். தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களை, தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அதேபோல தமிழிலே பரிச்சயமில்லாமல் பிரெஞ், டொச், நோர்வேஜிய மொழிகளில் எழுதும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளையும் தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ளலாமா?
அநேகமான
ஈழத்து
எழுத்தாளர்கள் 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து
சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்று அவர்களின் புகலிடப்படைப்புகளுக்கு முப்பது வயது வந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் சிலருக்கு தாம் தாயகத்தில் வாழ்ந்த காலத்தைவிட புகலிடத்தில் நீண்ட காலங்கள் வாழ்ந்துவிட்டார்கள். இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள்
அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும். உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை, ஈழத்து அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தமது பார்வையை வேறு திசைகளுக்குத் திருப்பாதவரைக்கும் வளம் சேர்க்கும் நாவல்களைக் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment