Sunday, 1 June 2014

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் - 1

ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people) என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals), தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை அப்படிச் சொல்கின்றார்கள். இவர்களுக்கிடையே ஏராளமான வித்தியாசமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழியினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இவர்கள் 2% ஆவார்கள். இது ஏறக்குறைய 400,000. இதில் ஆதிக்குடிகள் 357,000. ஐரோப்பியர்களின் வருகைக்கு (1788) முன்னர் ஏறத்தாழ 600 - 700 இனக்குழுவினர் (tribal groups) இருந்திருக்கின்றார்கள். அப்போது ஏறக்குறைய 250 விதமான மொழியைப் பேசியிருக்கின்றார்கள்.

இதில் ஆதிக்குடிகள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்தும், தீவுவாசிகள் Torres Strait (400ற்கும் மேற்பட்ட தீவுகள்) இலிருந்தும் வந்தவர்கள் ஆவார். ஆதிகாலத்தில் அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஒன்றாக இருந்ததாகவும் (ஆழமற்ற கடல் பரப்பு இவை இரண்டையும் இணைத்திருந்தது) பின்னர் இவையிரண்டும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 50,000 - 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலிருந்து, இந்த ஆழமற்ற கடல்பரப்பினூடாக முதன்முதலாக அவுஸ்திரேலியாவிற்கு ஆதிக்குடிகள் வந்து சேர்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கடற்கரையோரங்களில் முதலில் குடியேறினார்கள். விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, 56,000 - 78,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

சுதேசிகள் தாம் வாழ்ந்த இடங்களைக் கொண்டு பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
Nyoogar (மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்)
Murri (நியூ சவுத்வேல்ஷின் வடக்குப்புறம் மற்றும் குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு)
Yolngu (Nothern Territory இன் வடக்குப்புற நிலமான Arnhem)
Palawa (ரஸ்மேனியா - Tasmania)
Nungah (தெற்கு அவுஸ்திரேலியா)
Koori (நீயூ சவுத் வேல்ஸ்)
Koorie (விக்டோரியா)

1770 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் தனது Endeavour என்ற கப்பலின் மூலம் Botany Bay என்ற இடத்தை வந்தடைந்தான். அதன்பிறகு 18 வருடங்கள் கழித்து குடியிருப்பதற்காக பிரிட்டனில் இருந்து வந்தார்கள். பழங்குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சில ப்ழங்குடிக்குழுக்கள் கொல்லப்பட்டனர்.  1789 இல் பிரித்தானியமக்கள் கொண்டுவந்த சின்னம்மை மூலம் சிட்னியைச் சூழவிருந்த ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். ஒருபோதும் இந்த வருத்தத்தைச் சந்தித்திராத அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கவில்லை.

ஆதிக்குடிகளின் பிள்ளைகள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் (STOLEN GENERATION) பிரித்தெடுக்கப்பட்டார்கள். இந்தப்பிரித்தெடுப்பு 1970 ஆம் ஆண்டுவரை நடந்தது. எத்தனை பிள்ளைகள் இப்படிப் பிரித்தெடுக்கபட்டார்கள் என்ற சரியான தரவுகள் கிடைக்கவில்லை. தரவுகள் அழிக்கப்பட்டன, தொலைந்துவிட்டன. ஏறத்தாழ 1910 இலிருந்து 1970 வரை 10% ஆன பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.
ஆதிக்குடிகளுக்கென ஒரு கொடி Harold Thomas இனால் உருவாக்கப்பட்டு 1971 இல் அடிலயிட்டில் (Adelaide) பறக்கவிடப்பட்டது. கொடியின் மேற்பகுதியான கறுப்பு நிறம் ஆதிக்குடிகளையும், கீழ்ப்பகுதியான சிவப்புநிறம் ஆதிக்குடிகளுக்கும் நிலத்துக்குமான தொடர்பையும், நடுவே இருக்கும் மஞ்சள் நிறத்திலான வட்டம் சூரியனையும் குறிக்கிறது. உலகைப் படைத்தவர்கள் முன்னோர்கள் எனவும், அவர்களே நிலத்தைப் படைத்து அதிலே மலைகள் ஆறுகள் மரங்கள் என்பவற்றை உருவாக்கினார்கள் எனவும் ஆதிவாசிகள் நம்புகின்றார்கள்.
டிடிஜிறிடு (Didjeridu) என்ற வாத்தியக்கருவியும் பூமராங்கும் (Boomerang) ஆதிக்குடிகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
 


1960 ஆம் ஆண்டுவரையும் வாழ்வாதாரத்துக்கான (கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை) உரிமைகள் மறுக்கபட்ட நிலையில் ஆதிக்குடிகள் இருந்துள்ளார்கள். 1965 ஆம் ஆண்டுமுதல் vote போடும் உரிமை பெற்றார்கள். 1967 முதல் குடித்தொகை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். 7 கோடி 618 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் ஆதிவாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 9 இலட்சத்து 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று, ஆதிக்குடிகள் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். 'அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை' என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள். அவுஸ்திரேலியா அரசு அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும், அது மீண்டும் கட்டப்பட்டு 1992 முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது.

 ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.


2 comments:

  1. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete